under review

பட்டுக்கோட்டை குமாரவேல்

From Tamil Wiki
பட்டுக்கோட்டை குமாரவேல்
எழுத்தாளர் பட்டுக்கோட்டை குமாரவேல்

பட்டுக்கோட்டை குமாரவேல் (செப்டம்பர் 26, 1925 - செப்டம்பர் 8, 2020) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பாடலாசிரியர். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

பட்டுக்கோட்டை குமாரவேல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடத்தில், செப்டம்பர் 26, 1925 அன்று, சீ. பொன்னுசாமி - பக்கிரி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். ராஜா மடத்திலும் பட்டுக்கோட்டையிலும் பள்ளிக் கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

பட்டுக்கோட்டை குமாரவேல் மணமானவர். மகன்: துரைபாண்டியன். மகள்கள்: சாந்தி தணிகாசலம், கண்ணம்மாள் சோமசுந்தரம்.

வானொலி

பட்டுக்கோட்டை குமாரவேல், 1947-ல், திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞராய்ப் பணியில் சேர்ந்தார். திருச்சி மற்றும் சென்னை வானொலி நிலையங்களில், உயர் நிலை எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வானொலிக்காக 1,000-க்கும் மேற்பட்ட நாடங்களை எழுதித் தயாரித்தார்.

பட்டுக்கோட்டை குமாரவேல் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

பட்டுக்கோட்டை குமாரவேல், திராவிட இயக்க இதழ்களால் ஈர்க்கப்பட்டு இலக்கிய ஆர்வம் பெற்றார். திராவிட இயக்க இதழ்கள் சிலவற்றில் எழுதினார். பின் நாடகங்களில் கவனம் செலுத்தினார். மேடை நாடகங்கள் பலவற்றை எழுதினார்.

பட்டுக்கோட்டை குமாரவேல் எழுதிய ஸ்ரீ ராமானுஜர்’ வரலாற்று நாடகம், சென்னை பல்கலையில், 2004-05-ம் ஆண்டிற்கான, எம்.ஏ., வகுப்பிற்குப் பாட நுாலாக வைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை குமாரவேல் எழுதிய 'வானொலி நிகழ்ச்சிக்கலை' நுாலுக்காக அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

பட்டுக்கோட்டை குமாரவேல் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பட்டுக்கோட்டை குமாரவேலின் வரலாற்று நாடக நுால்கள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

திரை வாழ்க்கை

பட்டுக்கோட்டை குமாரவேல் திரைப்படங்கள் சிலவற்றுக்குப் பாடல்கள் எழுதினார். பி. சுசீலா உள்ளிட்டோர் அவற்றைப் பாடினர்.

பதிப்பகம்

பட்டுக்கோட்டை குமாரவேல் சிந்து மலர் வெளியீடு மற்றும் அலமேலு பதிப்பகம் என்ற பதிப்பகங்களை நிறுவி அதன் மூலம் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

பொறுப்பு

  • உலக தமிழ் எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர்

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி பட்டம்
  • நாடகச் செம்மல்
  • முத்தமிழ் வித்தகர்
  • திராவிடர் கழகம் அளித்த பெரியார் விருது
  • தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை அளித்த சிறந்த நாடக நூலுக்கான மூன்றாம் பரிசு - ’அறிவுப் பேரொளி புத்தர் பெருமான்’ நூல்.
  • தமிழக அரசின் சிறந்த நாடகத்துக்கான பரிசு - 'வாழ்வு நம் கையில்' மேடை நாடகம்.
  • அமெரிக்க அரிசோனா பல்கலையின் கௌரவ டாக்டர் பட்டம்.

மற்றும் பல

மறைவு

பட்டுக்கோட்டை குமாரவேல், செப்டம்பர் 8, 2020 அன்று, தனது 95-ம் வயதில் சென்னையில் காலமானார்.

மதிப்பீடு

டி.என். சுகி சுப்பிரமணியன், மாறன், துறைவன், கூத்தபிரான் வரிசையில் வானொலி நாடக இலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றிய எழுத்தாளராக பட்டுக்கோட்டை குமாரவேல் அறியப்படுகிறார்.

நூல்கள்

நாடகம்
  • மனிதநேய மாமகுடம் ஸ்ரீ ராமானுஜர்
  • அறிவுப் பேரொளி புத்தர் பெருமான்
  • சிலுவை நாயகன்
  • வள்ளலார் திருஅருட்பிரகாசர்
  • வாழ்வு நம் கையில்
  • கலைமாமணி டாக்டர் பட்டுக்கோட்டையாரின் பத்து நாடகங்கள்
  • வெற்றித் திலகம்
  • இரு தளிர்கள் – சிறார் நாடகம்
  • சந்தனக் கோப்பை
  • வள்ளல்
  • புரட்சிப் புயல்
நாவல்
  • பேசும் கண்கள்
  • நாடு நம் கையில் (சிறார் நாவல்)
வானொலி நாடகங்கள்
  • குமாரசாமியின் குடும்பம்
  • கிண்கிணி மண்டபம்
  • குயில் தோப்பு
  • பொன் நகர்
  • மனமகிழ் மன்றம்
  • புதிய வேதாளம்
  • தேவை ஒரு மணமகன்
கட்டுரை நூல்
  • வானொலி உலகம்
  • வானொலி நிகழ்ச்சிக்கலை
  • காந்திகண்ட ஒருமைப்பாடு
  • ஒளி நெறியும் உயிர் வாழ்வும்
  • சோம்நாத்
  • முப்பால் முற்றும்
  • எழுதுங்கள் எழுதவரும்
உரை நூல்
  • திருக்குறள் மெய்ப்பொருள் உரை

உசாத்துணை


✅Finalised Page