under review

வர்த்தமானீஸ்வரர் கோயில்

From Tamil Wiki
வர்த்தமானீஸ்வரர் கோயில்

வர்த்தமானீஸ்வரர் கோயில் திருப்புகலூரில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற தலம். இக்கோவில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வர்த்தமானீஸ்வரர் கோயில் மூலவர்

இடம்

வர்த்தமானீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டம் பேரளம் வழித்தடத்தில் சன்னாநல்லூர் சந்திப்பில் இருந்து மேற்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புகலூரில் அமைந்துள்ளது. இது மயிலாடுதுறையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து இருபது கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து இருபது கி.மீ தொலைவிலும், நன்னிலத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிலும் உள்ளது.

முருக நாயனார்

வரலாறு

வர்த்தமானீஸ்வரர் கோயில் அக்னீஸ்வரர் மூலவராக அமைந்த திருப்புகலூர் கோவிலின் வளாகத்திற்குள் அமைந்துள்ளது. புன்னகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம் என்பன இத்தலத்தின் வரலாற்றுப் பெயர்கள். அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனார் பிறந்த ஊர் இது. முருகநாயனார் இக்கோயிலில் தினமும் மும்முறை பூக்களைச் சமர்ப்பித்து சேவை செய்தார். திருஞான சம்பந்தர் முருக நாயனாரின் சேவையைப் போற்றிப் பாடினார். இக்கோயில் பற்றிய பதிகத்தை திருஞானசம்பந்தர் பாடினார். தேவார மூவர்கள் இங்கு ஒன்பது பதிகங்கள் பாடினர். அவற்றில் எட்டு திருப்புகலூர் பற்றியவை. ஒன்று இந்தக் கோயிலைப் பற்றியது.

தொன்மம்

அசுரர்கள் தேவர்களையும் முனிவர்களையும் பயமுறுத்தியபோது, அவர்கள் வர்த்தமானீஸ்வரர் கோயிலில் தஞ்சம் புகுந்ததால் இந்த இடம் 'புகலூர்' என்று அழைக்கப்பட்டது. அக்னி பகவான், பரத்வாஜர், மன்னன் நளன், பதினெட்டு சித்தர்கள், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய பதினெட்டு பேரும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.

வருணன், வாயு, அக்னி மூவருக்கும் ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் சேர்ந்து அக்னியை, சக்தியில்லாமல் போகும்படி செய்தனர். அக்னி சக்தி இழந்ததால், தேவலோகம், பூலோகத்தில் மகரிஷிகளால் யாகம் நடத்த முடியவில்லை. அக்னி தனக்கு மீண்டும் சக்தி வேண்டி சிவனை வேண்டினான். பூலோகத்தில் தன்னை வழிபட மீண்டும் சக்தி கிடைக்கும் என்றார் சிவன். இங்கு வழிபட்ட அக்னிக்கு சிவன், சக்தி தந்து இரண்டு முகம், ஏழு கைகள், ஏழு ஜுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் கொண்ட உருவத்தையும் கொடுத்தார். அவர் வழிபட்ட சிவன் இத்தலத்தில் அக்னீஸ்வரராகவும், வர்த்தமானீஸ்வரராகவும் இங்கு எழுந்தருளியதாக நம்பப்படுகிறது.

கோவில் பற்றி

  • மூலவர்: வர்த்தமானேஸ்வரர், நிகழ்கால நாதர்
  • அம்பாள்: மனோன்மணி அம்மை
  • தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: புன்னாகம் மரம்
  • பதிகம்: திருஞானசம்பந்தர் வழங்கிய (பாடல்)-1
  • சோழ நாட்டில்(தென்கரை) காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள 276 தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று
  • எழுபத்தியாறாவது சிவஸ்தலம்.
  • இக்கோயிலின் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
  • தலவிநாயகரின் பெயர் வாதாபி கணபதி
  • திருநாவுக்கரசர்(அப்பர்) முக்தி அடைந்து தனது கடைசி பதிகம் இங்கு பாடினார்.
  • தேவார மூவர்கள் தங்கள் பதிகங்களை வழங்கிய நாற்பத்தி நான்கு பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.
  • அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனார் பிறந்த ஊர்.
  • கடைசியாக கும்பாபிஷேகம் மார்ச் 27, 2003 அன்று நடந்தது.

கோவில் அமைப்பு

வர்த்தமானீஸ்வரர் கோயிலின் முக்கிய தெய்வம் வர்த்தமானேஸ்வரர், இறைவனின் சன்னதி அக்னீஸ்வரர் சன்னதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இரண்டு நடைபாதைகளும், அதன் பிரதான கோபுரம் ஐந்து அடுக்குகளாகவும் உள்ளன. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானத்தின் பெயர் இந்திர விமானம். முருகநாயனார் சன்னதி சிவன் சன்னதிக்கு எதிரே உள்ளது. இங்கு பூதேஸ்வரர், வர்தமானீஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூன்று சிவலிங்கங்கள் உள்ளன. இந்த மூன்று லிங்கங்களும் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது. வர்தமானேஸ்வரரின் இன்னொரு பெயர் 'நிகழ்கால நாதர்'.

வர்த்தமானீஸ்வரர் கோயில் சிற்பங்கள்

சிற்பங்கள்

சிவன், பார்வதி தேவியின் சன்னதிகளைத் தவிர, பாலகணபதி, தண்டபாணி, சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகளும் சிலைகளும் மண்டபத்தில் உள்ளன. தாழ்வாரத்தில் உள்ள ஒரு சுவரில் அக்னி பகவான் சிவனை வழிபடுவது, அப்பர் கடைசியாக இறைவனை வணங்குவது, சில அரசர்கள் மற்றும் அரசியர் இறைவனை வணங்குவது போன்ற மூன்று சிற்பங்கள் உள்ளன.

சிறப்புகள்

  • வர்த்தமானீஸ்வரை வழிபடுவதன் மூலம், தங்கள் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • நிகழ்கால நாதரை வழிபட்டால், செல்வம், ஆரோக்கியம், ஞானம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவை கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோயிலுக்குச் செல்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
  • நவக்கிரகங்கள் ’ட’ வடிவில் உள்ளன.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 6.30-12.30
  • மாலை 4-9

விழாக்கள்

  • வைகாசியில் முருக நாயனார் குரு பூஜை
  • ஆனி திருமஞ்சனம்
  • ஆடியில் ஆடி பூரம்.
  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் சோமாவரம்
  • தையில் மகர சங்கராந்தி
  • மாசியில் சிவராத்திரி

உசாத்துணை


✅Finalised Page