under review

பசுபதி சிதம்பரம்

From Tamil Wiki
பசுபதி சிதம்பரம்
பசுபதி சிதம்பரம்

பசுபதி சிதம்பரம் (பிறப்பு: நவம்பர் 18, 1957) மலேசியாவின் குறிப்பிடத்தக்க சமுதாயத் தலைவர் மற்றும் சமூக செயல்பாட்டாளர். மை ஸ்கில்ஸ் அறவாரியம் மூலம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்வியும் சுயநம்பிக்கையையும் விதைத்து அவர்களை ஆளுமை மிக்க மனிதர்களாக சமுதாயத்தில் சேர்க்கும் பணியைச் செய்து வருகிறார்.

பிறப்பு / கல்வி

தந்தை சிதம்பரம் தாயார் புஷ்பவள்ளி

பசுபதி நவம்பர் 18, 1957-ல் பத்து ஆராங்கில் சிதம்பரம்-புஷ்பவல்லி இணையருக்குப் பிறந்தார். எட்டுப்பேர் கொண்ட  குடும்பத்தில் மூன்றாவது பையனாகப் பிறந்தார் பசுபதி. தந்தை பத்து ஆராங்கில் நிலக்கரியை ஏற்றிச் செல்லும் இரயில்வண்டி ஓட்டுநர், கொதிகலன் பொறுப்பாளர், இயந்திரங்களின் பராமரிப்பாளர் என பலதரப்பட்ட வேலைகளைச் செய்தவர்.

பசுபதி தன் ஆரம்பக்கல்வியை பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் 1964 முதல் 1969 வரை கற்றார். பின்னர் 1970 முதல் 1973 வரை பத்து ஆராங் இடைநிலைப்பள்ளியிலும் 1974 முதல் 1975 வரை ரவாங் இடைநிலைப்பள்ளியிலும் கல்வியைத் தொடர்ந்தார். இடைநிலைக் கல்விய முடித்ததும் டிசம்பர் 1975 முதல் 1976 வரை ஒரு கட்டட குத்தகையாளரிடம் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றினார். 1977 முதல் 1978 வரை தார் கல்லூரியில் படிவம் ஆறு பயின்றார்.

இராம சுப்பையா

இராம சுப்பையா உபகாரச் சம்பளத் திட்டத்தால் 1978-ல்  கோலாலம்பூரில் உள்ள விவேகானந்தர் ஆசிரமத்தில் தங்கி பயிலும் வாய்ப்பு கிடைத்தது. படிவம் ஆறில் பெற்ற தேர்ச்சியால் 1979 முதல் 1983 முதல் தேசிய பல்கலைக்கழகத்தில் இரசாயனத்துறையில் படித்தார்.

தொழில்

1981-ல் ஐ.சி.ஐ பெயிண்ட் (ICI Paints) நிறுவனத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக (Lab technician) இணைந்தவர் பட்டம் பெற்றப்பின்னர் வருமான வரி துறை அதிகாரியாக 1983 முதல் 1987 வரை ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

அரசுப்பணியில் இருக்கையில் நீண்ட விடுப்பு எடுத்து 1987 முதல் 1989 வரை இங்கிலாந்தில் (University of Wales, Aberystwyth) சட்டக்கல்வி பயிலச் சென்றார். அங்குள்ள கட்டணச்சுமையைச் சமாளிக்க அங்கிருந்த பேரங்காடியில் கழிப்பறையைச் சுத்தம் செய்தல் மற்றும் ரொட்டி அடுக்கும் வேலைகளைச் செய்தார். பின்னர் லண்டனில் வாடகை வண்டி ஓட்டினார்.

மலேசியா திரும்பியபின் அரசாங்க வேலையில் இருந்து நீங்கி மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக வேலை செய்தார். பிறகு சொந்த வழக்கறிஞர் நிறுவனத்தைத் தொடங்கினார். சட்டச் சிக்கல்களில் மாட்டித் தவித்த ஏழை இந்தியர்கள் பலருக்கும் இலவச சட்ட சேவையை வழங்கினார்.

பொதுவாழ்க்கை

தமிழ் ஈழ ஆதரவு
வே. பிரபாகரனுடன்

இலண்டனில் இருக்கும்போதே பசுபதி ஆங்கிலேயர்களின் இனவாதத்தை எதிர்த்து நெல்சன் மண்டேலா கட்சிக்கு ஆதரவாக அணி திரண்டார். மலேசியா திரும்பியபோது ஈழமக்களின் நிலைகுறித்து பல தகவல்கள் கிடைக்கப் பெற்றார். இலங்கைப் பிரச்சனை குறித்துத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். மலேசியாவை எப்படிப் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டார்களோ அதேபோலத்தான் இலங்கையும் ஆளப்பட்டது என அறிந்தார். இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியத்தை அறிந்தார். 2001-ஆம் ஆண்டு பிரபாகரன், தமிழ்ச்செல்வன், நடேசன், அண்டன் பாலசிங்கம் போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவர்களின் போராட்டத்தில் இருந்த உண்மையை உணர்ந்தார். பசுபதிக்கு அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மேல் அக்கறை ஏற்பட்டது. அவர்களும் தன் சகோதரர்கள் என முழுமையாக 15 வருடங்கள் தன்னை ஈழப் போராட்டத்தோடு ஆத்மார்த்தமாக இணைத்துக்கொண்டார்.

செம்பருத்தி

பசுபதி 1999-ல் தொடங்கிய 'செம்பருத்தி’ இதழ், மலேசியாவின் மாற்று அரசியலைப் பேசும் இதழாகத் திகழ்ந்தது. ஈழ அரசியலை விரிவாகப் பேசியது. அதனால் பல்வேறு சட்டச் சிக்கலுக்கு உள்ளானது. சமூகச் சிக்கல்களை அறிவார்ந்த முறையில் ஆராய்வது மட்டுமல்லாமல் அவ்விதழ் மூலம் நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டார். செம்பருத்தி வழி இலக்கியக் கூடுகைகள் நடத்தியதுடன் குறுநாவல் போட்டியையும் நடத்தினார். மேலும் செம்பருத்தி பதிப்பகம் மூலம் சில நூல்களையும் பதிப்பித்தார்.

தமிழ் அறவாரியம்

தமிழ்ப்பள்ளிகளுக்கென உருவாக்கப்பட்ட தமிழ் அறவாரியத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றதும் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட (PASS) எனும் திட்டத்தை விரிவாக அறிமுகம் செய்தார். இத்திட்டம் பெற்றோர்களின் சிந்தனை மற்றும் ஆளுமையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. மேலும் மாணவர்களிடையே அறிவியல் திறன் வளர 'அறிவியல் விழா’ எனும் திட்டம் தொடங்க தூண்டுகோளாக இருந்தார்.

கல்வி சமூக நல ஆய்வு அறவாரியம் (EWRF)

2006-ல் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தில் தலைவராகப் பொறுப்பேற்றார். 1976-ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட இந்த அறவாரியம் சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டுவர பங்களித்தது. பசுபதி இவ்வமைப்பின் தலைவரானதும் பள்ளியில் விடுபட்ட மற்றும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு ஏற்பட செயல்திட்டங்களை வகுத்தார். CSI (Civil Society Intervention) எனும் திட்டத்தின் வழி இடைநிலைப்பள்ளியில் வழி தவறி குற்றச்செயலில் ஈடுபடுவதை தவிர்க்கும் வழிகளை உருவாக்கினார். Total Immersion Camp மூலம் இடைநிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு 21 நாள் ஆங்கிலம் மற்றும் மலாய் முகாம்களை ஏற்பாடு செய்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 2010-ல் தன் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார்.

மை ஸ்கில்ஸ் அறவாரியம்
My skills.png

கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்திற்குப் பிறகு பசுபதி அவர்களுக்கு புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரத்தியேக மையத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. மா. சண்முகசிவா, செல்வமலர், தேவசர்மா ஆகியோர் கூட்டமைவில் மார்ச் 3, 2011-ல் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தை அமைத்தார், பதினான்கு மாணவர்களைக்

இருபது மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 34 ஏக்கர் நிலத்தில் மை ஸ்கிஸ்ல் கல்லூரியை அமைத்து பள்ளியில் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்குவதுடன் உளவியல் ரீதியாக அவர்களை மேம்படச் செய்யும் திட்டங்களை உருவாக்கி தமது குழுவினரோடு செயல்படுத்தி வருகிறார்.

எழுத்து

பசுபதி சிதம்பரம் 2020-ல் தொடங்கி தனது வாழ்க்கை பயணம் குறித்து பசுபதி பக்கம் எனும் தளத்தில் எழுதி வருகிறார்.

விருது

  • Outstanding Achievement Award - 2018

உசாத்துணை