பெருங்கண்ணனார்
பெருங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்களில், ஒரு பாடல் நற்றிணையிலும் இரண்டு பாடல்கள் குறுந்தொகையிலும் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பெருங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
பெருங்கண்ணனார் பாடிய மூன்று பாடல்கள் நற்றிணை(137) மற்றும் குறுந்தொகையில் (289,310) இடம்பெறுகின்றன. நற்றிணை பாடல் தலைவியைப் பிரிந்து பொருளீட்ட விரும்பாத தலைவன் தனக்குத்தானே கூறிக்கொள்வதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது. குறுந்தொகைப் பாடல்கள் முறையே முல்லை மற்றும் நெய்தல் திணையில் தலைவரைப் பிரிந்த தலைவியின் துயரினை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
நற்றிணை - 137
- ஆடவர் பொருளீட்டுவதற்காக செல்லும் வழியானது உயர்ந்து ஓங்கிய மலைகள் நிறைந்தது. அம்மலைகளில் இருந்து கொட்டும் அருவி நீர் வறண்டு போய் பாதை முழுக்க வறட்சியாக காணப்படும்.
- பிடியானையின் பசியினை போக்க களிறுகள் ஓமை மரத்தின் கிளைகளை முறித்து தழை கொண்டுவரும். அப்படி கிளை முறிக்கப்பட்ட ஓமை மரமே பொருளீட்ட அவ்வழியில் செல்வோர்க்கு இரவு தங்குமிடமாக பயன்படும்.
- மகளிர் பெருத்த தோள்களையும் இடைவரை நீண்ட அழகிய கருங்கூந்தலையும் கொண்டிருப்பர்.
குறுந்தொகை - 289
- பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற கணவர் திரும்பி வராமை கண்டு நோயுற்று மகளிர் துன்பப்படுகின்றனர். அம்மகளிர் மீது ஊரார் பரிதாபம் கொள்கின்றனர்.
- பருவ காலம் தவறி மழை பெய்வது கணவனைப் பிரிந்த மகளிரின் துன்பத்தைக் கூட்டுகிறது.
- உவமை: வளர்பிறை சந்திரன் வளர்வது போலத் தலைவரின் பிரிவால் ஏற்பட்ட காமநோய் பெருகி கைகள் மெலிந்து வளையல்கள் நழுவி விழும்படி செய்கிறது.
குறுந்தொகை - 310
- பறவைகள் கூவின. பூக்கள் மலர்ந்தன. பகல் நேரம் வந்த பின்னர் கடற்கரை சோலைகள் உயிரினங்கள் அற்று தனிமை கொண்டது.
- பகல் பொழுது முடிகையில் வானம் இருண்டது.
- தலைவரின் ஊரானது குளிர்ச்சியான மலர் மணம் வீசும் ஞாழல் மரங்களை கொண்டது.
- உவமை: உள்ளம் இருண்டு சோர்வுற்றதை பகல் ஒளி மறைந்த வானத்துடன் ஒப்பிடப்பட்டது.
பாடல் நடை
நற்றிணை - 137
- திணை: பாலை துறை: தலைவன் செலவழுங்கியது.
தண்ணிய கமழுந் தாழிருங் கூந்தல்
தடமென் பணைத்தோள் மடநல் லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியதொன்று
எய்தினை வாழிய நெஞ்சே செவ்வரை
அருவி ஆன்ற நீரில் நீளிடைக்
கயந்தலை மடப்பிடி உயங்குபசி களைஇயர்
பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை
அருஞ்சுரஞ் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்றுசேண் அகறல் வல்லிய நீயே.
குறுந்தொகை - 310
- திணை: நெய்தல் துறை: வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது.
புள்ளும் புலம்பின பூவுங் கூம்பின
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த் தாகி
எல்லை கழியப் புல்லென் றன்றே
இன்னும் உளெனே தோழி இந்நிலை
தண்ணிய கமழு ஞாழல்
தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- நற்றுணை - 137:Tamilvu
- குறுந்தொகை - 289:nallakurunthokai
- குறுந்தொகை - 310:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2025, 17:31:28 IST