வேத்தியல்
வேத்தியல் கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. மறவர்கள் தம்முடைய வேந்தனின் இயல்பைப் பெரிதும் வியந்து கூறுவது வேத்தியல். வேத்தியல் மலிபு என்றும் அழைக்கப்படுகிறது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல்தோள் கொண்டு மலைவதில் வல்லவனான, மறத்தைப் பொருந்திய கரந்தை மன்னனின் படைவீரரும் வாட்போரில் வலிமையுடையவருமாகிய கரந்தை மறவர்கள் அவனைப் புகழ்ந்து கூறுவது வேத்தியல் மலிபுஎன்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
தோள்வலிய வய வேந்தனை
வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று (கொளு.2.14)
வெண்பா
அங்கையுள் நெல்லி அதன்பயம் ஆதலால்
கொங்கு அலர் தாரான் குடைநிழல் கீழ்த் - தங்கிச்
செயிர் வழங்கும் வாள் அமருள் சென்றடையார் வேல்வாய்
உயிர் வழங்கும் வாழ்க்கை உறும் ( 34)
பொருள்: தேன் சொரியும் வெற்றி மாலையை உடைய நம் மன்னனின் குடைநிழலில் தங்கி, போர் புரிந்து, பகைவரின் வேலின் முனையில் உயிர் விடும் இந்த வாழ்வு உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியானது.
மன்னனின் வெற்றிப்பெருமிதம் சிறப்பிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு
புறநானூறு 291
- பாடியவர்: நெடுங்களத்துப் பரணர்
- திணை:கரந்தை; துறை:வேத்தியல்
சிறாஅஅர்! துடியர்! பாடுவன் மகாஅஅர்
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே;
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
மணிமருள் மாலை சூட்டி அவன்தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.
பொருள்: சிறுவர்களே! துடி அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற பாணர்களே! தூய வெள்ளாடை உடுத்திய கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள பெரிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும் விளரிப் பண்ணைப் பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் அவனுடலை நெருங்கவிடாமல் ஓட்டுவேன். வேந்தனுக்காக எந்தக் காரணமுமின்றித் தன் உயிரைத் தர விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த பலமணிகள் கலந்த மாலையை அணிவித்து என் கணவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டான். என் தலைவன் இறந்ததால் நான் வருத்தத்தோடு நடுங்குவதைப்போல் அவ்வேந்தனும் வருந்தி நடுங்கட்டும்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:51:35 IST