மோசிக் கொற்றன்
From Tamil Wiki
மோசி கொற்றன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மோசி கொற்றன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மோசி என்ற ஊரில் பிறந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
மோசி கொற்றன் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 377-வது பாடலாக அமைந்துள்ளது. பொருளீட்டுவதற்காக பயணம் சென்ற தலைவனின் பிரிவால் உடல் மெலியும் தலைவியைப் பார்த்து வருந்தும் தோழியை நோக்கி வருத்தப்படாதே என்று தலைவி கூறுவதாக அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குறிஞ்சித் திணைப்பாடல்
- முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாத இயல்பை கொண்ட தலைவனோடு நட்பு கொண்டேன்.
- உவமை: பூவினை போன்ற அழகிய மைதீட்டிய கண்களின் நலம் நீங்கியது. வளையணிந்த தோள்கள் மெலிவுற்றதால், அழகிய வளையல்கள் நெகிழ்ந்தன.
பாடல் நடை
குறுந்தொகை - 377
திணை: குறிஞ்சி துறை: வரைவிடை, ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 13:32:46 IST