under review

மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்

From Tamil Wiki

மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர். செய்தொழிலாலும் இயற்பெயராலும் மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார் என்னும் பெயர் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார் பாடிய பாடல் நற்றிணையில் 322-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. இரவு நேரத்தில் ஊரார் அறியாது களவு மணம் கொள்ள வந்த தலைவனுக்குக் கேட்கும்படியாக பிரிந்து தவிக்கும் தன் துயரை தோழிடம் தலைவி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மூங்கில் அடர்ந்து வளர்ந்து வேலியிட்டது போல் இருக்கும் புதர்பகுதியில் பெண் புலியானது குட்டிகளை ஈனும். குட்டிகளை ஈன்று பசித்திருக்கும் பெண் புலியின் பசியினைப் போக்க ஆண் புலியானது மக்கள் செல்லாத குறுகிய வழியில் புதர்களுக்குள் மறைந்து வேட்டைக்காகக் காத்து நிற்கும்.
  • காதல் கொண்ட மகளிர் தம் காதலரைப் பிரிந்ததால் பசலை நோயுற்று வாடுவர். மகளின் காதலை புரிந்து கொள்ளாத அன்னை வேலனை அழைத்து மகளுக்கு பிடித்துள்ள அணங்கு நீங்கும்படி வேண்டி கொண்டு வெறியாட்டு நிகழ ஏற்பாடு செய்வர்.
  • வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் ஆட்டினை பலியிட்டு பூசை நிகழ்த்தி இளமகள் மீது வந்துள்ள அணங்கை விரட்டுவான். இது காதல் கொண்ட மகளிரை மேலும் வருத்தும்.

பாடல் நடை

நற்றிணை - 322

  • திணை: குறிஞ்சி
  • கூற்று:தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்.

ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;
வாய்கொல் வாழி-தோழி! வேய் உயர்ந்து,
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன்
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Sep-2025, 20:02:13 IST