under review

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்

From Tamil Wiki

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார், சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் 382-ம் பாடலாக இடம் பெற்றுள்ளது.

பெயர்க்காரணம்

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனாரின் இயற்பெயரை அறிய இயலவில்லை. நிகண்டு நூல் ஒன்றை எழுதியதால் ’நிகண்டனார்’ என்று அழைக்கப்பட்டார் என்பதும், மான் கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் (கைத்தடியாக) கொண்டமையால் கலைக்கோட்டுத் தண்டனார் என்ற பெயர் பெற்றார் என்பதும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயரின் கருத்தாகும். களவியலுரைக்காரரும், 'இடுகுறியாற் பெயர்பெற்றன, நிகண்டு, நூல், கலைக்கோட்டுத்தண்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், மயிலை சீனி. வேங்கடசாமி இதனை மறுக்கிறார்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் - தொகுதி - 1
நிகண்டனார் - கலைக்கோட்டுத் தண்டனார்

'நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்' என்ற பெயர்க் காரணம் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமியின் கருத்து வேறாக உள்ளது. அவர், "நிகண்டு நூல் செய்தவரை 'நிகண்டனார்’ என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. அவர் நிகண்டு நூல் செய்திருந்தால் 'நிகண்டாசிரியர்’ என்றே கூறியிருப்பார்கள்; 'நிகண்டனார்’ என்று கூறியிருக்க மாட்டார்கள்" என்கிறார்.

பண்டைக் காலச் சமணர்களில் 'நிகண்டவாதிகள்' என்று ஒரு பிரிவினர் இருந்தனர் என்றும், மணிமேகலையில், 27-வது 'சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை’யில் அவர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது என்றும் சீனி. வேங்கடசாமி தெரிவிக்கிறார். 'நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்’ என்னும் பெயருக்குச் 'சமண மதத்தைச் சேர்ந்த நிகண்டவாதி கலைக் கோட்டுத்தண்டனார்’ என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமுடையது" என்பது மயிலை சீனி. வேங்கடசாமியின் கருத்தாகும்.

நற்றிணைப் பாடல்

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் எழுதிய பாடல், 382-ஆவது பாடலாக நற்றிணையில் இடம் பெற்றுள்ளது. நற்றிணைக்கு உரையை பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் எழுதியுள்ளார்.

கானல் மாலைக் கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி
ஆர் உயிர் அழிவதுஆயினும்-நேரிழை
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே

தணத்தல் என்பது பிரிந்திருத்தலைக் குறிக்கும். மணத்தல் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் தணத்தல். தலைவன் தலைவியைச் சிறிது காலம் பிரிந்திருத்தல் ஒருவழித் தணத்தல் ஆகும். பொருள்வயிற் பிரிதல் பாலைத் திணைக்கு மட்டும் உரியது. ஒருவழித் தணத்தல் எல்லாத்திணைகளிலும் நிகழும்.

பாடல் விளக்கம்: தலைவி தோழியிடம், "பறவைகள் கூட்டை விட்டுப் பிரிந்து இரை தேடச் செல்லும். மீண்டும் தன் கூட்டுக்கே திரும்பிவிடும். அதுபோலத்தான் அவர் நம்மைப் பிரிந்திருக்கிறார். விரைவில் திரும்பி வருவார். அவரின் தற்காலிகப் பிரிவை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவருக்குப் பழி வரும்" என்கிறாள்.

உசாத்துணை


✅Finalised Page