under review

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

From Tamil Wiki

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். திருவில்லிப்புத்தூருக்கு அருகில் உள்ள திருத்தண்கால் ஊரில் பிறந்தவர். ஆத்திரேய கோத்திரத்தை சேர்ந்த அந்தணர். செங்கண்ணன் என்னும் இயற்பெயர் உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் பாடிய பாடல் நற்றிணையில் 386-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பரத்தையரை மறுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதற்காக திரும்பியிருக்கும் தலைவன் மீதான வியப்பைத் தோழியிடம் தலைவி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மலையில் வாழும் மக்கள் பெரிய இடைவெளிவிட்டு கட்டிய கண்ணி மாலையை அணிந்திருப்பர். மலை நிலத்தை உழுது தினை நெல்லை பயிரிட்டு வளர்ப்பர்.
  • சிறிய கண்களையும் மிகு சினத்தையும் தன் இயல்பாக கொண்ட ஆண் காட்டு பன்றி மலை நில மக்களின் வயலில் புகுந்து தினைப்பயிர்களை தின்னும்.
  • குறிஞ்சி நிலத்தில் மக்கள் கற்களை ஒன்றுடன் இணைத்து கட்டிய சிறுவீடுகளில் வாழ்வர்.
  • ஆண் காட்டு பன்றி தனது பசி தீர்ந்த புலி வாழும் கற்குகைக்கு சென்று, புலிக்கு அஞ்சாது உறங்கும்.
  • தன் சொல்லை காப்பற்றுவேன் என்பதற்காக மக்களிடையே தெய்வங்கள் மேல் சூளுரைத்தல் (உறுதி கூறுதல்) என்னும் வழக்கம் இருந்தது.
  • சமூகத்தில் சான்றோர் என கருதப்பட்டோர் எப்போதும் சொல்படியே நடப்பதால் சூளுரைப்பதில்லை. பொய்யரே சூளுரைப்பர் என்ற எண்ணமும் இருந்தது.

பாடல் நடை

நற்றிணை - 386

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: பரத்தையிற் மறுத்தந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்.
அணங்குடை அருஞ் சூள் தருகுவென நீ,
நும்மோர் அன்னோர் துன்னார் இவையென,
தெரிந்து அது வியந்தனென் தோழி! பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
வதுவை என்று அவர் வந்த ஞான்றே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 09:53:43 IST