under review

தகழி சிவசங்கரப் பிள்ளை

From Tamil Wiki

தகழி சிவசங்கரப் பிள்ளை (கொச்சுக்காங்கோவில் சிவசங்கரப் பிள்ளை, கே.கே. சிவசங்கரப் பிள்ளை) (ஏப்ரல் 17, 1912 - ஏப்ரல் 10, 1999) மலையாள எழுத்தாளர்., நாவலாசிரியர், சிறுகதையாசிரியர். கேரளத்தின் இருபதாம் நூற்றாண்டின் முதன்மை இலக்கியவாதியாக கருதப்படும் தகழி சிவசங்கரப் பிள்ளை தேசிய சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற முதல் கேரள நாவலாசிரியர்.

பிறப்பு, கல்வி

தகழி சிவசங்கரப் பிள்ளை ஏப்ரல் 17, 1912 அன்று அப்போதைய திருவிதாங்கூர் நாட்டின் (தற்போதைய கேரளத்தின் பகுதி) பகுதியாக இருந்த குட்டநாட்டில் தகழி என்னும் கிராமத்தில் பொய்ப் பள்ளிக்களத்தில் சங்கரக் குறுப்பு, படஹாரம் அரீப்புறத்து வீட்டில் பார்வதி அம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். தகழியின் தந்தை சங்கரக் குறுப்பு களரியில் கச்சைகட்டி கதகளி பயின்றவர். ஓட்டந்துள்ளலும் கற்றவர். விவசாயத்தை தொழிலாகச் செய்துவந்தவர். சங்கரக் குறுப்பின் தம்பி குஞ்சுக்குறுப்பு ஆசான் கதகளி நடிகர். கதகளியில் தெக்கத்தி மரபை தோற்றுவித்தவர். தகழி சிவசங்கரப் பிள்ளைக்கு மூத்த சகோதரி ஒருவர்.

தகழியின் பள்ளிக் கல்வியை அவரது தந்தை சங்கரக் குறுப்பு தொடங்கி வைத்தார். தொடர்ந்து திண்ணைப்பள்ளியில் கல்வி பயின்றார். அங்கே ஆசிரியர் கடுமையாக நடந்து கொண்டதால் மீண்டும் தந்தையிடமே கல்வி பயின்றார். மலையாளப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மூன்றாம் வகுப்பு முதல் அம்பலப்புழை ஆங்கில நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.[1] கேரள அரசியலின் முக்கிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஸ்ரீகண்டன் நாயர் அம்பலப்புழையில் தகழியின் வகுப்பு தோழன்.[2] வைக்கத்திலிருந்த அக்கா வீட்டில் தங்கி கல்வி கற்றார். அங்கே ஐந்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் தகழிக்கு திரும்பினார். தகழிக்கு அருகே கருவாற்றையில் என்.எஸ்.எஸ். உயர்நிலைப்பள்ளியில் பயின்று பள்ளிக் கல்வியை முடித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகள் வீட்டிலிருந்தார்.

பொ.யு. 1931-ம் ஆண்டு முன்சீப் நீதிமன்றங்களில் வழக்கு வாதிப்பதற்கு தகுதி பெறும் பிலீடர்ஷிப்(Pleadership) சட்டத் தேர்வுக்குப் படிப்பதற்காக திருவனந்தபுரம் சென்றார்.

தனி வாழ்க்கை

தகழி மனைவி கமலாட்சியுடன்

தகழி சிவசங்கரப் பிள்ளை செப்டம்பர் 15, 1935 அன்று குட்டநாட்டு கிராமம் நெடு முடியிலே செம்பகசேரி சிறையில் கமலாக்ஷி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்[3]. கமலாக்ஷி தகழியின் அக்கா கணவரின் சகோதரி மகள். தகழி, கமலாக்ஷி தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும், நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தனர். (ஜலஜா பிள்ளை, ராதா பிள்ளை, பார்வதி பிள்ளை, பாலகிருஷ்ணன் பிள்ளை, ஜானம்மா பிள்ளை)

1934-ல் பிலீடர்ஷிப் தேர்வில் வெற்றி பெற்ற தகழி இரண்டு ஆண்டுகள் 'கேரள கேசரி' பத்திரிக்கையில் பதினெட்டு ரூபாய் சம்பளத்தில் கட்டுரையாளராக வேலை பார்த்தார். வேலைப் பளு காரணமாக இரண்டு ஆண்டுகள் எதுவும் எழுதாமல் இருந்தார். இதனால் தகழியின் இலக்கிய வாழ்க்கை பாதிக்கப்படும் என கேசரி பாலகிருஷ்ண பிள்ளை அறிவுறுத்தியதால் மீண்டும் திருவனந்தபுரத்திலிருந்து ஊருக்கே திரும்பினார். அதே சமயத்தில் (1936) அம்பலபுழையில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தோடு சேர்ந்து முன்சீப் நீதிமன்றமும் தொடங்கப்பட்டிருந்தது. அன்று கேரளத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞரான பி. பரமேஸ்வரன் தன் அலுவலகத்தை திருவனந்தபுரத்திலிருந்து அம்பலபுழைக்கு மாற்ற விரும்பினார். ஈ.வி. கிருஷ்ணப்பிள்ளையின் பரிந்துரையின் பெயரில் பரமேஸ்வரன் பிள்ளையின் இளைய வழக்கறிஞராக தகழி பணியாற்றினார். இருபது ஆண்டுகள் பணியாற்றிய பின் வழக்கறிஞர் பணியைக் கைவிட்டார்.

தகழி சிலகாலம் நண்பர் என். ஸ்ரீகண்டன் நாயரால் கட்சி அரசியலில் பங்காற்றினார். பின்னாளில் ஆர்.எஸ்.பி (ரெவலூஷனரி சோசலிஸ்ட் பார்ட்டி) என அறியப்பட்ட கே.எஸ்.பி (கேரள சோசியலிஸ்ட் பார்ட்டி) யில் ஸ்ரீகண்டன் நாயருடன் பணியாற்றினார். இந்தியா விடுதலை அடைந்தபோது சுதந்திர திருவிதாங்கூர் என்று பேசிய திவான் சி.பி. ராமசாமி ஐயரை வெட்டிக் காயப்படுத்திய கே.சி.எஸ் மணி கே.எஸ்.பி கட்சியின் உறுப்பினர், அம்பலபுழைக்காரர். இதனால் இந்த வழக்கில் தகழியின் பெயரிலும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட அவர் சிறிது காலம் கொச்சி நாட்டின் வடக்காஞ்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார். அப்போது 'தோட்டியின் மகன்' என்ற புகழ்பெற்ற நாவலை எழுதினார்.

1952-ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் தகழி திருக்கொச்சி தொகுதியில் கே.எஸ்.பி வேட்பாளராக போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வியுற்றார். அதோடு கட்சி அரசியலிலிருந்து தகழி விலகினார். . தகழி 1956-ல் எழுதி வெளிவந்த 'செம்மீன்' நாவல் பெற்ற கவனமும், ஏற்பும் அவர் வழக்கறிஞர் தொழிலை விட்டு முழு நேர எழுத்தாளர் ஆக காரணமானது. ஆகஸ்ட் 09, 1979 முதல் ஜூன் 30, 1984 வரை கேரள சாகித்திய அகாதமியின் தலைவராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தகழியின் புகைப்படத்துடன் வந்த அஞ்சல் தலை

தகழி சிவசங்கரப் பிள்ளையின் இலக்கிய வாசிப்பு அவர் கருவாற்றையில் உள்ள என்.எஸ்.எஸ் உயர்நிலைப் பள்ளியில் பயன்ற போது தொடங்கியது. அங்கே தலைமையாசிரியராகப் பணியாற்றிய நாடக ஆசிரியரும், கட்டுரையாளரும், நடிகரும், காந்தியவாதியுமான கைனிக்கர குமார பிள்ளை மாணவர்கள் மத்தியில் இலக்கிய வாசிப்பை ஊக்குவித்தார். தாகூரின் சிறுகதைகள் அனைத்தும் பள்ளியில் வாசிக்கப்பட்டன. தகழி பள்ளியில் தாகூரின் 'காபூலி வாலா' சிறுகதையைத் தான் வாசித்ததை பின்னாளில் ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்தார். அதுவே தகழி எழுதுவதற்கும் ஒரு தொடக்கமாக அமைந்தது.

1929-ல் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக இருந்த போது 'சாதுக்கள்' என்ற முதல் சிறுகதையை எழுதி நாயர் சர்வீஸ் சொசைட்டி நடத்திவந்த 'சர்வீஸ்' இதழில் வெளியிட்டார். அதே வருடம் மலையாள மனோரமாவிலும் தகழியின் சில கதைகள் பிரசுரமாயின. 1931-ல் இருந்து கேசரி.ஏ. பாலகிருஷ்ணப் பிள்ளை நடத்திய 'கேசரி' இதழில் தகழியின் சிறுகதைகள் வரத் தொடங்கின. தகழி பிலீடர்ஷிப் தேர்வில் வெற்றி பெற்ற பின் திருவனந்தபுரத்தில் தங்கி 'கேசரி' இதழின் கட்டுரையாளராக இரண்டாண்டு காலம் பணியாற்றினார்.

1932-ல் தகழியின் புகழ் பெற்ற சிறுகதை'வெள்ளப்பொக்கத்தில்' எழுதப்பட்டது. பொ.யு. 1934 ஆம் ஆண்டு அவரது முதல் நாவல் 'தியாகத்தினு பிரதிபலம்' (தியாகத்தின் பலன்) வெளிவந்தது. இந்நாவல் புத்தகமாக வெளிவந்த முதல் நூல். திருவனந்தபுரம் கமலாலயா புத்தக டிப்போ வெளியிட்டது. அதே ஆண்டு முதல் சிறுகதை தொகுப்பு 'புது மலர்' வெளிவந்தது[4].

தகழி மனைவியுடன் ஞானபீடம் விருது பெற்ற போது

1945-ம் ஆண்டு மலையாள புத்தக வெளியீட்டு அரங்கில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய இலக்கியச் செயல்பாட்டுக் கூட்டுறவு சங்கம் (சாகித்திய ப்ராவர்த்தக கோவாப்ரேட்டிவ் சொசைட்டி) தகழியின் சிறுகதைத் தொகுப்பை தன் முதல் நூலாக வெளியிட்டது. 1947-ல் திவான் சி.பி. ராமசாமி வெட்டப்பட்ட வழக்கில் தலைமறைவாகக் கொச்சியில் வாழ்ந்த போது 'தோட்டியின் மகன்' நாவலை எழுதினார். அதே வருடம் 'ரெண்டிடங்கழி' நாவலும் வெளிவந்தது. தகழி 'செம்மீன்' நாவலை எழுதப் போவதாக அறிவித்து பல காலம் அந்நாவலை எழுதாமலேயே இருந்தார். 1956-ல் வெளிவந்த 'செம்மீன்' மலையாள இலக்கியத்தின் செவ்வியல் படைப்பாக அங்கீகரிக்கப்பட்டது.1961-ல் மாத்ருபூமி வார இதழில் 'ஏணிப்படிகள்' நாவலை தொடர் கதையாக எழுதினார். அந்நாவலுக்கு கேரள சாகித்திய அகாடெமி விருது கிடைத்தது. அதன் பின் 'தர்ம நீதியோ அல்ல ஜீவதம்', 'அனுபவங்கள் பாளிச்சகள்', 'புன்னபுர வயலாரினு சேஷம்' போன்ற சிறிய நாவல்களை எழுதினார். பொ.யு. 1978-ல் வெளிவந்த 'கயிறு' 250 ஆண்டு கால கேரள வாழ்வின் பரிணாமத்தை சொல்லும் நாவல். அதுவரை யாரும் எழுதாத களத்தில் வெளிவந்த 'கயிறு' நாவல் பெரும் கவனத்தைப் பெற்றது. பொ.யு. 1980-ல் தகழிக்கு வயலார் விருதும், 1984-ல் ஞானபீட விருதும் பெற்றுத் தந்தது. 1990-ல் வெளிவந்த 'ஒரு எரிஞ்சடங்கல்' தகழியின் கடைசி நாவல்.

மொழியாக்கங்கள்

தகழியின் நாவல்கள் இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் பரவலாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 'தோட்டியின் மகன்' நாவல் ஆங்கிலத்திலும், ஜப்பானிலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'ரெண்டிடங்கழி', 'செம்மீன்' ஆகிய இரண்டு நாவல்களும் பிற இந்திய மொழிகள் அனைத்திலும் சாகித்திய அகாதமியின் முயற்சியில் நூலாக்கப்பட்டுள்ளன. ரெண்டிடங்கழி நாவல் ஆங்கிலம், ரோமானியன், செக் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

செம்மீன்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நியூயார்க் டைம்ஸில் பெஸ்ட் செல்லர் புத்தகங்களின் பட்டியலில் பல வாரங்களாக முதலிடத்தில் இருந்தது. இந்நாவல் பிற நாடுகளில் வெளியிட யுனஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெஞ்ச், இத்தாலி, ஹங்கேரி, டச், ஜப்பான், போலீஷ், ரஷ்யா, ஸ்லோவாகியா, வியட்நாம், அரபி, சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. இந்திய மொழிகளில் அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது அனிதா நாயர் மொழிபெயர்த்த வேறொரு ஆங்கிலப் பதிப்பு பொ.யு. 2016-ல் வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படம்

தகழியுடன் கல்லடா சசி

தகழியின் புகழ்பெற்ற 'செம்மீன்' நாவலை ராமு காரியாட்டு திரைப்படமாக இயக்கினார். இப்படத்திற்கு இந்திய அளவில் சிறந்த திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப்பதக்கம் கிடைத்தது. அவ்விருது பெற்ற முதல் மலையாளத் திரைப்படம் செம்மீன். தகழியின் ரெண்டிடங்கழி, ஏணிப்படிகள், அனுபவங்கள் பாளிச்சகள், சுக்கு, நுரையும் பதையும் முதலிய நாவல்களும் திரைப்படமாக்கப்பட்டன.

தகழியின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம் 'கந்தர்வ ஷேத்திரம்'. தகழியின் 'கன்யகா', 'ஒரு நியம லெங்கனம்', 'சின்னுவம்மா', 'நித்திய கன்னிகா' ஆகிய சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு அடூர் கோபாலகிருஷ்ணன் 'நாலு பெண்ணங்கள்' என்ற திரைப்படத்தை இயக்கினார். அடூர், 'கள்ளன்டெ மகன்', 'நியமமும் நீதியும்', 'பங்கி அம்மா', 'ஒரு கூட்டுகாரன்' ஆகிய சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு 'ஒரு பெண்ணும் ரெண்டாணும்' என்ற படத்தை இயக்கினார். தகழியின் 'அச்சனும் மகனும்' என்ற சிறுகதை 'ஓமனக்குட்டன்' என்ற பெயரில் படமானது.

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான எம்.எஸ். சத்யு தகழியின் கயிறு நாவலின் பல பகுதிகளை இந்தியில் டிவி நாடகமாக இயக்கினார். அது தூர்தர்ஷனில் வெளியாகியது. மலையாள திரைப்பட இயக்குனர் ஜெயராஜ் தகழியின் 'வெள்ளப்பொக்கத்தில்' சிறுகதையைத் தொலைக்காட்சிப் படமாக வெளியிட்டார். அவரே கயிறு நாவலின் சில பகுதிகளை மையபடுத்தி 'பயானகம்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

சாகித்திய அகாதமியின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரில் எம்.டி. வாசுதேவன் நாயர் தகழியைக் குறித்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.

மறைவு

தகழி நினைவிடம்

தகழி சிவசங்கரப்பிள்ளை ஏப்ரல் 10, 1999 அன்று தன் எண்பத்தி எட்டாவது வயதில் தகழியிலுள்ள சங்கர மங்கலத்து வீட்டில் காலமானார்.

நினைவகம்

தகழி நினைவு அருங்காட்சியகம், 2001

தகழியின் சொந்த வீடான தகழி சங்கர மங்கலத்து வீடு தற்போது கேரள அரசின் பண்பாட்டுத் துறையின் கீழ் தகழி நினைவு மையமாக பொ.யு. 2001 முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தகழியின் புத்தகங்கள், விருதுகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் என ஒரு காட்சிக் கூடமாக உள்ளது.

விருதுகள்

  • பத்ம பூஷண் விருது
  • சாகித்திய அகாதமி விருது (1957, செம்மீன் நாவல்)
  • சாகித்திய அகாதமியின் சிறப்பு அங்கத்துவம் (Fellowship)
  • ஞான பீட விருது (1984)
  • கேரள அரசின் உயரிய விருதான எழுத்தச்சன் விருது
  • கேரள சாகித்திய அகாதமி விருது
  • சோவியத் யூனியனின் நேரு விருது

கௌரவப் பட்டங்கள்

  • கேரள பல்கலைக்கழகம் - டி.லிட் பட்டம்
  • மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் - டி.லிட் பட்டம்

நூல்கள்

நாவல்கள்
  • தியாகத்திண்டெ பிரதிபலம் (1934)
  • பதிதபங்கஜம் (935)
  • சுசீலன் (1938)
  • வில்பனக்காரி (1941)
  • பரமார்த்தங்கள் (1945)
  • தலையோடு (1947)
  • தோட்டியுடெ மகன் (1947)
  • ரெண்டிடங்கழி (1948)
  • தெண்டிவர்க்கம் (950)
  • அவன்டெ ஸ்மரணகள் (1955)
  • செம்மீன் (1956)
  • பேரில்லாக்கத (1956)
  • அவுசேப்பின்டெ மக்கள் (1959)
  • அஞ்சு பெண்ணுங்கள் (1961)
  • ஜீவிதம் சுந்தரமாணு, பக்ஷே (1961)
  • ஏணிப்படிகள் (1964)
  • தர்மநீதியோ? அல்ல ஜீவிதம் (1965)
  • பாப்பியம்மையும் மக்களும் (1966)
  • மாம்சத்தின்டெ விளி (1966)
  • அனுபவங்கள் பாளிச்சைகள் (1967)
  • ஆகாசம் (1967)
  • சுக்கு (1967)
  • வியாகுலமாதாவு (1968)
  • நெல்லும் தேங்கையும் (1969)
  • பெண்ணு (1969)
  • நுரையும் பதையும் (1970)
  • பெண்ணாய் பிறந்தால் (1970)
  • கோடிப்போய முகங்கள் (1972)
  • குறேய மனுஷருடெ கத (1973)
  • அகத்தளம் (1974)
  • புன்னப்ற வயலாரினு சேஷம் (1975)
  • அழியாக்குருக்கு (1977)
  • ஆதியகால நாவல்கள் (1977)
  • கயிறு (1978)
  • லெகுநாவலுகள் (1978)
  • பலூனுகள் (1982)
  • ஒரு மனுஷன்டெ முகம் (1983)
  • ஒரு ப்ரேமத்தின்டெ பாக்கி (1988)
  • ஒரு எரிஞ்ஞடங்கள் (1990)
சிறுகதைத் தொகுப்புகள்
  • புதுமலர் (1935)
  • கோஷ யாத்ர (1941)
  • அடி ஒழுக்குகள் (1944)
  • நித்ய கன்யகா (1945)
  • தகழியுடெ கதகள் (1945)
  • பதி விரத (1946)
  • மகளுடெ மகள் (1946)
  • பிரதிக்ஞ (1947)
  • பிரதீக்ஷகள் (1947)
  • மாஞ்சுவட்டில் (1947)
  • சரித்ர சத்யங்கள் (1950)
  • இன்குலாப் (1951)
  • ஞரக்கங்கள் (1955)
  • ஞான் பிறந்த நாடு (1958)
  • கணக்குதீர்க்கல் (1958)
  • ஆலிங்கனம் (1961)
  • ஆத்யத்தெ பிரசவம் (1962)
  • திரஞ்செடுத்த கதகள் (1965)
  • ஏகாந்த பதிகன் (1969)
  • சங்காதிகள் (1969)
  • ஒரு குட்டநாடன் கத (1992)
  • ஜீவிதத்தின்டெ ஒரேடு (1993)
  • வெள்ளப்பொக்கத்திலும் மற்று பிரதான கதகளும் (2003)
  • சமாஹரிக்காத்த கதகள் (2009)
  • கதகள்: தகழி (2015)
  • தகழி: சம்பூர்ண கதகள் (2015)
நாடகம்
  • தோற்றில்லா (1946)
சுயசரிதை
  • என்டெ வக்கில் ஜீவிதம் (1961)
  • என்டெ பால்யகாலக் கத (1967)
  • குறே கதாபாத்ரங்கள் (1980)
  • ஓர்மையுடெ தீரங்களில் (1985)
வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு
  • கால்ப்பாடுகள்
பயணக் கட்டுரை
  • அமேரிக்கன் திரசீல (1966)

மொழியாக்கங்கள் பட்டியல்

தமிழ்
  • அவனது நினைவுகள் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (தமிழில்: யூமா வாசுகி)
  • இரண்டு படி - சாகித்திய அகாடெமி (தமிழில்: டி. ராமலிங்கப் பிள்ளை)
  • உறவின் எல்லை - திருமகள் நிலையம்/விசா பப்ளிகேஷன்ஸ் (தமிழில்: சிவன்) (மறுபிரசுரம்: கவிதா வெளியீடு)
  • ஒரு நாள் - கவிதா வெளியீடு (சிவன்)
  • கயிறு - சாகித்திய அகாடெமி (தமிழில்: சி.ஏ. பாலன்)
  • செம்மீன் - சாகித்திய அகாடெமி (தமிழில்: சுந்தர ராமசாமி)
  • தோட்டியின் மகன் - காலச்சுவடு பதிப்பகம் (தமிழில்: சுந்தர ராமசாமி)
  • நித்ய கன்னி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (தமிழில்: யூமா வாசுகி)
  • வாழ்க்கையில் ஓர் ஏடு - கவிதா வெளியீடு (சிறுகதைகள், தமிழில்: சிவன்)
  • பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - குறுநாவல், ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (தமிழில்: சுரா)
ஆங்கிலம்
  • தோட்டியின் மகன்
  • ரெண்டிடங்கழி
  • செம்மீன் விக்டர் கொலான்ஸ், ஹார்பர் & ரோ(அமெரிக்காவில்) (ஆங்கிலத்தில்: வி.கே. நாராயண மேனன், 1962)
  • பரமார்த்தங்கள்
  • அனுபவங்கள் பாளிச்சகள்
  • அவுசேப்பின்டே மக்கள்
  • கயிறு (ஆங்கிலத்தில்: என். ஸ்ரீகண்டன் நாயர்)
இந்தி
  • செம்மீன்
  • ஏணிப்படிகள்
  • தோட்டியின் மகன்
  • ரெண்டிடங்கழி
  • கயிறு (சுதாம்சு சதுர்வேதி) (டாக்டர் பி. வேணுகோபாலன் மொழிபெயர்த்த சுருங்கிய வடிவம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் வெளியிடப்பட்டது)

திரைப்படங்கள் பட்டியல்

  • செம்மீன்
  • நாலு பெண்கள் (அடூர்)
  • ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்
  • ஏணிப்படிகள்
  • ரெண்டிடங்கழி
  • பயானகம் (கயிறு நாவல்)
  • அனுபவங்கள் பாளிச்சகள்
  • சுக்கு
  • நுரையும் பதையும்
  • கந்தர்வ ஷேத்திரம்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. ↑ மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்த இப்பள்ளி பின்னால் செம்மீன் எழுதக் காரணமாக அமைந்தது என தகழி குறிப்பிடுகிறார். செம்மீன் நாவலில் இடம்பெற்ற பல கதாபாத்திரங்கள் இங்கே தகழி நேரில் சந்தித்தவர்கள்.
  2. ↑ தகழி சில காலம் கட்சி அரசியலில் ஈடுபட்டதற்கும், தேர்தலில் போட்டியிட்டதற்கும் ஸ்ரீகண்டன் நாயரின் நட்பே காரணம்
  3. ↑ தகழி தன் மனைவியை 'காத்தா' என்ற செல்லப் பெயரில் அழைப்பது வழக்கம்.
  4. ↑ வெள்ளப்பொக்கத்தில் உள்ளிட்ட ஏழு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2025, 11:14:11 IST