சாமுவேல் மெட்டீர்
- சாமுவேல் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாமுவேல் (பெயர் பட்டியல்)
சாமுவேல் மெட்டீர் (Rev. Samuel Mateer) ( ஆகஸ்ட் 24, 1835- டிசம்பர் 24, 1893) கிறிஸ்தவ மதப்பணியாளர். வரலாற்றாசிரியர். சமூகவியலாளர். கல்வியாளர். திருவனந்தபுரம் மிஷன் என்னும் மதப்பரப்பு அமைப்பின் தலைவராக பணியாற்றியவர். திருவிதாங்கூர் வரலாறு மற்றும் குமரிமாவட்ட வரலாறு சார்ந்த பல சான்றுகளை பதிவுசெய்தவர்.
பிறப்பு, கல்வி
சாமுவேல் மெட்டீர் இங்கிலாந்தில் பெல்ஃபாஸ்ட் (Belfast) என்னும் ஊரில் ஆகஸ்ட் 24,1835-ல் பிறந்தார். மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் பெட்ஃபோர்ட் இறையியல் பள்ளி ( Bedford Theological College)யில் குருத்துவப்பட்டம் பெற்றார்.
மதப்பணி
சாமுவேல் மெட்டீர் லண்டன் மிஷன் அமைப்பில் (The London Missionary Society) சார்பில் அக்டோபர் 15, 1858-ல் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் 107 நாட்கள் பயணம் செய்து ஜனவரி 30, 1859 அன்று மும்பை வந்து சேர்ந்தார். மும்பை வில்சன் கல்லூரி நிறுவனரான ரெவெ.வில்சன் அவரை வரவேற்றார். அங்கிருந்து கடல் வழியாகக் கொச்சி வந்து காயல் வழியாக திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கிருந்து பாறசாலையை அடைந்து அங்கே தங்கினார். பிப்ரவரி 4, 1859-ல் சாமுவேல் மெட்டீர் பாறசாலை லண்டன் மிஷன் மதப்பரப்பு நிறுவனத்தின் பொறுப்பாளராக ஆனார். 1861 வரை திருவனந்தபுரம் மிஷன் மற்றும் கொல்லம் மிஷன் இரண்டுக்கும் மெட்டீர் பொறுப்பாளராக இருந்தார். ரெவெ ஜான் காக்ஸ் (Rev. John Cox ) லண்டன் மிஷனில் இருந்து ஓய்வுபெற்றபோது திருவனந்தபுரம் நகரத்தின் தனிப்பொறுப்பும் அவருக்கு வந்தது. 1863 வரை அப்பொறுப்பில் இருந்தார். தன் மனைவி தொடர்ந்து உடல்நலமிழந்தமையால் மெட்டீர் பலமுறை கொடைக்கானலுக்கும் இலங்கைக்கும் செல்லவேண்டியிருந்தாலும் திருவிதாங்கூரில் மதப்பணியையும் கல்விப்பணியையும் முன்னெடுப்பதில் பெரும்பணியாற்றினார்.
சாமுவேல் மெட்டீர் நாகர்கோயிலில் மதப்பணி செய்த சார்ல்ஸ் மீட், மார்த்தாண்டத்தில் மதப்பணி செய்த ஜேம்ஸ் எம்லின் ஆகியோருடன் தொடர்பிலிருந்தார். மெட்டீர் லண்டன்மிஷன் அமைப்பின் வெளியுறவுச் செயலராக இருந்த ரெவெ மில்லின்ஸ் ( Rev.Millins ) உதவியுடன் 1866-ல் அரசிடமிருந்து 16 ஏக்கர் நிலத்தை 9000 ரூபாய்க்கு வாங்கி அங்கே லண்டன் மிஷனின் திருவிதாங்கூர் தலைமையகத்தை நிறுவினார். அங்கு இப்போது லண்டன்மிஷன் பள்ளி, சி.எஸ்.ஐ தலைமையகம் ஆகியவை அமைந்துள்ளன. மெட்டீர் 33 ஆண்டுகள் மதப்பணியாற்றினார். அவர் வரும்போது 25 தேவாலயங்களும் 3000 கிறிஸ்தவர்களும் திருவிதாங்கூரில் இருந்தனர். அவர் கிளம்பும்போது 56 தேவாலயங்களும் 1060 கிறிஸ்தவர்களும் இருந்தனர்
சமூகப்பணி
சாமுவேல் மெட்டீர் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக தனி முயற்சி எடுத்துக்கொண்டார். ஆகவே 'புலையப்பாதிரி' என உயர்சாதியினரால் பழிக்கப்பட்டார். கிறிஸ்தவ உயர்சாதியினராலும் கண்டிக்கப்பட்டார். உள்ளூர் மக்களை பயிற்சி அளித்து மதப்பணிகளில் ஈடுபடுத்துவது, திருச்சபையின் ஊழியர்களாக்குவது ஆகியவற்றில் அவர் முன்னோடியாக கருதப்படுகிறார்.
நூல்கள்
சாமுவேல் மெட்டீர் நாட்குறிப்புகள் எழுதும் வழக்கம் கொண்டிருந்தார். அவற்றை தொகுத்து நூல்களாக்கினார். திருவிதாங்கூர் வரலாறு, சமூகச்சூழல் சார்ந்தும் நுணுக்கமான தரவுகளுடன் நூல்களை எழுதினார். “The Land of Charity,” “Native Life in Travancore” மற்றும் “Gospel in South India.” ஆகியவை அவருடைய முக்கியமான நூல்கள்.
மறைவு
மெட்டீர் 1890-ல் இங்கிலாந்துக்கு திரும்பினார். டிசம்பர் 24,1893-ல் இங்கிலாந்தில் மறைந்தார்
நினைவு
1906-ல் திருவனந்தபுரத்தில் மெட்டீர் நினைவு தேவாலயம் லண்டன்மிஷன் அமைப்பால் கட்டப்பட்டது. இப்போது தென்னிந்தியத் திருச்சபை கட்டுப்பாட்டில் உள்ளது
வரலாற்று இடம்
தென்தமிழக வரலாற்றாய்வில் சாமுவேல் மெட்டீரின் குறிப்புகள் முதன்மை ஆதாரமாகக் கருதப்படுகின்றன. சாமுவேல் மெட்டீர் தெற்கு கேரளம் மற்றும் குமரிமாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்ற பெரும்பணி ஆற்றியவர்
நூல்கள்
- The Land of Charity
- The gospel in South India
- Native life in Travancore
உசாத்துணை
- சாமுவேல் மெட்டீர் நினைவு தேவலாயம் திருவனந்தபுரம் இணையப்பக்கம்
- The Land of Charity, archive.org
- Native Life in Travancore
- The gospel in South India, Samuel Mateer, இணைய நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-Jul-2023, 00:15:50 IST