under review

மோசா வல்சலம் சாஸ்திரியார்

From Tamil Wiki
மோசா வல்சலம் சாஸ்திரியார்

மோசா வல்சலம் சாஸ்திரியார் (1847 - பிப்ரவரி 20, 1916) (மோசஸ் அந்தோணி நாடார்) கிறிஸ்தவ இசைப் பாடலாசிரியர். மதப்பணியாளர். சீர்திருத்தவாதி. தெற்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

மோசா வல்சலம் சாஸ்திரியார் 1847-ம் ஆண்டு அன்றைய திருவிதாங்கூர் சம்ஸ்தானம் ( கேரளம்) நெய்யாற்றின்கரை அருகே திருப்புறம் என்னும் ஊரில் அருளானந்தம் என்னும் அந்தோனியின் மகனாகப் பிறந்தார். ஜான் காக்ஸ் என்னும் லண்டன் மிஷன் மதப்பரப்புனர் அந்தோனியை சீர்திருத்த கிறிஸ்தவராக ஆக்கினார். அந்தோனி என்ற பெயர் அருளானந்தம் என்று மாறியது. அருளானந்தம் கிறிஸ்தவப் போதகராக சாமுவேல் மெட்டீர் கீழ் பணியாற்றினார். சாமுவேல் மெட்டீர் அந்தோனியின் குழந்தைக்கு மோசஸ் என்று கிறிஸ்தவப் பெயர் சூட்டினார். வல்சலம் என்பது துணைப்பெயர்.

மோசா வல்சலம் தன் 15-வது வயது வரை நெய்யாற்றின்கரையில் லண்டன் மிஷன் ஆரம்பப்பள்ளியில் கல்வி கற்றார். நாகர்கோயிலில் லண்டன் மிஷன் சபையினரின் இறையியல் கல்லூரியில் போதகர் பயிற்சி பெற்றார். ஓவியக் கலையும் பயின்றார்.

தனிவாழ்க்கை

மோசா வல்சலம் கேரளத்தில் கோட்டயம் ஊரில் சர்ச் மிஷன் சொசைட்டி நடத்தும் இறையியல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தான் பயின்ற நெய்யாற்றங்கரை பள்ளியில் ஆசிரியரானார். காட்டாக்கடை லண்டன் மிஷன் தேவாலயத்தில் 1891 முதல் 1896 வரை போதகராகப் பணியாற்றினார்.

1868-ல் மோசா திருவனந்தபுரம் நெல்லிக்குழி மனவேலி குடும்பத்தைச் சேர்ந்த ராஹேலை திருமணம் செய்துகொண்டார். ஆறு மகள்களும் நான்கு மகன்களும் பிறந்தார்கள். அவருடைய இளையமகன் பாம்பு கடித்து இறந்தார் என்றும் அப்போது நின்றே ஹிதம்போலே என்னே (உன் விருப்பப்படி என்னை) என்னும் மலையாளப்பாடலை இயற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.

இசை

மோசா வல்சலம் கர்நாடக இசையை கிறிஸ்தவப் பாடல்களுக்கு பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். அவ்வகையில் அவர் வேதநாயகம் சாஸ்திரியார் போன்ற கிறிஸ்தவக் கீர்த்தனையாளர்களுக்கு நிகரானவர். அவர் மலையாளத்தில் பல கிறிஸ்தவ பாடல்களை எழுதினார். தமிழ் மற்றும் ஆங்கிலத்திலிருந்து மலையாளத்திற்கு பாடல்களை மொழிபெயர்த்தார். அவரது பாடல் வரிகள் மற்றும் பாடல்கள் ஞாயிறு ஆராதனைகளில் தென்னிந்திய திருச்சபை, மலங்கரா, மார்தோமா, சிரியன் தேவாலயங்களில் இன்றும் பாடப்படுகின்றன. தியான மாலிகா, கீத மஞ்சரி, கிறிஸ்து சரிதம், மோச நாடகம் ஆகியவை மோசா வல்சலம் இயற்றிய இசைப்பாடல்களின் தொகைகள்.

புகழ்பெற்ற பாடல்கள்
  • யெசுசலேமின் இன்ப வீடே
  • மேல்வீட்டில் யேசு ஆகா ஸ்னேகமாய்
  • நின்றே ஹிதம் போலேயென்னே நித்தம்
  • ஸ்வந்தம் நினக்கினி ஞான் ஏசுதேவா

பதிப்பு

மோசா வல்சலம் சாஸ்திரி எழுதிய கீதமஞ்சரி 1903-ல் வெளியாகியது. தியானமாலிகா 1916-ல் வெளியாயின. அவர் மறைவுக்குப்பின் 'வல்சலா சாஸ்திரியாரின் தொகுக்கப்பட்ட படைப்புகள்' என்னும் நூல் 1958-ல் அவரது பேரன் ஜே.ஜான் அவர்களால் வெளியிடப்பட்டது. கேரளப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரும், சாஸ்திரியின் குடும்பத்தினருமான புஷ்பிதா ஜான் அவர்களால் சாஸ்திரியின் பாடல்கள் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளன.

சமூகசீர்திருத்தம்

மோசா வல்சலம் நாடார்கள் புலையர்கள் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் காட்டும் சாதி பேதத்தை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினார். பனையேறுவதையும் கள்ளிறக்குவதையும் கைவிடவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். நாராயணகுருவுடன் அணுக்கமாக இருந்தார்.

மதப்பணி

1891 முதல் இறுதிக்காலம் வரை கேரளத்தில் காட்டாக்கடை பகுதியில் இறைப்பணி செய்தார்.

பட்டம்

மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைமை பிஷப் மார் டியோனீசியஸ் அவருக்கு "சாஸ்திரி" என்ற பட்டத்தை வழங்கினார்.

மறைவு

மோசா வல்சலம் சாஸ்திரியார் பிப்ரவரி 20, 1916-ல் இறந்தார். அவரது உடல் திருவனந்தபுரம் லண்டன் மிஷன் வளாகத்திலுள்ள சாமுவேல் மெட்டீர் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது

மதிப்பீடு

கர்நாடக இசையை கிறிஸ்தவ இசைப்பாடல்களுக்கு பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். சமூக சீர்திருத்தவாதி.

நூல்கள்

  • தியான மாலிகா
  • கீத மஞ்சரி
  • கிறிஸ்து சரிதம்
  • மோச நாடகம்

உசாத்துணை

மோச வல்சலம் சாஸ்திரியார்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Nov-2024, 21:33:16 IST