தீன்மதி நாகனார்
தீன்மதி நாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
தீன்மதி நாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். நாகனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். குறிஞ்சி நிலத்தை சேர்ந்தவர். தீன்மிதி நாகனார், தீமிதி நாகனார் என பிற பெயர்களிலும் குறிக்கப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
தீன்மதி நாகனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 111-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. களவு ஒழுக்கம் நீங்கி கற்பு ஒழுக்கத்தின் படி தலைவியை மணந்து கொள் என தலைவனுக்கு கேட்கும்படி தலைவியிடம் தோழி கூறுவதாக குறிஞ்சி திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- காதல் நோயால் வாடும் பெண்ணுக்கு முருகு என்னும் தெய்வம் வந்துள்ளதாகக் கருதி, அன்னையும் சுற்றமும் வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்துவர்.
- உவமை: கைமடக்கி படுத்து கிடக்கும் பெண்யானையை கற்பாறை என மயங்குவது போல தலைவியின் காதல் நோயை முருகு தெய்வம் பிடித்துவிட்டதாக நினைக்கும் சுற்றத்தாரின் எண்ணம் நகைப்பிற்குரியது.
பாடல் நடை
குறுந்தொகை - 111
- திணை: குறிஞ்சி
- துறை: வரைவு(திருமணம்)நீட்டித்த வழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 111:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jan-2025, 22:06:42 IST