under review

திருப்போரூர் முருகன் தாலாட்டு

From Tamil Wiki

திருப்போரூர் முருகன் தாலாட்டு (பதிப்பு: 2018) திருப்போரூரில் உறையும் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இதன் ஆசிரியர்: ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்.

வெளியீடு

திருப்போரூர் சன்னதி முறையில் இடம்பெற்ற திருப்போரூர் முருகன் தாலாட்டு நூலை, ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வழிபாட்டுச் சங்க அறக்கட்டளை, 2018-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர்: சிதம்பர சுவாமிகள். உரையாசிரியர்: புலவர் மாசிலாமணி. திருப்போரூர் முருகன் சந்நிதி முறை தொகுப்பில் இந்நூல் இடம்பெற்றது.

ஆசிரியர்

சிதம்பர சுவாமிகள் (சிதம்பர அடிகள்) வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். திருப்போரூரில் கோயில் கொண்ட முருகன் மேல் பல துதி நூல்களை இயற்றியவர்.

நூல் அமைப்பு

திருப்போரூர் முருகன் தாலாட்டு நூல், முருகப்பெருமான் குழந்தைப் பருவத்தில் திருக்கண் வளர, உமையம்மையின் தோழியர்கள் சிவஞானமாகிய தொட்டிலில் கிடத்திப் பாடல் பாடும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றது. காப்புச் செய்யுள் நீங்கள் 41 கண்ணிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கண்ணிகள் அனைத்தும் இரண்டடி தம்முள் ஒத்து குறள் வெண்செந்துறையில் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

திருப்போரூர் முருகன் தாலாட்டு நூலில் முருகப்பெருமானின் சிறப்பும், பெருமையும் விளக்கப்பட்டுள்ளன. தேவலோகத்தில் தேவர்கள் அனைவரும் உறவினராகிச் சூழ்ந்துக்கொண்டு வாழ்த்துதல், அப்பொழுது முருகப்பெருமான் ஐராவதம் என்னும் வெள்ளை யானையின்மீது வலம் வந்த செய்தி, பொதிய மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் மனத்திலுள்ள ஆணவ இருளைப் போக்கிய செய்தி, பிரமனால் அறிய இயலாத பிரணவத்தின் உட்பொருளை சிவபெருமான் செவியில் ஓதிய செய்தி உள்ளிட்ட பல செய்திகள் இந்நூலில் இடம்பெற்றன.

பாடல்

பூமாது நாமாது போகசுக மாமாது
தாமேவு போரூர்ச் சரவண நாயகனோ

மாணிக்க மால்வரைமேல் மன்னுசெக்கர் வானமென
வேணிப்பி ரான்தோளின் மேவுஞ் சிறுகுருந்தோ

உலகீன்ற மாதா உதவியபால் கஞ்ச
மலர்வாய்கள் ஆறும் மணக்கின்ற வான்குருந்தோ

பெண்ணாய்ந்த கற்புப் பிடியும் பிணைமானுங்
கண்ணாரக் கண்டு களிக்கவரு கற்பகமோ

நீலமயில் வாகனனோ நெட்டிலைவே லாயுதனோ
கோலநிறை கோழிக் கொடிபடைத்த சேவகனோ

ஆறிரண்டு தோளானோ ஆறு முகத்தானோ
தேறுமறை கொஞ்சும் சிறுசதங்கைத் தாளானோ

மதிப்பீடு

திருப்போரூர் முருகன் தாலாட்டு நூல், எளிய நடையும் இனிய சந்தமும் கொண்டுள்ளது. முருகன் மீதான பக்தி இலக்கியங்களில் ஒன்றாகவும், 17-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • திருப்போரூர் முருகன் தாலாட்டு, ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வழிபாட்டுச் சங்க அறக்கட்டளை, திருப்போரூர்; முதல் பதிப்பு: 2018.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Oct-2025, 11:34:29 IST