under review

வீராயி

From Tamil Wiki
தமிழ் ஒளி வீராயி

வீராயி (1947) கவிஞர் தமிழ் ஒளி எழுதிய குறுங்காவியம். ஒரு தலித் பெண்ணை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆகவே தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பு என்றும் கொள்ளத்தக்கது.

வெளியீடு

தமிழ் ஒளி 1947-ம் ஆண்டில் நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல் ஆகிய மூன்று குறுங்காவியங்களை எழுதினார். அவற்றில் வீராயி தலித் பெண்ணின் வாழ்க்கையை முன்வைத்த நவீன காவியமாக அமைந்தது. இந்நூலை மா.சு.சம்பந்தன் நடத்திய தமிழர் பதிப்பகம் 1947-ல் வெளியிட்டது. பின்னர் செ. து. சஞ்சீவி இந்நூலை பதிப்பித்தார்.

நோக்கம்

தமிழ் ஒளி இந்நூலின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'எழுத்தாளர்களே, கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே, உங்களுக்கு வீராயி மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். மக்களுக்காக, மக்கள் உயர, மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள். உலகம் முழுக்க உருவாகிக்கொண்டுவரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும்'.

'வீராயி' காவியத்திற்கு பாரதியார் பாடிய 'கரும்புத் தோட்டத்திலே' என்ற பாடலே அடித்தளம் என்று தமிழ் ஒளியின் பதிப்பாளராகிய செ.து. சஞ்சீவி கருதுகிறார்.

கதைச்சுருக்கம்

மருதூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தன் தந்தை வேடப்பனை இழக்கும் வீராயி புதுப்பட்டி மாரியை தந்தையாகவும் வீரண்ணனை அண்ணனாகவும் கொள்கிறாள். வீராயியை புதுப்பட்டி ஜமீன்தார் வல்லுறவுக்கு முயன்றபோது அவனைக் கொன்ற வீரண்ணன் தூக்கிலேற்றப்படுகிறான். பிழைக்க வழியின்றி தவிக்கும் மாரியும் வீராயியும் கங்காணிகளால் ஏமாற்றப்பட்டு ஆப்பிரிக்கா கண்டத்திற்குச் செல்கிறார்கள். அங்கு புதுப்பட்டி மாரி பாம்பு கடித்து மறைகிறான். வீராயி ஆனந்தனை கண்டு காதலிக்கிறாள். ஆனந்தனுடன் அவள் தப்பி புதுப்பட்டிக்கு வருகிறாள். ஆனந்தனின் முன்னோர் கவுண்டர்கள் என்றும் வீராயி பறைச்சி என்றும் கண்டுபிடிக்கும் ஊரார் அவர்களை வேட்டையாடுகிறார்கள். குடும்பத்தை இழந்து தவிக்கும் வீராயி மணம் புரிந்துகொள்ள முயல, சாதியின் பெயரால் அவள் வேட்டையாடப்படுகிறாள். ஊர்க்கவுண்டரின் ஆட்களுடன் நிகழ்ந்த மோதலில் ஆனந்தனையும் வீராயியையும் அவர்கள் கொலை செய்கிறார்கள்.

நடை

அண்ணன் இறந்தவுடன் - என்

ஆவி துறந்திருப்பேன்

புண்ணியத் தந்தையினால் - அதைப்

பொறுத்துக் கொண்டிருந்தேன்

கண்இரண் டில்லைஇன்று - பினர்

காட்சியும் தப்பிடுமோ?

மண்ணில் உயிர்விடுவேன் - என

மங்கை துணிந்துவிட்டாள்

இலக்கிய இடம்

தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியுடே மகன் என்னும் மலையாள நாவல் 1947-ல் வெளிவந்தது. ஒரு தலித் மையக் கதாபாத்திரமாக அமைந்த அந்நாவல் இலக்கியச் சூழலில் திகைப்பையும் புதிய போக்கையும் உருவாக்கியது. அந்நாவலை சுந்தர ராமசாமி 1958-ல் தமிழாக்கம் செய்தார். அப்போது அந்நாவலின் கதைநாயகன் ஒரு தலித் என்பது தமிழ்ச்சூழலில் இடதுசாரிகளையும் திகைப்படையச் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் 1947லேயே தலித் பெண்ணை பாட்டுடைத் தலைவியாக ஆக்கி இக்காவியத்தை தமிழ் ஒளி படைத்துள்ளார். இந்நூல் பரவலாகக் கவனிக்கப்படவுமில்லை. இதைப்பற்றி எவரும் எழுதவுமில்லை. இந்நூலை அவ்வகையில் தமிழ் தலித் இலக்கிய வகைமையின் முன்னோடியான ஆக்கம் என்று சொல்லலாம்.

வீராயியின் துயரவாழ்க்கையைச் சொல்லும் இந்தக் காவியம் அன்றிருந்த சாதிய ஒடுக்குமுறை, அதைத் தவிர்க்க கப்பலேறி அடிமையாகச் செல்லும் வாழ்க்கை, அங்குள்ள அடக்குமுறை என விரிந்த களத்தில் தலித் வாழ்க்கையைச் சொல்கிறது. பின்னர் தமிழில் எழுதப்பட்ட இமையம் எழுதிய கோவேறு கழுதைகள், ப. சிவகாமி ஆனந்தாயி போன்ற பல படைப்புகளின் எல்லா அழகியல்கூறுகளையும் இந்நூல் கொண்டிருக்கிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2025, 21:52:51 IST