under review

திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை

From Tamil Wiki
திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை (1892 - டிசம்பர் 20, 1972) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

சொக்கலிங்கம் பிள்ளை 1892-ம் ஆண்டு ஸ்வாமிநாத நட்டுவனார் - கண்ணம்மையார் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

சொக்கலிங்கம் பிள்ளையை நாட்டிய ஆசான் ஆக்குவதற்காக தன் மைத்துனர் கண்ணுஸ்வாமி நட்டுவனாரிடம் அனுப்பிவைதார் தந்தை ஸ்வாமிநாத நட்டுவனார். சொக்கலிங்கம் கண்ணுஸ்வாமி நட்டுவனாரிடம் வாய்ப்பாட்டும் மிருதங்கமும் கற்றார். அதில் நன்கு கற்றுத் தொழில்முறைத் தேர்ச்சி பெற்ற பின்னர் நாதஸ்வரத்தில் இருந்த ஆர்வத்தால் நீடாமங்கலம் சிங்காரம் பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். இந்தக் காலகட்டத்தில் சொக்கலிங்கம் பிள்ளைக்கு தவில் கலைஞர் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நட்பும் கிடைத்தது.

தனிவாழ்க்கை

சொக்கலிங்கம் பிள்ளையின் தாய் கண்ணம்மையார் ’தஞ்சை நால்வர்’ எனப்படுபவர்களில் சிவானந்தம் என்பவரின் மகன் வழிப் பேத்தி. தந்தை ஸ்வாமிநாத நட்டுவனார் பரதக்கலை வல்லுனர், மிருதங்கக கலைஞர்.

சொக்கலிங்கம் பிள்ளைக்கு ஒரு மூத்த சகோதரர் - தம்பிக்கண்ணு நட்டுவனார்.

பாபநாசம் கிருஷ்ணமூர்த்தி நட்டுவனாரின் மகள் ஆயிப் பொன்னம்மாள் என்பவரை சொக்கலிங்கம் பிள்ளை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள், இரண்டு பெண்கள்:

  1. சுப்பிரமணிய பிள்ளை (தவிற்கலைஞர்)
  2. ராஜரத்தினம் பிள்ளை (நாதஸ்வரக் கலைஞர்) - தேசபந்து ராஜரத்தினம் பிள்ளை எனப் புகழ் பெற்றவர்
  3. முருகய்யா பிள்ளை (நாதஸ்வரக் கலைஞர்)
  4. கண்ணம்மாள் (கணவர்: தவிற்கலைஞர் திருக்காட்டுப்பள்ளி முருகையா பிள்ளை)
  5. ராஜம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருக்காட்டுப்பள்ளி நாகநாத பிள்ளை, முருகையா பிள்ளையின் சகோதரர்)

இசைப்பணி

சொக்கலிங்கம் பிள்ளை ராகத்தின் ஸ்வரூபத்துக்கு குறைவில்லாது பொருத்தமான சங்கதிகளுடன் முறையான கீர்த்தனைகளை வாசித்தவர். மரபிலிருந்தும் இலக்கணத்தில் இருந்தும் பிறழாத சம்பிரதாய சுத்தமும் ஏராளமான கீர்த்தனைகள் குறித்த அறிவும் சொக்கலிங்கம் பிள்ளையின் தனிச்சிறப்பு.

சொக்கலிங்கம் பிள்ளை முழுநேர வீணைக்கச்சேரி செய்யுமளவுக்கு வீணையிலும் தேர்ச்சி பெற்றவர்.

அபஸ்வரம் எங்கு ஒலித்தாலும் சொக்கலிங்கம் பிள்ளைக்கு ஒவ்வாமை இருந்தது. வானொலி நிகழ்ச்சியில் ஒரு முறை மிருதங்கம் வாசிக்கச் சென்றவர், பாடியவரின் இசை குறைவுபட்டதென பாதியில் எழுந்து வெளியேறிவிட்டார். அதோடு வானொலி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் ஆனது. பாட்டின் தரத்தில் அவருக்கிருந்த கொள்கைப் பிடிப்பை இந்நிகழ்வில் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள்

திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • தன் மகன்கள்
  • நடராஜசுந்தரம்
  • கணேசன்

திருத்துறைப்பூண்டி டாக்டர் கே. ஷண்முகம் பிள்ளையின் மனைவி இவரிடம் வீணை பயின்றவர்களில் ஒருவர். சொக்கலிங்கம் பிள்ளை தன்னைத் தேடிவந்த பல இசைக்கலைஞர்களுக்கு கீர்த்தனைகள் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

சொக்கலிங்கம் பிள்ளை எண்பதாவது வயதில் டிசம்பர் 20, 1972 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page