under review

பிள்ளைத் தெளிவு

From Tamil Wiki

பிள்ளைத் தெளிவு கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. பின்விளைவை எண்ணாமையே இளைஞர்களது இயல்பு. ஒருவன் போரில் புண்ணை ஏற்கும் இளைஞன்(பிள்ளை) 'விழுப்புண்பட்ட நாளே உற்ற வாழ்நாள்; படாத நாள் வீழ்நாள்' என்ற தெளிவைப் பெறுவதைக் கூறும் துறை பிள்ளைத் தெளிவு.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல்துடி என்னும் இசைக் கருவி ஒலிக்க ஒலிக்கப் போர்க்களத்தில் தான் ஏற்ற விழுப்புண்ணுக்கு மகிழ்ந்து கரந்தை மறவன் ஒருவன் ஆடுவதைக் கூறுவது பிள்ளைத் தெளிவு என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கண்மகிழ்ந்து துடிவிம்மப்
புண் மகிழ்ந்து புகன்றாடின்று
(கொளு 2.9)

வெண்பா

மேவார் உயிர் அணங்க மெல் முடித்த பிள்ளையன்
பூவாள் உடை கழியாப் போர்களத்து - ஓவான்
துடிஇரட்டி விம்ம தொடு கழலார் முன்நின்று
அடி இரட்டித்து இட்டாடும் ஆட்டு (29)

பொருள் : பகைவரது உயிர் உலரும்படியாக, அவர்தம் தலையினை அறுத்து முண்டமாக்கிய பிள்ளைத் தன்மையினைக் கொண்ட கரந்தை மறவன், போர்க் களத்திடத்தே, பொலிவுடைய தனது வாளினை உறையினின்றும் கழித்தவன், அதனின்றும் நீங்காதே, துடிப்பறையின் ஆர்ப்பொலி மிகத் தொடுத்த வீரக்கழலினை யுடைய ஏனை மறவரினும் முன்னாக நின்றானாக, இட்ட அடியின்மேல் மீண்டும் அடியிட்டவனாக நின்று, அவ்விடத்தே கூத்தும் ஆடினன்.

உசாத்துணை

கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:16:22 IST