under review

கூத்தபிரான்

From Tamil Wiki
கூத்தபிரான்

கூத்தபிரான் (என்.வி. நடராஜன்; நாகப்பட்டினம் விட்டல் ஐயர் நடராஜன்; வானொலி அண்ணா) (பிறப்பு: அக்டோபர் 16, 1931 - இறப்பு: டிசம்பர் 23, 2014) நாடக ஆசிரியர். இயக்குநர். நடிகர். சென்னை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். சிறார் நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று நடத்தி ‘வானொலி அண்ணா’ ஆகப் புகழடைந்தார். மேடை நாடகங்கள் பலவற்றைத் தயாரித்து இயக்கி நடித்தார். குழந்தைகளுக்காகப் பல்வேறு நூல்களை எழுதினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

கூத்தபிரான், அக்டோபர் 16, 1931-ல், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், விட்டல் ஐயர் - நாகலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்தார். சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள பெசன்ட் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.

தனிவாழ்க்கை

1960-ல், கூத்தபிரான், சென்னை வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். லலிதாவுடன் திருமணம் நிகழ்ந்தது. என்.வி. நடராஜன் என்ற பெயரில், தி.மு.க. பிரமுகர் ஒருவர் இருந்ததால், அவருக்கான கடிதங்கள் அனைத்தும் இவருக்கு வந்தன. அதனால், தன் பெயரை மனைவியின் ஆலோசனைப் படி, ‘கூத்தபிரான்’ என்று மாற்றிக் கொண்டார். இவர்களுக்கு கணேசன், ரத்னம் என இரு மகன்கள்.இருவருமே நாடகக் கலைஞர்கள்.

கூத்தபிரான், சென்னை வானொலி நிலையப் பணியில் (படம்-நன்றி: ரத்னம் கூத்தபிரான்)

வானொலி வாழ்க்கை

வானொலியில் அறிவிப்பாளராக இருந்த கூத்தபிரான், சிறார் நிகழ்ச்சிகளை நடத்திவந்த ‘வானொலி அண்ணா’ ரா. அய்யாசாமியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். சிறார் நிகழ்ச்சிகளை அமைக்கும் விதம், நாடகங்களை எழுதுதல், தயாரித்தல், அதனை வானொலிக்கேற்ப வடிவமைத்து ஒலிபரப்புதல் போன்ற அனைத்திலும் அனுபவம் பெற்றார்.

ரா.அய்யாசாமியின் பணி ஓய்விற்குப் பின் கூத்தபிரான், சிறார் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்றார். மழலை அமுதம், பாப்பா மலர், சிறுவர் சோலை போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பினார். சிறார்களுக்கான கதைகள், சிறார்களே சொல்லும் கதைகள், சிறார்களுக்கான நாடகங்கள், சிறுவர்களே நடிக்கும் நாடகங்கள் எனப் பல புதிய நிகழ்ச்சிகளை வடிவமைத்தார். ’பிழையறப் பேசுங்கள்’ எனும் தொடர் மூலம் தமிழைச் சரியாக உச்சரிக்கக் கற்றுத்தந்தார். ‘பாப்பாவுக்கு ஒரு கதை’ என்ற நிகழ்ச்சியில், பங்கு கொள்பவரையே கதைகள் சொல்லச் சொன்னார். அந்நிகழ்ச்சியில் ராஜாஜி, அழ.வள்ளியப்பா, பெரியசாமித் தூரன், பூவண்ணன் போன்றோர் தங்கள் குரலிலேயே, கதைகளைக் கூறினர். அந்த நிகழ்ச்சி சிறார்கள் மட்டுமல்லாமல், பெரியோர்களாலும் வரவேற்கப்பட்டது. கணேசன், அப்துல்ஜப்பார், ராமமூர்த்தியுடன் இணைந்து கிரிக்கெட் ஆட்டத்தைத் தமிழில் வர்ணனை செய்தார்.

கூத்தபிரான் சிறார்களுக்காக இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். ‘சொப்பனக் குழந்தை’, ‘பறக்கும் கம்பளம்’, ‘கண்மணிக்கண்ணன்’, ‘அச்சுபிச்சு’, ‘சுருக்குப்பை’ போன்ற நீண்ட தொடர் நாடகங்களை வானொலிக்காகத் தயாரித்து ஒலிபரப்பினார். கூத்தபிரான், சென்னை வானொலியில் வானொலி அண்ணாவாகத் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். 1992-ல் பணி ஓய்வு பெற்றார். குழந்தைகளுக்கான சிறுவர் சங்கத்தைப் பல ஆண்டுகள் பொறுப்பேற்று நடத்தினார்.

மேடை நாடகத்தில் கூத்தபிரான்

நாடக வாழ்க்கை

இளம் வயது முதலே கூத்தபிரானுக்கு நாடகங்களில் ஆர்வம் இருந்தது. 1952-ல், தான் வசித்த அடையாறில், ‘அடையாறு நாடக மன்றம்’ என்ற குழுவினைத் தொடங்கி நாடகங்களை எழுதி, இயக்கி நடித்தார். குழந்தை எழுத்தாளர் சங்கம் 1955-ல் குழந்தைகள் நாடக விழாவினை நடத்தியது. கூத்தபிரான் எழுதி அடையாறு வானொலி சிறுவர் சங்கக் குழந்தைகள் நடித்த ‘அன்னை சொல் அமிர்தம்’ என்ற நாடகம் முதல் பரிசினைப் பெற்றது. வானொலியில் பணியாற்றும் வாய்ப்பு வந்ததும், பணியாற்றிக் கொண்டே நாடகப் பங்களிப்புகளைத் தொடர்ந்தார். 1961-ல், டில்லிக்குச் சென்று நாடகங்களை நடத்தினார். பூர்ணம் விஸ்வநாதனுடன் இணைந்து ‘தனிக்குடித்தனம்’, ‘ஊர் வம்பு’, ‘கால்கட்டு’, ‘வாஷிங்டனில் திருமணம்’ போன்ற நாடகங்களில் நடித்தார். சோ. ராமசாமி நடித்த, அவருக்கு ‘சோ’ என்ற பட்டப்பெயரைப் பெற்றுத் தந்த, 'தேன்மொழியாள்' நாடகத்தின் கதை, வசனம், இயக்கம் கூத்தபிரான் தான்.

நாடகத்தில் கூத்தபிரான் (படம் நன்றி: விகடன்)

1985-ல், ‘நவபாரத் தியேட்டர்ஸ்’ என்ற பெயரில் நாடக்ககுழு ஒன்றைத் தொடங்கினார் கூத்தபிரான். ‘நாராயண கோபாலா’, ‘காசிக்குப் போன கணபதி’, ‘சுபஸ்ய சீக்கிரம்’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இந்நாடகங்களில் அவர், அவரது மகன்கள் கணேசன், ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் ஆகியோரும் நடித்தனர். கூத்தபிரான் பணி ஓய்விற்குப் பின் பல நாடகங்களில் நடித்தார். குழந்தைகள் நாடகக் குழு ஒன்றையும் நடத்தி வந்தார். 6000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சில நாடகங்களில் பெண் வேடமேற்றும் நடித்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கூத்தபிரான் சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நாடகங்கள் சில நூல்களாக வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வழங்கிய ‘சன்மார்க்கப் பிரகாசமணி’ விருது - மூவர்ணக்கொடி ஏற்றுவோம் நாடகத்திற்காக.
  • தமிழக அரசின் கலைமாமணி விருது.
  • ஏவி.எம். வழங்கிய தங்கப்பதக்கப் பரிசு - ‘பயம் கொள்ளலாகாது பாப்பா’ நாடகத்திற்காக.
  • மியூசிக் அகாடமி வழங்கிய ‘நாடகக் கலா சிரோன்மணி’ விருது.

மறைவு

கூத்தபிரான், டிசம்பர் 21 2014 அன்று சென்னையில் தனது மகன் என். ரத்னம் இயக்கிய ’ஒரு ரோபோவின் டைரி' என்ற நாடகத்தில் மகன்கள் மற்றும் பேரன்களுடன் நடித்தார். மறுநாள் குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக ஹைதராபாத் சென்றவர், டிசம்பர் 23, 2014 அன்று ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.

நினைவேந்தல்

கூத்தபிரான் நினைவாக, அவர் உருவாக்கிய நவபாரத் தியேட்டர்ஸை அவரது மகன் ரத்னம் கூத்தபிரான், ’கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ்[1]’ என்று மாற்றி அதன் மூலம் கூத்தபிரான் எழுதி, நடித்து இயக்கிய நாடகங்களையும், புதிய நாடகங்களையும் அரங்கேற்றி வருகிறார்.

கூத்தபிரான் நூல்கள்

நூல்கள்

  • மூவர்ணக்கொடி ஏற்றுவோம்
  • பயம் கொள்ளலாகாது பாப்பா
  • சின்னக்குருவி
  • நாலும் நாலுவிதம்
  • சிக்குடு கிச்சுடு
  • வானொலி அண்ணா கதைகள்
  • பாதியில் நின்ற பந்தயம்
  • படிக்கலாம்! நடிக்கலாம்!
  • பறக்கும் கம்பளம்
  • அபிராமியின் அட்டிகை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page