நாரணோ ஜெயராமன்
- ஜெயராமன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜெயராமன் (பெயர் பட்டியல்)
நாரணோ ஜெயராமன் (அக்டோபர் 19, 1945- 24 நவம்பர் 2022) எழுத்தாளர். சிறுகதையாசிரியர். கவிஞர். தமிழ் நவீனக் கவிதையின் தொடக்க காலத்தில் செயல்பட்டவர்களில் ஒருவர்.
பிறப்பு, கல்வி
நாரணோ ஜெயராமன் அக்டோபர் 19, 1945 அன்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சாண்டார் கோயில் எனப்படும் உத்தமர் கோயிலில் பிறந்தார். தந்தை நா. நாராயணசாமி, அன்னை நா. ஜெயலட்சுமி. ஏனங்குடி, பேரளம், திருவையாறு, கும்பகோணம் ஆகிய ஊர்களில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஜூன் 14,1979 அன்று ஜெயம் என்பவரை மணந்து கொண்டார். மகன்கள் கார்த்திக் ஜெயராமன், கணேஷ் ஜெயராமன்.
நாரணோ ஜெயராமன் தான் படித்த சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியிலேயே 1965-ல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் தத்துவம் படித்தார். தத்துவம், வேதியியல் என்று இரண்டு துறைகளிலும் விரிவுரையாளராக இருந்தார். 2003-ல் தத்துவத்துறை முதுநிலை விரிவுரையாளராக ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
நாரணோ ஜெயராமன் பதினோராம் வகுப்பு படிக்கும் போது சிறுகதைகள் எழுதிப்பார்த்துள்ளார். அவருக்கு தீபம் இதழ் ஆசிரியர் நா. பார்த்தசாரதி, இலக்கியத்தில் முதல் ஈர்ப்பை செலுத்தியவர்.
'கசடதபற' இதழ் தொடங்கப்பட்டபோது இயற்கை' எனும் சிறுகவிதை கசடதபறவில் வெளிவந்தது. 1972-ம் ஆண்டு ஜனவரியில் கசடதபற இதழில் வெளியான 'வெளியே ஒருவன்' சிறுகதை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனை தேர்வு செய்தது. 1976-ல் வெளிவந்த சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் சிறுகதைத் தொகுப்பிற்கு நாரணோ ஜெயராமன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது.
1976- ல் பிரமிள் எழுதிய முன்னுரையுடன் வேலி மீறிய கிளை என்ற கவிதைத் தொகுப்பு க்ரியா வெளியீடாக வந்தது. தொடர்ந்து நா. ஜெயராமன் என்ற பெயரில் கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் ஆகிய இதழில்களில் சிறுகதைகள் எழுதினார்.அஃக் இதழில் கவிதைகள் எழுதினார்.
தனது வித்யுத் பப்ளிகேஷன்ஸ் மூலகமாக அறம், ஆன்மிகம், கல்வி இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்களை வெளியிட்டார். நாரணோ ஜெயராமனின் எழுத்து வாழ்க்கை எழுபதுகளில் நின்று போனது.
'நாரணோ ஜெயராமன் கவிதைகள்' என்று டிஸ்கவரி புக் பேலஸ், 2019-ல் நாரணோ ஜெயராமன் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டது.
நாரணோ ஜெயராமனின் 72 -ஆவது வயதில், அழிசி பதிப்பகம் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான வாசிகள் என்ற நூலை 2021-ம் ஆண்டு வெளியிட்டது.
மறைவு
நாரணோ ஜெயராமன் 24 நவம்பர் 2022-ல் மறைந்தார்
இலக்கிய இடம்
நாரணோ ஜெயராமனின் கதைகள் நிகழ்வுகளை வரிசையாக கட்டமைக்காமல், நிஜ வாழ்வில் நடந்துகொண்டிருப்பது போலவே முன்னும் பின்னுமாக நகர்ந்து வாசகனே கதையை உருவாக்கிக்கொள்ளுவதற்கு சாத்தியமான கதைகள். வாசகர்கள் தங்கள் வாசிப்பனுபம் வாழ்வனுபத்துடன் சேர்த்து பயணிக்க நிறைய இடமளிப்பவை.
நாரணோ ஜெயராமனின் கவிதைகள் பற்றி பிரமிள் இவ்வாறு குறிப்பிடுகிறார், " ஒதுங்கி நின்று அலட்சியமும் தெளிவும் புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, புரிந்து, கண்டுகொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சாகஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை" (வேலி மீறிய கிளை கவிதை நூல் முன்னுரை)
நவீனத்துவ அழகியல் சிற்றிதழ்களைச் சார்ந்து வெளிப்பட்ட ஒரு காலகட்டத்திற்குரிய படைப்பாளி நாரணோ ஜெயராமன். பெரும்பாலும் தனிமனித அகநிலைகள் சார்ந்த சில தருணங்களை குறிப்புணர்த்த முயல்பவை இவர் கவிதைகளும் கதைகளும்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- வேலி மீறிய கிளை, 1976, க்ரியா பதிப்பகம்
- நாரணோ ஜெயராமன் கவிதைகள், 2019, டிஸ்கவரி புக் பேலஸ்
சிறுகதைத் தொகுப்பு
- வாசிகள்- அழிசி பதிப்பகம்- 2021
உசாத்துணை
- நாரணோ ஜெயராமன் கவிதைகள் - வைத்தீஸ்வரன்
- வேலி மீறிய கிளை-நாரணோ ஜெயராமன் வலைத்தளம்
- நவீன விருட்சம் -நாரணோ ஜெயராமன் கவிதைகள்
- நாரணோ ஜெயராமன் அஞ்சலி சங்கர் ராமசுப்ரமணியன்
- கவிதையும் ரசனையும் அழகியசிங்கர்
- எவரின் பித்ருக்கள் இவர்கள் நாரணோ ஜெயராமன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Nov-2022, 06:01:51 IST