under review

மு. சுயம்புலிங்கம்

From Tamil Wiki
மு. சுயம்புலிங்கம்

மு. சுயம்புலிங்கம் (பிறப்பு: 1944) தமிழ்க் கவிஞர், சிறுகதையாசிரியர். கரிசல் வட்டார எழுத்தாளர். இடதுசாரி சிந்தனை கொண்ட கவிதைகளை எழுதினார். வாழ்வின் அவலங்களை மிகையற்ற சொற்களில் கதைகளாகவும், கவிதைகளாகவும் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேப்பலோடை கிராமத்தில் முனியசாமி நாடார், பெரிய பிராட்டி இணையருக்கு 1944-ல் பிறந்தார். பிழைப்பு தேடி சென்னை வந்தார். தி.க. சிவசங்கரன், ‘சிகரம்’ செந்தில்நாதன், ‘கார்க்கி’ இளவேனில், சுப்ரமண்ய ராஜு ஆகியோர் இவரின் நண்பர்கள். இவர்களின் வழியாக இலக்கிய அறிமுகம் பெற்றார்.

இதழியல்

மு. சுயம்புலிங்கம் 1970-களில் ’நாட்டுப் பூக்கள்’ என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

மு. சுயம்புலிங்கம் எழுபதுகளில் எழுதத் தொடங்கினார். தாமரை இதழில் இவரது முதல் படைப்பு வெளிவந்தது. கி. ராஜநாராயணன் முயற்சியால் இவரது கையெழுத்துப் படியிலிருந்து தேர்ந்தெடுத்த எழுத்துகள் கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கல்குதிரை சிறப்பிதழில் 1990-களில் வெளிவந்து கவனம் பெற்றன. கல்குதிரை, காலச்சுவடு ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. உயிர்மை வெளியீடாக அவரது கவிதைகள் தொகுக்கப் பட்டு ‘நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்’ என்னும் பெயரில் வெளிவந்தது.

இலக்கிய இடம்

மு.சுயம்புலிங்கம் வாழ்வின் அவலங்களை மிகையற்ற சொற்களோடு கதைகளாகவும், கவிதைகளாகவும் எழுதினார். இவரின் மொழி கரிசல் நிலத்தின் வட்டார வழக்கில் அமைந்தது. நெருக்கடி நிலைக்குப் பிறகான கரிசல் நிலத்தையும், அதன் வறுமையையும் தன் மொழியின் மூலம் காட்சிப்படுத்தினார். சுயம்புலிங்கத்தின் கவிதைகளில் தீர்க்கமான அரசியல் பார்வை இருந்தது.

"மு. சுயம்புலிங்கத்தின் கவிதைகள் நவீனக் கவிதையின் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்தன. ஆனால் ஒரு சந்தேகமுமின்றி அவை கவிதைகளாக இருந்தன. ’சத்தியம் தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்ளும் தம்பி’ என்று அவர்தான் எனக்கு சொல்லித் தந்தார்” என கவிஞர் இசை குறிப்பிட்டார்.

"வர்க்கப் பாகுபாட்டில் கீழ்நிலையிலுள்ள ஒரு மனுஷியின் மனுஷனின் அன்றாடம்தான் இவரது கதைகளின் ஆதாரம். அவர்களின் அன்றாடத்திலிருந்து ஒரேயொரு சம்பவத்தை அதன் நெஞ்சுத் துடிப்புடன் எடுத்து கதையாக நம்முன் வைக்கிறார். அந்தச் சிறு சம்பவம் அந்த மனுஷர்களின் ஒரு ஜன்ம வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறது." என மண்குதிரை மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • தமிழ் இந்து இதழின் யாதும் ஊரே நிகழ்வில் 'தமிழ்திரு 2023' விருது பெற்றார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்புகள்
  • நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்
  • தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
கதைத் தொகுப்புகள்
  • ஒரு பனங்காட்டு கிராமம்
  • நீர்மாலை
  • ஊர்க்கூட்டம்
  • நாட்டுப்பூக்கள் (கல்குதிரை தொகுப்பு)

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:44:51 IST