under review

எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்)

From Tamil Wiki

To read the article in English: S. Ramakrishnan (Scholar). ‎

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ஆர்.கே

எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) (ஏப்ரல் 2, 1921 - ஜூலை 24,1994) (எஸ்.ஆர்.கே) தமிழறிஞர், மார்க்ஸிய அறிஞர். மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டார். இலக்கியத்திறனாய்வு நூல்களை எழுதியிருக்கிறார். ரஷ்யப் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

(பார்க்க எஸ். ராமகிருஷ்ணன் எழுத்தாளர்)

பிறப்பு, கல்வி

எஸ்.ஆர்.கே. என்றும் அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டம் கிளிமங்கலத்தில் வி.கெ.சுந்தரம்- மங்களம் இணையருக்கு ஏப்ரல் 2, 1921-ல் பிறந்தார். மாயவரம் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் கற்கச் சேர்ந்தார். அப்போது சுதந்திரப்போரில் ஈடுபட்டார். 1940-ல் இண்டர்மீடியட் முடித்துவிட்டு காசி பல்கலையில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கு இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து மாணவர் கிளர்ச்சியை நிகழ்த்தினார். இதனால் படிப்பு தடைபட்டது. 1942-ல் திருச்சி தேசியக்கல்லூரியில் மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்தாலும் விடுதலைப்போரில் ஈடுபட்டமையால் அதை முடிக்கவில்லை.

இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் உத்கல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து நேபாள பல்கலை கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் மதுரை பல்கலைக் கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு கம்பனும் மில்ட்டனும் ஒரு புதிய பார்வை ஒரு முன்னோடி நூல் என கருதப்படுகிறது.

தனிவாழ்க்கை

எஸ்.ராமகிருஷ்ணன் 1944-ல் தன்னுடன் கட்சிப்பணியாற்றிய கமலாவை மணந்தார். மூன்று குழந்தைகள். தன் பாரம்பரியச் சொத்துக்களை முழுக்க விற்று கட்சிக்கே அளித்தார். கட்சியின் முழுநேர ஊழியராக சென்னையில் கம்யூனில் தங்கி பணியாற்றினார். அப்போது அந்த கம்யூனில் ஜெயகாந்தன் சிறுவனாக இருந்தார். ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலில் எஸ்.ஆர்.கே பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

கட்சியில் கருத்துமோதல்கள் உருவானபோது எஸ்.ராமகிருஷ்ணன் முழுநேர ஊழியர் பணியை துறந்து 1953-ல் மதுரைக்கு வந்து பேராசிரியர் சங்கரநாராயணனுடன் இணைந்து தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றை தொடங்கினார். அது அவருக்கு நிரந்தர வருமானத்தையும் புகழையும் அளித்தது. மதுரை (காமராஜ்) பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றபின் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அழைப்பின் பேரில் அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றினார்.

முதுமையில் பார்கின்ஸன் நோயால் அவதிப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் நடுங்கும் கைகளால் ஒற்றைவிரலால் தட்டச்சிட்டு நூல்களை எழுதினார். பார்க்கின்ஸன் நோய் பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கையில் உயிர்துறந்தார்.

அரசியல் வாழ்க்கை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பயில்கையில் விடுதிக்கு வந்து மாணவர்களைச் சந்தித்த கே.பாலதண்டாயுதம் பேசிய பேச்சால் கவரப்பட்டார். 1936-1937-ம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸின் பேச்சாளராக அறியப்பட்டார். பாலதண்டாயுதம் காங்கிரஸில் இருந்து இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குச் சென்றபோது தானும் சென்றார். 1941-1942-ல் காசியில் பயில்கையில் கம்யூனிஸ்டுக் கட்சி ஒருங்கிணைத்த மாணவர் கிளர்ச்சியை தலைமைதாங்கி நடத்தினார். கைதுசெய்யப்பட்டு காசியில் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறையிலடைக்கப்பட்டார்

1941-ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சேலத்தில் நடத்திய தமிழ்நாடு மாணவர் சம்மேளத்தின் தென்மண்டல மாநாட்டில் அதன் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். 1942-ல் திருச்சி தேசியக்கல்லூரியில் சேர்ந்து மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் வீச்சு கொள்ளவே அதில் சேர்ந்து படிப்பை கைவிட்டார். 1943-ல் சென்னை சென்று ஜனசக்தி முதலிய இதழ்களில் தேசபக்தன், டைரி, ஈட்டிமுனை ஆகிய பெயர்களில் அரசியல் கட்டுரைகள் எழுதினார்.

அமைப்பு செயல்பாடுகள்

எஸ்.ராமகிருஷ்ணன் ரஷ்யச் சார்பு அரசியல் அமைப்பான உலகசமாதான இயக்கத்தில் தமிழகப்பொறுப்பை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியுடன் இணைந்து கலையிலக்கிய பெருமன்றத்தில் பணியாற்றினார். சோவியத் ருஷ்யாவின் பிரசுர நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உருவாக்கத்தில் பங்குகொண்டார். இந்திய சோவியத் நட்புறவு கழகம் (இஸ்கஸ்) அமைப்புடன் இணைந்து பணியாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

மொழியாக்கம்

எஸ்.ராமகிருஷ்ணன் முதன்மையாக மொழியாக்கத்துக்காக இலக்கியச் சூழலில் நினைக்கப்படுகிறார். அலெக்ஸி டால்ஸ்டாயின் சக்ரவர்த்தி பீட்டர் என்னும் பெருநாவலை தமிழாக்கம் செய்தார். ரஜினி பாமி தத் எழுதிய இன்றைய இந்தியா என்னும் மொழியாக்க நூல் மார்க்சிய சிந்தனையாளர் நடுவே புகழ்பெற்றிருந்தது

பாரதி ஆர்வலர்.

இந்திய இடதுசாரிகள் இடையே சி.சுப்ரமணிய பாரதியார் ஏற்பை பெற்றதில் பி.ஜீவானந்தம் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் பெரும் பங்கு வகித்தனர். 1982-ல் பாரதி நூற்றாண்டுவிழாவை தமிழ்நாடெங்கும் கொண்டாடுவதற்கு எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். டெல்லியில் 64 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்த பாரதிவிழாவை ஒருங்கிணைத்தார். அதன்பொருட்டு Bharathi Patriot, Poet and Prophet என்னும் நூலை எழுதினார்.

இலக்கிய உரையாடல்கள்

எஸ்.ராமகிருஷ்ணன் தோழர் எஸ்.ஆர்.கே என்னும் பெயரால் நண்பர்களிடையே புகழ்பெற்றிருந்தார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சென்னையிலும் பிற ஊர்களிலும் நிறுவிய கம்யூன்களில் தங்கியிருந்திருக்கிறார். இலக்கிய உரையாடல்கள் வழியாக நா. வானமாமலை போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்களுக்கும் தொ.மு.சி. ரகுநாதன் ஜெயகாந்தன், ஜி. நாகராஜன் போன்ற இலக்கியவாதிகளுக்கும் இலக்கியவழிகாட்டியாக அமைந்தவர்.

மறைவு

ஜூலை 24,1994-ல் எஸ்.ராமகிருஷ்ணன் மறைந்தார்.

இலக்கிய இடம்

எஸ்.ராமகிருஷ்ணன் ரஷ்ய இலக்கியங்களை தமிழாக்கம் செய்தவர் என்றவகையில் நவீன இலக்கியத்தில் இடம்பெறுகிறார். முற்போக்கு அழகியலை தமிழகத்தில் நிறுவிய முன்னோடி. தமிழ்ச் செவ்வியல் நூல்களுக்கு மார்க்ஸியக் கொள்கையின் அடிப்படையில் ஆய்வுமுறைமையை உருவாக்கியவர். நா. வானமாமலை போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்களுக்கும் தொ.மு.சி. ரகுநாதன் ஜெயகாந்தன், ஜி. நாகராஜன் போன்ற இலக்கியவாதிகளுக்கும் இலக்கியவழிகாட்டியாக அமைந்தவர்.

நூல்கள்

கம்பன் ஆய்வு
  • கம்பனும் மில்டனும் ஓரு புதியபார்வை
  • கற்பின் கனலி
  • கம்பனும் ஷேக்ஸ்பியரும்
  • சிறியன சிந்தியாதான்
  • கம்பன் கண்ட அரசியல்
  • கம்பசூத்திரம்
இலக்கியம்
  • இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு
  • திருக்குறள் ஒரு சமுதாயப்பார்வை
  • திருக்குறள் ஆய்வுரை
அரசியல்
  • மார்க்ஸிய பொருளாதாரப் பார்வை
  • ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு
  • சமயவாழ்வில் வடக்கும் தெற்கும்
  • இந்தியப் பண்பாட்டில் தமிழர்
மருத்துவம்
  • உங்கள் உடம்பு
  • நமது உடல்
மொழியாக்கம்
  • சக்கரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி டால்ஸ்டாய்
  • வீரம் விளைந்தது - நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கி
  • இன்றைய இந்தியா - ரஜினி பாமி தத்
  • பண்டைக்கால இந்தியா - எஸ்.ஆர்.டாங்கே
  • இந்தியாவின் முதல் விடுதலைப்போர் - மார்க்ஸ் எங்கல்ஸ்
  • தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸ்
  • வெனிஸ் வணிகன் - ஷேக்ஸ்பியர்
ஆங்கிலம்
  • The Epic Muse- The Ramayana and Paradice lost
  • Bharathi Patriot, Poet and Prophet

உசாத்துணை


✅Finalised Page