under review

மை ஸ்கில்ஸ் அறவாரியம்

From Tamil Wiki
கலும்பாங்கில் உள்ள மை ஸ்கில்ஸ் அறவாரியம்

மை ஸ்கில்ஸ் அறவாரியம்: (2010) மலேசியாவில் பலவகையிலும் சமூகத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் அறவாரியங்களில் ஒன்று மை ஸ்கில்ஸ் அறவாரியம். இளையோர் ஆளுமை உருமாற்ற மையமாக மை ஸ்கில்ஸ் அறவாரியம் செயல்படுகின்றது.

பின்னணி

பசுபதி சிதம்பரம்

மை ஸ்கில்ஸ் அறவாரியம் வழக்கறிஞர் சி. பசுபதி, மருத்துவர் மா. சண்முகசிவா, செல்வமலர், தேவசர்மா ஆகியோரின் கூட்டு சிந்தனையில் உருவான அமைப்பு.

டி’ டிவைன் கஃபே
தேவசர்மா

மை ஸ்கில்ஸ் அறவாரியம் 2010--ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு மனித வள அமைச்சகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது. 2010-ல் ‘ப்ரைமஸ் இன்ஸ்டிடியூட் ஆன் டெக்னாலஜி’ என்ற அடிப்படையில் மை ஸ்கில்ஸ் அறவாரியம் பூச்சோங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கடை வரிசையில் இயங்கி வந்தது. அப்போது இந்த அறவாரியத்தில் 10 மாணவர்களும் 7 முழு நேர பணியாளர்களும் இருந்தனர். படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்றம் காணப்பட்டதால், மை ஸ்கில்ஸ் அறவாரியம் சிறந்த வசதிகளுடன் கூடிய வேறொரு பெரிய வளாகத்திற்கு மாற முடிவு செய்தது. 2012-ம் ஆண்டு மை ஸ்கில்ஸ் அறவாரியம் கிள்ளான் நகரில் அமைந்துள்ள கைவிடப்பட்ட பேருந்து முனையத்திற்கு மாற்றலாகிச் சென்றது. அந்தப் பேருந்து முனையத்தின் 17,000 பரப்பளவு நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு பின்னர் 600,000.00 ரிங்கிட்டுக்கு புதுப்பிக்கப்பட்டது. வருடத்திற்கு 250 மாணவர்கள் தங்கக்கூடிய வசதிகளை இந்தப் புதிய இடம் கொண்டிருந்தது. கிள்ளானில் 6 ஆண்டுகள் மை ஸ்கில்ஸ் அறவாரியம் செயல்பட்டது.

பின்னர் 2018--ம் ஆண்டு, மை ஸ்கில்ஸ் அறவாரியம் கலும்பாங்கில் 4 கிடங்குகளுடன் கூடிய 34 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்தை 5 மில்லியன் ரிங்கிட்கு வாங்கியது. அந்த நிலத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. NLFCS விடுதி, காற்பந்து மைதானம், பயிற்சி மையம், விளையாட்டு மையம், தங்கும் விடுதி, சிற்றுண்டிச்சாலை, குளியலறை, மஹாத்மா காந்தி நினைவுப் பூங்கா, வழிபாட்டு மண்டபம் எனப் பல வசதிகளுடன் மை ஸ்கில்ஸ் அறவாரியம் இயங்கிக் கொண்டு வருகின்றது.

அரசு அங்கீகாரங்கள்

 • மார்ச் 3, 2011-ல் மைஸ்கில் அறவாரியம் லாப நோக்கற்ற அறக்கட்டளை மையம் என்று அங்கீகரிக்கப்பட்டது.
 • மனித வளம் அமைச்சகம் 5 நட்சத்திரங்களை மைஸ்கில் அறவாரியத்தின் பாட திட்டத்திற்கு வழங்கியது.

மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் நோக்கம்

Screenshot 2022-10-03 at 19-48-27 மைஸ்கில் அறவாரியம்.png

திறன், அறிவாற்றல், நடத்தை (skills, knowledge, attitude) என்ற அடிப்படையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் மை ஸ்கில்ஸ் அறவாரியம் செயல்படுகின்றது. முதலில், மைஸ்கில் அறவாரியம் வாழ்க்கையை வழிநடத்தும் முறையை மாணவர்களுக்குக் கற்பித்து, மாணவர்களைச் சிறந்த மனிதனாக்கும் நோக்கில் பல பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குகின்றது. அதன் பின்னரே, மாணவர்களுக்குத் தொழிற்திறன் கல்வி வழங்கப்படுகின்றது. எதிர்க்காலத்தில், சுயமாகச் சமூகத்தில் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மாணவர்களையும் சுதந்திரமாக இயங்கக்கூடிய மாணவர்களையும் உருவாக்குவதில் மைஸ்கில் உறுதியாக உள்ளது. தொழிற்திறன் மட்டுமின்றி சமூகத்தோடு ஒன்றிணைந்து செயல்படும்போது ஒரு மனிதனிடம் இருக்கக்கூடிய சமூக அணுக்க முறையையும் மை ஸ்கில்ஸ் அறவாரியம் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றது.

நன்மைகள்

 • சமூகத்தில் விடுபட்ட மாணவர்கள் எதிர்க்காலத்தில் தீய செயல்களில் ஈடுபடாமல் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள மை ஸ்கில்ஸ் அறவாரியம் துணை நிற்கின்றது.
 • சமூகத்தில் சிந்தித்துச் சுதந்திரமாகச் செயல்படும் ஆற்றலை மை ஸ்கில்ஸ் அறவாரியம் வழி மாணவர்கள் பெறுகின்றனர்.
 • தொழிற்திறனைப் பெற்றுக் கொண்டு எதிர்க்காலத்தில் மாணவர்கள் தமக்கான தொழிலைச் செய்ய மை ஸ்கில்ஸ் அறவாரியம் வழிவகுக்கின்றது.
 • தொழிற்திறன் கல்வியின் மூலம் மாணவர்களால் தங்களது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ள முடிகின்றது.
 • 2021-ம் ஆண்டு வரை மைஸ்கில் அறவாரியத்தில் கல்வி பெற்ற 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்று வெளியிடங்களில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

உறுப்பினர்கள்

 • ஆலோசகர்கள் - அமரர் YM லெப்டினன்ட் ஜெனரல் (RTD) ராஜா டத்தோ அப்துல் ரஷீத் ராஜா பதியோஜமான், ஷர்மின் ரஹமான்
 • இயக்குனர்கள் - சி. பசுபதி, ரிச்சட் ஹிவு சியோங் மிங், மா. சண்முகசிவா, பழனியப்பன், பி. கிரிஷ்ண குமார், ராகவன் அண்ணாமலை, வின்னி சேகர்
 • தலைமை செயல்திட்ட அதிகாரி - க. தேவசர்மா

கலை வளர்ச்சியில் பங்கு

ஓரங்க நாடகத்தின் வெற்றியாளர்கள்
வீதி நாடக பயிற்சியில் பிரளயன்
Screenshot 2022-10-03 at 19-55-15 மைஸ்கில் அறவாரியம்.png

மை ஸ்கில்ஸ் அறவாரியம் கலை வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்து வரும் அமைப்பு. மாணவர்களிடம் கலைத்திறன் வளர்வதை ஊக்கமூட்டி வருகிறது.

 • ஓரங்க நாடகம் - வணக்கம் மலேசியா நிறுவனத்துடன் அஸ்ட்ரோ வானவில் இணைந்து நடத்திய ஓரங்க நாடகப் போட்டியில் மைஸ்கில் மாணவர்கள் 2013, 2014, 2016--ம் ஆண்டுகளில் ‘எதிர்நீச்சல்’ என்ற குழுப் பெயருடன் பங்கெடுத்தனர். 2013--ம் ஆண்டு இரண்டாம் நிலை வெற்றியாளர்களாகவும் 2014, 2016--ம் ஆண்டு முதல் நிலை வெற்றியாளர்களாகவும் திகழ்ந்தனர். 2016--ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓரங்க நாடகப் போட்டியில் மாணவர்களே நாடகத்திற்கான கதையையும் வசனத்தையும் தயாரித்து நடிகர் நாசரிடம் ஒப்படைத்த பின்னரே இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி வெற்றியடைந்தனர்.
 • ‘ஜகாட்’ திரைப்படம் - 2016--ம் ஆண்டு சஞ்சய் குமார் இயக்கத்தில் வெளியான 'ஜகாட்' திரைபடத்தை இணைந்து தயாரித்தது மைஸ்கில் அறவாரியம். அது இயக்குனர் சஞ்சயின் முதல் படம் என்பதால் ஓர் இளைஞரை ஊக்குவிக்கும் வகையில் தனது பங்களிப்பைச் செய்தது. 28வது மலேசிய திரைப்பட விழாவில் ஜகாட் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதையும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்றது. இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஆண் நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை என 2016--ம் ஆண்டுக்கான கோலாலம்பூர் பிலிம் கிரிடிக்ஸ் விருதுகளை வென்றது.
 • வீதி நாடகம் - 2013-ம் ஆண்டு பிரபல நாடக ஆசிரியர் பிரளயன் தயாரிப்பில் ‘பவுன் குஞ்சு’ என்ற தலைப்பில் வீதி நடித்தனர். பிரளயன் தொடர்ந்து பத்து நாட்கள் மை ஸ்கீல் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கினார். கல்விச் சூழலைத் தீவிரமாக விமர்சனம் செய்யும் வகையில் ‘பவுன் குஞ்சு’ நாடகம் அமைந்தது. ‘மலேசியாவின் முதல் வீதி நாடகம்’ என்ற அடைமொழியுடன் நாடகம் இயற்றப்பட்டது. இந்நாடகம் பத்துமலை மண்டபத்தில் எவ்வித ஒலிபெருக்கி சாதனங்கள் இல்லாமல், மேடைத்தன்மை இல்லாமல் மண்டபத்தின் மையத்தில் வீதி நாடகச் சூழலில் அரங்கேற்றம் கண்டது.
சக்கர நாற்காலி நிகழ்ச்சி
 • சக்கர நாற்காலி நிகழ்ச்சி - 2016, 2017--ம் ஆண்டுகளில் சக்கர நாற்காலி நிகழ்ச்சி ஒன்றை மை ஸ்கில்ஸ் அறவாரியம் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் திறமைகளை வெளிகாட்டினர். இயக்குனர் டாக்டர் சையத் சல்லாவுதீன் பாஷாவின் வழிகாட்டுதலில் மாற்றுத்திறனாளிகளான இளைஞர்கள் ஒன்றிணைந்து சூஃபி, பரதநாட்டியம் மற்றும் பாலிவுட் போன்ற நடனக் கலைகளின் மூலம் தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர். இந்த நிகழ்ச்சியின் வழி கிடைத்த தொகை மை ஸ்கில் அறவாரியத்தின் நிதியில் சேர்க்கப்பட்டது.

விருதுகள், அங்கீகாரங்கள்

 • 2015 - ‘மை பேக்கரி’ பிரிட்டிஷ் கவுன்சிலின் விருதான "நல்ல தொழில்முனைவோர் (Entrepreneurs For Good)" விருதை வென்றது.
 • 2016 - உலக வங்கி அறிக்கையில் மை ஸ்கில்ஸ் அறவாரியம் பெயர் முன்னுதாரணமாக காட்டப்பட்டது.
 • 2016 Malaysian Indian Blueprint திட்டத்திற்காக மை ஸ்கில்ஸ் அறவாரியம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வில் ஈடுபட்டது.
 • 2018 - ‘தான் கா கீ’ விருது
 • 2010 தொடங்கி 4 சமூக நிறுவனங்கள்(மை பிரேஷ் ஃபாம், டி’டிவைன் கஃபே, பிரிமஸ், பிரிமஸ் வெல்னஸ்) தொடங்கப்பட்டன.
 • 2016- பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தைப் பின் புலமாகக் கொண்டது.

மை ஸ்கில்ஸ் அறவாரியத்தை அங்கீகரிக்கும் நிறுவனங்கள்/ நிதி பங்குதாரர்கள்

 • எச்.ஆர்.டி கோர்பரெஷன்
 • மித்ரா
 • ஜே.பி.மோர்கன்
 • எச்.எஸ்.பி.சி வங்கி
 • கிரேடிட் சுவிஸ்
 • கெந்திங் மலேசியா பெர்ஹாட்
 • யாயாசன் ஹாசானா
 • பேத்ரா
 • 3எம்
 • நியுசேதேல்
 • லின்கட்இன்
 • கோலாலும்பூர் கெப்போங் பெர்ஹாட்
 • ரெக்ஸ்
 • கிரேடர்
 • கெச்சாரா சூப் கிட்சன்
 • ரோல்ஃப் ஷ்னைடர் அறவாரியம்
 • மை ஃபார்ம் லேப்
 • ரிதம் அறவாரியம்
 • அமலான் ஸ்தார்

மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் சமூக நிறுவனங்கள்

மாணவர்கள் தயாரிக்கும் இயற்கை உரம்
 • மை பேக்கரி (2015) & டி’ டிவைன் கஃபே (2016) - 2015-ம் ஆண்டு கிள்ளானில் மை பேக்கரி தொடங்கப்பட்டது. பின்னர் 2016-ல் ‘டி’டிவைன் கஃபே’ என்று பெயர் மாற்றம் கண்டது. ‘டி’டிவைவ் கஃபே’ கோலாலம்பூரியில் அமைந்துள்ளது. பயிற்சி மையமாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் அறவாரியத்திற்கான நிதியைத் திரட்டும் நோக்கிலும் இந்நிறுவனம் செயல்படுகின்றது. அணிச்சல், நீர், உணவு போன்றவற்றை மாணவர்கள் சுயமாகத் தயாரித்து விற்பனைச் செய்து, மை ஸ்கில்ஸ் அறவாரியத்திற்காகப் பணத்தைத் திரட்டுகின்றனர். உணவு தயாரித்தல், அதனைப் பரிமாறுதல், வாடிக்கையாளர்களிடம் தொடர்புக்கொள்ளுதல் என அனைத்தும் மாணவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.
 • பிரிமஸ் வெல்னஸ் (2018) - இயற்கை மூலிகை பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக பிரிமஸ் வெல்னஸ் செயல்படுகின்றது. மாணவர்கள் முருங்கை தூள், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை மூலிகை பொருட்களைத் தயாரித்து விற்கின்றனர். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தில் பயிரிடப்பட்ட முருங்கையிலிருந்து முருங்கை மூலிகை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. இதில் கிடைக்கப்பெறும் தொகை மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிதியில் சேர்க்கப்படுகின்றது.
 • மை ஃபிரஷ் ஃபார்ம் - ‘மை ஃபிரஷ் ஃபார்ம்’ இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் நிறுவனமாகும். மாணவர்கள் இயற்கை விவசாயத்தின் கூறுகளைக் கற்றுக்கொண்டு இயற்கை விவசாயத்தை இந்நிறுவனத்தின் கீழ் மேற்கொள்கின்றனர். மை ஸ்கில்ஸ் அறவாரியத்திலேயே காய்கறிகளை இராசயனமின்றி இயற்கை முறையில் பயிரிட்து அதனை மாணவர்கள் உள்ளூர் சந்தைகளிலும் டி’டிவைன் கஃபேயிலும் விற்கின்றனர். இதன் மூலம் கிடைக்கப்பெறும் பணம், மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிதியில் சேர்க்கப்படும். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிதிக்காக, மாணவர்கள் இயற்கை உரத்தையும் தயாரித்து விற்கின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page