நற்சேந்தனார்
நற்சேந்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நற்சேந்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
நற்சேந்தனார் பாடிய பாடல் நற்றிணையில் 128-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியின் துயரத்திற்கான காரணத்தை தோழி வினவவும் தலைவி தான் காதல் கொண்டு விட்ட செய்தியை உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- தினைப்பயிர் விளையும் வயல்களை இளம் மகளிர் காவல் காக்கச் செல்வர். மலை நிலத்து ஆடவர் காலில் கழலும் மார்பில் மாலையும் அணிந்திருப்பர். அவர்கள் தினைப்பயிர் காக்கும் இளமகளிருடன் காதல் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.
- காதல் கொண்டு பிரிவுத் துயரை அனுபவிக்கும் மகளிரின் உடல் பொலிவை இழக்கிறது.
- உவமைகள்: பிரிவால் தலைவியின் மேனியின் பொலிவு மங்குவது பகலில் ஏற்றி வைத்த தீபத்தின் சுடருக்கு ஒப்பாகவும் நெற்றி வெளுப்பது நிலவை விழுங்கிய ராகு என்னும் பாம்பு போலவும் என உவமிக்கப்பட்டன.
பாடல் நடை
நற்றிணை - 128
- திணை: குறிஞ்சி
- கூற்று:குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்
'பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
அது கண்டிசினால் யானே' என்று, நனி
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Sep-2025, 19:55:02 IST