under review

நற்சேந்தனார்

From Tamil Wiki

நற்சேந்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

நற்சேந்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

நற்சேந்தனார் பாடிய பாடல் நற்றிணையில் 128-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியின் துயரத்திற்கான காரணத்தை தோழி வினவவும் தலைவி தான் காதல் கொண்டு விட்ட செய்தியை உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • தினைப்பயிர் விளையும் வயல்களை இளம் மகளிர் காவல் காக்கச் செல்வர். மலை நிலத்து ஆடவர் காலில் கழலும் மார்பில் மாலையும் அணிந்திருப்பர். அவர்கள் தினைப்பயிர் காக்கும் இளமகளிருடன் காதல் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.
  • காதல் கொண்டு பிரிவுத் துயரை அனுபவிக்கும் மகளிரின் உடல் பொலிவை இழக்கிறது.
  • உவமைகள்: பிரிவால் தலைவியின் மேனியின் பொலிவு மங்குவது பகலில் ஏற்றி வைத்த தீபத்தின் சுடருக்கு ஒப்பாகவும் நெற்றி வெளுப்பது நிலவை விழுங்கிய ராகு என்னும் பாம்பு போலவும் என உவமிக்கப்பட்டன.

பாடல் நடை

நற்றிணை - 128

  • திணை: குறிஞ்சி
  • கூற்று:குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்

'பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
அது கண்டிசினால் யானே' என்று, நனி
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Sep-2025, 19:55:02 IST