ரா. கிரிதரன்
To read the article in English: R. Giridharan.
ரா. கிரிதரன் என்கிற கிரிதரன் ராஜகோபாலன் (ஜூன் 11, 1979) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், இசை கட்டுரைகள் மற்றும் விமர்சன கட்டுரைகள் ஆகியவற்றை தொடர்ந்து எழுதி வருகிறார். மேற்கத்திய இசையை பின்புலமாக கொண்ட இவரது கதைகள் தமிழுக்கு புதிய களத்தை அறிமுகம் செய்து வைத்தன.
பிறப்பு, கல்வி
ஜூன் 11, 1979 அன்று திண்டிவனத்தில் ராஜகோபாலன் - பத்மா இணையருக்கு மகனாக பிறந்தார். புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் பள்ளி கல்வியை முடித்துவிட்டு புதுவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயின்றார்.
தனி வாழ்க்கை
தற்போது இங்கிலாந்தில் காப்பீட்டுத்துறை மென்பொருள் கட்டுமானத்துறையில் பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு சித்ரலேகாவை மணந்தார். இவர்களுக்கு ஆதிரா, அக்ஷரா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இலக்கிய பங்களிப்பு
2010-ம் ஆண்டு கர்நாடக சங்கீதம் ஒரு எளிய அறிமுகம் எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியானது. இவரது முதல் சிறுகதை தொகுப்பு 'காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை' தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக 2020-ம் ஆண்டு வெளிவந்தது. அசோகமித்திரன், பிரமிள், சுந்தர ராமசாமி மற்றும் ஜெயமோகனை தனது இலக்கிய ஆதர்சமாக குறிப்பிடுகிறார். 'சொல்வனம்', 'பதாகை', 'ஆம்னிபஸ்' ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியர் குழுவில் பங்காற்றியுள்ளார். 'லண்டன் வாசகர் குழுமம்' என ஒரு குழுவை நிறுவியவர்களில் ஒருவர்.
இவரது சிறுகதைகள் வெவ்வேறு நிலப்பரப்பையும் பின்புலத்தையும் கொண்டவை. குறிப்பாக 'இருள் முனகும் பாதை' மற்றும் 'காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை' ஆகிய இரண்டு கதைகளும் மேற்கத்திய இசை மேதைகளின் வாழ்வை பின்புலமாக எழுதப்பட்டு கவனம் பெற்ற கதைகள். கலையின் தீவிரம், அதன் மேன்மை, கலைஞனின் வீழ்ச்சி ஆகியவை இவர் கதைகளின் பேசு பொருள் என சொல்லலாம். மானுட இருப்பு குறித்து கேள்விகளை எழுப்பும் அறிவியல் புனைவுகளும் எழுதியுள்ளார்.
கிரிதரன் செறிவான, உருவகத்தன்மை கொண்ட கட்டற்ற உரைநடைப்பாணி கொண்டவர். நவீனத்துவ மொழி நடைக்கு மாற்றாக அமையும் நடை இது. "கிரியினுடைய கதையுலகின் தனித்தன்மையை உருவாக்குவது கதைக்குப் பின்னிருக்கும் வரலாற்று நோக்கில் வெளிப்படும் தனித்தன்மைதான்" என்று விமர்சகர் சுரேஷ் பிரதீப் குறிப்பிடுகிறார்[1].
பரிசுகள்/ விருதுகள்
- அரூ 2019 அறிவியல் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை - 'பல்கலனும் யாம் அணிவோம்'[2]
- வம்சி சிறுகதைப் போட்டி, 2012
- Newham, London Short Story winner, 2009
நூல் பட்டியல்
- கர்நாடக சங்கீதம் ஒரு எளிய அறிமுகம் - மொழிபெயர்ப்பு, கிழக்கு வெளியீடு, 2010
- காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை - சிறுகதைத் தொகுப்பு, 2020
- காற்றோவியம் - இசை கட்டுரைகள், 2022
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:13 IST