பூ. ஆலாலசுந்தரம் செட்டியார்
- செட்டியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செட்டியார் (பெயர் பட்டியல்)
பூ. ஆலாலசுந்தரம் செட்டியார் (பூரிப்பாக்கம் ஆலாலசுந்தரம் செட்டியார்; பூ. ஆலாலசுந்தரம்; பூ. ஆலாலசுந்தரனார்) (நவம்பர் 05, 1907 - ஜனவரி 09, 1982) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர். சமயம், இலக்கியம் குறித்து ஆராய்ந்து பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார்.
பிறப்பு, கல்வி
பூ. ஆலாலசுந்தரம் செட்டியார், நவம்பர் 05, 1907 அன்று, சென்னையில் உள்ள முத்தியாலுப் பேட்டையில் பூரிப்பாக்கம் வேலு செட்டியார் - இராஜம்மாள் தம்பதியருக்கு, ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். வேலு செட்டியார் வில்லியம் மில்லரின் மாணவர். வேலு செட்டியார், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நினைவைப் போற்றும் வகையிலும், தன் ஆசிரியரான காஞ்சிபுரம் ஆலாலசுந்தரம் பிள்ளையின் நினைவாகவும், தன் மகனுக்கு ஆலாலசுந்தரம் என்று பெயர் சூட்டினார்.
ஆலாலசுந்தரம் செட்டியார், சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பு வரை பயின்றார். 1927-1929-ல், பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (இண்டர்மீடியட்) உபகாரச் சம்பளத்துடன் பயின்று சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழில் பி.ஏ.ஆனர்ஸ் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.லிட் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பூ. ஆலாலசுந்தரம் செட்டியார் மணமானவர். மனைவி, நவநீதம். இவர்களுக்கு சிவகாமசுந்தரி, புனிதவதி, ஞானப்பூங்கோதை என மூன்று மகள்கள்; சிவகுமாரன், நடராசன் என இரண்டு மகன்கள்.
கல்விப் பணிகள்
பூ. ஆலாலசுந்தரம் செட்டியார், சென்னை முத்தியாலுப்பேட்டையில் இருந்த கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் 1934-ல் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். கல்லூரி மாணவர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் கற்பித்தார். 1937-ல், கிறிஸ்தவக் கல்லூரி தாம்பரத்திற்கு மாற்றப்பட்டபோது ஆலாலசுந்தரம் செட்டியார் அக்கல்லூரிக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1951-ல், பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். 1964 முதல் 1968 வரை மொழித் துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1968-ல் பணி ஓய்வு பெற்றார்.
1968 முதல் 1973 வரை அதே கல்லூரியில் இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1973-ல் அப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 1980 வரை அதே சென்னை கிறித்தவக் கல்லூரியில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் தொடர்ந்து 46 ஆண்டு காலம் பணியாற்றிய சிறப்புக்குரியவர்.
பொறுப்புகள்
- சென்னை கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி ஆட்சிக் குழு உறுப்பினர்
- சென்னை கிறித்துவக் கல்லூரி ஆட்சிக் குழுவின் செனட் உறுப்பினர்
- சென்னை கிறித்துவக் கல்லூரி ஆட்சிக் குழுவின் செயலாளர்
- சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தலைவர்
- சென்னை கிறித்தவக் கல்லூரி பணியாளர் சங்கப் பொருளாளர்; தலைவர்
- சென்னை கிறித்துவக் கல்லூரி நூலக ஆட்சிக் குழு உறுப்பினர்
- சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழு உறுப்பினர்
- சென்னைப் பல்கலைக்கழகப் கல்வித்திட்டக் குழு உறுப்பினர்
- சென்னைப் பல்கலைக்கழக செனட் சபை உறுப்பினர்
- சென்னைப் பல்கலைக்கழக அகாடமிக் கவுன்சில் உறுப்பினர்
- ஆங்கிலம் - தமிழ் அகராதியின் அறிவுரைக் குழு உறுப்பினர்
- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக்குழு உறுப்பினர்
- சென்னைப் பல்கலைக்கழக மேற்பார்வையிடும் ஆணைக்குழு உறுப்பினர்
- அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், கிறித்தவக் கல்லூரி ஆகியவற்றின் பல்வேறு குழுக்களில் உறுப்பினர்
- பல்வேறு கல்லூரிகளில் பாடத்திடக்குழு, மேற்பார்வைக் குழு, வினாத்தாள் குழு உறுப்பினர்.
- சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் செயற்குழு உறுப்பினர்
- சென்னை தருமசிவாசாரியார் மடத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்
- தாம்பரம் ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் அறங்காவலர்
இலக்கிய வாழ்க்கை
பூ. ஆலாலசுந்தரம் செட்டியார் சித்தாந்தம், ஆயிரம் வைசியன் போன்ற இதழ்களிலும், கல்லூரி மற்றும் மாநாட்டு மலர்களிலும் சமயம், இலக்கியம், ஆன்மிகம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். கல்லூரி மலரில் 'பன்றி இறைச்சியின் மாட்சி' என்ற சிறுகதையை எழுதினார். இலக்கியம், ஆன்மிகம் குறித்துச் சில நூல்களை எழுதினார். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும், சமய, இலக்கியக் கருத்தரங்குகளிலும் சொற்பொழிவாற்றினார். வானொலியிலும் பல்வேறு உரைகளை நிகழ்த்தினார். மாணவர்கள் பலருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்து அவர்கள் எம்.லிட். பட்டம் பெற உதவினார்.
மறைவு
கண்களில் ஏற்பட்ட நீரழுத்த மிகை நோயினால் பாதிக்கப்பட்ட பூ. ஆலாலசுந்தரம் செட்டியார், ஜனவரி 09, 1982-ல் காலமானார்.
நினைவு
பூ. ஆலாலசுந்தரம் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை, அவரது மாணவர் முனைவர் க.த. திருநாவுக்கரசு பதிப்பித்தார். தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலகத்தில் இந்நூல் சேகரிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
பூ. ஆலாலசுந்தரம் செட்டியார், எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் செயல்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட நூல் தேர்வாளராக இருந்து மாணவர்கள் சிறந்த நூல்களைப் பயில உதவினார். மாணவர்கள் எம்.லிட். பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார். பல கல்லூரிகளில் புறத்தேர்வாளராகப் பணிபுரிந்தார். தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் தொடங்க உதவிகரமாகச் செயல்பட்டவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- இயற்றமிழ்
- தோத்திரப்பாக்களில் காணும் இலக்கிய நயம்
- சென்னை கந்தகோட்டத் தல வரலாறும், திருவருட் பாடல்களும்
- கட்டுரை விருந்து
- சுந்தரச் சொல்லோவியம்
- நூற்றாண்டு விழா மலர்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:43:37 IST