நியாயசூத்ரம்
நியாயசூத்ரம் (பொமு 200 - 400) (ந்யாய சூத்ரம், நியாய சூத்திரம்) இந்து தத்துவ மரபான நியாயவியலின் முதன்மைநூல். கௌதமரால் இயற்றப்பட்டது. இந்திய தர்க்கவியல் என நியாயம் அழைக்கப்படுகிறது. நியாய சூத்ரம் தர்க்கவியலை வெவ்வேறு வரையறைகளுடன் விளக்குகிறது.
தரிசனம்
நியாயம் இந்து மரபின் ஆறு தரிசனங்களான சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்சம், உத்தரமீமாம்சம் (வேதாந்தம்) ஆகியனற்றில் ஒன்று. இதன் பிரபஞ்சக் கொள்கையானது வைசேஷிகத்துக்கு நெருக்கமானது. ஆகவே பிற்காலத்தில் இது வைசேஷிகத்தின் துணைத் தரிசனமாக அறியப்பட்டது. நியாயவைசேஷிகம் என்று சேர்த்தே சொல்லப்பட்டது. பிற்கால அறிஞர்கள் இரண்டையும் சேர்த்தே உரையெழுதி விவாதித்துள்ளனர்.
ஆசிரியர்
நியாயவியலின் முதலாசிரியர் கௌதமர். இவர் அக்ஷபாத கௌதமர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய நூல் நியாயசூத்திரம். இந்நூல் தொன்மையான நூல் என தொடக்ககால பௌத்த, சமண அறிஞர்களால் குறிப்பிடப்படுவதிலிருந்து இதன் காலம் பொமு 200 க்கு முன் பொமு 400 வரையில் இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. நியாயசூத்திரம் தொடர்ச்சியாக மேலும் பாடல்கள் சேர்க்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
நூல் அமைப்பு
சூத்ரம் என்னும் யாப்பில் இந்நூல் அமைந்துள்ளது. சுருக்கமான வரையறைகளாக (தேற்றம்) அமைவதே சூத்ரம். சூத்ரம் என்றால் நூல். ஏடுகளைக் கட்டிவைக்கும் நூலை குறியீடாகக் குறிக்கிறது. அடையாளப்படுத்தும் கோடு என்ற பொருளும் உண்டு.
நியாயசூத்ரம் ஐந்து நூல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நூலும் இரண்டு அத்தியாயங்கள் கொண்டது. இந்நூல் ஆக்னிகா எனப்படும் அன்றாடப் பாடத்திட்டம் என்னும் வடிவில் பிரிக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர் கருதுகிறார்கள். பிரகரணம் என்னும் தலைப்புகளாக இது தன் பேசுபொருளை வரையறை செய்துகொண்டுள்ளது.
இந்நூல் உரையாசிரியர்களால் சிறு வேறுபாடுகளுடனும் தொகுக்கப்பட்டுள்ளது. நியாய சூத்ரங்களுக்கு பல ஏட்டு வடிவங்கள் கிடைத்துள்ளன.
உரைகள்
நியாயசூத்திரம் தொடர்ச்சியாக உரைகள் எழுதப்பட்டு பயிலப்பட்ட நூல். கீழ்க்கண்ட நூல்கள் முக்கியமானவை என கருதப்படுகின்றன.
- வாத்ஸாயனர், வாத்ஸாயன பாஷ்யம் - பொயு 5ம் நூற்றாண்டு
- உத்யோதகரர், நியாய வார்த்திகம் - பொயு 6 ம் நூற்றாண்டு
- பாவிவிக்தர், நியாய பாஷ்ய டீகா - பொயு 6ம் நூற்றாண்டு
- அவித்தகர்ணர், நியாய பாஷ்ய டீகா - பொயு 7ம் நூற்றாண்டு
- வாசஸ்பதி மிஸ்ரர், நியாயசூசிநிபந்தா & நியாயவார்த்திக தாத்பரிய டீகா - பொயு 8-9ம் நூற்றாண்டு
- ஃபாசர்வஜ்னர், நியாய பூஷ்ணம் - பொயு 9ம் நூற்றாண்டு
- ஜயந்தபட்டர், நியாய மஞ்சரி - பொயு 9ம் நூற்றாண்டு
- திரிலோசனர், நியாய பிரகிர்ணிகா - பொயும 10ம் நூற்றாண்டு
- ஶ்ரீதரர், நியாய கந்தளி - பொயு 10ம் நூற்றாண்டு
- உதயணர், நியாயகுசுமாஞ்சலி - பொயு 975 - 1050
- காங்கேசர், தத்வசிந்தாமணி - பொயு 13ம் நூற்றாண்டு
பொருளடக்கம்
முதல்நூல்
இதன் முதல் அத்தியாயத்தில் 41 சூத்திரங்கள் உள்ளன. இந்நூலின் பேசுபொருள், சரியான அறிவுக்கான நான்கு வழிமுறைகள், விவாதத்தின் இயல்பு, சரியான ஆதாரம் என்பதன் வழிமுறைகளும் இயல்புகளும் பேசப்படுகின்றன.
இரண்டாவது அத்தியாயத்தில் 20 சூத்திரங்கள் உள்ளன. எதிரெதிர் கருத்துக்களை எப்படி ஆராய்வது, விவாதத்தின் ஐந்து நிலை கொள்கை, முரண்பாடுகளுக்கு இடமில்லாத சரியான முடிவைச் சென்றடைதல், தர்க்கபூர்வமாக ஆராயும் வழிமுறைகளிலுள்ள பிழைகள், அர்த்தமில்லா விவாதங்களும் அவற்றைக் களையும் முறையும்.
இரண்டாவது நூல்
இந்நூலின் முதல் அத்தியாயத்தில் 69 சூத்திரங்கள். ஒரு கொள்கைமேல் ஐயம் கிளப்புவது. அறிவுக் கூறுகளை ஆராய்வது. அறிதல், முடிவுகளை நோக்கிச் செல்லுதல், ஒப்புமை ஆகியவை எங்கெல்லாம் நம்பத்தக்கவை ஆகின்றன, எங்கெல்லாம் அவை பிழையாகின்றன. ஒரு மூதாதையர் கூற்றை எப்படி ஏற்பது அல்லது மறுப்பது. வேதங்களின் நம்பகத்தன்மை. வேதங்களை புரிந்துகொள்வது.
இந்நூலின் இரண்டாம் பகுதி 71 சூத்திரங்கள் கொண்டது. அறிவின் கருவிகள் நான்கு. முன்முடிவுகளால் வரும் புரிதல் பிழைகள், சுருதிவாதம் பற்றிய விளக்கங்கள். சொற்களை பொருள் கொள்வது குறித்த விளக்கங்கள்.
மூன்றாவது நூல்
இதன் முதல் பகுதியில் 73 பாடல்கள் உள்ளன. உடல், புலன்கள் பற்றிய விவரணைகளும் அவை அறிதலில் வகிக்கும் பங்கும் பேசப்படுகின்றன. ஆத்மா ஒரு புலன் அல்ல, ஓர் உள்ளுறுப்பும் அல்ல என விளக்கப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் 72 பாடல்கள் உள்ளன. ஆத்மா மற்றும் தன்னிலை பற்றிய கொள்கைகள் பேசப்படுகின்றன. ஆத்மா அல்லது தன்னிலையால் உருவாக்கப்படும் முடிவுகள் எப்படி சார்புநிலை கொண்டவை என வரையறை செய்யப்படுகிறது. கர்மக்கொள்கை பேசப்படுகிறது.
நான்காவது நூல்
இதன் முதல் பகுதியில் 68 பாடல்கள் உள்ளன. வாதங்களிலுள்ள குறைபாடுகள் (தோஷங்கள்) விளக்கப்படுகின்றன. அனைத்துக்கும் காரணமும் விளைவும் உண்டு என்னும் கொள்கை பேசப்படுகிறது. எவை நிரந்தரமானவை, எவை தற்காலிகமானவை என பேசப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் 50 பாடல்கள் உள்ளன. தர்க்கப்பிழைகளை (தோஷங்களை) களைவதற்கான அறிவு. முழுமையாகவும் பகுதிகளாகவும் அறிவை விரித்துக்கொள்ளுதல். புறவுலகம் உண்மையான இருப்பே என்றும் அவை அளிக்கும் இருத்தல் தோற்றங்கள் மெய்யானவையே என்றும் பேசுகிறது. மாயாவாதத்தை நிராகரிக்கிறது.
ஐந்தாவது நூல்
இதன் முதல் பகுதியில் 43 பாடல்கள் உள்ளன. தர்க்கத்தை விரிவாக்குதலில் உள்ள பிழைகள், சரியான வழிமுறைகள் பேசப்படுகின்றன.
இரண்டாம் பகுதியில் 24 பாடல்கள் உள்ளன. இவை வாதத்தில் தோல்வி நிகழும் 22 புள்ளிகளை (நிக்ரகஸ்தானம்) விவரிக்கின்றன.
கொள்கைகள்
நியாய சூத்ரம் ஒரு முன்னுதாரணமான விவாதம் எப்படி நிகழவேண்டும் என வகுத்துரைக்கிறது. அனைவருக்கும் பொதுவாக ஓர் உண்மையை எப்படி நிறுவுவது என்பதுதான் இந்த நெறிமுறைகளின் நோக்கம். சரியான அறிதல் துயரத்தில் இருந்து விடுவிக்கும், பிழையான அறிதல் அறியாமையையும் துயரையும் அளிக்கும். சரியான விவாதம் என்பது உண்மையை புறவயமாக அறுதியிட்டுக் கொள்வதற்கான வழிமுறை. சரியான உண்மை என்பது இந்த தர்க்க முறைப்படி நிறுவப்பட்டதாகவே இருக்கும்.
விவாதத்தின் வழிமுறைகள்
நியாயசூத்திரம் விவாதத்திற்கு 16 வகையான படிநிலைகளை சரியான அறிவை அடைவதற்கான வழிமுறைகளாகப் பரிந்துரைக்கிறது (நியாயசூத்திரம் 1-1-1)
- பிரமாணம்: (அறிமுறை) அறிதலுக்கும், அறிந்தவற்றை பகிர்வதற்கும் உரிய அனைவருக்கும் பொதுவான வழிமுறைகளே பிரமாணங்கள்.
- பிரமேயம் (பேசுபொருள்): எதைப் பற்றி அறியவும் வரையறை செய்யவும் விவாதிக்கவும் விரும்புகிறோமோ அது. பேசுபொருளை விட்டு விலகாமல் நிகழும் தேடலும் விவாதமுமே பொருள் கொண்டவை.
- சம்சயம் (ஐயம்): ஒரு கருத்தை அடைந்ததுமே அதைப் பற்றிய ஐயத்தை அடைய வேண்டும் என்பது அறிவின் அடிப்படை. ஆனால் தெளிவடையும் நோக்குடன், திட்டவட்டமாக அதை நோக்கி கேள்விகளை எழுப்பிக் கொள்வதே ஐயம் ஆகும். ஐயம் அறிவிலிருந்து எழவேண்டும். அந்த அறிவு முன்னறிவோ, வேறு துறை சார்ந்த அறிவோ, நடைமுறை சார்ந்த அறிவோ ஆக இருக்கலாம்.
- பிரயோஜனம்: (பயன்) ஓர் அறிதலை, அதன்மீதான உசாவலை நிகழ்த்திக் கொள்வதன் பயன் அதன் எல்லா தரப்பினரிடமும் இருந்தாகவேண்டும்
- திருஷ்டாந்தம்: (எடுத்துக்காட்டு) புறவயமாகக் காட்டப்படும் சான்று
- சித்தாந்தம்: ( கொள்கை) ஒரு புரிதல் வழியாக எய்தப்படும் கொள்கை. சித்திக்கப்பட்ட ஓர் அறிவு. இன்னும் நிறுவப்படாத, ஆனால் நிறுவும் பொருட்டு முன்வைக்கப்பட்ட ஒரு கருத்து
- அவயவம்: (பிரிவு) அடையப்பட்ட முடிவின் வெவ்வேறு உட்பிரிவுகளும் அவற்றுக்கிடையேயான உறவும்.
- தர்க்கம்: விவாதிப்பதற்கான நெறிமுறைகள், செயல்முறைகள். இது ஹேதுவனுமானம் எனப்படுகிறது.
- நிர்ணயம்: (முடிவு) தர்க்கரீதியாக வந்தடைந்த நிலைபாடு
- வாதம்: ஒரு சித்தாந்தத்தின் மீது தர்க்க அடிப்படையில் நிகழும் விவாதம்
- ஜல்பம்: (பொய்மறுப்பு) ஒரு சித்தாந்தத்தை ஒரு வாதத்தில் தர்க்க நெறிகளின்படி அன்றி பொத்தாம் பொதுவாக மறுத்தல். ஒரு வாதப்பிழை இது.
- விதண்டம்: (வீண்வாதம்) பிரமாணம், பிரமேயம் இரண்டும் இல்லாமல் நிகழும் விவாதம். தர்க்கமுறையை கைக்கொள்ளாமல் நிகழும் விவாதம்.
- ஹேத்வாபாசம்: (பிழைவாதம்) விவாதிப்பவரின் தவறான பார்வையாலோ, அல்லது விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டமையாலோ உருவாகும் தர்க்கப்பிழைகள். இவற்றை தர்க்கத்தில் சுட்டிக்காட்டி நிறுவவேண்டும். ஹேதுவனுமானத்தை பிழைசுட்டிக்காட்டி மறுத்தல்.
- சல: (அற்பவாதம்) பொருளற்ற அற்பமான வாதங்கள். வெற்றுத்தாக்குதல்கள், கிண்டல்கள்.
- ஜதி: (கூடுதல் வாதம்) ஒரு வாதத்தை நிறுவும்பொருட்டு இணைத்துக்கொள்ளப்படும் கூடுதல் கருத்துக்கள்.
- நிக்ரஹஸ்தானம்: (வாதமுடிவுப்புள்ளி) ஒரு வாதத்தை அறுதியாக வென்று முடிக்கும் புள்ளிகள். இப்புள்ளிகளை அடைவதே வாதத்தை வெற்றியாக்குகிறது.
நியாயம் யதார்த்தம் (உண்மை) என்று ஒன்றையே அறியப்படவேண்டியதாகச் சொல்கிறது. அது தர்க்கம் வழியாக மட்டுமே அறியப்படும்.
அறிமுறைகள்
நியாயசூத்திரங்கள் சில அடிப்படைகளை அறிவுக்கு வரையறுக்கின்றன. நியாயவியல் அறிஞரான ரிச்சர்ட் கார்பே சில நியாயவியல் கூற்றுக்களை அடிப்படை வரிகளாக எடுத்தளிக்கிறார்
- எல்லா அறிவும் தன்னியல்பில் மதிப்புள்ளவை அல்ல.
- நிரூபிக்கப்படும் வரை பெரும்பாலும் எல்லா அறிவுமே பயனற்றவையே.
- மனிதர்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும் உண்மை இருந்துகொண்டுதான் இருக்கும்.
ஆனால் நியாயவியல் சில தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட அறிவையும் ஏற்றுக்கொள்கிறது. சில நடைமுறை அறிவுகள் தன்னளவிலேயே வெளிப்படையானவை. சூரியன் ஒளியை கொண்டுவருகிறது, நீர் விடாய் தீர்க்கிறது போன்றவை. சில அறிதல்கள் அகவயமானவை, நிரூபிக்கமுடியாதவை, ஆனால் அனைவரும் அறிந்தவை. தன்னுணர்வு, ஆத்மா போன்றவற்றின் இருப்பு உதாரணம்.
அறியத்தக்கவை நான்கு பிரமாணங்கள் (அறிமுறைகள்) வழியாக அறியப்படவேண்டும் என நியாயவியல் சொல்கிறது. அவை பிரத்யக்ஷம் (புலனறிதல்), அனுமானம் (ஊகம்), சுருதி அல்லது சப்தம் (முன்னறிதல்) ஆகியவற்றுடன் உபமானம் (ஒப்புமை) (பிரமாணங்கள்)
உபமானப்பிரமாணம்
நியாயவியலின் தனிக்கொடை என்பது உபமானத்தை கூடுதல் பிரமாணமாகச் சேர்த்துக்கொண்டதாகும். பிறமரபுகளில் அனுபவ அறிதல் (பிரத்யக்ஷம்) ஊகம் (அனுமானம்) சுருதி (முன்னறிவு) என மூன்று பிரமாணங்களே உள்ளன. நியாயவியலில் உபமானம் (உவமை) என்ற நான்காவது பிரமாணம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அருவமான கருத்துக்கள், அகவயமான உணர்வுகளை உவமைகள் வழியாகவே அறியவும், வெளிப்படுத்தவும் முடியும். அதுவும் அறிதல்முறையே என நியாயசூத்ரம் வகுக்கிறது.
பேசுபொருள்
நியாயவியல் பேசுபொருளாக (பிரமேயம்) இந்த பிரபஞ்சத்தையே எடுத்துக் கொள்கிறது. நியாயவியலின்படி துக்கம் (மானுட துன்பம்) என்பது அறியாமையால் வருவதாகும். ஒன்றை அறிந்து வரையறை செய்துகொண்டு அதன்படி நாம் நம்மை அமைத்துக் கொள்வதே மனிதனுக்குச் சாத்தியமான விடுதலை என்பது. அவ்விடுதலையை அளிக்கும் பொருட்டுதான் அறிதல் நிகழ்கிறது. அறிதலுக்குப் பாத்திரமாகும் எதுவும் பேசுபொருளே. எது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதோ, எது அறியமுடியாததோ அது அறிபொருளாக ஆவதில்லை.
ஐயம்
நியாயவியல் ஐயம் (சம்சயம்) என்பதை அறிதலின் வழிமுறைகளில் ஒன்றாக முன்வைக்கிறது. இது எதையும் அறிந்துவிட முடியாது, எதையும் நிரூபிக்கமுடியாது என்று சொல்லும் சார்வாகக் கொள்கைக்கும், எல்லாவற்றையும் ஐயத்திற்குரியதாகவே அணுகும் சமணத்தின் சியாத் வாதத்துக்கும் எதிரானது. நியாயவியலில் உள்ள ஐயம் என்பது முழுமையாக அறிந்துகொள்ளும்பொருட்டும், அறிந்ததை தர்க்கபூர்வமாக நிறுவிக்கொள்ளும் பொருட்டும் எழுப்பப்படுவதாகும். ஐயம் என்பது அறிதலில் உள்ள பிழையோ, அறிவின் குறைபாடோ அல்ல. இயல்பாகவே அறிவு செயல்படும் விதம் அதுதான். ஆனால் ஐயம் என்பது ஓர் அறிதல் அல்ல. அது அறிதலின் தொடக்கமும் வழியும் மட்டுமே. ஆகவே ஐயம் ஓரு நிலைபாடாக ஆகமுடியாது.
காரியகாரணவாதம்
நியாயவியல் காரிய-காரண உறவை திட்டவட்டமாக முன்வைக்கிறது. தர்க்கம் என்பது காரணத்தையும் காரியத்தையும் இணைப்பதுதான். காரணம் (விளைவை உருவாக்குவது) காரியம் (விளைவு) இரண்டும் ஒன்றுடனொன்று புறவயமாக விளக்கமளிக்கும் தன்மையுடன் இணைந்துள்ளன என்று நியாயவியல் கூறுகிறது. காரியத்தில் இருந்து காரணம் உருவாவது இயல்பானது, தவிர்க்கமுடியாதது, அறியத்தக்கதும்கூட. காரியம் அறியத்தக்கது என்றால் காரணமும் அறியத்தக்கதே. அறிவுக்கு அப்பாற்பட்ட காரணம், இயற்கையை மீறிய காரணம் இருக்கவியலாது. ஒரு பொருளுக்கான காரணம் இன்னொரு பொருளாகவே இருக்கமுடியும், ஒரு கருத்தாக இருக்கமுடியாது. ஒரு காரியத்தை வரையறுத்துச் சொல்லமுடிந்தால் அதன் காரணம் அல்லது காரணங்களையும் வரையறுத்துச் சொல்லமுடியும்.
நியாயசூத்ரம் காரியங்களுக்கு (பொருட்களுக்கு) காரணமாக அமைவன மூன்று வகை என வரையறை செய்கிறது.
- சமவாயி காரணம் (பொருளிணைவுக் காரணம்) சமவாயம் என்பது நியாயவைசேஷிகத்தின்படி அணுக்களின் இணைவால் உருவாகும் நிலையான பொருண்மைத்தன்மை. அதன் வழியாக உருவாகும் பொருட்கள் இன்னொரு பொருளுக்கு காரணமாகின்றன. உதாரணம், களிமண் பானை ஆவது. இது உபதானகாரணம் என பிற தரிசனங்களில் சொல்லப்படுகிறது. அன்னம பட்டரின் தர்க்கசம்கிரகம் சமவாயி காரணம் என்பது காரணப்பொருளில் இருந்தே காரியம் உருவாவது என வரையறை செய்கிறார்.
- அசமவாயி காரணம் (பொருளிணைவின்மைக் காரணம்) ஒரு பொருள் இன்னொரு பொருள் உருவாகக் காரணமாக அமைவது, ஆனால் அந்த முதற்பொருளே இன்னொரு பொருளாக ஆகாமலும் இருப்பது. உதாரணம், பானையை தீ சுட்டு பானையாக ஆக்குவது. பானை உருவாக தீயும் காரணம். ஆனால் பானைக்கு தீ எவ்வகையிலும் தொடர்புடையதல்ல. சிவாதித்யரின் சப்தபதார்த்தி என்னும் நியாயநூல் அசமவாயி காரணத்திற்கு பொருண்மைவிளைவை உருவாக்கும் ஆற்றல் இருக்கும் என்று கூறுகிறது
- நிமித்த காரணம் (தூண்டுதல் காரணம்) ஒரு பொருண்மைநிகழ்வுக்கு ஒரு பொருண்மை அல்லது பொருண்மைவிசை காரணமாக அமைவது. உதாரணம், பானையை களிமண்ணில் இருந்து உருவாக்கும் குயவன் நிமித்த காரணம். களிமண் பானையாக ஆகிறது. ஆனால் குயவன் அதை நிகழ்த்துபவனாக , தூண்டுதல்காரணமாக இருக்கிறான். பானையில் குயவனின் அம்சம் ஏதும் இல்லை. அவனுடைய உத்தேசம் மட்டுமே உள்ளது. இது சககாரி காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இது இரண்டு வகை. சாமானியம், விசேஷம். சாமானியம் என்பது பொதுவான நிமித்த காரணம். அனைத்துக்குமானது. அன்னம பட்டரின் தர்க்கசம்கிரகம் தெய்வம், வெளி (திக்), காலம் போன்றவை. விசேஷ காரணங்கள் முடிவற்றவை என்று கூறுகிறது.
காரணம் என்பது திரவியம், குணம், கர்மம் ஆகிய மூன்றில் இருந்து உருவாகும். பொருள் இன்னொரு பொருளை உருவாக்கும். (பால் தயிரை உருவாக்குகிறது). பொருளின் குணம் இன்னொரு பொருளின் குணத்தை உருவாக்கும். (பாலின் வெண்மையே தயிரின் வெண்மை). பொருட்களில் நிகழும் செயல் வழியாகவும் பொருளின் குணம் உருவாகலாம். (தயிர் கடையப்படுகையில் வெண்ணை உருவாகிறது)
பிழைவாதம்
நியாய சூத்திரத்தின்படி காரணகாரிய விளக்கம் ஹேதுவனுமானம் (காரணவிளக்கம்) எனப்படுகிறது. அதில் உருவாகும் தவறு அல்லது பிழைவாதம் (ஹேத்வாபாசம்) எனப்படுகிறது. ஆனால் ஹேத்வாபாசம் என்பது அறியாமை அல்ல, அறிவின் ஒரு நிலைமட்டுமே. பாஸம் என்றால் தோற்றம். ஆபாசம் என்றால் பிழைத்தோற்றம். ஹேது ஆபாஸம் என்றால் காரணத்தை கண்டறிவதிலுள்ள பிழை. உண்மையில் இருந்து வெவ்வேறு வகையில் விலகிய புரிதல்களே பிழைவாதத்தை உருவாக்குகின்றன. பிழை என்பது பார்ப்பவரில் உள்ளதே ஒழிய பார்க்கப்படுவதில் பிழை இல்லை. உண்மையை தேடுபவன் அனுபவம், ஆராய்ச்சி வழியாக தன் பிழைகளைக் களைந்து உண்மையை நோக்கி தன்னை நகர்த்திக்கொள்ள வேண்டும்.
ஐந்து வகை பிழைவாதங்களை நியாய சூத்திரம் பட்டியலிடுகிறது
- அசித்தா அல்லது சத்யாசமா (தர்க்கத்திலுள்ள நடு இணைப்பு நிரூபிக்கப்படாததாக இருப்பது) உதாரணம்: 'ஆகாயத்தாமரை மணமுள்ளது. ஏனென்றால் அது ஒரு தாமரை. தாமரைக்கு மணமுண்டு.' இதில் நடுவே உள்ள இணைப்பு வரி நிரூபிக்கப்படவில்லை.
- சவ்யாபிசார: (தர்க்கத்திலுள்ள இணைப்பு ஒழுங்கற்றது) உதாரணம்: 'ஓசை நிரந்தரமானது. ஏனென்றால் அதைக் கேட்கமுடிகிறது. கேட்கமுடிவது நிரந்தரமானது.'
- சத்பிரதிபக்ஷ: ( தர்க்க இணைப்பு அதிலுள்ள இன்னொரு எதிர்மறைக் கூற்றால் மறுக்கப்படுகிறது) உதாரணம்: 'ஓசை அழிவற்றது. ஏனென்றால் அதை கேட்கமுடிகிறது. ஓசை நிரந்தரமற்றது. ஏனென்றால் அதைக் கேட்கமுடிகிறது.'
- பதிதா: (தர்க்க இணைப்பு அப்பட்டமான பிழையாக இருப்பது) உதாரணம்: 'தீ குளிர்வது. ஏனென்றால் அது ஓரு பொருள்.'
- விருத்த: (தர்க்க இணைப்பு முரண்பாடாக இருப்பது) உதாரணம்: 'ஓசை நிரந்தரமானது. ஏனென்றால் அது உருவாக்கப்படுவது.'
விவாதத்தின் நெறிமுறைகள்
தர்க்கம் என்று நியாயவியல் சொல்லும் விவாதத்தின் நெறிகள் ஐந்து அவயவங்கள் (படிநிலைகள்) அமைந்தவை
- பிரதிக்ஞா: (முதல் ஊகம்) . ஒன்றை அறிந்துகொண்டு நாம் அடையும் தொடக்கநிலை புரிதல். முதல் உறுதிப்பாடு. உதாரணம்: 'மலையில் தீ உள்ளது'.
- ஹேது: (காரணம்) நாம் அறிந்த முதல் உறுதிப்பாடுக்கு நாம் கண்டடையும் காரணங்கள். உதாரணம்: 'ஏனென்றால் அங்கே புகை தெரிகிறது'.
- உதாஹரணம்: (பொதுமுடிவு, ஈவுக்கருத்து) நாம் அந்தக் காரணத்தில் இருந்து அடையும் பொதுவான கருத்து. உதாரணம். 'மலையில் நெருப்பு இருந்தால் புகை எழும்'. முன்பு நாம் அறிந்தவற்றில் இருந்து இதை நாம் வகுத்து வைத்திருக்கிறோம். 'அடுப்பில் நெருப்பு எரிகையில் புகை வருகிறது'.
- உபநயம்: (பிரயோகித்தல்) அந்த பொதுமுடிவை எல்லா அனுபவங்களுக்கும் போடுப்பார்த்தல். உதாரணம்: 'இந்த மலையில் புகை உள்ளது. அது ஏன்? அங்கே தீ இருக்க வாய்ப்புண்டா? காட்டுத்தீ இருக்கலாம்'.
- நிகமனம்: (முடிவுக்கு வருதல்) பொதுமுடிவை கொண்டு தனி அனுபவங்களை வகுத்தறிதல். உதாரணம்: 'இந்த மலையில் புகை உள்ளது. ஆகவே அங்கே நெருப்பு இருக்கிறது.'
உசாத்துணை
- Nyaya Dharsana Dharm
- https://testbook.com/ugc-net-paper-1/hetvabhasa-fallacies-of-inference
- Asamavaayi karaNa- wisdomlimb
- SamavayikaraNa- Wisdomlimb
- தர்க்கசம்கிரகம் இணைய நூலகம்
- NimithakaraNa- Wisdimlimb
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Apr-2025, 05:42:47 IST