under review

சாழல்

From Tamil Wiki

சாழல் என்னும் பாவகை இரு பெண்கள் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு. ஒரு பெண் இறைவனின் செயல்களை ஏளனப்படுத்தியும்,மற்றொருத்தி உயர்த்தியும் பாடும் முறையில் அமைந்தது. மாணிக்கவாசகரின் திருச்சாழல் இவ்வகையில் அமைந்த குறிப்பிடத்தக்க இலக்கியம்.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதை உரையில், அடியார்க்கு நல்லார், "நல்லார் தம் தோள் வீச்சு நற்சாழல்" என இலக்கணம் கூறுகிறார். " திருச்சாழல், திருத்தோள்நோக்கம், என்ற இந்த இரண்டும் மகளிர் சிலர் எதிர்எதிராக நின்றுகொண்டு, கைகளை நீட்டி, குறிப்பிட்ட பாடலைப் பாடிக்கொண்டு, எதிரே உள்ளவர் கைகளைத் தட்டுவதோ அன்றி அவர்கள் தோள்களைத் தட்டுவதோ அன்றி இருவர் கையையும் மேலே தூக்கிக் கும்பிடுவதுபோலக் கையைத் தட்டிப் பிணைத்துக்கொள்வதோ இவற்றுள் அடங்கும்"சாழல்" என்று அ.ச.ஞானசம்பந்தன் 'திருவாசகம்: சில சிந்தனைகள்' நூலில் குறிப்பிடுகிறார். பதில் கூறும்பெண் 'சாழலோ' எனப் பாடலை முடித்து பூச்செண்டை வீசும் சாழல் விளையாட்டும் வழக்கில் இருந்தது.

பாடல் அமைப்பு

சாழல் பெண்கள் விளையாடும் ஓர் சொல் விளையாட்டாக பக்தி இலக்கியங்களில் இடம்பெறுகிறது. முதலாமவள் பாட்டுடை இறைவனின் தன்மைகளை எளனம் செய்ய, மற்றவள் அதற்கு இறைவனின் சிறப்பைக் கூறி பதிலளிக்கும் வண்ணம் பாடல்கள் அமைகின்றன. வஞ்சப் புகழ்ச்சியாக, ஏளனம் செய்வதுபோல் ஒலித்தாலும், பாடல்கள் இறைவனின் சிறப்பையே பேசுகின்றன.

மாணிக்கவாசகரும் திருமங்கையாழ்வாரும் இந்த வகைமையில் பதிகங்கள் இயற்றியுள்ளனர். திருச்சாழல் திருவாசகத்தில் இடம்பெறுகிறது. திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பதினோராம் பத்தில் 'மானமரும்' எனத் தொடங்கும் ஐந்தாம் பதிகம் சாழலாக அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டு- 1 திருச்சாழல் (மாணிக்கவாசகர்)

மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.
                          (திருவாசகம்-341)

முதல் பெண்: சிவன் மலைமகளைத் தன் இடப்பாகத்தில் வைத்தபின் தலையில் சலமகளை(கங்கைய) தாங்கியது எதற்காக?

இரண்டாமவள்- அப்படித் தாங்காவிட்டால் பூமியெல்லாம் வெள்ளக்காடாகி அழிந்திருக்குமன்றோ? (பகீரதன் தவத்தால் கங்கை பாய்ந்து பூமிக்கு வந்த வேகத்தில் பூமியே பாதாளத்தில் அமிழ்ந்திருக்கும்).

எடுத்துக்காட்டு-2 பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ,-
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ்
வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே.
            (பெரிய திருமொழி 11.5.3)
  

முதல் பெண்: கடல்சூழ்ந்த உலகெலாம் ஏளனம் செய்யும்படி ஆயர்பாடிப் பெண்கள் கடைந்த தயிரைத் திருடிஉண்டவனல்லவா உன் கண்ணன்?

இரண்டாமவள்: தயிரை உண்ட பொன்வயிற்றில் ஏழு உலகையும் உண்டபின்னும் இன்னும் இடம் மிச்சமிருக்கிறது.

(ஏழுலகையும் உண்டு உமிழ்ந்த மாண்பும், அவன் எளிய கோபியரிடம் தயிருண்ட எளிமையும் கூறப்படுகின்றன).

நவீன இலக்கியத்தில் சாழல்

கவிஞர் கண்டராதித்தனின் 'திருச்சாழல்' இச்செவ்வியல் கவிதை வடிவத்தில் தோழிகூற்றும் தலைவி மறுமொழியுமாக காதலின் தவிப்பைக் கூறும் புதுக்கவிதை[1].

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 09:29:02 IST