மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கண்ணத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்களில் முறையே ஒன்று அகநானூறிலும் நற்றிணையிலும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
மதுரைக் கண்ணத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைக் கண்ணத்தனார் பாடிய பாடல்கள் அகநானூறிலும்(360 ) நற்றிணையிலும் (351) உள்ளன. அகநானூறு 360-ம் பாடல் பகலில் வந்து தலைவியைச் சந்தித்து விட்டு சென்றுவிடும் தலைவனிடம் இரவிலும் தலைவியின் துயர் தீர்க்க வருக என்னும் பொருளமைய தோழி கூறுவதாக நெய்தல் திணையிலும் நற்றிணை 351-ம் பாடல் இல்லச் சிறையில் வருந்தும் தலைவியை மீண்டும் தினைப்புனக் காவலுக்கு அனுப்புக என்று அவள் அன்னையிடம் தோழி கூறுவதாகக் குறிஞ்சித் திணையிலும் அமைந்தன.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
அகநானூறு - 360
- கடற்கரைச் சோலைகளில் பலவகை பூமரங்கள் காணப்படும். சோலையை ஒட்டி மேற்கு பக்கத்தில் மலைகள் அமைந்திருக்கும். கிழக்கே கடலில் தோன்றி மேற்கே மலைகளுக்கு பின் மறையும் சூரியன் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் பயணிப்பதாக நம்பப்பட்டது.
- கடற்கரைச் சோலையில் சேற்றுப்பகுதியில் பாதியளவு தண்டுகள் புதைந்திருக்க நெய்தல் மலர்கள் பூத்திருக்கும். அவற்றைச் சுற்றி வண்டுகள் மொய்க்கும்.
- மாலை நேரத்து செக்க சிவந்த அந்தி வானமும் கருமை நிற கடலும் சிவனும் திருமாலும் தோற்றமளிப்பதாக மக்கள் நம்பினர்.
- நெய்தல் நில மக்களின் வீட்டு முற்றத்தில் புன்னை மரங்களும் பனை மரங்களும் காணப்படும். புன்னை மரத்தின் பொன்னிற பூக்கள் முற்றத்தில் விழுந்து கிடக்கும். பனை மரத்தில் நாரைகள் கூடுக்கட்டி வாழும்.
- தம் காதலியரை சந்திக்க வரும் ஆடவர் வீட்டிற்கு வெகு முன்னரே தேரினை நிறுத்தி குதிரையின் கனைப்பொலி கேட்கா வண்ணம் எச்சரிக்கை கொள்வர். பின்னர் மணலில் நடக்கும் யானை போல மெல்ல நடந்து வந்து ஊரார் அறியா வண்ணம் காதலியரை சந்திக்கும் வழக்கம் இருந்துள்ளது.
நற்றிணை - 351
- பருவ வயது வந்தவுடன் இளம் பெண்களை இல்லத்தில் மட்டுமே இருக்கும்படி செய்யும் மரபு வழக்கம் இருந்துள்ளது.
- இல்லத்தில் சிறைப்பட்ட காதல் கொண்ட இளமகளிர் உடல் மெலிந்து வாடுவர். அவர் தம் அன்னையர் மகள் துயர் கொள்வது முருகு தெய்வம் வந்ததால் என எண்ணி தெய்வமேற்றும் சடங்குகளை செய்வர்.
- இளமகளிர் கரிய அடியுடைய வேங்கை மரங்கள் சூழ்ந்த குன்றில் தமது வீட்டாரின் தினை வயலை காவல் காக்க செல்வர். அங்கே சந்தான மரத்தை முறிக்கும் யானைகள் உலவினாலும் அஞ்சாமல் காவல் செய்வர். அம்மகளிர் தங்கும் காவல் பரணின் மெத்தை புலித்தோல் இடப்பட்டதாக இருக்கும்.
பாடல் நடை
அகநானூறு - 360
- திணை: நெய்தல்
- கூற்று: பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து இரவுக் கறி நேர்ந்தது
..............................................................................
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால்,
பாணி பிழையா மாண் வினைக் கலி மா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என
நல் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.
நற்றிணை - 351
- திணை: குறிஞ்சி
- கூற்று: தோழி அருகு அடுத்தது
இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி-வேண்டு, அன்னை!-கருந் தாள்
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து,
சிறு தினை வியன் புனம் காப்பின்,
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- அகநானூறு - 360:Tamilvu
- நற்றிணை - 351:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:15:46 IST