under review

நீதிவெண்பா

From Tamil Wiki

நீதி வெண்பா (பொ.யு.16-ம் நூற்றாண்டு) ஒரு தமிழ் நீதி நூல். எளிய நடையைக் கொண்ட நூறு வெண்பாக்களால் இயற்றப்பட்டது. 18, 19-ம் நூற்றாண்டுகளில் பரவலாகப் பயிலப்பட்டும் மேற்கோள் கட்டப்பட்டும் வந்த நூல். சீகன்பால்கால் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

ஆசிரியர்

நீதி வெண்பாவை இயற்றியவர் யார் என்று அறியவரவில்லை. 1931-ல் இந்நூலைப் பதிப்பித்த கா. நமச்சிவாய முதலியார் "நீதி வெண்பா என்னும் இந்நூலை இயற்றிய ஆசிரியர் இன்னார் என்று விளங்கவில்லை. இவர் வடமொழியிலுள்ள 'நீதிசாஸ்திரம்' என்னும் தொகைநூல் முதலானவற்றைக் கொண்டு இதனைச் செய்தனர் என்பது தெளிவாகின்றது. சில செய்யுட்கள் மொழிபெயர்ப்பாகவே காண்கின்றன' என்று குறிப்பிட்டார்.

காப்புச் செய்யுளில்

மூதுணர்ந்தோர் ஓது சில மூதுரையைப் பேதையேன்
நீதி வெண்பாவாக நிகழ்த்துவேன் - ஆதிபரன்
வாமன் கருணை மணி உதரம் பூத்த முதல்
கோமான்பெருங்கருணை கொண்டு

என்று உமையின் மைந்தன் என்று விநாயகப் பெருமானைத் துதிப்பதால் இவர் சைவ சமயத்தவர் என அறியலாம்.

காலம்

"திருப்போரூர்‌ சிதம்பர சுவாமிகள்‌ தாம்‌ சாந்தலிங்க சுவாமிகளின்‌ கொலை மறுத்தல்‌'என்ற நூலுக்குச்‌ செய்த உரையில்‌, இதன்‌ 80-ம்‌ பாடலை மேற்கோள்‌ காட்டுகிறார்‌. இப்பாடல்‌ நீதிசாரம்‌ என்ற பெயர்‌ சொல்லிக்‌ காட்டப்பட்டுள்ளது; ஆனால்‌ பாடல்‌ நீதிவெண்பாவிலுள்ளது. (நீதிசாரம்‌ விருத்த யாப்பால்‌ ஆன நூல்‌). சிதம்பர சுவாமிகள்‌ மறைந்தது பொ.யு.1659-ல். அவர்‌ காலமாவதற்குப்‌ பல ஆண்டுகள்‌ முன்னதாகவே அவ்வுரை எழுதியதாக வரலாறு ; உத்தேசம்‌ 1645 இருக்கலாம்‌. மேற்கோள்‌ காட்டும்‌ அளவு இந்நூலுக்கு அன்று பிரசித்தி ஏற்பட்டிருக்க வேண்டுமானால்‌, 50-60 ஆண்டு முற்பட்டதென்று கொண்டாலும்‌ கூட, நூலின்‌ காலம்‌ கி.பி.1590 ஆகிறது" என்று நூல் இயற்றப்பட்ட காலத்தை மு. அருணாசம் தன் தமிழ் இலக்கிய வரலாறு (17-ம் நூற்றாண்டு) நூலில் கணிக்கிறார்.

நூல் அமைப்பு

நீதி வெண்பா மகடூஉ முன்னிலையாக இயற்றப்பட்டுள்ளது. காப்புப் பாடல் தவிர நீதிகளைக் கூறும் 100 வெண்பாக்களால் ஆனது. உவமைகளும், உருவகங்களும் பாடல்களில் இடம்பெறுகின்றன. பழமொழிகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆசிரியர் சைவ நெறியினர் என்பதால் பல சைவநெறிக் கருத்துகள் இடம்பெறுகின்றன ('சங்கரனைப் பூசிப்பதொன்றே புகல்', 'ஆமந்திரமெவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே'). நூலில் பல வடமொழிச் சொற்களும் இடம்பெறுகின்றன. நூலில் கூறப்பட்டுள்ள் நீதிகளில் சில

  • நல்லோர்கள்‌ எங்கே பிறந்தாலும்‌ என்‌(1)
  • சத்தியத்தை வெல்லாது அசத்தியம்‌53)
  • நலிந்தாநலும்‌ உத்தமர்பால்‌ நற்குணமே தோன்றும்‌ (64)
  • கலை கற்றோக்கு அழகு கருணை (66)
  • கல்வி நேசர்க்கு இல்லை சுகமும்‌ நித்திரையும்‌(73)

நீதி வெண்பாவில் பின்வரும் கதைகளும் இடம் பெறுகின்றன

  • வேதியனைக்‌ காத்த வேடன்‌ கதை (3)
  • வேந்தனைக்‌ குரங்கு கெரன்ற கதை (3)
  • கீரிப்பிள்ளையைப்‌ பார்ப்பனத்தி கெரன்ற கதை (16)
  • ஏரண்ட மாமுனி சோழனோடு நீரில்‌ வீழ்ந்திறந்த கதை (67)
  • காக்கைக்கு இடம்கொடுத்துத்‌ துன்புற்ற அன்னத்தின்‌ கதை (74)

மொழியாக்கம்

நீதி வெண்பாவின் கருத்துக்களால் கவரப்பட்ட சீகன்பால்க் இந்நூலை ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்தார். டி.பி. கிருஷ்ணசாமி, க.ந. சொக்கலிங்கம்‌ முதலியோரின்‌ ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன்‌ நீதிவெண்பா வெளிவந்தது. முனைவர் ராமன் நடத்திய 'The scholar miscellanist' எனும் மாத இதழில்‌ “நீதிவெண்பா” மூலமும்‌ அ. தட்சிணாமூர்த்தியின் ஆங்கில மொழியாக்கமும்‌ தொடர்ந்து வெளிவந்தன (2002).

பாடல் நடை

தீயவரும் பாம்பும்

துர்ச்சனரும் பாம்புந் துலையொக்கி னும்பாம்பு
துர்ச்சனரை ஒக்குமோ தோகையே! - துர்ச்சனர்தாம்
எந்தவிதத் தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தா லாமே வசம். 19

பிறிதோரிடத்தில் சிறப்பு பெறுபவை

ஆனை மருப்பும் அருங்கவரி மான்மயிருங்
கான வரியுகிரும் கற்றோரும் - மானே!
பிறந்தவிடத் தன்றிப் பிறிதொரு தேசத்தே
செறிந்தவிடத் தன்றோ சிறப்பு. 27

உசாத்துணை


✅Finalised Page