பிரமசாரி
பிரமசாரி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பிரமசாரி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இல்லறம் நீங்கி துறவு பூண்டு வாழ்ந்தமையால் பிரமசாரி என்னும் பெயர் பெற்றார் என கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
பிரமசாரி பாடிய பாடல் நற்றிணையில் 34-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தன்னுடன் கூடி பிரிந்து சென்ற தலைவன் வராமையினால் காதல் நோயால் வருந்தும் தலைவியை கண்ட அவளது தாய் தன் மகள் மேல் முருகு தெய்வம் வந்துள்ளது என்று எண்ணி வேலன் வெறியாட்டு நிகழ்த்த ஏற்பாடு செய்தாள். இதனை அறிந்து வருந்திய தோழி முருகனிடம் தலைவியின் துன்பத்தை போக்காது இருக்கிறாயே என குற்றம்சாட்டி முறையிடுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மலையில் அமைந்த கற்சுனையில் இருக்கும் சருகு இலைகளை அகற்றிவிட்டு குவளை மலர்களையும் குருதி நிறத்து காந்தள் மலர்களையும் சூடிக்கொண்டு சூர்மகள் அருவி ஓரத்தில் அமைந்த முருகனது வழிபாட்டிடத்தில் ஆடுவாள்.
- வெறியாட்டெழுந்து ஆடும் வேலன் கடம்ப மலர்களை அணிந்து கொண்டிருப்பான்.
பாடல் நடை
நற்றிணை - 34
- திணை: குறிஞ்சி துறை: தோழி தெய்வத்துக் குரைப்பாளாய் வெறி விலக்கியது.
கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி யொண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை யடுக்கப் பொற்பச் சூர்மகள்
அருவி யின்னியத் தாடு நாடன்
மார்புதர வந்த படர்மலி யருநோய்
நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- நற்றிணை - 34:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2025, 12:08:37 IST