under review

டி.ஏ. கோபிநாத ராவ்

From Tamil Wiki
டி.ஏ.கோபிநாத ராவ்

டி.ஏ. கோபிநாத ராவ் (1872 - 1919) (து.அ. கோபிநாத ராவ்) இந்திய சிற்பவியல் ஆய்வாளர். இந்தியாவின் சிற்பவியலை மேற்கத்திய ஆய்வு மற்றும் தொகுப்பு முறைமைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, தரவுகளைத் தொகுத்து, கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட இந்து சிற்பவியல் என்னும் நான்கு பாகங்களைக் கொண்ட பெருநூலைப் படைத்தார். இந்தியச் சிற்பவியல் மற்றும் தொன்மவியல் ஆய்வுகளின் முன்னோடி நூலாகவும் வழிகாட்டி நூலாகவும் இது கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

டி.ஏ.கோபிநாத ராவ் பிறப்பால் மராட்டியர் என்று கேரள தொல்லியல்துறை ஆவணங்களில் இருந்து தெரிகிறது. அவரது முன்னோர்கள் தஞ்சையிலும் ஸ்ரீரங்கத்திலும் வாழ்ந்தனர். திருச்சி அருகே துறையூரில் கோபிநாத ராவ் 1872-ல் பிறந்தார்.

துறையூரிலும் திருச்சியிலும் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த கோபிநாத ராவ் தன் 27-வது வயதில் திருச்சி கல்லூரியில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கோபிநாத ராவ் ஓவியக்கலையிலும் முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டவர். ஓவியத்திற்காக அரசிடமிருந்து தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். அவர் பெற்ற அப்பதக்கம் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது எனப்படுகிறது. கோபிநாதராவ் சம்ஸ்கிருதம், ஆங்கிலம், மலையாளம், தமிழ் தெரிந்தவர்.

தனிவாழ்க்கை

டி.ஏ. கோபிநாதராவ் கோழிக்கோடு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் வசித்தார். சிறிதுகாலம் நாகர்கோவில் பார்வதிபுரம் அக்ரஹாரத்திலும் வாழ்ந்தார்.

பொறுப்புகள்

டி.ஏ. கோபிநாத ராவ் திருவிதாங்கூர் அரசு 1908-ல் உருவாக்கிய திருவிதாங்கூர் தொல்லியல் துறையின் முதல் கண்காணிப்பாளர் ஆக நியமிக்கப்பட்டார்.

ஆய்வுப்பணிகள்

வரலாற்றாய்வு

டி.ஏ,.கோபிநாத ராவ் இந்தியத் தொல்லியலாளர்களில் முன்னோடி. தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தன் தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தார். தமிழில் செந்தமிழ், ஆங்கிலத்தில் Modern Review ஆகிய இதழ்களில் அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன. பழைய திருவிதாங்கூர் மற்றும் சேரர் வரலாறு, சோழர்களின் வரலாறு, பல்லவர் வரலாறு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

தொல்லியல்

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் தத்துவத் துறை பேராசிரியராக இருந்த மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அன்றைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் தொல்லியல் சான்றுகளைச் சேகரிப்பதற்காக ஓர் ஆய்வுக் குழுமத்தைத் தொடங்கினார். 1891ல் அன்றைய அரசர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா அவருக்கு ஆண்டுக்கு ஐம்பது ரூபாய் உதவித்தொகை அளித்து ஆய்வை முறைப்படுத்தினார். 1896ல் சுந்தரம் பிள்ளை திருவிதாங்கூர் அரசின் கௌரவ தொல்லியல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

டி.ஏ.கோபிநாத ராவ் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார். சுந்தரம் பிள்ளையின் ஆய்வுக் குழுமத்தில் அவரும் பங்காற்றினார். 1902ல் சுந்தரம் பிள்ளை மறைந்தார். 1902ல் அந்த பதவி டி.ஏ.கோபிநாத ராவுக்கு அளிக்கப்பட்டது. 1908ல் திருவிதாங்கூர் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டபோது அதன் கண்காணிப்பாளராக கோபிநாத ராவ் பதவியேற்றார். சுந்தரம் பிள்ளையின் ஆய்வுகளை முன்னெடுத்த கோபிநாத ராவ் ஏராளமான புதிய தொல்லியல் சான்றுகளைக் கண்டடைந்து திருவிதாங்கூர் வரலாற்றையும், அதற்கு முந்தைய சேரர், சோழர் காலகட்டங்களையும் தெளிவுபடுத்தி எழுத வழிவகுத்தார். திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை (Travancore Archaeological Series) கோபிநாத ராவ் ஆசிரியத்துவத்தில் வெளிவந்தது. 1910ல் நூல் வடிவில் வந்த இந்த தொகுப்பு தமிழக வரலாற்றெழுத்திலும் பல திறப்புகளை உருவாக்கியது. தமிழகத் தொல்லியல் ஆய்வுக்கான பல அடிப்படைப் புரிதல்களை இந்நூல் உருவாக்கியது. கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, கே.என். சிவராஜ பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்ற ஆய்வாளர்களின் சமகாலத்தவரான கோபிநாத ராவின் கல்வெட்டு ஆய்வுகளும், செப்பேட்டு ஆய்வுகளும் அவர்களின் ஆய்வுகளுக்கு உதவியாக அமைந்தன.

சோழர் வரலாற்றை விளக்கும் அன்பில் செப்பேடுகளை டி.ஏ.கோபிநாத ராவ் தான் முதலில் அடையாளம் கண்டார். சுந்தரசோழனின் 'மான்ய மந்திரி'யான அன்பில் அநிருத்தப் பிரமராயருக்குச் அரசர் பட்டத்துக்கு வந்த நாலாம் ஆண்டில் அளித்த பத்து வேலி நிலம் பற்றிய இந்த சாசனம் ஒரு விவசாயியால் கண்டெடுக்கப்பட்டு ஆர்.எஸ்.எல். லக்ஷ்மண செட்டியார் என்பவரிடம் அளிக்கப்பட்டு உ.வே.சாமிநாதையர் மூலம் கோபிநாதராவிடம் வந்தது. அவர் அதை ஆய்வு செய்து பதிவு செய்தார். ஆனால் அந்த செப்பேடு காணாமலாகிவிட்டது எனத் தமிழகத் தொல்லியல்துறை தெரிவிக்கிறது. கோபிநாத ராவின் பதிவு மட்டுமே சான்றாக இன்று எஞ்சியுள்ளது.

கோ கருந்தடக்கனின் நிபந்தக் கல்வெட்டுகள், கேரளக் கிறிஸ்தவ வரலாற்றை விளக்கும் பாலியம் செப்பேடுகள், இஸ்லாமிய வரலாற்றை நோக்கித் திறக்கும் தரிசாப்பள்ளிச் செப்பேடுகள், ராஜசேகரனின் வாழப்பிள்ளி செப்பேடு, ஸ்தாணு ரவியின் தரிசாப்பள்ளி செப்பேடுகள், பாஸ்கர ரவிவர்மனின் செப்பேடுகள், திருவல்லா செப்பேடுகள் போன்றவை கோபிநாத ராவின் முதன்மையான கண்டுபிடிப்புகள் எனப்படுகின்றன.

சமண, பௌத்த ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வின் ஒரு பகுதியாக கோபிநாத ராவ் பழைய சேரநாட்டுப் பகுதியில் இருந்த சமண, பௌத்த மையங்களைப் பற்றி விரிவாக எழுதினார். கருமாடி, பரணிக்காவு, பள்ளிக்கல், மாவேலிக்கரை, மருதூர்குளங்கரை போன்ற இடங்களில் உள்ள பௌத்த தொல்லியல் சான்றுகளை ஆவணப்படுத்தினார். கேரளத்தின் சாஸ்தா வழிபாடு பௌத்த மரபைச் சேர்ந்தது என ஆராய்ந்து கூறியவர் கோபிநாத ராவ் தான்.

திருநந்திக்கரை, திருச்சாரணத்து மலை (சிதறால்) ஆகிய இடங்களில் இருந்த சமண மையங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தினார். திருச்சாரணத்து மலையில் உள்ள தொன்மையான குறத்தியறையாரின் கல்வெட்டை அவர்தான் முதலில் வாசித்து ஆவணப்படுத்தினார்.

இந்து சிற்பவியல்

டி.ஏ. கோபிநாத ராவ் எழுதிய புகழ்பெற்ற நூல் இந்திய சிற்பவியலின் அடிப்படைகள் (Elements of Hindu Iconography) இந்திய சிற்பவியலை நேரடிக் கள ஆய்வுகளின் அடிப்படையில், மேற்கத்திய ஆய்வு - தொகுப்பு முறைமைகளை மேற்கொண்டு, கலைக்களஞ்சியத்தன்மையுடன் உருவாக்கப்பட்டது. நான்கு பாகங்கள் கொண்ட இந்த பெருநூல் 1914-ல் சென்னை சட்டப் பதிப்பகம் (Law Printing House, Madras) சார்பாக வெளியிடப்பட்டது.

கோபிநாத ராவ் எழுதிய சோழ வரலாற்றுச் சுருக்கம் (Chola Dynasty History Summary) மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் பாண்டித்துரைத் தேவர் முன்னுரையுடன் 1925ல் வெளிவந்தது.

வைணவ ஆய்வுகள்

கோபிநாத ராவ் தமிழகத்தில் வைணவத்தின் எழுச்சி பற்றிய தொடக்ககால ஆய்வுகளைச் செய்தார். சென்னைப் பல்கலையில் வைணவத்தின் வரலாறு பற்றி அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவு பின்னர் அச்சில் வெளிவந்தது.

குடிமல்லம் லிங்கம்

1908ல் டி.ஏ.கோபிநாத ராவ் குடிமல்லம் சிவலிங்கத்தைக் கண்டடைந்து முறையாக ஆவணப்படுத்தி ஆய்வாளர் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அதுவரை சிவலிங்கத்துக்கும் உலகளாவக் காணப்படும் ஆண்குறி வழிபாட்டுக்கும் இடையேயான தொடர்பு ஐரோப்பியர் முன்வைத்த ஊகமாகவே இருந்தது. இந்திய சைவ மதத்தினரும், பல ஆய்வாளர்களும் அதை மறுத்து வந்தனர். சிவலிங்கம் மலைவழிபாடு மற்றும் தூண் (ஸ்தம்ப) வழிபாடு ஆகியவற்றிலிருந்து தோன்றியது என வாதிட்டனர். ஆண்குறி வடிவிலேயே அமைந்த குடிமல்லம் சிவலிங்கம் அந்த விவாதத்தில் ஆண்குறி வழிபாட்டை முன்வைத்தவர்களுக்கு மிக உறுதியான சான்றாக அமைந்தது. அதன்பின் காஷ்மீர் குகைகளிலும் பிற இடங்களில் அதேபோன்ற லிங்கங்கள் கண்டடையப்பட்டன.

ஆய் அரசர்கள்

சங்க காலத்தைச் சேர்ந்த அரசர்களின் பெயர்கள் அக்காலத்தைச் சேர்ந்த புறநாநூறு போன்ற நூல்களில் கிடைத்திருந்தாலும் அவர்களைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் ஏதும் கிடைத்திராத காலகட்டத்தில் கோபிநாத ராவ் திருவிதாங்கூர் தலைநகரம் திருவனந்தபுரத்தில் மதிலகம் ஆவணச்சேகரிப்பில் இருந்த ஆறு உதிரிச் செப்பேடுகளை ஆராய்ந்து அவற்றை பார்த்திவசேகரபுரம் செப்பேடு மற்றும் திருநந்திக்கரைச் செப்பேடு என்று பிரித்தார். திற்பரப்புச் செப்பேடு மற்றும் பாலியம் செப்பேடு என பிற செப்பேடுகளுடன் இணைத்து அவற்றை திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை எண் ஒன்றில் (1910-1913) வெளியிட்டார். இவை ஆய் மன்னர்களின் வரலாற்றின் முதற்கட்ட ஆதாரங்களாக ஆயின. பின்னர் தெற்கு திருவிதாங்கூரில் பத்மநாபபுரம், கேரளபுரம், திருவிதாங்கோடு பகுதிகளில் கண்டெடுத்த ஆய் அண்டிரன் போன்ற ஆய் குலத்து அரசர்களின் கல்வெட்டுச் சான்றுகளும், அஞ்சினான்புகலிட எல்லைக் கற்களும் தமிழ் வரலாற்றாய்வில் திருப்புமுனைகளாக அமைந்தன.

காந்தளூர் சாலை

சோழர்களின் கல்வெட்டுகளில் ராஜராஜ சோழனின் முதன்மை வெற்றிகளில் ஒன்றாகச் சொல்லப்படும் 'காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி' என்னும் வரியில் குறிப்பிடப்படும் காந்தளூர் எது என்னும் விவாதம் உருவான தொடக்க காலகட்டத்தில் திருவனந்தபுரம் சாலை பகுதியிலுள்ள காந்தளூர் ஜ்வாலா மகாதேவர் ஆலயம்தான் அது என்று திருவனந்தபுரம் மதிலகம் ஆவணங்கள் மற்றும் அந்த ஆலயத்திலுள்ள ராஜேந்திர சோழனின் சிதைந்த கல்வெட்டு ஆகியவற்றைச் சான்றாக்கி கோபிநாத ராவ் நிறுவினார். இது குறித்துப் பல கோணங்களிலான விவாதங்கள் உண்டு என்றாலும் அவருடைய தரப்பே முதன்மையாகக் கருதப்படுகிறது.

ஆய்வு முறைமை

"தன் கண்டுபிடிப்புகளை முன்வைப்பதில் தேர்ந்த ஆய்வாளருக்குரிய தற்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த முன்னோடி டி.ஏ.கோபிநாத ராவ். ஆவணத்தின் அசல் எழுத்து வடிவம், அதன் சமகால தமிழ் வடிவம், அதன் மீது சுருக்கமான அறிமுகம், அதன் ஆங்கில மொழியாக்கம், அதன் முத்திரையச்சு (Estampage) என அமைப்பது அவருடைய வழக்கம். அவ்வழக்கமே பின்னர் ஒரு நிலையான முறைமையாக ஆகியது" என கேரள தொல்லியல்துறை இணையதளக்குறிப்பு குறிப்பிடுகிறது.

பங்களிப்பு

தமிழகம் மற்றும் கேரளத்தின் வரலாறு முறையாக எழுதப்பட்ட தொடக்க காலகட்டத்தில் அடிப்படைத் தரவுகளைத் திரட்டும் பணியில் முதன்மைப் பங்களிப்பை ஆற்றியவர் டி.ஏ. கோபிநாத ராவ். அவருடைய பங்களிப்பு ஆறு களங்களில்:

  1. சோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகளை ஆராய்ந்து பதிவுசெய்தார். கல்வெட்டாய்விலும் செப்பேட்டாய்விலும் பொருள்கொள்வதற்கான தொடக்கங்களை உருவாக்கினார். அன்பில் செப்பேடு வழியாகப் பிற்காலச் சோழர்களின் வம்சாவளியை சுந்தர சோழர் வரை வகுத்தார், அதுவே பிறகு வந்த கல்வெட்டுகளின் காலக்கணிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.
  2. தொல்தமிழகத்தின் ஆய் குலத்து அரசர்களின் வரலாற்றை விளக்கும் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கண்டடைந்து ஆராய்ந்து பதிப்பித்தார்
  3. திருவிதாங்கூர் அரசர்களின் வரலாற்றை முறைப்படி எழுதுவதற்கான தரவுகளைக் கண்டடைந்தார்
  4. திருவிதாங்கூர் பகுதியின் சமண பௌத்த மையங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து அடிப்படையான முடிவுகளை உருவாக்கினார். அவை தமிழகச் சமண, பௌத்த மையங்கள் குறித்த ஆய்வுகளுக்கு வழிகாட்டின.
  5. கேரள கிறிஸ்தவ இஸ்லாமியப் பண்பாட்டின் ஆரம்ப கட்டங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்தார். பாலியம் சாசனங்கள், தரிசாப்பள்ளி சாசனங்கள் பற்றிய அவருடைய ஆய்வுகள் முன்னோடியானவை
  6. இந்து சிற்பவியல் பற்றிய கோபிநாத ராவின் ஆய்வு முன்னோடியான பெரும் முயற்சி. இந்து சிற்பங்களை அட்டவணையிட்டு ஆவணப்படுத்துவதன் வழியாக அவற்றின் இலக்கணம் பற்றிய புரிதலை உருவாக்கியது அந்நூல்.

நூல்கள்

  • Elements of Hindu Iconography (4 volumes)
  • Chola Dynasty History Summary
  • Copper-Plate Inscriptions Belonging to the Sri Sankaracharya of the Kamakoti-Pitha
  • Trvancore Archeological Series

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2025, 22:58:35 IST