under review

தென்காசி விஸ்வநாதர் ஆலயம்

From Tamil Wiki
தென்காசி இராஜ கோபுர வீதி

காசி விஸ்வநாதர் கோவில், தென்காசி மாவட்டத்தில் சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ளது. விஸ்வநாதர் கோவில் பாண்டிய மன்னன் அரிகேசரி பராக்கிரமனால் பொ.யு. 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழக திராவிடக் கலைப்பாணியில் அமைந்த கோவில் இது. சைவ ஆகமத்தின் பகுதியான காரண ஆகமத்தின் படி கட்டப்பட்டது.

தலபுராணம்

காசி விஸ்வநாதர் சன்னதி vமுகமண்டபம்

தென்காசி தலபுராணம் அழகிய திருச்சிற்றம்பல தேசிகரால் பொ.யு. 1854-ல் இயற்றி அரங்கேற்றப்பட்டது. இந்நூல் பொ.யு. 1876-ல் ஆறுமுக நயனாரால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் பாயிரம் உட்பட மொத்தம் 1928 பாடல்களைக் கொண்டது. மொத்தம் முப்பது படலங்களைக் கொண்டது. சிறப்பு பாயிரம், கடவுள் வாழ்த்து, புராண வரலாறு, சங்கரலிங்கம் பிள்ளையின் சாற்றுக்கவி, புராண கதைகள், கோவில் நிர்மாணிக்கப்பட்ட கதை எனப் பகுதிகளைக் கொண்டது.

பார்க்க: தென்காசி தலபுராணம்

கல்வெட்டு
காசி விஸ்வநாதர் சன்னதியின் முகமண்டபம் தெற்கு பகுதி

தென்காசி கோவிலின் தலபுராணம் விஸ்வநாதர் ஆலயத்திலுள்ள ஒரு தூணில் கல்வெட்டாகக் கிடைத்துள்ளது.[1] கல்வெட்டு கூறும் செய்தி: வடக்கே காசியிலுள்ள விஸ்வநாதரை அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தினமும் தரிசனம் செய்ய விரும்பினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற விஸ்வநாதர் பாண்டியனின் கனவில் தோன்றி அவனிடம் தென்காசியிலேயே கோவில் கட்டும்படி சொன்னார். சிவன் கேட்டுக் கொண்டதன் பெயரில் சக ஆண்டு 1368 வைகாசி திங்கட்கிழமை அன்று கோவிலுக்கு அஸ்திவாரமிடப்பட்டது.

வாய்மொழிக் கதை
மன்மதன் - சிவன் சன்னதி முகமண்டபம்

இதே போல் தென்காசி கோவில் தலபுராணத்தைச் சொல்லும் ஒரு வாய்மொழிக் கதையும் உள்ளது. பராக்கிரம பாண்டியன் விந்தன் கோட்டையைக் கட்டி தென்காசி பகுதியை ஆட்சி செய்து வந்தான். வடகாசியிலுள்ள விஸ்வநாதரை தினமும் தரிசிக்க வேண்டி அதற்கான வழியை அகஸ்தியரிடம் கேட்டான். அகஸ்தியரும் ககன மார்க்கமாகச் (வான் வெளியாக) சென்று சிவனை தரிசிக்கும் குளிகை ஒன்றைக் கொடுத்தார். பாண்டியனும் அதன் படி செய்தான். பாண்டியனின் சிரமத்தைக் கண்ட சிவன் அதனை தீர்க்க வேண்டி அவன் கனவில் தோன்றிக் கூறியபடி பாண்டியனின் கோட்டையிலிருந்து கிளம்பிய சிற்றெறும்புகள் சென்று சேருமிடத்தில் கோவில் எழுப்பினான். அக்கோவில் தென்காசியிலுள்ள சிற்றாற்றின் கரையில் அமைந்தது.

மூலவர், தல விருட்சம், தீர்த்தம்

மதனகோபாலன் - சிவன் சன்னதி முகமண்டபம்

தென்காசி கோவிலின்,

  • மூலவர் - காசி விஸ்வநாதர்[2]
  • தாயார் - உலகம்மை[3]
  • தல விருட்சம் - செண்பக மரம்
  • தீர்த்தம் - காசி தீர்த்தம்

ஆகமம்

இக்கோவில் சைவ ஆகமத்தின் பிரிவான காரண ஆகமப்படி கட்டப்பட்டது.

பார்க்க: சைவ ஆகமங்கள்

தீர்த்தங்கள்

தென்காசி கோவிலில் மொத்தம் ஆறு தீர்த்தங்கள் உள்ளன,

  • ஆனந்த தீர்த்தம்
  • சஹஸ்ரநாம தீர்த்தம்
  • காசித் தீர்த்தம்
  • வயிரவ தீர்த்தம்
  • அன்னபூரணி தீர்த்தம்
  • வடகிழக்கு குளம் ஈசான தீர்த்தம்

கட்டுமானம்

தூண்களுக்கு அடியில் யாளி வரி

தென்காசி விஸ்வநாதர் கோவில் மொத்தம் நாலு ஏக்கர் மூன்று செண்ட் பரப்பளவு கொண்டது. கோவிலைச் சுற்றிலும் 22 அடி உயரமான சுற்றுசுவர் கோட்டைக்குரிய கட்டுமான அமைப்பில் கட்டப்பட்டது. கோவில் தெற்கு வடக்காக 318 அடி அகலமும், கிழக்கு மேற்காக 554 அடி நீளமும் உடையது. கோவில் வளாகத்தில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன. வடக்கு பகுதி விஸ்வநாதர் கோவில், தெற்கு பகுதி உலகம்மையின் கோவில், இரண்டிற்கும் நடுவில் முருகன் கோவில். மூன்று கோவில்களைச் சுற்றியும் பிரகாரங்கள் உண்டு.

தென்காசி கோவிலின் கால்கோள் பொ.யு. 1446-ம் ஆண்டு நவம்பர் 15-ம் நாள் நடந்தது. கோவில்களின் கட்டுமானம் அனைத்தும் பொ.யு. 1602-ல் முடிந்தது. கோவிலின் உட்பகுதிலுள்ள திருஓலக்க மண்டபம் உட்பட சில மண்டபங்களின் வேலைகள் இடைப்பட்ட காலங்களிலும் நடந்திருக்கின்றன.

அமைப்பு

தூணின் கீழ்ப்பகுதி

விஸ்வநாதர் கோவில்

விஸ்வநாதர் கோவில் கருவறை அந்தராளம், அர்த்த மண்டபம், முக மண்டபம், வாத்திய மண்டபம், நந்தி மண்டபம், முக மண்டபம் என்னும் அமைப்புடையது. விஸ்வநாதர் கோவில் கட்டுமானம் பற்றிய செய்திகள் கல்வெட்டில் காணப்படுகின்றன.

முக மண்டபம்

முகப்பு மண்டபம் கல்வெட்டுகளில் குலசேகர மண்டபம் என்றும், தலபுராணங்களில் திருஓலக்க மண்டபம் என்றும் கூறப்படுகிறது. சிற்பங்கள் நிறைந்த பகுதியை சித்திரசபை என்றழைக்கும் பொது வழக்கும் உள்ளது. இம்மண்டபம் 23 தூண்கள் கொண்டது. இதன் இருபுறமும் மேடை போன்ற அமைப்பு உள்ளது. மண்டப முகப்பில் சிறிய துவார பாலகர்கள். இம்மண்டபத்தின் வடக்கு பகுதியிலுள்ள நவக்கிரக சன்னதி பிற்காலத்தில் நிறுவப்பட்டது. மண்டபத்தின் வடக்கு, தெற்கு பக்க எட்டு தூண்களிலும், மேற்குப் பார்த்த தூண்களிலும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

நந்தி மண்டபம்

நந்தி மண்டபத்தின் (கொடிமர மண்டபம்) நுழைவுவாயிலின் தென்புறம் உள்ள அதிகார நந்தி நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். இடது முன் கை அஞ்சலி ஹஸ்தமும் பிற கைகள் யாழ், மழு, தண்டமும் தாங்கி உள்ளன. அதிகார நந்திக்கு அடுத்து தெற்கும், வடக்கும் துவார பாலகர்கள் இருவரும் இரண்டு கைகள் கொண்டு நின்ற கோலம். வடக்கு துவாரபாலகர் ஒரு கை சிம்ம கர்ணமும், ஒரு கை சூசி ஹஸ்தம் காட்டி நிற்கிறார். இவரருகே விஸ்வநாதரின் ஒரு சிறு சன்னதி உள்ளது. தெற்கு துவாரபாலகரும் இரு கைகளுடன் காட்டப்படுகிறார்.

மண்டபத்தின் தெற்கு பக்கம் சாமரம் வீசும் பெண் சிற்பம் உள்ளது. இதே திசையில் வெளியே செண்பகமரம் கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. மண்டபத்தின் வடக்குப் பக்கம் பலா மரமும், அரச மரமும் இணைந்து நிற்கின்றன.

வாத்திய மண்டபம்
கோவில் பிரகாரம்.jpg

வாத்திய மண்டபத்தின் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

மகா மண்டபம்

மகா மண்டபம் (அர்த்த மண்டபம்) பத்து தூண்கள் கொண்டது. கிழக்குப் பகுதியில் தெற்கில் விநாயகரும், வடக்குப் பகுதியில் நடராஜரும் காணப்படுகின்றனர். தெற்குப் பகுதியில் கோவிலைக் கட்டிய பராக்கிரம பாண்டியனின் செப்பு படிமம் உள்ளது. வடக்குப் பகுதியில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், நடராஜர், பார்வதி, மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் செப்புப்படிமங்கள் உள்ளன.

கருவறை

பெரிய கருவறையில் சிவலிங்கத்தை சுற்றிவர வசதியான இடமுள்ளது. தலபுராணம் இச்சிவனை ரிக் வேதப் பெருமாள் என்கிறது. இக்கருவறை சிவன் கோபுரவாசலில் இருந்தே தொழும் வண்ணம் அமைக்கப்பட்டது.

பிரகாரம்

சுற்றுப் பிரகாரத்தில் பரிவார தேவதைகள் காணப்படுகின்றன. தெற்கு பகுதியில் சுரதேவர், 63 நாயன்மார்கள், தட்சணாமூர்த்தி, கன்னி மூலையில் விநாயகர் சிற்பம் ஆகியவை உள்ளன. இதே வரிசையில் சப்த கன்னிகைகளும் காணப்படுகின்றனர். சுரதேவரின் சிற்பம் அளவில் பெரிதாக உள்ளது [4] .பிரகாரத்தில் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் உட்பட 63 நாயன்மார்களுக்கும் தனி பீடங்கள் உள்ளன. இவர்களின் பெயரும், நட்சத்திரமும் குறிக்கப்பட்டுள்ளன.

இந்த தெய்வங்கள் எல்லாம் பொ.யு. 1462-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. இவற்றில் சில பழுதடைந்திருக்கின்றன. சில 1948-ன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டிருக்கின்றன.

கோபுர அதிஷ்டானத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து காணப்படுகிறார். இதே பிரகாரத்தில் கன்னிமூலையில் விநாயகர் சிற்பமும் உள்ளது. மேற்குப் பிரகாரத்தில் மகாலட்சுமி சிற்பம் அமர்ந்த கோலத்தில் உள்ளது. வடமேற்கு மூலையில் முருகனின் கோவில் உள்ளது. முருகன் ஆறு முகமும், பன்னிரு கரங்களுடன் மயில் மேல் அமர்ந்தவாறு காட்டப்படுகிறார். வடக்கு பிரகாரத்தில் சனி பகவான் கோவில் உள்ளது. சனிபகவான் நின்ற கோலத்தில் கறுப்பு ஆடையில் காகத்துடன் காட்டப்படுகிறார். இதே வரிசையில் காரைக்கால் அம்மையாரின் கோவில் உள்ளது. சண்டிகேஸ்வரரின் கோவில் அருகே காசிக்கிணறு இருக்கிறது. இதனை பராக்கிரம பாண்டியன் பொ.யு. 1462-ல் வெட்டினான் என கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. இங்கு இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தீர்த்தத்தில் கங்கை நீர் பெருகுகிறது என ஐதீகம். கிணற்றைக் கடந்தால் குறும்பலா மரம் உள்ளது. இம்மரத்தை பற்றிய குறிப்பும் தலபுராணத்தில் உள்ளது.

உலகம்மை கோவில்

அம்மன் சன்னதி செல்லும் வழி

உலகம்மை கோவில் (உலகமுழுதுடையாள் கோவில்) கருவறை பொ.யு. 1446-ல் கட்டப்பட்டது. இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உள்ளது. கோவிலின் ஆரம்ப வேலை தொடங்கிய போதே அம்மன் சன்னதியின் வேலை முடிந்துவிட்டது. கோவிலின் கால்கோள் பொ.யு. 1446-ல் நாட்டிய பின் 1462 வரை வேலைகள் நடைபெற்றிருக்கின்றன.

உலகம்மை கோவில் கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், மணி மண்டபம், பலி மண்டபம், பிரகாரம் என்ற அமைப்பைக் கொண்டது. இம்மண்டபங்களின் கட்டுமானம் பொ.யு. 1558-க்குள் முடிந்துவிட்டது. கருவறையில் உலகம்மையின் சிற்பமும், அர்த்த மண்டபத்தில் பள்ளியறை அம்மை, மணி மண்டபத்தில் நந்தி, பள்ளியறையில் பிள்ளையார், மகா மண்டபத்தில் ஆறுமுகம், தெய்வானை, வள்ளி, சுப்பிரமணியர் சிற்பங்கள் உள்ளன.

கருவறை
துர்க்கை

கருவறையில் உலகம்மை பத்ம பீடத்தின் மேல் திரையோபங்கத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். ஒரு கையில் அபய முத்திரையும், இன்னொரு கையில் தாமரையையும் கொண்டிருக்கிறாள். சன்னதி தரையில் பராக்கிரம பாண்டியனின் சிற்பம் அஞ்சலி ஹஸ்தத்தில் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் கீழ் 'உலகமுழுதுடையாள் உலகம்மனாலயம்' என்னும் கல்வெட்டு வாசகம் இப்போது அழிந்த நிலையில் உள்ளது.

உலகம்மை சன்னதியின் வெளியே இருபுறம் துவாரபாலகிகள் உள்ளனர். இருவரும் நான்கு கரங்கள் கொண்டவர்கள். அம்மன் சன்னதியின் சுற்றுப்பிரகாரத்திலுள்ள கல்வெட்டொன்றில் காசிக்கலியன் கவிராயர் என்பவரின் பாடல்கள் உள்ளன.

பிரகாரம்
தர்பண சுந்தரி

பிரகார சந்நதிகளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார், விநாயர் உள்ளார். சண்டிகேஸ்வரிக்கு சன்னதி உள்ளது. பலி மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. பலி மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் ஆகியோர் உள்ளனர். பலி மண்டப விநாயர் பத்து கரங்களுடன் இடது பக்கம் சக்தியுடன் காட்டப்பட்டிருக்கிறார்.

காப்புப் பாடல்

உலகம்மை தென்காசி பாண்டியனின் மகளாகப் பிறந்து சிவனை மணந்தாள் எனத் தலபுராணம் சொல்கிறது. இதனை தலபுராணத்தின் காப்புப் பாடலில் திருச்சிற்றம்பலக் கவிராயர்,

முருகு ஓங்கு குழலாளை சிந்துர
நல்நுதலாளை முதுமீனோக்கால்
கருஓங்கிக் குடிதழைய அருளரந்து
மடைதிறந்த கண்ணினானை
உருஓங்கு களபமணி முலையாளை
கொடியிடைப் பட்டு உடையாளை
மருஓங்கு பதத்தாளை தென்காசி
உலகாளை மனத்துள் வைப்போம்

எனப் பாடுகிறார்.

முருகன் கோவில்

முருகன் சன்னதி முக மண்டபம்

பாலமுருகன் கோவில் விஸ்வநாதர் கோவிலுக்கும், உலகம்மாள் கோவிலுக்கு நடுவில் உள்ளது. இக்கோவிலைப் பற்றி கல்வெட்டிலும், தலபுராணங்களிலும் குறிப்புகள் இல்லை. இக்கோவிலை விஜயநகரப் பேரரசின் படைத்தளபதி அச்சுதராயர் கட்டினார். இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டிற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை.

முதலில் இக்கோவில் நின்றருளிய பெருமாள் கோவிலாக இருந்தது. சிற்றாற்றங்கரையில் பெருமாளுக்கு கோவில் எடுத்து பின் இங்கே பிரதிஷ்டை செய்தான். பொ.யு. 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது இருக்கலாம். பின் இவ்விடம் நெல் பாதுகாக்கும் இடமாக இருந்தது. பொ.யு. 1967-ல் விஸ்வநாதர் கோவிலில் இருந்த அதிகாரி ஒருவர் இங்கே பாலமுருகனைப் பிரதிஷ்டை செய்தார். இக்கோவில் சித்திர சபை அல்லது திருஓலக்க மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் அமைப்புக் கொண்டது. சித்திர சபையின் சிற்ப மண்டபத்திற்கு முன் கிழக்கு பிரகாரம் உள்ளது.

பிரகாரம்

பிரகாரத்தின் வடக்கு பகுதியிலுள்ள ஈசான மூலையில் திருமண்டபம் உள்ளது. அதில் கல்தூணில் பராக்கிரம பாண்டியனின் சிற்பம் அஞ்சலி ஹஸ்தம் உடைவாளுடன் காணப்படுகிறது. பிரகாரத்தில் 1008 (சகஸ்ரலிங்கம்) லிங்கங்கள் உள்ளன. சகஸ்ர லிங்கத்திற்கு அடுத்து யந்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவியின் வடிவம் உள்ளது. இதனை தரணிபீடம் என்றழைக்கின்றனர். அடுத்து மதுரை மீனாட்சியும், சொக்கநாதரும் உடைய சிற்பம் உள்ளாது. இக்கவிலின் பொறுப்பாளராக கருதப்படும் பைரவரின் சிற்பம் உள்ளது.[5] முகப்பு மண்டப மேற்கில் துர்க்கை சிற்பம் வழிபாட்டுடன் உள்ளது.

நதிப்பெண் அல்லது யட்சி

வெளிப்பிரகாரம் மேற்கு பகுதியில் கோசாலை உள்ளது. இவற்றுக்குரிய தீவனப்புல்லும் இங்கேயே வளர்க்கப்படுகிறது. வடமேற்கு மூலையில் ஸ்ரீவீரகண்ட விந்தயனன் சித்தர் பீடம் உள்ளது. வடக்கு பிரகாரத்தில் கருவறை மட்டும் கொண்ட சகஸ்ரலிங்கம் கோவில் உள்ளது. இதே பிரகாரத்தில் சொக்கநாதருக்கும், மீனாட்சிக்கும் கோவில் உள்ளது. இக்கோவில்கள் கருவறை, அரத்த மண்டபம் இரண்டும் கொண்டவ. இதே பிரகாரத்தில் வடகிழக்கில் பைரவர் கோவில் உள்ளது. பைரவர் நின்ற கோலத்தில் நான்கு கைகளில் சூலம், கப்பறை, நாகம், உடுக்கை ஏந்தி காணப்படுகிறார். நிர்வாண கோலத்திலும், நாய் வாகனத்துடனும் உள்ளார். இக்கோவிலின் முகமண்டபம் வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. வடக்கு பிரகாரத்தில் பராசக்தி பீடக்கோவில் உள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம் என அமைந்தது இக்கோவில். இதனை பத்ம பீடம் என்றும் அழைக்கின்றனர்.

அனந்த தீர்த்தம்

கோபுர வாசலைக் கடந்து திறந்த வெளியில் சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்பு தீர்த்தக் குளமாக இருந்தது. இதற்கு அனந்த தீர்த்தம் என்று தலபுராணத்தில் குறிப்பு உள்ளது. இக்குளம் புனித தீர்த்தமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. திறந்த வெளியின் தெற்கு துர்க்கையின் சன்னதி உள்ளது. இதில் தேவி நின்ற கோலத்தில் இருக்கிறாள்.

சிற்பங்கள்

சாமரப் பெண்

தென் தமிழகத்தில் சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களில் தென்காசி கோவிலும் ஒன்று.

சிவன் சன்னதி

முக மண்டபம்

அக்னி வீரபத்திரர் - சிவன் சன்னதி முகமண்டபம்

விஸ்வநாதர் கோவில் முக மண்டபம்[6] பொ.யு. 1446 - 1462 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள சிற்பங்களும் இதே காலத்தில் கட்டப்பட்டவையே. முக மண்டபத்தின் எட்டு தூண்களில் ஆளுயரச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வடக்கு பகுதியில் தெற்கே பார்த்தவாறு ஊர்த்துவ தாண்டவர், மகா தாண்டவர், ரதி, அக்னி வீரபத்திரர் சிற்பங்கள் உள்ளன. தெற்கு பகுதியில் வடக்கு பார்த்தவாறு காளி, வேணுகோபாலன்[7], மன்மதன், அகோர வீரபத்திரர் சிற்பங்கள் உள்ளன. இவற்றை யாளிகளோ, பூதங்களோ, பெண்களோ தாங்கி நிற்கின்றனர்.

இங்கே ஊர்த்துவ தாண்டவரின் சிற்பம் எட்டு கைகளுடன் காட்டப்பட்டுள்ளது. சூலம், கட்வாங்கம், கேடயம், மணி கைகளில் கொண்டிருக்கிறார். இதே சிற்பத்தின் கீழ் ராவணன் கயிலை மலையை தூக்கும் சிற்பம் காட்டப்பட்டுள்ளது.[8] இத்தூணின் வேறு பகுதியில் தன்வந்திரி அமிர்த கலசத்துடன் உள்ள சிற்பமும்[9], சங்கூதும் குள்ளபூதம் சிற்பமும், விஷ்ணு பிரம்மாவின் இசை நிகழ்த்தும் காட்சியும் காட்டப்பட்டுள்ளன.

இரண்டாவதாக மகாதாண்டவர் வீரக்கழல் அணிந்து உடுக்கை, செங்கோல், கதை தாங்கி நிற்கும் சிற்பம் உள்ளது. இத்தூணிலேயே பதஞ்சலி, வியாக்ரபாதர் சிற்பங்கள் உள்ளன. அடுத்து அன்னத்தில் மேலமர்ந்த ரதியின் சிற்பம் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் கீழ் யானை, வெஞ்சாமரை வீசும் பெண், நர்த்தனப் பெண் உள்ளனர். இறுதியாக அக்னி வீரபத்திரர் கையில் கலசத்துடன் காட்டப்பட்டுள்ளார்.

மண்டபத்தின் தெற்கு வரிசையில் முதலில் காளி எட்டு கைகளில் சூலம், கப்பரை, வாள், கேடயம், நாகம், மணி போன்ற ஆயுதங்களுடன் காட்டப்பட்டுள்ளாள். அடுத்திருக்கும் மன்மதன் சிற்பம் கரும்பு வில், மலரம்புடன் நான்கு கரங்களாகக் காட்டப்பட்டுள்ளான். இவனை இரண்டு பேர் தாங்கி நிற்கின்றனர். மன்மதனுக்கு தலையில் கரண்டமகுடமும், சாமரம் வீசும் பெண்களும் உள்ளனர். மூன்றாவது இருக்கும் வேணுகோபாலன் சிலை எட்டு கரங்கள் கொண்டது. இரண்டு கைகள் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருக்கின்றன. சங்கு, சக்கரம், கதை, பத்மம், அம்பு, வில் என மீது ஆறு கரங்கள் காட்டப்பட்டுள்ளன. இரண்டு பெண்கள் தாங்கி நிற்பது போல் சிற்பம் அமைந்துள்ளது. இச்சிற்பத்தின் ஒரு புறம் பூதேவி திரிபங்க நிலையில் குவளை மலருடன் இருக்கிறாள். இவளுக்கு தலையில் கரண்ட மகுடம் உள்ளது. இதே தூணில் சாமரம் வீசும் பெண்ணும், அசையாத புலி, பசு, பாம்பும், எலியும் அருகருகில் என இருக்கின்றனர்.இறுதியாக அகோர வீரபத்திரர் பத்து கைகளில் சூலம், அம்பு, வில், வாள், கேடயம் என ஆயுதம் தாங்கி உள்ளார். காலின் கீழ் தக்ஷன் காட்டப்பட்டுள்ளான். இவர் கையிலுள்ள கேடயம் வேலைப்பாடுடையது வீணை மீட்டும் பெண் கோவிலைத் தூக்குவது போன்ற அமைப்பு கொண்டது. இதே தூணில் யாளிகள் சிற்பம் சேகண்டி அடிக்கும் பெண் சிற்பம் உள்ளன.

முக மண்டபத்தின் நுழைவு பகுதியில் கிழக்கு தூண்களில் மேற்கே பார்த்த இரண்டு பெண் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்களில் தென்பகுதியில் இருப்பவள் ஒப்பனைப் பெண்[10]. இவளது இடதுபுறம் நதிப்பெண் (யட்சி) காட்டப்பட்டிருக்கிறாள்.[11]

நந்தி மண்டபம்

திரு ஓலக்க மண்டபத்தை அடுத்துள்ள நந்தி மண்டபத்தில் அதிகார நந்தி உள்ளார். இம்மண்டபத் தூணில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இரண்டு தூண்களில் ஆறரை அடியுள்ள பெண் சிற்பம் உள்ளன. இச்சிற்பங்கள் முக மண்டபத்தின் நுழைவு வாயிலில் காணப்பட்ட பெண் சிற்பங்கள் போன்றவை. இதே மண்டபத்தில் ராமன், அனுமன், குழலூதும் வேணுகோபால், பசுபதீஸ்வரர், நரசிம்மன், மன்மதன், விநாயகர் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

மணி மண்டபம்

சாமரப்பெண்1.jpg

இதனை வாத்திய மண்டபம் என்றும் அழைக்கின்றனர். இம்மண்டப தூண்களில் காட்டப்படும் புடைப்புச் சிற்பங்கள் சேக்கிழாரின் பெரியபுராணக் கதைகளைப் பின்னணியாகக் கொண்டவை. கண்ணப்ப நயனார் சிற்பம், காலகாலன் மார்கண்டேயன் சிற்பம், திருமூலரின் தியானம் அதில் இடைமருதூரின் பசுவாக வந்து பூஜை செய்த காட்சி, சிறுத்தொண்டர் கதை, எறிபத்த நயனார் கதை (பரசுவால் எதிரிகளை அழிக்கும் கதை), மயிலாக வந்து மகாதேவனை வழிபடும் காட்சி, திருவானைக்காவில் யானையும், சிலந்தியும் தொழுதக் காட்சி, குங்கிலியக் கலய நயனார் சிவலிங்கத்தை நிமிர்த்திய காட்சி. இவை தவிர சிவபுராணச் சிற்பங்கள் சிலவும் சிற்பங்களாய் உள்ளன. கஜசம்கார மூர்த்தி, இராவணன் கயிலை மலையை தூக்கும் காட்சி. நரசிம்மரின் சிற்பம், வில் ஏந்திய ராமன் உடன் அனுமன், சீதை, வாலி, சுக்கிரீவன் போன்றோர், காளிங்க நர்த்தனம் போன்ற சிற்பங்கள் இம்மண்டபத்தில் உள்ளன.

மகா மண்டபம்

மகா மண்டபத் தூணில் நடனப் பெண்கள், பாகவதக் கதைக் காட்சிகள், அர்ஜுனன் தபசு, சிவன் அர்ஜுனனுக்குக் காட்சி கொடுத்தல் ஆகிய சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்திலேயே விழாக்கால செப்பு படிமங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பூஜைக்குரியவை. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் ஆகியோரின் செப்புப் படிமங்கள் உள்ளன.

முருகன் சன்னதி

யாளி.jpg

முருகன் சன்னதி ஆலயத்தை தென்காசி பாண்டியர்கள் கட்டவில்லை. கோவிலிலுள்ள 52 கல்வெட்டுகளிலும் அதற்கு சான்றில்லை. தலபுராணத்திலும் இல்லை. தென்காசி கோவில் தொடர்பான பிள்ளைத்தமிழ் நூலிலும் இல்லை. தென்காசி பாண்டியர்களில் குலசேகரப் பாண்டியனுக்கும் (பொ.யு. 1479 - 1499) சடையவர்மன் ஸ்ரீவல்லபன் (பொ.யு. 1534 - 1543) என்ற அரசனுக்கு இடைப்பட்ட காலத்தில் யார் தென்காசியை ஆண்டார் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. இக்காலத்தில் வேணாட்டின் அரசன் உதய மார்த்தாண்ட வர்மா (பொ.யு. 1516 - 1532) ஆட்சிக்கு அடங்கியிருந்தது.[12] அப்போது விஜயநகர பேரரசு அச்சுத தேவராயரின் மைத்துனன் சாளுவதிம்மன் அரசாளுகையில் இருந்தது. இவன் வேணாட்டார் கைகளிலிருந்து பாண்டிய நாட்டை மறுபடியும் பாண்டிய மன்னர்களிடம் ஒப்படைத்திருக்கலாம். இக்காலகட்டத்தில் விஜய அரசன் பொலிந்து நின்றருளிய பெருமாள் கோவிலைக் கட்டியிருக்கலாம் என இக்கோவிலை ஆய்வு செய்த பேராசிரியர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.

இக்கோவிலின் முகப்பில் மகாபாரத சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோவில் சன்னதியின் பாலமுருகன் பிரதிட்டை செய்யப்பட்டது பொ.யு. 1967-ல். இதற்கு முன் கோவில் வைணவ அடையாளத்துடன் இருந்திருக்கிறது. அதற்கான சான்றுகள் கருவறையைச் சுற்றிய அதிஷ்டானப் பகுதியில் காணப்படுகின்றன. மண்டப தூண்களில் தருமன், அர்ஜுனன், கர்ணன், நகுலன் சிற்பங்களுடன் வீரபத்திரர் சிற்பம், குறவன் சிற்பமும் உள்ளன. யானை, சிங்கம் சிற்பம் பெரிய அளவில் உள்ளன. கோவிலின் முன் பகுதியிலுள்ள துவாரபாலகர் சிற்பமும் பெரிய அளவில் உள்ளது.

கருவறையை சுற்றி பாகவதக் கதை தொடர்பான சிற்பங்கள்; புருஷாதேவி சிற்பம், கிருஷ்ணன் யசோதையிடம் பால் குடிக்கும் சிற்பம் உள்ளன.

கோபுரம்

தூண் கீழ்பகுதி1.jpg
கோபுர அமைப்பு

தற்போதைய கோபுரத்தின் மேல் பதினோரு செம்புக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கலசமும் ஆறரை அடி உயரமும், நூற்றிபத்து கிலோ எடையும் கொண்டது. மொத்த கோபுரம் 178 அடி உயரமுடையது. கோபுரத்தில் கிட்டதட்ட எண்ணூறு சுதைச் சிற்பங்கள் உள்ளன.

கோபுரத்தின் எட்டு திக்கிலும் அஷ்ட திக் பாலகர்கள் உள்ளனர். கிழக்கு, மேற்கு பகுதியில் துவார பாலகர்கள் உள்ளனர். ஒன்பது மாடங்களிலும் வடக்கு திசையில் பிரம்மாக்கள், தெற்கில் தட்சணாமூர்த்திகளின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. கஜசம்ஹாரமூர்த்தி, பிக்ஷாடனார், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரன், நடராஜர், ஊர்த்துவ தாண்டவர் ஆகிய சிவ வடிவங்கள் உள்ளன. சிவன் பார்வதியை ஆலிங்கனம் செய்யும் சிற்பம், மீனாட்சி கல்யாணம், அகஸ்தியர், நர்த்தன கணபதி, பஞ்சமுக கணபதி, லட்சுமி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.

ராமர், சீதை, அனுமன், பாமா, ருக்மணியுடன் கிருஷ்ணன், விஷ்ணுவின் அவதாரங்கள், நரசிம்மன், வராகம் என விஷ்ணுவின் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் கடைசி நிலையான ஒன்பதாவது மாடத்திலிருந்து தென்காசி ஊரை முழுவதும் பார்க்கும்படியான வசதி உள்ளது. இது இக்கோவில் கோபுரத்தின் தனிச்சிறப்பு.

கோபுர வாசலின் இருப்பக்கமும் கல்வெட்டுகளும், நதிப்பெண், யட்சி சிற்பங்களும் உள்ளன.

மகிஷாசுரவர்த்தினி கோவில்
அம்மன் சன்னதி முக மண்டபம்

கோபுர வாசலின் வடக்கு பக்கமாக மகிஷாசுரவர்த்தினியின் கோஷ்ட ஆலயம் ஒன்றுள்ளது. இங்கே தேவி நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறாள்.

கட்டப்பட்ட காலம்
அம்மன் சன்னதி முகமண்டபம்

பொ.யு. 1457, நவம்பர் 30 பராக்கிரம பாண்டியனால் கோபுரம் கட்ட கால்கோள் நாட்டப்பட்டது. இதனை ஒரு கல்வெட்டு:

"வடிவெழுத ஒண்ணாத பராக்கிரம
மகிபன் சொன்னவரை போல்
திருக்கோபுரம் காணத் துடியிடையாய்
விமான முதல் தொடங்கினானே"

எனக் குறிப்பிடுகிறது.

கர்ணன் - முருகன் சன்னதி முகமண்டபம்

மற்றொரு கல்வெட்டு நவம்பர் 11, 1457-ல் கோபுரத்தின் கால்கோள் நடப்பட்டது என்றும். நடப்பட்ட நேரமான இரவு 11 - 1 மணி மரணயோக நேரம் என்றும் குறிப்பிடுகிறது. இதனைப் பொருட்படுத்தாமல் அரசன் பராக்கிரம பாண்டியன் கட்டத் தொடங்கியதால் கோபுரத்தை அவனால் கட்டி முடிக்க முடியவில்லை. கோபுரம் கட்டத் தொடங்கி ஆறாண்டுகள் மட்டுமே அவன் உயிரோடு இருந்தான் என்ற கதையும் வழக்கில் உள்ளதாக ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார். ஒரு நாட்டார் கதையின் படி பராக்கிரம பாண்டியன் கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்த போது இக்கட்டான நிலையில் இருந்தான். பாண்டியனின் மகன் கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர் உட்பட சில இடங்களில் பகைவருடன் போரிட வேண்டிய நிலையும் இருந்தது. வேணாட்டு அரசரும் இவனை எதிர்த்ததாக தளவாய் அக்கிரகாரச் செப்பேடு கூறுகிறது. இந்நிலையிலேயே இவன் இரவு மரணயோகத்தில் கோபுரம் கட்டத்தொடங்கினான் எனக் கதை கூறுகிறது.

கோபுரம் பொ.யு. 1518-ல் குலசேகரப் பாண்டியனால் கட்டி முடிக்கப்பட்டது.[13]

வேண்டுகோள் கல்வெட்டு

கோவில் கோபுரம் பழுதுபடும் என்று விஸ்வநாதர் பாண்டியனின் கனவில் தோன்றிக் கூறினார். இது கல்வெட்டாக கோவிலில் உள்ளது. இதனை வேண்டுகோள் கல்வெட்டு என்றழைக்கின்றனர்.

"ஆராயினும் இந்தத் தென்காசி
மேவும் பொன் ஆலயத்து
வாராததோர் குற்றம் வந்தால்
அப்போது அங்குவந்து அதனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை
நீதியுடன் பாரோர் அறியப்
பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே"

கோபுரம் சேதம்

பொ.யு. 18 -ம் நூற்றாண்டின் கடைசியில் அல்லது 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவில் கோபுரம் நெருப்பு வைக்கப்பட்டு பாழடைந்திருக்கிறது. செனத்தி என்ற வெளிநாட்டு அறிஞர் தான் பார்த்த கோபுரத்தின் கம்பீரத்தைk குறித்து எழுதியிருக்கிறார் (பொ.யு.1792). எட்டயபுரம் ஜமீன் பற்றிய பழைய ஆவணம் தென்காசிக் கோவில் 1790-ல் தீக்கிரையானதாகக் கூறுகிறது[14]. 18 ஆம் நூற்றாண்டின் கடைசியில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் உலகுடையார் பாட்டு, உடையார் கதை ஆகிய கதைப்பாடல்களிலும் இக்கோவில் கோபுரத்தின் கம்பீரம் பாடப்பட்டுள்ளது. பொ.யு.1824 -ன் திருநெல்வேலி நில அறிக்கையில் தென்காசி கோவில் கோபுரம் நெருப்பால் சேதமடைந்திருப்பதாகக் குறிப்பு உள்ளது. திருநெல்வேலி வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய H.R.Pate[15] இக்கோவில் கோபுரம் பாழடைந்திருப்பது பற்றிய குறிப்பை அழிக்கிறார். எனவே பொ.யு. 1790 - 1824-க்கு இடைப்பட்ட காலத்தில் கோபுரம் சிதையப் பெற்றது என அறிய முடிகிறது. பொ.யு. 1960 வரை இந்த கோபுரம் சிதைந்த நிலையிலேயே இருந்தது.

கோபுரம் நெருப்பாக்கப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இதில் கோபுரத்தின் மாடியில் பாதுகாக்கப்பட்ட பாளையக்காரர்களின் ஆவணங்கள் எரிக்கச் செய்த சதி என்ற குறிப்பு பழைய ஆவணம் ஒன்றில் உள்ளது (கணபதி ராமன் ப.35). இதனை செய்தவர் ஒரு பாளையக்காரர்.

மறுசீரமைப்பு

இந்திய விடுதலைக்கு முன் இக்கோவில் கோபுரத்தை சீரமைக்கும் முயற்சி தொடங்கப்பட்டது. பொ.யு.1940-ல் இதற்கான திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. பொ.யு.1948-ல் கோவிலில் கும்பாபிஷேகம் நிகழ்ந்தது. அப்போதும் திருப்பணிகள் நிகழ்ந்ததே தவிர கோபுரம் சீரமைக்கப்படவில்லை. இதற்கான கல்வெட்டு சான்றும் கோவிலிலேயே கிடைக்கிறது.

மீண்டும் பொ.யு. 1967-ல் ஒரு கும்பாபிஷேகம் நிகழ்ந்தது அப்போது இடிபாடுகளுடன் இருந்த பழைய கோபுரம் இடிக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டுமானம் நிகழவில்லை.

பொ.யு. 1981-ல் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக தினத்தந்தி நாளிதழின் அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் நியமிக்கப்பட்டார். கோவில் நிர்வாக அதிகாரி ஆ. இளையபெருமாள், தென்காசி பி.எஸ்.எம் சாமி ஆகியோர் திருப்பணிக் குழுவில் பணியாற்றினர். கோவில் கோபுரத் திருப்பணிக்கான கால்கோள் பெப்ரவரி 02, 1982-ல் நடப்பட்டது. கோபுரப் பணி முழுமையாக நவம்பர் 28, 1984-ல் நிறைவு பெற்றது. கோபுரத் திருப்பணியின் செலவை பா. சிவந்தி ஆதித்தன் உட்பட பலர் ஏற்றுக் கொண்டனர். அதன் விவரம் பின் வருமாறு:

முதல் நிலை பா. சிவந்தி ஆதித்தன்
இரண்டாம் நிலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
மூன்றாம் நிலை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
நான்காம் நிலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஐந்தாம் நிலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஆறாம் நிலை திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஏழாம் நிலை சமயபுரம் மாரியம்மன் கோவில்
எட்டாம் நிலை தென்காசி வட்டார நாடார் சமூகம்
ஒன்பதாம் நிலை பா. சிவந்தி ஆதித்தன்

கோபுரத் திருப்பணி முழுவதுமாக முடிந்து ஜூன் 25, 1990-ல் கோவில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கும்பாபிஷேகம்

தென்காசி கோவிலுக்கு மொத்தம் எட்டு முறை கும்பாபிஷேகம் நிகழ்ந்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு.

  • பொ.யு. 1454 - பராக்கிரம பாண்டியன் முதல் கும்பாபிஷேகத்தை நடத்தி இருக்கிறார். விஸ்வநாதர் கோவில் கட்ட ஆரம்பித்த இக்காலகட்டத்தில் கும்பாபிஷேகத்திற்குரிய பூர்வாங்க வேலை நடந்திருக்கிறது.
  • பொ.யு. 1505 - இரண்டாம் கும்பாபிஷேகம் குலசேகர பாண்டியன் அழகம்பெருமாளால் நிகழ்த்தப்பட்டது
  • பொ.யு. 1524 - வேணாட்டு அரசன் பூதல ஸ்ரீ உதய மார்த்தாண்டவர்மா கும்பாபிஷேகம் நடத்தினார். ஸ்ரீ உதய மார்த்தாண்டவர்மா (1516 - 1535) காலத்தில் தென்காசி பாண்டியர் வேணாட்டிற்கு அடிமைப்பட்டிருந்தனர். மார்த்தாண்டவர்மா களக்காட்டில் ஒரு அரண்மனை அமைத்து சோழவல்லபுரம் என்னும் பெயரைச் சூட்டி அரசாண்டார். சோழ குலத்து அரசி ஒருவரையும் மணந்து கொண்டார். இவர் புலி மார்த்தாண்டன் என்றும் அழைக்கப்பட்டார்.
  • பொ.யு. 1848 - நடத்திவயர் பெயர், பிற விவரங்கள் அறிய முடியவில்லை. மேலகரம் செண்பகக் குற்றாலக் கவிராயர் பாடல்கள் வழி இவ்வாண்டில் கும்பாபிஷேகம் நடந்ததாக அறிய முடிகிறது.
  • பொ.யு. 1948 - ஐந்தாம் கும்பாபிஷேகம் ஜனவரி 21-ம் தேதி நிகழ்ந்தது. சுதந்திரத்திற்கு பிறகு நிகழ்ந்த இக்கும்பாபிஷேகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தவில்லை. இக்காலகட்டத்தில் இக்கோவில் முற்றும் சிதைந்து மரங்கள் வளர்ந்து வனம் போல் காட்சியளித்தது. இந்நிலையில் கோவில் திருப்பணி செய்ய மக்கள் தீர்மானித்தனர். இலஞ்சி டி.சி. ஈஸ்வரபிள்ளை தலைமையில் ஒரு குழு அமைத்து கோவில் பழுது பார்க்கப்பட்டது. ஏப்ரல் 21, 1948-ல் கும்பாபிஷேகம் நிகழ்த்தினர். விழாவையும், சடங்குகளையும் சந்திரசேகரக் குருக்கள் நிகழ்த்தினார்.
  • பொ.யு. 1967 - கோவில் கோபுரத்தை மறுசீரமைக்க அன்றைய முதல்வர் காமராஜர் அனுமதி கொடுத்தார். ஆனால் கோபுரம் கட்ட முடியவில்லை. அரைகுறையாக சீரமைக்கப்பட்ட கோபுரத்தை முழுவதும் இடித்து தள்ளினர். கோபுரம் முழுதும் இடிந்து மொட்டை கோபுரம் எனப் பெயர் பெற்றது. இதே ஆண்டு கும்பாபிஷேகமும் நிகழ்ந்தது.
  • பொ.யு. 1990 - தினத்தந்தி இதழின் அதிபர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பொ.யு. 1982-ல் திருப்பணிக்கு கால்கோள் நாட்டப்பட்டது. பொ.யு. 1984-ல் கோபுர வேலை ஆரம்பமானது. எட்டு ஆண்டு பணிகளுக்கு பின் ஒன்பது நிலை கோபுரம் முழுமையடைந்தது. ஜுன் 26, 1991-ல் கும்பாபிஷேகம் நிகழ்ந்தது.
  • பொ.யு. 2006 - பா.சிவந்தி ஆதித்தன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ந்தது.

விழாக்கள்

  • மாசிமகத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.
  • புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழா
  • ஐப்பசி திருக்கல்யாணம்
  • ஆவணி மூலத் தெப்பத் திருவிழா
  • தை அமாவாசை பத்திர தீப திருவிழா

கல்வெட்டு

திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி ஒன்றில் விஸ்வநாதர் கோவில் கல்வெட்டுகள் இடம்பெறவில்லை. இக்கோவில் கல்வெட்டுகளை முதலில் பொ.யு. 1895-ல் பிரதி எடுத்தனர். பின் 1908, 1909, 1912 ஆகிய ஆண்டுகளில் பிரதி செய்தனர்.

வெளியீட்டாளர்கள்

தென்காசி கோவில் கல்வெட்டை முதன்முதலில் பிரதி எடுத்து வி. ரெங்காச்சாரியார் வெளியிட்டார். இவரது சென்னை ராஜதானி மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகளின் சுருக்கம் தொகுப்பில் 52 கல்வெட்டுகள் 1895 - 1909-ம் ஆண்டுகளில் பிரதி செய்யப்பட்டவை இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகளையும் வேறு சில கல்வெட்டுகளையும் மூலத்துடன் ராபர்ட் சுவல் பதிப்பித்தார். இவரது தொகுப்பில் மூலங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழி விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 30 கல்வெட்டுகள் உள்ளன. திருவிதாங்கூர் தொல்லியல் வரிசையில் டி.ஏ. கோபிநாதராவ் தென்காசி கோவில்களின் எட்டு கல்வெட்டைத் தொகுத்திருக்கிறார். இதில் கல்வெட்டின் மூலம், முகவுரை, பொருள் ஆகியன உள்ளன.

மேற்சொன்ன மூவர் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 52 கல்வெட்டுகளின் பிரதிகள் கிடைத்திருக்கின்றன.

அமைவிடம்

தென்காசி கோவில் கல்வெட்டுகள் பெரும்பாலானவை கோபுர வாசல், முகப்பு மண்டபம், கருவறை, பின்புறச் சுவர் போன்ற இடங்களில் காணக்கிடைக்கின்றன.

மொழி

இங்குள்ள எல்லா கல்வெட்டுகளும் தமிழில் அமைந்தாலும் கிரந்த மொழியின் கலப்பு அதிகம் உள்ளது. மெய்கீர்த்திகள் சிலவும் உண்டு. இக்கல்வெட்டில் ஒன்றிரண்டைத் தவிர எல்லாம் சக வருஷத்தையே குறிப்பிடுகின்றன. மூன்று கல்வெட்டுகள் கலி ஆண்டையும், ஒரு கல்வெட்டு மலையாள ஆண்டையும் குறிப்பிடுகின்றன. சுழற்சி ஆண்டின் (பரிதாபி ஆண்டு) பெயர்களும் கல்வெட்டில் வருகின்றன. கல்வெட்டுகளில் மாதம், தேதி, நாள், திதி, நட்சத்திரம் , ராசி போன்றவை குறிப்பிடப்படுகின்றன.

காலம்

இக்கல்வெட்டுகள் எல்லாம் பொ.யு. 1445 - 1605-ம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை. 160 ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டுகளில் பெரும்பாலும் பாண்டிய மன்னர்களின் பெயர்களே வருகின்றன.

உள்ளடக்கம்

இக்கல்வெட்டுகளில் கோவில் கட்டுமானம், கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தம், நிர்வாக முறை, அரசன் முடிசூட்டிய நிகழ்வு, தென்காசி ஊரில் பிராமணர் குடியேற்றம் போன்ற செய்திகள் வருகின்றன.

செய்யுள்

தென்காசி கோவில் கல்வெட்டுகளில் 38 தமிழ் செய்யுளில் உள்ளன. இவை எண்சீர் கழிநெடிலடி, ஆசிரிய விருத்தம், அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, இரட்டைச் சீர் வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய யாப்பு வடிவங்களில் அமைந்தவை.

பார்க்க: தென்காசி கோவில் கல்வெட்டுகள்

சைவ மடங்கள்

தென்காசி பாண்டியர்கள் காலத்தில் காசியை போல் முக்கியமான சைவ சேத்திரமாக இருந்துள்ளது. இவ்வூரில் எட்டு சைவ மடங்கள் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

கோவிலிலிருந்து மடம் அமைந்த திசை மடத்தின் பெயர் செயல்பாடுகள் பிற செயல்பாடுகள்
1 கிழக்கு சிவந்த பாதவூருடையார் ஆதீனம் சிவாகமங்கள் ஓதிவதற்கு அரசன் முடிசூட்டும் சன்னதி மடம்
2 தென்கிழக்கு சாமிதேவ நயினார் அகோர தேவராதீனம் சிவதீட்சை பெற்றுக்கொள்ள
3 தெற்கு துருவாகாதீனம், சேம்பத்தூர் மடம் கல்வி கற்பிக்கும் மடம்
4 தென்மேற்கு பவுராணிக ஆனந்தக் கூடத்தர் ஆதீனம் சிவ புராணங்கள் கேட்பதற்கு
5 மேற்கு தத்துவ பிரகாச ஆதீனம் தத்துவ விசாரணை செய்ய
6 வடமேற்கு மெய்கண்டார் ஆதீனம் சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் ஓத
7 வடக்கு உமையொருபாகக் குருக்கள் மடம் சைவர்களுக்கு உபதேசம் செய்ய
8 வடகிழக்கு இடிவலஞ் சூழ் பரஞ்சோதி தேவர் ஆதீனம் சிவயோகிகள் யோகம் பயின்ற இடம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கல்வெட்டு விவரம் பின் வருமாறு: "... உடையார் விஸ்வநாதர் உத்தர காசியில் எழுந்தருளியிருந்த சிவாலயம் ஜுரணமாகையாலே நமக்கு தட்சிண காசியிலே ஆலயம் செய்து தர வேணும் என்று எங்களுடைய கர்த்தர் அரிகேசரி தேவர் என்ற திருநாமம் உடைய பெண்ணின் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவர் இருந்தருளிய இடத்தில் உடனே சொப்பனத்தில் திரு உள்ளம் பற்றி அருளுகையாலே முன்னாள் சகாப்தம் 1368 இன் மேல் விருஷய ஞாயிற்று 10-ம் தேதியும் பூர்வ பட்சத்து தசமியும் சுக்கிர வாரமும் பெற்ற உத்தரத்து நாள் மீன மூகூர்த்தமாக கர்ஷனையும் செய்து தஷிண காசியாக திருப்படை வீடும் உண்டாக்கி..."
  2. தென்காசி விஸ்வநாதருக்கு விஸ்வனே, விஸ்வநாதன், விஸ்வேசன், உலகநாதன், பசுபதி, சிவன், மகேஷன், பராபரன், முக்கட்பெம்மான், சுசுவரம் தருவோனே, நம்பன், சிவை மணவாளன், ஏற்றோன், அசுதையார், நீலகண்டன், அநாதி, தென்காசிநாதன் என வேறு பெயர்களும் உண்டு.
  3. விஸ்வையே, விஸ்வநாதை, விஸ்வேசை, விசாலாட்சித்தாய், பசுபதிதுணை, மயேசை, பராபரி, உமை, முக்கண்ணி, சிசுவரன்பனி, லோகாம்பை, சிவை, குழல்வாய் மொழி, அசுதைநீர் வசந்தவல்லி, தென்காசி தாய் என உலகம்மை வேறு பெயர்களும் வழங்கப்படுகின்றன.
  4. ஜுரதேவர் பற்றிய தொன்மம் விஷ்ணு புராணத்தில் உள்ளது. ஒரு முறை விஷ்ணுவிற்கும், சிவனுக்கும் விளையாட்டாக சண்டை வந்தது. சிவன் மேல் விஷ்ணு பாணம் எய்து சிவனுக்கு ஜுரம் வரும்படி செய்தார். இதனால் சிவனின் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஜுரதேவர் மூன்று தலைகளும், ஒன்பது கண்களும், நான்கு கைகளும், மூன்று கால்களும் உள்ள வடிவானார். இவர் ஜுரத்தை நீக்குபவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஜுரதேவருக்கு நல்ல மிளகு காப்பு சாத்தி வேண்டிக் கொள்ளும் வழக்கம் இக்கோவிலில் காணப்படுகிறது.
  5. கோவிலைப் பூட்டி திறவுக்கோலை பைரவர் முன் வைக்கும் வழக்கம் இன்று நடைமுறையில் உள்ளது.
  6. குலசேகர மண்டபம், ஓலக்க மண்டபம், சித்தர சபை எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுவது இந்த முகமண்டபம் தான்
  7. மதன கோபாலன் என்றும் குறிப்பிடுகின்றனர். முன் கைகளில் கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிப்பதாகவும், பின் கைகளில் மன்மதனின் கரும்பு வில்லும், மலர் அம்பும் காட்டப்பட்டுள்ளது.
  8. ராவணன் கயிலையில் சிவன் ஊர்த்துவ தாண்டவ நிலையில் இருக்கும் போது அவரை தூக்குவது போல் அமையப்பெற்ற சிற்பம் இது.
  9. பார்க்கடலைக் கடைந்த போது அமிர்தம் வந்ததாகவும் அதனை தன்வந்திரியே கொண்டு வந்தார் என்றும் புராணம் கூறுகிறது.
  10. இவள் தர்ப்பன சுந்தரி என அழைக்கப்படுகிறாள். கையில் சிறிய கண்ணாடியுடன் தலையை மெல்லத் திருப்பி ஒப்பனை செய்வது போல் காட்டப்பட்டிருப்பாள். திரண்ட மார்பு;
  11. இவள் அழகு அல்லது நதியின் அடையாளம்
  12. இவ்வரசன் களக்காட்டில் அரண்மனைக் கட்டி முடிச்சூட்டிக் கொண்டான்
  13. கோபுரம கட்டி முடிக்கப்பட்டதை ஒரு கல்வெட்டு,

    "விண்ணாடர் போற்றும் தென்காசி கோபுரமதில்
    எங்கள் அண்ணாச்சி செய்த மணி
    இப்படிக் குறையாகக் கிடக்கக்
    கொண்ணாதது எனக் கண்டு உயர்ந்த
    தட்டோங்கு முற்றுவித்தான்
    மண்ணாளும் மலையழகன் குலசேகரனே"

    என்று கூறுகிறது.

  14. எட்டயபுரத்தில் பாளையக்காரர்கள், நல்லபெருமாள், 1912, பக். 12.
  15. A History of Tinnevely H.R.Pate ICS: 1916


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2025, 19:02:05 IST