ஷண்முக சுப்பையா
ஷண்முக சுப்பையா ,நவீனக் கவிஞர், எழுத்தாளர். எழுத்து காலகட்டத்தின் புதுக்கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர். கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஷண்முக சுப்பையாவின் பிறப்பு இறப்பு விவரங்களை அறியமுடியவில்லை. ஷண்முக சுப்பையா ராணுவத்தில் இருந்தார். திருவனந்தபுரத்தில் வசித்தார். கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரஸ்ஸில் செக்ஷன் அதிகாரியாக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஷண்முக சுப்பையாவின் கவிதைகள் வஞ்சிநாடு, இலக்கிய வட்டம், சுபமங்களா, கோகயம், கணையாழி ஆகிய இதழ்களில் வெளியாகின. இவரின் இரு கவிதைத் தொகுதிகளுக்கும் கவிஞர் நகுலன் முன்னுரை எழுதினார்.
ஷண்முக சுப்பையா கட்டுரை, சிறுகதை, நாடகங்களும் எழுதினார். அவை 'இலக்கிய வட்டம்' இதழில் வெளிவந்தன.
'குருக்ஷேத்ரம்' என்ற தொகுப்பில் ஷண்முக சுப்பையாவின் 43 கவிதைகளும், 'திருமலை' என்ற புனைபெயரில் அவர் எழுதிய 'பூனையும் கடுவாயும் சில சவங்களும்' என்ற கதையும், 'தீர்ப்பு' என்ற ஓரங்க நாடகமும் உள்ளன.
மதிப்பீடு
"பழைய கவிதை விஷய எல்லைகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாக கவிதை - புதுக்கவிதையாகவே - செய்ய முடியும் என்று செய்து காட்டியவர் ஷண்முக சுப்பையா. கொஞ்ச காலத்துக்குப்பின் கவிதை செய்வதையே நிறுத்திக்கொண்டுவிட்டார். ஆனால், எழுதியவரையில் விஷய எல்லைகளை மீறி, புதுக்கவிதைகளை கவிதையாகவே செய்துகாட்டியவர் ஷண்முக சுப்பையா என்பதற்கு அவருடைய ஒவ்வொரு கவிதையையுமே உதாரணமாக எடுத்துக்காட்டலாம். 'நாய்க்காட்சி', 'காவற்காரன்' முதலிய கவிதைகள் சிறப்பான உதாரணங்களாக அமைகின்றன." என க.நா.சுப்ரமணியம் மதிப்பிடுகிறார்.
ஷண்முக சுப்பையாவின் கவிதைகளின் பிரத்யேகச்சிறப்பு ஒரு அபூர்வமான எளிமை. இவர் எழுப்பும் குரலுக்காகவே "அர்த்தத்தை" நீக்கிவிட்டுக்கூட இவருடைய பல கவிதைகளைப் படிக்கலாம்; சில கவிதைகளில் ஆங்கிலச்-சொல்-தொடர்களை மிகவும் வக்கணையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆனால் இவர் அடிப்படை சுருதி ஒரு அபூர்வமான எளிமை, தெளிவு" என நகுலன் மதிப்பிடுகிறார்.
எளிமை, நேரடித்தன்மை, கடிக்கிறமாதிரி குத்தல், மன எரிச்சல் ஆகியவை தொனிக்கும் கவிதைகள் எழுதியதாக சி.சு. செல்லப்பா குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
- குருக்ஷேத்ரம் (கவிதைகள், சிறுகதை, நாடகம்)
கவிதைத் தொகுப்பு
- கண்ணன் என் தம்பி (1972)
- ஷண்முக சுப்பையா கவிதைகள் (1975)
உசாத்துணை
- ஷண்முக சுப்பையா கவிதைகள் நூல்
- புதுக்கவிதையின் எல்லைகள் - க.நா. சுப்ரமணியம் - கவிதைகள் இதழ்
- ஷண்முக சுப்பையா கவிதைகள் - தினமணி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jul-2025, 19:09:09 IST