under review

திருப்புல்லாணி நொண்டி நாடகம்

From Tamil Wiki
திருப்புல்லாணி நொண்டி நாடகம்

திருப்புல்லாணி நொண்டி நாடகம் (முதல் பதிப்பு:2007), நொண்டி நாடக வகை நூல்களுள் ஒன்று. திருப்புல்லாணி இறைவன்‌ மீது பாடப்பட்டதால், ‘திருப்புல்லாணி நொண்டி நாடகம்’ என்ற பெயர் பெற்றது. கள்ளர்‌ குலத்தில்‌ பிறந்து, திருட்டுத்‌ தொழில்‌ மேற்கொண்டு, தீமைகள்‌ பல செய்து, மாறுகால்‌ மாறுகை வாங்கப்பட்ட நொண்டியானவன்,‌ மனம்‌ திருந்தி திருப்புல்லாணி இறைவனை வேண்டிக்‌ காலைப்‌ பெறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் கவி. உ.வே. ஸ்ரீ வீரராகவ ஐயங்கார்.

பதிப்பு, வெளியீடு

திருப்புல்லாணி நொண்டி நாடகம், 2007-ல், ஓலைச்சுவடியிலிருந்து நேரடியாக நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. ஓலைச்சுவடிகளில் இருந்து பல நூல்களைப் பதிப்பித்த ஆசியவியல்‌ நிறுவனம்,‌ இதனைப் பதிப்பித்தது. யுனெஸ்கோ நிறுவன நிதி உதவியுடன் இந்நூல் வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியர்: ஜான் சாமுவேல். ஆசிரியர்கள்: ஆர். ஜெயலட்சுமி, எம். மருதமுத்து. இச்சுவடியின் காலம் பொ.யு. 17-ம் நூற்றாண்டு.

(ரோஜா முத்தைய நூலகச் சேகரிப்புத் தரவின் படி, திருப்புல்லாணி நொண்டி நாடகம், இந்தப் பதிப்புக்கு (2007) முன்பே, ஆழ்வார் திருநகரி திருஞானமுத்திரைப் பிரசுராலயத்தாரால், 1968-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்: கவி. உ.வே. ஸ்ரீ வீரராகவ ஐயங்கார்)

ஆசிரியர் குறிப்பு

திருப்புல்லாணி நொண்டி நாடகத்தை இயற்றியவர், கவி. உ.வே. ஸ்ரீ வீரராகவ ஐயங்கார். இவர் சேதுபதி சமஸ்தானத்தின் மகாவித்வான். முத்தமிழ்க்கடல் என்று போற்றப்பட்டார். 'சேது நாடும் தமிழும்', 'அசுவத்த விருட்சப் பாட்டு' போன்றவை இவர் இயற்றிய பிற நூல்கள்.

நூல் அமைப்பு

திருப்புல்லாணி நொண்டி நாடகம், சிந்துப் பாடல் வகையில் அமைந்துள்ளது. ஆங்காங்கே விருத்தப் பாடல்கள் சில இடம் பெற்றுள்ளன. திருப்புல்லாணி நொண்டி நாடகத்தில்‌, காப்பாக கலியன்‌ (திருமங்கையாழ்வார்‌), நம்மாழ்வார்‌, சேனை முதலியார்‌, கருடன்‌, ஆதிசேடன்‌ ஆகியோர்‌ மீதான துதி இடம் பெற்றுள்ளது.

கதை

நொண்டியான சோரசூரன் என்பவன்‌ சபைக்கு வந்து தன் வரலாற்றைக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. சோரசூரனின் பிறப்பு, வரலாறு, குலப்பெருமை, ஆற்றாப்புலி என்பவனோடு பந்தயம்‌ வைத்துத் தோற்றுப் போதல்; தலயாத்திரை செல்லுதல்; ஒரு பெண்ணின்‌ ஆபரணங்களைத்‌ திருடுதல்; தாசியிடம்‌ மோகம்‌ கொண்டு அவற்றை இழத்தல்; அவள்‌ வீட்டிலேயே திருடி, திருடிய பொருளைப்‌ புதைத்தல்‌; புதைத்த பொருள்‌ களவு போதல்‌, பின் கள்ளர்களுடன் சேர்தல் ஆகியவற்றை சோரசூரன் விவரிக்கிறான். தொடர்ந்து தான் ஈஸ்வர யோகியிடம்‌ சென்றது, கேரள அரசனின்‌ தன அதிகாரியாதல்; சேதுபதி அரண்மனையில்‌ சேனாதிபதியாதல்; மீண்டும்‌ தாசியிடம்‌ சென்று, மீண்டும்‌ திருடுதல்‌; திருட்டு கண்டறியப்பட்டு மாறுகால்‌, மாறுகை வாங்கப்படுதல்‌; மனம் வருந்தி, திருந்தி திருப்புல்லாணி சென்று இறைவனை வழிபடுதல்; தன்‌ கால், கைகளைப்‌ பெறுதல்‌ ஆகியவற்றை அவன் விவரிப்பதுடன் கதை நிறைவடைகிறது. வாழி பாடலுடன்‌ நூல் முடிவடைகிறது. இதில் வழக்கமாக நொண்டி நாடகங்களில் இடம்பெறும் ‌தோடயம்,‌ நூற்பயன்‌ போன்றவை இடம்பெறவில்லை. ”இந்நூலைப்‌ படித்தவர்,‌ கேட்டவர்‌ வாழி” என்ற குறிப்பு மட்டும் இடம்பெற்றுள்ளது.

நூல் மூலம் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்

அக்கால மக்களிடையே புழக்கத்தில் இருந்த பல்வேறு பழமொழிகள், சகுனம் போன்ற நம்பிக்கைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. பொருத்தமான உவமைகள், சிலேடைகள், அடுக்குமொழிகள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. பேச்சு வழக்குச் சொற்களும், பிற மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளன.

இராம கதையைக்‌ கேட்டவுடன்‌, “இராமரோடு போருக்கு வருகிறேன்‌” என்று கூறிய சேர அரசன்‌, பாம்புக்‌ குடத்தில்‌ கைவிட்ட குலசேகரப்‌ பெருமாள்‌, சேரமான்‌ பெருமாள்‌, மார்த்தாண்டன்‌ முதலிய சேர அரசர்கள்‌ வழிவந்த அனந்த பத்மநாபதாசன், 72 பாளையப்பட்டு அதிபர்களால் தொழப்பட்ட மன்னர் சேதுபதி போன்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் நூலில் இடம் பெற்றுள்ளன. சோழ அரசனாகிய இராஜாதிராஜன்‌ கொப்பம்‌ என்னும்‌ இடத்தில்‌ பகையை வென்று ஆயிரம்‌ யானையை வீழ்த்திக்‌ கொப்பத்துப்பரணி என்னும்‌ இலக்கியம்‌ பெற்ற செய்தி நூலில் குறிப்பாக இடம் பெற்றுள்ளது. திருமாலிருஞ்சோலை, மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொடங்கி சிக்கல், புல்லாணி, இராமேஸ்வரம் என பல்வேறு ஊர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மதிப்பீடு

மக்கள்‌ விரும்பும்‌ காட்சி வடிவிலும்‌, பாட்டு வடிவிலும்‌ வெளிவந்த இலக்கியங்கள் குறவஞ்சி, நொண்டி, பள்ளு ஆகியன. இவற்றுள் நொண்டி நாடகம் மக்கள் இலக்கியமாகக் கருதப்படுகிறது. எள்ளலை அடிப்படையாகக்‌ கொண்டு தோன்றிய இந்நாடகங்கள்,‌ மக்களைக்‌ களிப்பூட்டி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களைப் போதிப்பதைத் தமது நோக்கமாகக்‌ கொண்டு அமைந்தன. திருப்புல்லாணி நொண்டி நாடகமும் அவற்றுள் ஒன்றாக அமைந்துள்ளது. இலக்கிய நயமும்‌, வரலாற்றுச்‌ செய்தியும்‌, நாட்டுப்புறக் கூறுகளும்‌ உள்ளடக்கிய நூலாக திருப்புல்லாணி நொண்டி நாடகம் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page