under review

கரந்தைத் திணை

From Tamil Wiki

கரந்தைத் திணை புறத்திணைகளில் ஒன்று. வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்கும் பொருட்டு அவர்களை இடைவழியில் வளைத்துக் கொண்டு, கரந்தைப் பூவைச் சூடிக் கரந்தை மறவர்கள் போரிடுவது பற்றிய ஒழுக்கங்களைக் கூறுவது கரந்தைத் திணை.

இலக்கணம்

புறத்திணைகளை வகுக்கும் பழம்பாடல் ஒன்று "நிரை மீட்டல் கரந்தையாம்" என இதன் இலக்கணத்தைக் கூறுகிறது. கரந்தை என்பது ஒரு வகைப் பூ. உ.வே.சா. 'கொட்டைக் கரந்தை என்னும் பூடு (பூண்டு)' என்கிறார். கரந்தை என்பது நிரை மீட்டலாகிய கரந்தை ஒழுக்கத்திற்கான குறியீடு ஆகும். எனவே, ஆகுபெயர்.

தொல்காப்பியர் கரந்தைத் திணையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை.

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பகை மன்னனுடன் (கரந்தை மன்னனோடு) கருத்து மாறுபட்ட வெட்சி மன்னனின் மறவர்கள் கரந்தை மறவரோடு போர் புரிந்து அவர்தம் ஆநிரையைக் கவர, கவர்ந்த அந்த ஆநிரையை, வெட்சியாரின் வலிமையைத் தொலைத்து அவர்களிடமிருந்து கரந்தையார் மீட்பது கரந்தைத் திணை என இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மலைத்து எழுந்தோர் மறம் சாயத்
தலைக் கொண்ட நிரை பெயர்த்தன்று(கொளு 2.2)

வெட்சியுள் கரந்தை

இன்று புலவர்கள் கரந்தை என்னும் திணையைத் தனித்ததாய் வெட்சிக்கு அடுத்து வைப்பர், ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியினுள் அடக்கிவிடுகிறார். கரந்தை ஆநிரைகளை மீட்டுக்கொள்வது ஆதலாலும், தொல்காப்பியர் காலத்தில் கரந்தை தனக்குரிய துறைகள் பெற்று வளர்ந்திராமல் இருந்திருக்கலாம் என்பதாலும் இவ்வாறு அடக்கப்பெற்றிருக்கலாம். தொல்காப்பியர் கரந்தையை வெட்சியின் மறுதலையாகக் கொள்கின்றார். ஏனெனில், ஆநிரையைக் கவராத போது மீட்டல் நிகழாது. கரந்தை வெட்சியின் மறுதலை ஒழுக்கம் என்பதைக் கொண்டு கரந்தையும் குறிஞ்சியின் புறன் எனக் கொள்ளப்படுகிறது.

வெறியறி சிறப்பின்
அனைக்கு உரி மரபினது கரந்தை
                                             -தொல்-பொருள்-2-5

என்று கரந்தையை வெட்சியின் ஒரு பிரிவாகவே சொல்லியிருக்கிறார் தொல்காப்பியர்.

கரந்தைத்திணையின் துறைகள்

கதமலி-கரந்தை, கரந்தைஅரவம்,
அதரிடைச்செலவே, அரும்போர்மலைதல்,
புண்ணொடுவருதல், போர்களத்துஒழிதல்,
ஆள்எறிபிள்ளை, பிள்ளைத்தெளிவே,
பிள்ளைஆட்டொடு, கையறுநிலையே,
நெடுமொழிகூறல், பிள்ளைப்பெயர்ச்சி,
வேத்தியன்மலிபே, மிகு-குடிநிலை, என
அரும்கலை உணர்ந்தோர் அவை பதினான்கும்
கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப (2)

இத்துறைகளை பின்வரும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தலாம்

ஆநிரை மீட்கச் செல்லல்
போரும் விளைவும்
இளைஞர் சிறப்பு
போர் நிகழ்ச்சிகள்
மன்னன் பெருமையும் வீரர் சிறப்பும்

எடுத்துக்காட்டு

புறநானூற்றில் 259 - 261, 263, 265, 286,287, 290-91,298 எண் கொண்ட பாடல்கள் கரந்தைத் திணையில் அமைந்தவை..

புறநானூறு 259
  • பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்
  • திணை: கரந்தை துறை: போர் மலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்).

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்,
செல்லல், செல்லல் ; சிறக்க நின், உள்ளம்;
முதுகுமெய்ப் புலைத்தி போலத் 5
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் ;
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே(259)

பொருள் : ஆனிரை மீட்டுவரும் வீரனைப் பாராட்டிப் பாடும் பாடல் இது. அவன் வாளேந்திய வீரன். காலில் வீரக்கழல் அணிந்த வீரன். வெட்சிவீரர்கள் கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டுவருகிறான். பசுக்களும் காளையும் கலந்திருக்கும் ஆனிரைக் கூட்டம் அது. அவை பழக்கத்தால் தம் ஊரை நோக்கிச் செல்கின்றன. முருகேறி ஆடும் புலத்தி போலத் துள்ளிக் குதித்துக்கொண்டு செல்கின்றன. நீ செல்லாதே! செல்லாதே! உன் துணிவு சிறக்கட்டும்! இலையடர்ந்த காட்டில் ஆனிரைகளைக் கவர்ந்துசென்ற வெட்சியார், வல்வில் மறவர், தம் தலையை மறைத்துக்கொண்டு மீட்க வருபவரைத் தாக்கக் காத்திருக்கின்றனர். அவர்களைப் பார். அவர்களுடன் போர் புரியக் காத்திரு!

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:04:14 IST