under review

வ. அதியமான்

From Tamil Wiki
வ. அதியமான்

வ. அதியமான் (பிறப்பு: மே 29, 1980) நவீன தமிழ்க் கவிஞர். கட்டுரையாளர். இலக்கிய இதழ்களிலும் இணைய ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

வ. அதியமான் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தென்சேந்தமங்கலம் எனும் கிராமத்தில் ப. வரதராசன், வ. கனகவல்லி இணையருக்கு மே 29, 1980-ல் பிறந்தார். தொடக்கக் கல்வியை அவரது கிராமப் பள்ளியிலும், நடுநிலைக் கல்வியை அம்மையப்பட்டு நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை வந்தவாசி மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வந்தவாசியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

வ. அதியமான் பிரமிளின் கவிதைகள் வழியாக நவீன கவிதைகள் தனக்கு அறிமுகம் ஆனதாகக் குறிப்பிடுகிறார். இவரது முதல் கவிதைப் மார்ச் 2020 சொல்வனம் இணைய இலக்கிய இதழில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக காலச்சுவடு, கதவு, வணக்கம் லண்டன், கனலி, அகழ் போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். டிசம்பர் 25, 2023 அன்று இவரது முதல் கவிதை தொகுப்பு 'குடைக்காவல்', சால்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

2024 -ம்ஆண்டு வேரல் புக்ஸ் வெளியிட்ட 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்ற 124 நவீன கவிஞர்களின் நவீன காதல் கவிதைகளின் பெருந்தொகுப்பிலும், தேநீர் பதிப்பகம் வெளியிட்ட 'இறகிசைப் பிரவாகம்' என்ற பெயரில் பறவைகள் பற்றிய 130 நவீன கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பிலும் வ. அதியமானின் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

வ. அதியமான தனது இலக்கிய ஆக்கங்களில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாகவும் தனது ஆதர்சங்களாகவும் தேவதச்சன், கல்பற்றா நாராயணன், பிரமிள், சுகுமாரன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

வ. அதியமான் நவீன தமிழ்க் கவிதையின் தேய் வழக்கான அழகியல் கூறுகளைத் துறந்து, நேரடியான கவித்துவ கணங்களை நிகழ்த்தும் 'வெற்று கவிதை' அழகியலில் (plain poetry) ஆர்வம் கொண்டு கவிதைகளை எழுதுபவர். ஒவ்வொரு கவிதையும், இப்பிரபஞ்ச அறிதலின் ஒரு துளியாக இருக்க வேண்டுமென்ற விழைவைக் கொண்டிருப்பவர். கவிதை என்பது மெய்மை அனுபவத்தின் ஒரு துளியை எழுப்பும் சாத்தியம் கொண்டது என்ற புரிதலைக் கொண்டிருப்பவர்.

“இந்த கவிதைகளின் வழியே அதியமான் உருவாக்கும் சித்திரங்கள், எளிமையும் அழகும் கொண்டவை. மரபும் நவீனமும் இணைந்த கவிமொழியைக் கையாள்கிறார். ஒளியும் இருளும் கலந்த இந்தக் கவிதைகள் நெருக்கடிக்குள்ளும் வாழ்வின் இனிமையைப் பேசுகின்றன. ஜென் கவிதைகளில் அடையும் உணர்வுகளின் இன்னொரு நிலையைப் போலவே இந்த கவிதைகளை உணருகிறேன்” என்று வ.அதியமானின் கவிதைகளை மதிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

“கவிதைக்கு எது தேவையோ அதைக் கவிதையே தேர்ந்து கொள்ளும். பின் தொடர்வது மட்டுமே கவிஞனின் வேலை. இந்தக் குடைக்காவல் தொகுப்பின் பல கவிதைகளில் வ. அதியமான் கவிதையை வழி பிசகாமல் பின் தொடர்ந்திருக்கிறார்” என்று வ. அதியமான் கவிதைகள் குறித்து மதார் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • குடைக்காவல் (2023, சால்ட் வெளியீடு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jun-2024, 23:56:34 IST