under review

மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார்

From Tamil Wiki

மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய நான்கு பாடல்களில் முறையே இரண்டு பாடல்கள் குறுந்தொகையிலும் அகநானூறிலும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பூதனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். சேந்தன் என்பவரின் மகன். அரசர் இடும் கட்டளைகளை ஏட்டில் குறிக்கும் பணி செய்பவருக்கு எழுத்தாளன் என்று பெயர். எனவே இவரோ அல்லது புலவரின் தந்தையோ எழுத்தாளன் பணியில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது சில ஏடுகளில் மதுரை எழுத்தாளன் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 90, 226-ம் பாடல்களாகவும் அகநானூறில் 84, 207 -ம் பாடல்களாகவும் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 90-ம் பாடல் தலைவன் தன்னை மணம் செய்து கொள்வான் என நம்பும் தலைவியிடம் தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையிலும், 226-ம் பாடல் பொருளீட்டும் பொருட்டு பிரிந்து சென்ற தலைவனை எண்ணித் துயருற்று தோழியிடம் தலைவி கூறுவதாக நெய்தல் திணையிலும் அமைந்துள்ளன. அகநானூறு 84 -ம் பாடல் தலைவியைப் பிரிந்து அரசனின் போர்ப் பாசறையில் இருக்கும் தலைவன் தனது பிரிவாற்றாமையை உரைப்பதாக முல்லைத் திணையிலும் 207- ம் பாடல் தலைவனுடன் உடன்போகிய மகளை எண்ணித் துயருறும் தாயின் கூற்றாக பாலைத் திணையிலும் அமைந்துள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை - 90,226
  • மழைவளம் மிக்க மலைப்பகுதியில் மிளகுக் கொடிகள் விளைந்து காணப்படும். பலாமரக்கிளைகளில் கருங்குரங்குகள் வாழும். கருங்குரங்கின் விரல் பட்டுக் கீழே விழும் பலாப்பழங்கள் அருவி நீரில் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கரையொதுங்கிக் கிடக்கும்.
  • கடற்கரையில் தாழைப் பூக்கள் இரவு நேரத்தில் மலர்ந்து காணப்படும். அவை பார்ப்பதற்கு நாரை சிறகு விரித்தது போல் தோன்றும். தாழை மலர்களில் கடலலைகள் பட்டுத் தெறிக்கும்.
  • உவமைகள்: தலைவியின் கண், தோள், நெற்றி ஆகியவை முறையே தாமரை, மூங்கில், பிறைச்சந்திரன் ஆகிய மூன்றுடனும் ஒப்பிடப்பட்டன.
அகநானூறு - 84,207
  • கார்காலத்தில் மழை பொழிந்து மலைப்பகுதி முழுக்க செழித்துள்ளது. மேகம் கடல் நீரை அள்ளிக் கொண்டு வந்து நிலத்தில் கொட்டும் செயலே மழை என்று நம்பப்பட்டது.
  • பன்றியானது நீர் சேற்றில் படுத்து கொண்டு தூங்கும். சிறிய கண்ணினை கொண்டிருக்கும். மழையினால் வளம் பெற்ற கொடிகளிலிருந்து முல்லை பூக்கள் பன்றியின் முதுகில் கொட்டும் வளம்மிக்க சிற்றூர்கள் முல்லை நிலத்தில் அமைந்தவை.
  • அரசர்களில் சிலர் பகையரசன் தனக்கு அடிபணிந்து திறை அளிக்க சம்மதித்த பின்னும் போரில் பகையரசனின் கோட்டையை அழிக்கும் எண்ணத்துடனே இருந்த நிலையினை அறிய முடிகிறது.
  • கோட்டையை பச்சை கொடிகள் சூழ்ந்திருக்கும். கோட்டையினுள் நெல்வயல்கள் உண்டு. உழவர் களத்தில் வேலை செய்தபின் கள்ளருந்தி இன்பம் கொள்வர். அறுவடை செய்த நெல்லை கதிரடித்து வைக்கோல் பிரிக்க பரந்த களமேடை உண்டு.
  • கடல் நீரைப் பாத்தி கட்டி வெயிலில் காயவிடுவர். வெயிலால் நீர் வற்றிய பின்னர் விளைந்த உப்பை அமுதம் என்று கருதி சேகரித்துக் கொள்வர். உப்பு வணிகர்கள் பறவையை வானில் பறக்கவிட்டு நற்குறி நோக்கி பின் மேற்கு திசையில் தம் பயணத்தை தொடர்வர். கடும் பாலை நிலத்தில் கழுதைகள் தம் குளம்பு தேய உப்புள்ள பொதிகளை சுமந்து செல்லும். பாலை நிலத்தில் வணிகர்களை தாக்கும் ஆறலை கள்வரிடம் இருந்து பாதுகாப்பு பெறும் வீரர் படையுடன் செல்வர்.
  • பாலை நிலத்தில் வெப்பத்தால் யானைகள் உடல்வற்றி தாகத்துடன் நீருக்காக அலையும். யானைகளின் மதம் ஒழுகிய கன்னச்சதுப்புகளில் வண்டுகள் மொய்த்த இடம் சுருங்கிப் போயிருக்கும். நீரில்லா கிணற்றில் துதிக்கை நீள துழாவி சலிப்புறும்.
  • வளம் மிக்க வீட்டுப்பெண்கள் தேன் கலந்த பாலினை இரவு தூங்குவதற்கு முன் உண்பர். அவர்கள் தலைவனுடன் உடன்போய் பாலை நிலத்தில் தனித்து செல்லுகையில் வற்றிய கிணற்றில் இருக்கும் உவர்க்கும் நீரை உண்ண வேண்டிய துயர நிலை ஏற்படும்.
  • உவமைகள்: மலைமீது மேகம் வளைந்திருப்பது வானவில்லை உண்டு பண்ணுகிறது. பன்றியின் சிறிய கண் தீப்பொறியை போலுள்ளது. வயலில் மலர்ந்திருக்கும் மலர்கள் நெருப்பை ஒத்துள்ளன.

பாடல் நடை

குறுந்தொகை - 226

  • திணை: நெய்தல்
  • கூற்று: வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
நல்லமன் வாழி தோழி அல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே.

அகநானூறு - 207

  • திணை: பாலை
  • கூற்று:மகட் போக்கிய தாய் சொல்லியது

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல்
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்,
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-May-2025, 00:20:47 IST