under review

கணியன் பூங்குன்றனார்

From Tamil Wiki

To read the article in English: Kaniyan Pungundranar. ‎

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கணியன் பூங்குன்றனாரின் நினைவுத்தூண்

கணியன் பூங்குன்றனார்சங்ககாலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் எட்டுத்தொகை நூல்களான நற்றிணையிலும், புறநானூற்றிலும் உள்ளன. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உலகளாவிய தமிழரின் சிந்தனைக்காக இப்பாடல் இன்றளவும் எடுத்தாளப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

கணியன் பூங்குன்றனார் என்ற பெயர் தொழிலாலும், ஊராலும் வந்தது. "கணியன்" என்பது ஜோதிடம் சொல்வதைக் குறிக்கிறது. ஜோதிடத்தொழிலை மேற்கொண்டதால் இப்பெயர் பெற்றார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மகிபாலன்பட்டியில் பிறந்தார். மகிபாலன்பட்டியிலுள்ள கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரை ’பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்’ என்று குறிக்கிறது. எனவே இவர் 'கணியன் பூங்குன்றன்’ என்று அழைக்கப்பட்டார். சில நூல்களில் 'கனிபுன் குன்றன்’ என்று பிழைப்பட்டு வந்துள்ளதாக புலவர் கா.கோவிந்தன் குறிப்பிடுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையிலும்(226), புறநானூற்றிலும்(192) உள்ளன. புறநானூற்றின் 192-ஆவது பாடல் புறத்துறை தழுவிய பொதுவியல் திணையில், பொருண்மொழிக்காஞ்சித்துறையில் பயின்று வருகிறது. முனிவர்கள் ஆராய்ந்து கண்ட உண்மைப்பொருளைப் பற்றிய பாடலாதலால் சிறப்பு பெற்றது.

புறநானூறு: 192

பண்டைத்தமிழரின் உலகலாவிய சிந்தனை, நம்பிக்கை, வாழ்வியற் கொள்கை, அறிவியல் அறிவு, மூத்தோர் இளையோர் உறவு ஆகியவற்றை பாடல் கூறுகிறது.

  • எல்லாமும் ஊரே; அனைவரும் உறவினரே
  • தீமையும் நன்மையும் பிறர் கொடுப்பன அல்ல
  • துன்பம் வருவதும், தணிவதும் பிறரால் அல்ல
  • சாதல்/இறத்தல் ஒன்றும் புதிதில்லை
  • வாழ்தல் இனிது என்று மகிழ்வதும் இல்லை, வாழ்வு துன்பமானது என கவலை கொள்வதும் இல்லை
  • மின்னலோடு குளிர்ந்த மேகம் மழைபொழிந்து தரையிறங்கி கல்லில் மோதி ஒலித்து அடித்துச் செல்லப்படும் பேராற்றில் செல்லும் தெப்பத்தைப் போல ஆருயிரும் செல்லும் என்பதை நன்மை தீமை என ஆராய்ந்து கண்டோர் சொற்களால் அறிந்தோம் ஆதலால்,
  • காணும் மனிதனை ’பெரியோர்’ என எண்ணி வியக்கவும் மாட்டோம், 'சிறியோர்' என எண்ணி இகழவும் மாட்டோம்
  • ’சிறியோர்’ என எண்ணி இகழ்தல் பெரியோரை வியத்தலை விட சிறுமையாதலால் அதைச் செய்ய மாட்டோம்.
சிறப்புகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தின் இசையில்அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு 2019-ல் வெளியிடப்பட்டது[1]. இப்பாடல், அதே ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது[2].

விவாதங்கள்

கணியன் பூங்குன்றனாரின் இப்பாடலிலுள்ள கருத்துக்கள் ஆசீவக மதத்துக்கு அணுக்கமானவை. ஆகவே தமிழகத்தின் தொல்மதமாக ஆசீவகம் இருந்துள்ளது என்று முனைவர் க.நெடுஞ்செழியன் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறன்றி இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள உலகுதழுவிய ஒருமைப்பாடு, ஊழ்வினைக்கொள்கை ஆகியவை தொல்தமிழர் நம்பிக்கைகளே என்று அக்கருத்து மறுக்கப்படுகிறது.

நற்றிணை: 226

நற்றிணையின் 226-ஆவது பாடல் பாலைத்திணையில் தலைவி கூற்றாக வந்துள்ளது. பொருள்வயின் பிரிந்த தலைவனை நினைத்து தலைவி வருந்திக்கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • மருந்தாகிப் பயன்படும் மரத்தை பட்டுப்போகுமாறு முழுவதும் வெட்டிக் கொல்வதில்லை. அவ்வாறு வெட்டினால் அது மீண்டும் பயன்படாது.
  • உடல் வருத்தி தவம் செய்வோர் தம் உடல் முழுதும் வருந்துமாறு தவம் செய்தால் தவத்தின் பலனை அனுபவிக்க முடியாமல் போகும் ஆதலால் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
  • அரசர்கள் தம் நாட்டு மக்களின் வளம் குன்றுமளவு பெருவரி வாங்க எண்ணமாட்டார்கள்.
  • பொருள் ஈட்டுவது இன்ப நுகர்ச்சியின் பொருட்டு. இன்ப நுகர்ச்சிக்கு இன்றியமையாதது உயிர். உயிர் அழிந்தால் ஈட்டும் பொருளால் பயன் கிடைக்காது.

நினைவிடம்

தமிழ்நாடு அரசு சார்பாக கணியன் பூங்குன்றனாருக்கு அவர் பிறந்ததாக கருதப்படும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் நடை

  • புறநானூறு 192

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

  • நற்றிணை 226

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.

உசாத்துணை

  • புறநானூறு விளக்கவுரை, ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, முதல் பதிப்பு - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1947, மறு பதிப்பு - பூம்புகார் பதிப்பகம் 2009
  • பௌத்தமும் தமிழும்! bautham.net
  • இந்து தமிழ் திசை, பிப்ரவரி 4, 2020
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு வரலாற்று துாண்- தினமலர் இணைய இதழ் பதிவு செய்த நாள்: ஏப்ரல் 14, 2021
  • புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
  • சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page