under review

தாமரை (ஓவியர்)

From Tamil Wiki
ஓவியர் தாமரை
ஓவியர் தாமரை

தாமரை (ஓவியர் தாமரை; தாமெரியோ; பாலாஜி; என். வைத்தியலிங்கம்) (1936 – ஆகஸ்ட் 5, 2022) ஓவியர்; இதழ் வடிவமைப்பாளர்; நாடக, திரைப்பட நடிகர், சொற்பொழிவாளர். முரசொலி, காஞ்சி, தினமணி கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றினார். கேலிச்சித்திரம், படக்கதை, சமூகக் கதை, வரலாற்றுக் கதை என பலவகை ஓவியங்களை வரைந்தார்.

பிறப்பு, கல்வி

என். வைத்தியலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட ஓவியர் தாமரை, 1936-ம் வருடத்தில், திருவாரூர் அருகே உள்ள வேப்பந்தாங்குடி என்னும் கிராமத்தில் பிறந்தார். பள்ளி இறுதிக் கல்வியை முடித்தார். ஓவியம் கற்றார்.

தனி வாழ்க்கை

ஓவியர் தாமரை மணமானவர்.

தாமரை எழுதிய நூல்

இலக்கிய வாழ்க்கை

ஓவியர் தாமரை, அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் நூல்களாக எழுதினார். 'இளமையில் இவர்கள்', 'அரியதும் பெரியதும்', 'நல்ல மனம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். ஆலயங்களில் ஆன்மிக உரைகள் பலவற்றை நிகழ்த்தினார்.

தினமணி சிறுவர் மணி, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் உள்ளிட்ட இதழ்களில் ’பாலாஜி' என்ற புனை பெயரில் சிறுகதைகள், ஆன்மிகக் கதைகளை எழுதினார்.

தாமரையின் ஓவியம்

ஓவியம்

தொடக்கம்

ஓவியர் தாமரை, முரசொலி இதழில் ஓவியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். அண்ணா நடத்திய ’காஞ்சி’ இதழில் ஓவியராகப் பணியாற்றினார். தொடர்ந்து தினமணி கதிரில் ஓவியராகவும், பக்க வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார்.

ஓவியங்கள்

தாமரை வாஷ் டிராயிங், கோட்டுச் சித்திரம், கேலிச்சித்திரம், சித்திரக் கதைத் தொடர், தொடர்கதைளுக்கான ஓவியங்கள் எனப் பல வகை ஓவியங்களை வரைந்தார், தினமணி கதிரின் இதழ் வடிவமைப்பில் பல புதுமைகளைக் கையாண்டார்.

இல்லஸ்ட்ரேட் வீக்லி'யில் பணிபுரிந்த ஓவியர் மரியோ மிராண்டாவைப் பின்பற்றி, அதே பாணியில் ‘தாமெரியோ’ என்ற புனை பெயரில் பல ஓவியங்களை வரைந்தார்.

கோபுலுவிற்குப் பதிலாக...

ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய ‘திருவரங்கன் உலா’', ’மதுரா விஜயம்' போன்ற தொடர்களுக்கு கோபுலு ஓவியம் வரைந்தார். கோபுலு வெளிநாடு செல்ல நேர்ந்ததால் அந்தத் தொடருக்கு கோபுலுவைப் போலவே ஓவியம் தீட்டினார் தாமரை. குங்குமத்தில் கலைஞர் மு.கருணாநிதி எழுதி வந்த குறளோவியத்துக்கு கோபுலு வண்ணம் தீட்டி வந்தார். கோபுலு வெளிநாட்டிற்குச் சென்றதால் கோபுலுவுக்குப் பதில் பல ஓவியங்களை வரைந்தார் தாமரை.

ஓவியர் தாமரை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கை, ஒரு கால் செயலிழந்தபோதும், இடது கையால் ஓவியம் வரையப் பழகி இதழ்களுக்கு ஓவியம் வரைந்தார்.

தாமரை, தினமணி கதிரில், ஏ.என்.சிவராமன் தொடங்கி ரா.அ.பத்மநாபன், துமிலன், சாவி, கே.ஆர்.வாசுதேவன், தீபம் நா.பார்த்தசாரதி, கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோரின் கீழ் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பின் சுதந்திர ஓவியராகச் செயல்பட்டார். தினமணி சிறுவர் மணி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் போன்ற இதழ்களில் பல ஓவியங்களை வரைந்தார்.

நாடகம்

அசோகன், ராதா விஜயம், பெரிமேசன் பெரியசாமி, ஜாக்பாட் ஹவுஸ் உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்தார். வண்ணக் கோலங்கள், தேவை ஒரு மாப்பிள்ளை, கல்யாணக் கைதிகள் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். மேடைப் பாடகராகவும் இயங்கினார்.

திரைப்படம்

ஏழாவது மனிதன், பகடை பன்னிரெண்டு, கைதியின் தீர்ப்பு, சூரக்கோட்டை சிங்கக் குட்டி போன்ற திரைப்படங்களில் நடித்தார். ’காணி நிலம் வேண்டும்' என்ற திரைப்படத்தில் எழுத்தாளர் அசோகமித்திரனுடன் இணைந்து நடித்தார்.

மறைவு

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட தாமரை, ஆகஸ்ட் 5, 2022 அன்று தனது 86-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

ஓவியர் தாமரை ஓவியராக மட்டுமல்லாமல் பக்க வடிவமைப்பாளராகவும் செயல்பட்டார். கேலிச்சித்திரம், படக்கதை தொடங்கி இதழியலுக்கான அனைத்து வகை ஓவியங்களையும் வரைந்தார். நாடக, திரைப்பட நடிகர், பாடகர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் இயங்கிய ஆளுமையாக ஓவியர் தாமரை அறியப்படுகிறார்.

நூல்கள்

  • இளமையில் இவர்கள்
  • அரியதும் பெரியதும்
  • நல்ல மனம்

மற்றும் பல

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-May-2024, 07:39:07 IST