வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன் (பிறப்பு: மார்ச் 18, 1965) அறிவியல் ஆய்வாளர், எழுத்தாளர். தமிழ் அறிவியல் எழுத்தை நவீனத்தமிழுக்குக் கொண்டு வந்தவர்களில் முன்னோடி. வானொலி மற்றும் தொலைக்காட்சியில் அறிவியல் உரை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கணினியிலும், தளையறு மென்கலனிலும் ஆர்வம் கொண்டவர். தமிழ் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். அறிவியல், தொழில்நுட்பத்திற்கான தமிழ் கலைச் சொல்லாக்கங்களில் ஈடுபட்டிருக்கிறார். இணைய இதழ்களில் அறிவியல் கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
வெங்கட்ரமணன் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் வேதநாராயணன், லட்சுமி இணையருக்கு மார்ச் 18, 1965-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு சகோதரர்கள். கும்பகோணம் லிட்டில் ஃபிளவர் கான்வென்டில் உயர் நிலைக்கல்வி கற்றார். டவுன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். கும்பகோணம் அரசுக்கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை, முதுகலைப்பட்டங்கள் பெற்றார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்) உள்ள லேசர் அறிவியல் கழகத்தில் லேசர் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
வெங்கட்ரமணன் 1994-ல் விஜயலட்சுமியை மணந்தார். மனைவி குழந்தைகளில் ஏற்படும் மரபணு நோய் குறித்த ஆய்வாளர். மகன்கள் விக்ரம், வருண். கனடாவின் டொரண்டோ நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
பல்வேறு கல்வி, ஆராய்ச்சிப்பணிகளுக்குப்பின் வெங்கடரமணன் டொராண்டோவில் உள்ள மெக்ரே இமேஜிங்கில் (McRae Imaging) தலைமை அறிவியல் அதிகாரியாக 2020 முதல் பணியாற்றி வருகிறார்.
ஆசிரியப்பணி
வெங்கட்ரமணன் முனைவர் பட்டம் பெற்றபின் இங்கிலாந்து, இந்தியா, போர்ச்சுகல், ஜப்பான் ஆகிய நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பதவிகளை வகித்தார். அவர் இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் லெவர்ஹுல்ம் காமன்வெல்த்/அமெரிக்கா வருகைதரு பேராசிரியராக (Leverhulme Commonwealth/USA Visiting Fellow) இருந்தார்.
- செப்டம்பர் 2021 முதல் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மெக்மாஸ்டர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பள்ளியின் தொழில்துறை பேராசிரியர்.
- ஜூன் 2024 முதல் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பொருள் அறிவியல் மற்றும் பொறியியல் துணைப் பேராசிரியர்.
- ரியர்சன் பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் கணினி பொறியியல் துணைப் பேராசிரியர், ஜனவரி 2008 - டிசம்பர் 2011.
- மூத்த பணியாளர் விஞ்ஞானி, ஃபோட்டானிக்ஸ் ஆராய்ச்சி ஒன்ராறியோ, (ஒன்டாரியோ சிறப்பு மையங்கள்), ஏப்ரல் 2001 - மார்ச் 2004.
ஆய்வு வாழ்க்கை
- பிரிட்டனில் காமன்வெல்த் லீவர்யூம் ஆராய்ச்சியாளர்
- போர்ச்சுகலில் வருகைதரு ஆராய்ச்சியாளர்
- ஜப்பான் அரசாங்க அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகத்தின் வரவேற்பு ஆராய்ச்சியாளர்
- .இந்திய அணுசக்தி துறையில் விஞ்ஞானி
- மூத்த பணியாளர் விஞ்ஞானி, ஃபோட்டானிக்ஸ் ஆராய்ச்சி ஒன்ராறியோ, (ஒன்டாரியோ சிறப்பு மையங்கள்) - (ஏப்ரல் 2001 - மார்ச் 2004)
கணினி வாழ்க்கை
வெங்கட்ரமணன் கணினித்துறையிலும், தளையறு மென்பொருளிலும்(Open Source Software) ஆர்வம் கொண்டவர்.
- கணினியில் தமிழ்ப்பயன்பாடுகளை நெறிப்படுத்தும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) என்ற பன்னாட்டு அமைப்பின் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணைமூல நிரலிகள் குழுவிற்கு தலைவராக இருந்தார்.
- tamillinux.org என்ற இணையதளத்தை நடத்தி வந்தார்.
பொறுப்புகள்
- டொராண்டோவில் உள்ள மெக்ரே இமேஜிங்கில் (McRae Imaging) தலைமை அறிவியல் அதிகாரி (2020 முதல்)
- லுமென்ட்ரா இன்க் (Lumentra Inc.) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (2009 முதல்)
- டொராண்டோ பல்கலைக்கழகத்தின் இம்பாக்ட் (Impact) மையத்தில் அறிவியல் செயல்பாடுகள் இயக்குநர்(2004 -2020)
- கனடாவின் வண்ண ஆராய்ச்சி சங்கத்தின்(Color Research Scociety of Canada) பொருளாளர், தலைவர்
- சர்வதேச வெளிச்ச ஆணையத்தின் (CIE) கனேடிய தேசியக் குழுவின் தலைவர்(2012-2019)
- இந்தியாவின் இந்தூரில் உள்ள அணுசக்தி துறையில் - சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு டெக்னாலஜியில் அறிவியல் அதிகாரி - (ஏப்ரல் 1997 - அக்டோபர் 1998)
- கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் அமைப்பின் தலைவர் (2026 முதல்)
- கனடாவின் நிற ஆராய்ச்சி சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (2026 முதல்)
இலக்கிய வாழ்க்கை
வெங்கட்ரமணனின் முதல் அறிவியல் கட்டுரை 1999-ல் திண்ணை மின்னிதழில் வெளிவந்தது. தொடர்ந்து திண்ணை, ஆறாம்திணை, காலச்சுவடு, காலம், சொல்வனம், நீலி உள்ளிட்ட இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். முதல் நூல் 'குவாண்டம் கணினி' என்ற அறிவியல் கட்டுரைத் தொகுப்பு தமிழினி வெளியீடாக 2006-ல் வெளியானது. அறிவியல் கட்டுரைகளின் இரண்டாம் தொகுப்பு 'ஒளியிலிருந்து இருளுக்கு' 2026-ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.
அசோகமித்திரன், தி. ஜானகிராமன், ஜெயமோகன், கு.ப. ராஜகோபாலன், சுந்தர ராமசாமி ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- ஜெஜியாங் பல்கலைக்கழக உணர்திறன் கருவிகளுடன் இணைந்து பணியாற்றியதற்காக சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தால் உயர்நிலை வெளிநாட்டு திறமை விருது (High-Level Overseas Talent Award).
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஜப்பானிய அரசு) STA முதுகலை உதவித்தொகை.
- லெவர்ஹுல்ம் அறக்கட்டளை, UK ஆல் காமன்வெல்த்/அமெரிக்கா வருகை உதவித்தொகை. (இந்த உதவித்தொகை அனைத்து கல்வித் துறைகளையும் உள்ளடக்கிய போட்டி அடிப்படையில் வழங்கப்பட்டது.)
- ஸ்காட்டிஷ் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான கார்னகி பயண மானியம்
நூல் பட்டியல்
கட்டுரைத் தொகுப்பு
- குவாண்டம் கணினி (தமிழினி, 2006)
- ஒளியிலிருந்து இருளுக்கு (தமிழினி, 2026)
இணைப்புகள்
- வெங்கட்ரமணன் - வலைதளம்
- வெங்கட்ரமணன் - eng.mcmaster
- வெங்கட்ரமணன் கட்டுரைகள் - நீலி மின்னிதழ்
- புதிய நிலத்தில் பூக்கும் தோட்டம் | வெங்கட்ரமணன் - panbudan
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jan-2026, 19:53:06 IST