under review

மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம்

From Tamil Wiki
விலாசம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: விலாசம் (பெயர் பட்டியல்)
சந்தானம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சந்தானம் (பெயர் பட்டியல்)
பிரசாதம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பிரசாதம் (பெயர் பட்டியல்)
Madhanasundhara vilasam.jpg

மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம் மராட்டியர் ஆட்சியில் எழுதப்பட்ட நாடக நூல்.

பார்க்க: மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

ஆசிரியர்

Madhanasundhara vilasam 1.jpg

இந்நூலை இரண்டாம் சிவாஜி மன்னரின் உத்தரவின் பெயரில் அருணாசலக்கவி இயற்றினார்.

காலம்

இந்நூல் இரண்டாம் சிவாஜியின் ஆணைப்படி எழுதப்பட்டுள்ளது என்ற குறிப்பால் இதன் காலம் பொ.யு. 18-ம் நூற்றாண்டு. இரண்டாம் சிவாஜியின் காலம் பொ.யு. 1696 - 1726.

நூல் அமைப்பு

மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம் நாடகத்தில் 6 விருத்தங்கள், 1 அகவல், 1 கொச்சகம், 16 சிந்துக்கள், 4 வசனப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

கணபதி அகவல் , கதாசங்கிரக அகவல்[1] இரண்டிற்குப்பின் நாடகம் தொடங்குகிறது. இந்நூலில் பல விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

கதைச்சுருக்கம்

மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம் சிவபெருமானின் அருள் பெற்ற மக்களின் விளையாட்டைப் பாடுவது. மதனசுந்தரப் பெருமாளை குலத் தெய்வமாக கொண்ட சோழ மன்னனின் நான்கு பிள்ளைகளின் விளையாட்டு, சிவபெருமானிடம் கொள்ளும் பக்தி, சோழ மன்னனின் பிரார்த்தனைக்கு இணங்கி சிவன் பிள்ளைகளை வாழ்த்துவது என இந்நாடகம் அமைகிறது. இதில் வரும் சோழேந்திரன் என்னும் பெயர் சோழ மன்னனை குறிப்பதில்லை என கி.வா. ஜகந்நாதன் குறிப்பிடுகிறார்.

பிள்ளைகள் நால்வரும் முதலில் கழற்சிக்காய் விளையாட்டில் தொடங்குகி [2] கழற்சிக்காய் ஊசல் என்ற விளையாட்டை ஆடினர். ஒரு கழற்சிக்காயை கோட்டில் வைத்து அதன் மேல் வேறொரு கழற்சிக்காயை ஏற்றி இதனை விளையாடுவர். அதன் பின் பந்து விளையாட்டை தொடங்கி ஆனைபந்து, குதிரைப்பந்து என விளையாடினர். ஒருவன் கிட்டியினால் பந்தை அடிக்க அனைவரும் கிட்டிப்பந்து விளையாடத் தொடங்கினர். பின் பாண்டி விளையாட்டு, சில்லை வீசிக் காலால் எற்றிடும் விளையாட்டு, ஒவ்வொரு பகுதியாகத் தாண்டிப் பின் காலில் மொச்சிக் கட்டிக் கொள்வர், உப்புக்கோடு, நாலுமூலை தாச்சி, கண்ணாமூச்சி ஆகிய விளையாட்டுகளை விளையாடினர்.

இறுதியாக நால்வரும் சேர்ந்து கொப்பி தட்டிப் பாடி விளையாடினர். இதில் மதனசுந்தரேசப் பெருமாளைப் புகழ்ந்து பாடுவர். தன் பிள்ளைகள் இப்படி விளையாடுவதைக் கண்ட அரசன், "தன் குழந்தைகளுக்கு தீர்க்காயுளும், மற்ற நலங்களும் அருள வேண்டும்" என வேண்டுவார். மன்னரின் வேண்டுதலுக்கு இணங்க சிவன் உமையோடு எழுந்தருளி மன்னரின் குழந்தைகளை வாழ்த்துவதாக அமைந்துள்ளது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. கதையின் சுருக்கப்பாடல். கதைகளை நாடகமாக நிகழ்த்துபவர்கள் முதலில் கதை முழுவதையும் தெரிவிக்கும் ஒரு பாடலை பாடுவர். இதனை நிருபணம் என்பர்.
  2. கழற்சிக்காயில் விழும் எண்களுக்கு ஏற்ப ஒன்றுக்கு சிவன், இரண்டிற்கு சக்தி, மூன்றுக்கு மும்மூர்த்திகள், நான்கிற்கு சதுர்வேதங்கள், ஐந்திற்கு பஞ்சபூதங்கள், ஆறுக்கு சாஸ்திரங்கள், ஏழுக்கு கடல்களையும், எட்டுக்கு திக்கஜங்கள், நவ ரத்தினங்கள், பத்து திசைகள் எனப் பாடுவதாய் அமைந்த விளையாட்டு



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Nov-2023, 07:58:34 IST