under review

துகில் விடு தூது

From Tamil Wiki
துகில் விடு தூது

துகில் விடு தூது (பதிப்பு: 1927) காதல் கொண்ட தலைவியின் பால் தலைவன் துகிலைத் தூதாக விடுத்ததைக் கூறும் சிற்றிலக்கியம். இதன் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை. திருநெல்வேலி எஸ். முத்தைய பிள்ளை இந்நூலைப் பதிப்பித்தார்.

வெளியீடு

துகில் விடு தூது நூல், 1927-ல், திருநெல்வேலியைச் சேர்ந்த புத்தக விற்பனையாளர் எஸ். முத்தைய பிள்ளையால் எஸ். வையாபுரிப் பிள்ளையின் வழிகாட்டலின் படிப் பதிப்பிக்கப்பட்டது. திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி விலாசம் பிரஸில் அச்சடிக்கப்பட்டு வெளியானது.

துகில் விடு தூது நூல், சிற்றிலக்கியக் களஞ்சியம் - 5 தொகுப்பு நூலில், 12-வது நூலாக இடம் பெற்றது. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். 2023-ல், மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது.

நூல் அமைப்பு

துகில் விடு தூது நூலின் தொடக்கத்தில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து கலிவெண்பாவால் ஆன 305 கண்ணிகள் உள்ளன. நூலின் இறுதியில் வாழ்த்து இடம்பெறுகிறது.

உள்ளடக்கம்

துகில் விடு தூது நூலின் தொடக்கத்தில் துகிலின் சிறப்பு பாராட்டப்படுகிறது. தொடர்ந்து பாட்டுடைத் தலைவனின் பவனி வருகை, பவனியைக் கண்ட எழு வகைப் பெண்களின் நிலை போன்றவை விளக்கப்பட்டுள்ளன. பாட்டுடைத் தலைவன் பவனி வந்தபோது அவனைக் காண வந்த பெண்களில் ஒருத்தி மீது ஒருவன் காதல்கொள்கிறான். அவள் மீதான நினைவுடன் அங்குள்ள காளி கோட்டத்துக்குச் சென்று கண்ணயர்கிறான். கனவில் அவளோடு இன்புற்றதாக உணர்ந்து கண்விழிக்கிறான். பின் அனைத்தும் கனவே எனத் தெளிவு பெற்று, மாறாக் காதலால் துகிலைத் தூதாக அவள் பால் அனுப்புகிறான். இதுவே ‘துகில் விடு தூது’ நூலின் உள்ளடக்கம்.

பாட்டுடைத் தலைவன் பற்றிய உள்ளடக்கம், அவன் மீதான தசாங்கம், அவனது வம்ச வரலாறு, தலைவனின் பெருமை, அரிய குணங்கள் ஆகியன துகில் விடு தூதில் இடம்பெற்றுள்ளன.

பாடல் நடை

துகிலின் சிறப்பு

தேசாதி தேசர்வந்து சேரக் கடைமுகப்பி
லாசார மென்றிருக்கு மையனே - மாசில்லாக்
கொத்திணங்கா யங்காடிக் குள்ளே யமைந்துமின்னார்
வத்திரத்துக் கொப்பான வத்திரமே - நித்தியமுந்
தொட்டகையால் வாரி யுடுத்தலாற் சூழ்ந்தநில
வட்டமெனப் பேர்படைத்த வட்டமே - யிட்டமுள்ளோர்
நாடியுனை யெடுத்து நற்பூவும் போடுதலாற்
கோடிகமென் றேவிளங்குங் கோடிகமே - நீடு
மகிலமிசை யாங்கிறையம் பார்த்திடலா லம்புத்
துகிலைநிக ரான துகிலே

பாட்டுடைத் தலைவனின் சிறப்பு

போரரண மிட்டவொன்னார் பொன்முடியெ லாங்குவித்து
வீரரணக்கொலுவில் வீற்றிருந்தோன் - பாருலகில்
செங்கதிரும் வெண்மதியும் தெற்குவடக் காய்வரினு
மங்கதிரும் வேலைதிட ராய்விடினு - மிங்கிதமாய்
வார்த்தை பழுதுரையான் வைத்தவா ரந்தவறான்
கூர்த்த கருணைகுடி கொண்டபிரான் - நீர்த்திரைசூழ்
பூவும் மலர்விரும்பு பொன்னும் கொளப்புயமும்
கோவு மிடங்கொடுத்த கோவேந்தன்- பாவலவர்
பாடியபா மாலைகொண்டு பல்லக்குந் தண்டிகையுங்
கோடி நிதியுங் கொடுத்தபிரான் - நீடிய
பூகண்ட லோகம் பொதுநீக்கித் தான்புரக்க
ஆகண்ட லன்போ லவதரித்தோன் - தாகமிகும்
பாவலவன் பின்னடந்தோன் பார்த்தனுக்குத் தேரூர்ந்த
மாவலவன் போனடத்தும் வல்லமையான் - மாவலிபால்
அன்று படியளந்தான் அப்புலவர்க் கிப்புலவர்க்
கென்று படியளப்பேனென்ன வந்தோன்

கனவும் நனவும்

காதல்கொண்ட பாவி கனவைநன வாகவெண்ணிப்
பாதகிமார் பைத்தடவிப் பார்த்தேனே - யேதுசொல்வேன்
வட்டமுலையு மணிவடமு மென்கரத்திற்
றட்டவுங்கா ணேன்மனது தட்டழிந்தேன் - பொட்டெனவுங்
கண்ணைவிழித் தேனவளைக் காணேன் கனவில்வந்த
பெண்ணை நினைத்துமனம் பேதலித்தேன் - பெண்ணரசி
மஞ்சள் துவண்ட மணமெங்கே யென்மார்பில்
செஞ்சரணம் பட்ட சிவப்பெங்கே - வஞ்சி
பருகு மிதழிற் பதித்தகுறி யெங்கே
இருதுடையில் வைத்தநக மெங்கே - பெரிய
தனக்குவட்டி னாலெழுது சந்தனப்பூச் செங்கே
யெனக்கு முடித்தமல ரெங்கே - நினைக்கிலொன்றுங்
காணே னடிச்சுவடுங் காணே னறியாமல்
வீணே பதறி விழித்தேனே - நாணினேன்

துகிலைத் தூது செல்ல வேண்டுதல்

வாதுகிலே சந்துரைக்க மாட்டாயேல் வேள்பொருத
வாதுகிலே சந்துடைக்க மாட்டேனே - யேதுசெய்வே
னேரிழையைக் கூட்டி நெருக்கிநெய்த வத்திரமே
நேரிழையைக் கூட்டிவைக்க நீயாமே - வாரிசமாம்
பூமானங் காத்த புணர்முலைமேற் சேர்ப்பாயே
பூமானங் காத்த புடவையே - மாமனைக்க
ணம்பரமே யென்கவலை யாய்வீசி னாளயர்ந்தேன்
அம்பரமே யென்கவலை யாற்றாயோ - செம்பொனிறம்
வாய்த்துடுக்கச் சீராய்நீ தூதுசென்றால் மாதர்சொல்லும்
வாய்த்துடுங்குஞ் சீராய் வழங்குமே - தோய்த்தபைம்பொற்
கண்டையே சேருமிழைக் காழகமேயென்விரகங்
கண்டையே சேரும்வகை காட்டாயே

மதிப்பீடு

துகில் விடு தூது நூல் சொற்சுவை, பொருட்சுவை, இலக்கிய, இலக்கணச் சிறப்பு, சிலேடை நயம் போன்ற நயங்களைக் கொண்டது. துகிலைத் தூதாக விடுத்து இயற்றப்பட்ட அரிய நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:21:46 IST