under review

டி.பி. ராய் சௌத்ரி

From Tamil Wiki
ராய் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராய் (பெயர் பட்டியல்)
டி.பி. ராய் சௌத்ரி
இந்திய தபால் தலையில் ராய் சௌத்ரி உருவாக்கிய உழைப்பாளர் சிலை (நன்றி: https://www.theheritagelab.in/)

டி.பி. ராய் சௌத்ரி (தேவி பிரசாத் ராய் சௌத்ரி)( ஜூன் 15, 1899- அக்டோபர் 15, 1975) இந்தியாவைச் சேர்ந்த நவீன சிற்பி மற்றும் ஓவியர். வங்காளத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் பொது அடையாளங்களில் ஒன்றான உழைப்பாளர் சிலை (Triumph of Labour), இந்திய அளவில் புகழ்பெற்ற சிற்பங்களான தண்டி யாத்திரை (Gyarah Murti) சிற்பத்தொகுதி, தியாகிகள் நினைவுச் சின்னம் (Martyrs Memorial) ஆகியவற்றை வடிவமைத்தவர். மெட்ராஸ் கலைப் பள்ளியின் (Madras School of Art) முதல் இந்திய முதல்வராக பணியாற்றி பாடத்திட்டத்தில் ஐரோப்பிய யதார்த்தவாதத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் ஐரோப்பியாவில் யதார்த்தவாதத்திற்கு அடுத்து வந்த நவீனக்கலை போக்கு தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் அறிமுகமாக ஒருவிதத்தில் தொடக்கமாக அமைந்தவர். லலித் கலா அகாடமியின் முதல் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய அரசின் பத்மபூஷண், ஆங்கில அரசின் எம்.பி.இ (M.B.E- Member of the order of the British Empire) உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.

இந்திய ரூபாய் நோட்டின் பின்புறம் இடம்பெற்ற ராய் சௌத்ரி உருவாக்கிய தண்டி யாத்திரை சிற்பம் (நன்றி: probashionline.com)

பிறப்பு, இளமை, கல்வி

Chowdhury working on the statue of Motilal Nehru

ராய் சௌத்ரி ஜூன் 15 1899-ல் பிரிவினைக்கு முன்பிருந்த அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் வங்கத்தின் ரங்பூரில் உள்ள தாஜ்ஹட் எனும் இடத்தில் பிறந்தார். முரஹஜாவை சேர்ந்த நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் ராஜா கேசபேஷ்வர் ராயின் வழிவந்தவர் ராய் சௌத்ரி. ரவீந்திரநாத் தாகூரின் தூரத்து உறவினர். அப்பா பெயர் உமா பிரசாத் ராய் சௌத்ரி. ராய் சௌத்ரியின் தாத்தா ஹரிபிரசாத் ராய் சௌத்ரி சமஸ்கிருதம், அரபி மொழிகளில் அறிஞராக இருந்தார்.

சௌத்ரி தனது குழந்தைப் பருவத்தை தாஜ்ஹட்டில் கழித்தார். கல்கத்தா சென்று கேலட் சந்திரா, மித்ரா ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றார். இளம் வயதிலேயே படிப்பை விட அதிகமாக கலையில் ஈடுபாடு இருந்ததால் அவரது தந்தை ராய் சௌத்ரியை ரவீந்திரநாத் தாகூரின் மருமகனும் இந்திய நவீனக் கலையாளுமையும் ஆன அபனீந்திரநாத் தாகூரிடம் ஓவியம் கற்க அனுப்பினார். ராய் சௌத்ரி தன் இருபதாவது வயதில் அபனீந்திரநாத் தாகூரின் மாணவரானார். தாகூர்களின் புகழ்பெற்ற ஜொராசங்கோ இல்லத்தில் அபனீந்திரநாத் தாகூரின் வழிகாட்டுதலுடன் ஓவியத்தின் அடிப்படைகளை, வங்காளப் பள்ளியின் கழுவும் முறையிலான ஓவிய நுட்பங்களை (wash technique of Bengal school) கற்றுக் கொண்டார். அபனீந்திரநாத் தாகூர் வங்காளத்தின் பட்டசித்ரா ஓவியங்களை நகலெடுத்து பழக ஆலோசனை வழங்கிய போது அவருடன் முரண்பட்டார். அப்போது தான் பயின்று கொண்டிருந்த இந்தியன் சொசைட்டி ஆஃப் ஓரியண்டல் ஆர்ட்டை (Indian Society of Oriental Art) விட்டு வெளியேறினார். அபனீந்திரநாத் தாகூரின் கலை வழிகாட்டுதலையும் விட்டு விலகினார்.

அடுத்த மூன்று வருடங்கள் அபனீந்திரநாத் தாகூர் முன்வைத்த இந்திய மரபு கலைக்கு முற்றிலும் மாறான மேற்கத்திய முறையிலான நேர் காட்சிகள் (life drawing), உருவப்படங்கள் (portrait drawing) வரையும் ஓவிய முறைகளை சிக்னர் போயஸ் என்ற இத்தாலிய ஓவியரிடம் கற்றார். வாழ்நாள் முழுவதும் ராய் சௌத்ரி படைத்த யதார்த்த (realistic) மனித உருவங்களுக்கு போயஸிடம் பெற்ற இந்தப் பயிற்சியே அடிப்படையாக இருந்தது. இதற்கிடையில் வங்காளப் பள்ளிக்கு அன்றிருந்த செல்வாக்கை உணர்ந்த சௌத்ரி மறுபடியும் அபனீந்திரநாத் தாகூரிடம் இணைந்தார். சௌத்ரியின் சமீபத்திய ஓவியங்களைப் பார்த்த பிறகே திரும்பி இணைய அனுமதி வழங்கிய அபனீந்திரநாத் தாகூர், இந்த முறை சௌத்ரி செயல்படத் தேவையான சுதந்திரத்தை வழங்கினார். ஆனால், அபனீந்திரநாத் தாகூரின் அணுக்கமான மாணவராக மாறிய ராய் சௌத்ரி, இந்தியன் சொசைட்டி ஆப் ஓரியண்டல் ஆர்ட்டில் பயிலப்படும் கலைப் பாணியை விட மேற்கத்திய நுட்பங்களே சிறந்தவை என்ற எண்ணம் கொண்டிருந்ததால் மீண்டும் அபனீந்திரநாத் தாகூருடன் விலகல் உருவானது. ஆனாலும் இருவருக்குமான உறவு முழுவதுமாக துண்டிக்கப்படவில்லை.

இந்தியன் சொசைட்டி ஆப் ஓரியண்டல் ஆர்ட்டின் கலை வகுப்புகளில் கற்பிப்பதில் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் மேற்கத்திய ஓவிய முறைகளை கற்பித்தார் சௌத்ரி. அபனேந்திரநாத் தாகூரின் சிற்பத்தை வடிப்பதில் ராய் சௌத்ரி ஈடுபட்டிருந்த போது, அபனேந்திரநாத் தாகூர் சௌத்ரியிடம் கல்கத்தாவில் அன்று புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவரான ஹிரோண்மோய் ராய் சௌத்ரியின் வழிகாட்டுதலை பெறுமாறுஅறிவுறுத்தினார். அதன்படி ராய் சௌத்ரி சிற்பக்கலையை ஹிரோண்மோய் ராய் சௌத்ரியிடம் பயின்றார்.

ராய் சௌத்ரி லண்டன் ராயல் அகாடமியில் பயிற்சி பெற விரும்பிய போது குடும்பத்தினர் ஆதரவும் பொருளுதவியும் தர மறுக்கவே வசதியான பிரபு குடும்ப வாழ்க்கையைத் துறந்து கல்கத்தாவில் அலைந்தார். வருமானத்திற்காக நாடகங்களுக்கான காட்சிகள் வரையும் ஒரு ஓவியருக்கு உதவியாளர் வேலை, எஃகு வேலைப்பாடுகளுக்கு வண்ணம் தீட்டுதல், சட்டமிடப்பட்ட படங்களை தெருவில் சுமந்து விற்றல் போன்ற வேலைகள் செய்தார். ஒரு கட்டத்தில் அஷுதோஷ் முகர்ஜியின் உதவி கிடைக்கவே மித்ரா கல்வி நிறுவனத்தில் மாதம் ரூபாய் 40 ஊதியத்தில் ஓவிய ஆசிரியர் வேலை கிடைத்தது. அதற்கு நன்றிக் கடனாக பிற்பாடு அஷுதோஷ் முகர்ஜியின் 3.5 மீட்டர் உயரச் சிலையை உருவாக்கினார் சௌத்ரி. தொடர்ந்து ராய் சௌத்ரியின் பொருளாதாரமும் படைப்புச் செயல்பாடுகளும் மேம்படத் துவங்கின.

அவரது படைப்புகள் பற்றி பத்திரிகைகள் நேர்மறையாக எழுதின. ஸ்டெல்லா க்ராம்ரிச், டாக்டர். காளிதாஸ் நா, திரு. பெர்சி பிரவுன், ஓ.சி. கேங்கொலி போன்ற முக்கியமானவர்களின் பாராட்டையும், விருதுகள், அங்கீகாரங்களும் பெற்றார். பல முக்கியஸ்தர்களின் தொடர்பும் அவர்களின் உருவங்களை வடிக்கும் வாய்ப்பும் ராய் சௌத்ரிக்கு கிடைத்தது. அபனீந்திரநாத் தாகூர், பெர்சி பிரவுன் தம்பதிகள், ஜே.சி. போஸ் ஆகியோரின் உருவங்களையும் சிற்பமாக வடித்தார். அதன் பின்னர் ராய் சௌத்ரி தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். மெட்ராஸ் கலைப்பள்ளியின் முதல்வரானார்.

தனி வாழ்க்கை

ராய் சௌத்ரி தன் மனைவி சாருலதா சௌத்ரி மற்றும் மகன் பாஸ்கர் ராய் சௌத்ரியுடன்

ராய் சௌத்ரியின் முதல் மனைவி சுசீலா பர்மன் திருமணமாகி இரு வருடத்தில் மறைந்தார். இரண்டாவதாக லக்கிபூர் ஜமீன்தார் குடும்பத்தில் இருந்து திருமணம் செய்த சப்பொலா சௌத்ரி ஒன்றரை வருடத்தில் இறக்க மூன்றாவதாக டோலி என்று அழைக்கப்ப்ட்ட சாருலதா பானர்ஜியை மணந்தார்.

ராய் சௌத்ரி - சாருலதா தம்பதியினரின் மகன் பாஸ்கர் ராய் சௌத்ரி புகழ்பெற்ற நடனக் கலைஞர், நடிகர், ஓவியர். 1955-ல் நியூயார்க்குக்குக் குடிபெயர்ந்த பாஸ்கர் அங்கே 'பாஸ்கர் டான்ஸஸ் ஆப் இந்தியா' (Bhaskar Dances of India) என்ற நாட்டிய நிறுவனத்தை நடத்தினார். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இஸ்மாயில் மெர்ச்சென்ட் இயக்கிய 'தி க்ரியேஷன் ஆப் உமன்' (The Creation of Woman) என்ற நாட்டிய குறும்படத்தில் நடன அமைப்பாளராகவும் நடிகராகவும் பங்காற்றினார் பாஸ்கர். ஐ ட்ரிங்க் யுவர் பிளட் (I Drink Your Blood) என்ற ஆங்கிலப் படத்திலும், த்ரிசந்தியா, ஹர், குருசரண் சிங் இயக்கிய 'தி எபிடாப்'(The Epitaph), சத்யஜித் ரே இயக்கிய 'பிரதிதுவந்தி' போன்ற இந்தியப் படங்களிலும் பாஸ்கர் நடித்துள்ளார்.

மெட்ராஸ் கலைப் பள்ளியின் முதல்வர்

Sculpture of Travancore king Chithira Thirunal Maharaja by D.P. Roy Chowdhury in Pattom Thanupilla Park, Thiruvananthapuram

நவம்பர் 30, 1928-ல் ராய் சௌத்ரி மெட்ராஸ் கலைப் பள்ளியின் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மே 5, 1929-ல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் ஆகிய இரு பதவிகளையும் ஏற்றுக்கொண்டார். ஜூன் 1930-ல் ராய் சௌத்ரி மெட்ராஸ் கலைப் பள்ளியின் முதல் இந்திய முதல்வராகப் பதவியேற்றார். ராய் சௌத்ரி கலைப்பள்ளியின் முதல்வராகப் பதவியேற்ற பிறகு மேற்கத்திய முறையிலான பாடத் திட்டங்களை அங்கு அறிமுகப்படுத்தினார். இக்காலத்தில் பல குறிப்பிடத்தகுந்த படைப்புகளை உருவாக்கினார். மாணவர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தினார்.

1931-ம் ஆண்டு நடந்த கலைக் கண்காட்சி கலைப்பள்ளியின் புதிய முதல்வர் ராய் சௌத்ரி மாணவர்களிடையே செலுத்திய தாக்கத்துக்கும் செல்வாக்குக்கும் சான்றாக இருப்பதாக 'தி ஹிந்து' பத்திரிகை கருத்து தெரிவித்தது. ராய் சௌத்ரி முதல்வராக இருந்த காலத்தில் 1934-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு டிப்ளமோ வழங்கப்பட்டது. கலைப்பள்ளியை மேம்படுத்த அவர் வழங்கிய ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளை அரசு ஏற்றுக்கொண்டது. உபகரணங்கள், உதவியாளர்கள் கல்லூரிக்காகப் பெறப்பட்டன. 26 ஆண்டுகள் மெட்ராஸ் கலைப் பள்ளியின் முதல்வராக பதவியில் இருந்த ராய் சௌத்ரி 1957-ல் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தமிழ்நாட்டில் உள்ள ராய் சௌத்ரியின் படைப்புகள்

உழைப்பாளர் சிலை (Labour Statue, Triumph of Labour)
உழைப்பாளர் சிலை, சென்னை மெரினா கடற்கரை
Road makers, Medium: Oil

உடலுழைப்பாளர்களை பல முறை தன் படைப்புகளில் ராய் சௌத்ரி பதிவு செய்துள்ளார். 'சாலைப் பணியாளர்கள்' (Road makers) ஓவியம் ஒரு உதாரணம். அதன் உச்சமாக அமைந்தது உழைப்பாளர் சிற்பம். இச்சிற்பம் சென்னை மெரினா கடற்கரையின் அண்ணா சதுக்கம் பகுதியில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. சுமார் 10 அடி அகலமும் 8 அடி உயரமும் கொண்டது. அன்றைய தமிழக முதல்வரான காமராஜர் முன்னெடுப்பில் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதன் பகுதியாக இச்சிலை உருவாக்கப்பட்டது. 1923-ம் ஆண்டு மே மாதம் சென்னை மெரினா கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையில் தொழிலாளர்கள் நடத்திய மே தின போராட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இச்சிலை அமைக்கப்பட்டது. ஜனவரி 26, 1959 இந்தியக் குடியரசு தினத்தன்று அப்போதைய ஆளுநராக இருந்த விஷ்ணுராம் மேதியால் உழைப்பாளர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

உழைப்பாளர் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டது. கோவணத் துண்டைக் கட்டிக்கொண்டு கட்டுக்கோப்பான உடல் கொண்ட நான்கு உழைப்பாளர்கள் சேர்ந்து ஒரு பாறாங்கல்லைத் தள்ளும் முயற்சியில் உள்ளதாக இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர்களின் ஒற்றுமை, விடா முயற்சி, நம்பிக்கை ஆகிய கருதுகோள்களின் குறியீடாக இச்சிற்பம் உள்ளது. மெட்ராஸ் கலைப்பள்ளியில் இருந்த தனது கலைதொழிற்கூடத்தில் வைத்து இச்சிலையை ராய் சௌத்ரி உருவாக்கினார். உழைப்பாளர் சிலையின் நான்கு உருவங்களில் 2-வது & 4-வது உருவங்களுக்கு கலைப்பள்ளியின் அருகில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தவரும், பிறகு கலைப்பள்ளியின் இரவு காவலாளியாகவும் ஆன ஏ.பி. சீனிவாசன் என்பவரும் 1-வது & 3-வது உருவங்களுக்கு கலைப் பள்ளியின் மாணவராக இருந்த ராமுவும் உருவ மாதிரிகளாக (models) இருந்துள்ளனர். இன்று இச்சிலை உழைப்பாளர்களின் சின்னமாகவும் சென்னையின், தமிழ்நாட்டின் முக்கிய பொது அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஈவோ ஜீமாவில் (Iwo Jima) ஆறு அமெரிக்க கப்பற்படை வீரர்கள் கொடிநாட்டும் புகழ்பெற்ற புகைப்படத்தின் சாயல் இச்சிற்பத்தொகுதிக்கு உண்டு. உழைப்பாளர் சிலையின் இன்னொரு பதிப்பு டெல்லி தேசிய நவீன கலைக்கூட வளாகத்தில் உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 40-வது ஆண்டை முன்னிட்டு உழைப்பாளர் சிலை இந்தியத் தபால் தலையில் 1959-ம் ஆண்டு இடம் பெற்றது.

காந்தி சிற்பம்

காந்தி சிலை, சென்னை மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ராய் சௌத்ரியின் மற்றுமொரு படைப்பு காந்தியின் சிற்பம். அன்றைய காமராஜர் அரசு இச்சிற்பத்தை உருவாக்கும் பணியை ராய் சௌத்ரியிடம் ஒப்படைத்தது. தன் மேலாடை ஒரு முட்புதரில் சிக்குவதையும் பொருட்படுத்தாமல் காந்தி தன் ஊன்றுகோலுடன் நடந்து போகும் விதத்தில் அமைந்துள்ளது இச்சிற்பம். தடைகளைப் பொருட்படுத்தாமல் தன் இலக்கு நோக்கி பயணிக்கும் காந்தியின் இயல்பு இச்சிற்பத்தில் பதிவாகியுள்ளது. 13 அடி உயரம் கொண்ட இச்சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டு 12 அடி உயர பீடத்தின் மீது நிற்கிறது. அப்போது இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஏப்ரல் 14, 1959 அன்று இச்சிலையை திறந்து வைத்தார். இந்த காந்தி சிலை தண்டி யாத்திரை நினைவாக டெல்லியில் ராய் சௌத்ரியால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற சிற்பத் தொகுதியில்(Gyarah Murti) இருக்கும் காந்தி சிலையுடன் உருவத்தில் ஒத்திருக்கிறது.

வறுமை (Victims of Hunger)

Victims of hunger, Bronze, 78 X 36 cm, Government Museum, Chennai (Thank you:https://www.chennaimuseum.org/)

வறுமையின் துயரை வெளிப்படுத்தும் இச்சிற்பம் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இச்சிற்பம் 78 செ.மீ அகலமும் 36 செ.மீ உயரமும் உடையது. பசி மயக்கத்தில் ஒரு குழந்தை உடல் சோர்ந்து கவிழ்ந்து கிடக்க, அருகில் அக்குழந்தையின் தாய் கையறு நிலையில் தன் ஆடை விலகி விட்டதை உணரும் வலிமையும் இல்லாமல் வறுமையில் நலிந்த உடலுடன் இருக்கிறாள். அப்போதும் தாயின் ஒரு கை குழந்தையை அணைத்துள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதர படைப்புகள்

டி.பி. ராய் சௌத்ரி தான் உருவாக்கிய காந்தி உருவத்துடன், 1948

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இருக்கும் காந்தியின் மார்பளவு சிலை, குளிர்காலம் (When winter comes) சிற்பம், சில ஓவியங்கள், மெட்ராஸ் கவர்னராக இருந்த எர்ஸ்கினால் திறந்து வைக்கப்பட்டு இப்போது சென்னை அடையாறு பத்மநாபசுவாமி கோவிலின் வளாகத்தில் இருக்கும் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரைத் திருநாளின் சிற்பம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ராஜா அண்ணாமலையார் சிலை (இச்சிலையின் மற்றொரு பதிப்பு சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருக்கிறது), சென்னை தியாசபிக்கல் சொசைட்டியில் இருக்கும் அன்னிபெசன்ட், லீட்பீட்டர் சிலைகள் ஆகியவை ராய் சௌத்ரியால் உருவாக்கப்பட்ட படைப்புகள். அன்னிபெசன்ட்டின் உருவச்சிலை ராய் சௌத்ரியால் முதலில் களிமண்ணில் உருவாக்கப்பட்டு பிறகு இத்தாலியில் அதன் மார்பிள் பதிப்பு வடிவமைக்கப்பட்டது. மெட்ராஸ் தலைமை நீதிபதியாக இருந்த குமாரசுவாமி சாஸ்திரி, மெட்ராஸ் கவர்னர்கள் எர்ஸ்கைன், ஜார்ஜ் ஸ்டான்லி, மெட்ராஸ் அரசின் செயலாளராக இருந்த ஹச். ஜி. ஸ்டோக்ஸ் மற்றும் அவரது மனைவி ஏ. தம்போய், சி.பி. ராமசாமி ஐயர், ஹெச்.எஸ். ஆல்காட், ராய் சௌத்ரி மெட்ராஸ் கலைப்பள்ளியின் முதல்வராக வர காரணமாக இருந்த கலை விமர்சகர் ஜி. வெங்கடாச்சலம் போன்றவர்களின் உருவ சிலைகளையும் ராய் சௌத்ரி வடிவமைத்துள்ளார்.

பிற இந்திய மாநிலங்களில் சௌத்ரியின் படைப்புகள்

தியாகிகள் நினைவுச் சின்னம் (Martyrs Memorial)
Martryrs memorial by D.P. Roy Chowdhury in Patna (T: hashamtoday.blogspot.com)

காந்தி நடத்திய 'வெள்ளையனே வெளியேறு' இயக்க போராட்டத்தின் பகுதியாக நடந்த மாணவர் போராட்டத்தில் பாட்னா தலைமைச் செயலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்ற முயன்ற போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் துறந்த மாணவர்களை நினைவு கூரும் வகையில் பாட்னாவில் தலைமைச் செயலகத்தின் வெளியே அமைக்கப்பட்டது தியாகிகள் நினைவுச் சின்னம் (ஷாஹித் ஸ்மாரக்).

சிற்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ஏழு உருவங்களில் முன்னால் செல்பவர் இலக்கை சுட்டி காட்டிக் கொண்டு கொடியுடன் வழிநடத்திக்கொண்டே முன்னேறிச் செல்ல அவருக்கு பின்னால் தடுமாறி விழப்போகும் ஒருவரை இன்னொருவர் பிடித்துக் கொண்டு பயணத்தில் இணைக்கிறார். அடுத்து வரும் இருவரும் இலக்கை நோக்கி கை காட்டிக் கொண்டும் கையை வீசிக்கொண்டும் தொய்வில்லாமல் கம்பீரமாக நடக்கிறார்கள். அதற்கு பின்னால் ஒருவர் சாய்ந்து விழப்போகிறார். கடைசியில் வருபவர் தான் விழுந்து விட்டாலும் எழ முயன்றுகொண்டோ இழைந்து கொண்டோ முடிந்தவரை போராட்டத்தில் பங்கேற்க முயற்சிக்கிறார். 'ஒரு போராட்டத்திலோ முயற்சியிலோ பங்கு பெறுபவர்களில் சில பேருக்கு உண்டாகும் தொய்வு, இலக்கை நோக்கிச் சென்றாலும் அதை அடையமுடியாமல் சிலருக்கு உண்டாகும் தளர்ச்சி, போராட்டத்தில் இறுதி வரை தொய்வில்லாமல் செல்பவர்கள், இடையில் தடுமாறுபவர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் போராட்டத்தில் பங்கு பெறத் தூண்டுபவர்கள், ஒரு வேளை இடையில் விழுந்து விட்டாலும் முன்னால் வீறுடன் செல்பவர்களை பார்த்து தானும் முடிந்தவரை அப்பயணத்தில் பங்கு பெற முயல்பவர், இவர்களை எல்லாம் வழிநடத்தி தூண்டுகோலாக இருக்கும் தலைமை தாங்குபவர்' என்று இச்சிற்பம் ஒரு பெரும் லட்சியத்தை நோக்கி கூட்டாக பயணிப்பவர்களின் இயல்புகளைப் பதிவு செய்துள்ளது. தியாகிகள் நினைவகத்தில் போராட்டத்தில் உயிர் துறந்த ஏழு மாணவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

தியாகிகள் நினைவுச் சின்னம் பீகார் முதல்வராக இருந்த ஶ்ரீ கிருஷ்ண சின்ஹாவின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது. பீகார் ஆளுநராக இருந்த ஜெய்ராம் தாஸ் தௌலத்ராம் அடிக்கல் நாட்டினார். இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் அக்டோபர் 24, 1956 அன்று திறந்து வைத்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் வெள்ளிவிழாவை ஒட்டி 1967-ம் ஆண்டு தியாகிகள் நினைவுச் சின்னம் இந்திய தபால் தலையில் இடம்பெற்றது.

தண்டி யாத்திரை சிற்பம் (Gyarah Murti)
டி.பி. ராய் சௌத்ரி உருவாக்கிய 'கியாரா மூர்த்தி' சிற்பம், புது தில்லி (நன்றி: மிண்ட் இதழ், பிரியங்கா பராஷர்)

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பகுதியாக காந்தி தலைமையில் நடந்த தண்டி பாதயாத்திரையை நினைவு கூரும் விதமாக இச்சிற்பம் படைக்கப்பட்டது. இந்திய அரசு இச்சிற்பத்தை வடிக்கும் பொறுப்பை ராய் சௌத்ரியிடம் கொடுத்தது. 24 மீட்டர் நீளமும் 3 மீட்டர் உயரமும் கொண்ட இச்சிற்பம் வெண்கலத்தால் செய்யப்பட்டது. ஒரு முட்புதரில் தன் மேலாடை சிக்குவதையும் பொருட்படுத்தாமல் காந்தி தன் ஊன்றுகோலுடன் சுறுசுறுப்பாக முன்னால் நடைபோட பத்து நபர்கள் பின்தொடர்வதாக வடிக்கப்பட்டுள்ளது. காந்தியுடன் சேர்த்து பதினொன்று உருவங்கள் உள்ளதால் இப்படைப்பு க்யாரா மூர்த்தி (பதினொன்று உருவங்கள்) என்று அழைக்கப்படுகிறது. காந்தியுடன் நடக்கும் உருவங்களில் மாதங்கினி ஹாஸ்ரா, சரோஜினி நாயுடு, பிரம்மபந்தப் உபாத்யா மற்றும் அப்பாஸ் தியாப்ஜி ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது. ஆனால் அப்படி குறிப்பிட்ட தலைவர்களைக் காட்டாமல் இந்திய சமூகத்தின் எல்லா தரப்பு மக்களையும் சித்தரிக்கும் விதமாகவே இச்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தும் உள்ளது.

காந்தி முன்னால் செல்ல இரண்டு பெண்கள், ஒரு முஸ்லிம் பெரியவரை கைதாங்கலாகக் கூட்டி வரும் இந்து இளைஞன், ஒரு கிறிஸ்தவ பாதிரியார், ஒரு சீக்கியர் என்று எல்லா தரப்பு மக்களும் காந்தியைப் பின்தொடர அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைக்கும் காந்தியத்தின் குறியீடாக தண்டி யாத்திரை சிற்பம் உள்ளது. இச்சிற்பம் டில்லியில் சர்தார் படேல் சாலையில் உள்ளது. 1975-ல் இச்சிற்பத் தொகுதியை முடிக்கும் தருவாயில் ராய் சௌத்ரி உயிரிழந்தார். தொடர்ந்து ராய் சௌத்ரியின் மனைவியும் சீடர்களும் எஞ்சிய வேலைகளை முடித்து தண்டி யாத்திரை சிற்பத் தொகுதியை நிறைவு செய்தனர்.

இதர படைப்புகள்
God of Destruction by D.P. Roy Chowdhury in Trivandrum Museum

கொல்கத்தா சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் அஷுதோஷ் முகர்ஜி சிற்பம், ஆலய நுழைவு உரிமைக்கு அனுமதி அளித்ததை நினைவு கூரும் வகையில் திருவனந்தபுரம் பட்டம் தாணுபிள்ளை பூங்காவில் அமைக்கப்பட்ட சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் சிற்பம், திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் இருக்கும் சிவன் சிற்பம் (God of destruction) மற்றும் லம்பாடி நாடோடிகளின் ஓவியம் (Lambady Gypsies) ஆகியவை ராய் சௌத்ரியின் படைப்புகள். டெல்லியில் உள்ள தேசிய நவீனக் கலைக்கூடம், ஹைதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகம், கல்கத்தா பிர்லா அகாடமி, ரவீந்திர பாரதி அருங்காட்சியகம், டெல்லி லலித் கலா அகாடமி போன்ற பல்வேறு இடங்களில் ராய் சௌத்ரியின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், சுரேந்திரநாத் பானர்ஜி, அபனீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, ஜெய்ப்பூர் மகாராஜா, ராய் சௌத்ரியின் அப்பா உமாபிரசாத் ராய் சௌத்ரி போன்றவர்களின் சிலைகளையும் ராய் சௌத்ரி வடித்துள்ளார். ஜவஹர்லால் நேருவால் பணி ஒப்படைக்கப்பட்டு 1961-63 ஆண்டுகளுக்குள் ராய் சௌத்ரி வடித்த மோதிலால் நேருவின் வெண்கலச் சிலை பாராளுமன்றத்தில் உள்ளது.

ஓவியங்கள்

டி.பி. ராய் சௌத்ரி வரைந்த 'ராஸ லீலா' ஓவியம்

ராச லீலா, காடி, சரத் பிரதிமா, மா, ஏ ட்ராமாட்டிக் போஸ் ஆப் ஏ மேன் வித் ஏ லார்ஜ் க்ளாக் ஆன்ட் ஹேட்(A Dramatic Pose of a Man with a Large Cloak and Hat), ஜீபன் சந்தியா, தி ட்ரிபியூன் (The Tribune), தி ஹண்டர் (The Hunter) போன்றவை ராய் சௌத்ரியின் சில குறிப்பிடத்தக்க ஓவியங்கள். 1967-ல் கல்கி தீபாவளி மலரில் ராய் சௌத்ரியின் டெம்பிள் ஸ்டெப்ஸ் (Temple Steps) என்னும் வண்ணச் சித்திரம் வெளியானது. பாரதிதாசனின் 'பாண்டியன் பரிசு' நூலுக்கு அட்டை படம் வரைந்து கொடுத்துள்ளார் ராய் சௌத்ரி.

ராய் சௌத்ரியின் ஓவியங்கள் ராமானந்த சட்டர்ஜி நடத்திய 'தி மாடர்ன் ரிவ்யூ', 'பிரபாசி' ஆகிய இதழ்களிலும் தி ஸ்டுடியோ (the Studio, London), தி ஸ்டுடியோ இன்டர்நேஷனல் (the Studio International, USA) போன்ற இதழ்களிலும் பிரசுரமாயின. பிரபாசி இதழில் தொடராக வெளிவந்த தன்னுடைய 'சேஷர் கோபிதா' நாவலுக்கு விளக்கப்படங்கள் வரையும் பணியை ராய் சௌத்ரியிடம் அளித்தார் ரவீந்திரநாத் தாகூர்.

கேலிச்சித்திரங்கள்

டி.பி. ராய் சௌத்ரியின் கேலிச்சித்திரம்
நவீன ஓவியத்தை விமர்சிக்கும் டி.பி. ராய் சௌத்ரியின் கேலிச்சித்திரம்

ராய் சௌத்ரியின் கேலிச்சித்திரங்கள் மெட்ராஸில் இருந்து வெளியான சுதந்திரா பத்திரிகையில் தொடர்ந்து வெளியாகின. அந்த கேலிச் சித்திரங்களை 1951-ம் ஆண்டு ஐரனீஸ் & சார்க்கஸம் (Ironies & sarcasms) என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளியிட்டார் ராய் சௌத்ரி. அதே நூலை 1971-ம் ஆண்டு பிரசந்தா தா மறுதொகுப்பு செய்து 'கார்ட்டூன்ஸ் ஆஃப் ராய் சௌத்ரி' (Cartoons of Roy Chowdhury) என்ற பெயரில் வெளியிட்டார்.

ராய் சௌத்ரியின் கேலிச் சித்திரங்கள் கோட்டோவியங்களை வரையும் பேனாவால் வரையப்பட்டவை. அவை திட்டமிடல்கள் எதுவும் இல்லாமல் தன்னிச்சையாக அந்த கணத்தில் வரையப்பட்டவை என்று ராய் சௌத்ரி தெரிவித்தார். ராய் சௌத்ரியின் சிற்பங்கள், ஓவியங்களுக்கு மாறாக அவரது கேலிச்சித்திரங்கள் அன்றாட நடப்புகளைக் கருக்களாகக் கொண்டவை. அவரது சிற்பங்களில் வெளிப்படுவது போலவே மனித உடல் கூறுகள் பற்றி ராய் சௌத்ரிக்கு இருக்கும் அறிவு, கேலிச் சித்திரங்களிலும் வெளிப்பட்டது. ராய் சௌத்ரிக்கு நவீன கலைப் படைப்புகள் மேல் இருக்கும் ஒவ்வாமையும் விமர்சனமும் சில கேலிச்சித்திரங்களில் பதிவாகி இருக்கிறது.

பிற ஆர்வங்கள்

ராய் சௌத்ரி ஒரு மல்யுத்த வீரரும் கூட. உடற்பயிற்சிகள் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாகப் பேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். மாலை நேரங்களில் கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களுடன் மல்யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டார். சௌத்ரிக்கு இசை ஆர்வமும் இருந்தது. புல்லாங்குழல் வாசிப்பார். பாடுவதில் பிரபல ஹிந்துஸ்தானி பாடகரான ஃபரியாஸ் கானின் பாடல் பாணியை கொண்டிருந்தார் சௌத்ரி. பாடுவதில் திறமையுடைய மாணவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்து பாடச் சொல்லும் வழக்கம் கொண்டிருந்தார். இலக்கியம், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் ஆர்வம் உண்டு. வேட்டையாடுவதில் விருப்பம் கொண்ட ராய் சௌத்ரி தன் வேட்டை அனுபவங்களைப் புனைவில் கொண்டு வந்துள்ளார். 'பிரபாசி', 'பாரத்வர்ஷா', 'சனிபார்' 'சித்தி' போன்ற பத்திரிகைகளுக்கு எழுத்தின் மூலமாக தொடர்ச்சியான பங்களிப்புகள் செய்தார். இவரது எழுத்துக்களை விமர்சகர் ஶ்ரீஜித் சஜனிகாந்த தாஸ் பாராட்டியுள்ளார். ராய் சௌத்ரியின் 'பல்லப்புரா மடம்'(Ballabpura Math), 'மாதல்', 'டஸ்ட்பின்' ஆகியவை விசித்திரமான கதை, நையாண்டி, கற்பனை கொண்ட படைப்புகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தன.

மரச்சாமான்கள் வடிவமைப்பு, தோட்டக்கலையில் குறிப்பாக போன்சாய் வளர்ப்பு ஆகியவற்றிலும் ராய் சௌத்ரிக்கு ஈடுபாடு இருந்தது. சுவையான உணவை விரும்புபவராகவும், குடி, கட்டற்ற காமம் ஆகிய இயல்புகளை ராய் சௌத்ரி கொண்டிருந்ததும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதர பொறுப்புகள்

  • 1954-1960, லலித்கலா அகாடமியின் முதல் தலைவர்
  • 1955, டோக்கியோவில் நடந்த முதல் யுனெஸ்கோ கலை கருத்தரங்கிற்கு தலைமை
  • 1956, தலைமை பொறுப்பாளர், நிகில் பங்கியா சாகித்திய சம்மேளனம், சென்னை
  • 1956, தலைமை பொறுப்பு, அகில இந்திய வங்காள இலக்கிய மாநாடு
  • கலைப்படைப்புகள் கொள்முதல் குழுவின் தலைவராக இருந்தார் (Chairman of the Art purchase Committee, All India Board of Technical Studies and the Government Technical Examinations (Painting and Sculpture - for Madras and Andhra States))
  • புது தில்லியில் உள்ள நுண்கலை மற்றும் கைவினை சங்கம் மற்றும் கலாச்சாரத்தின் தலைவராக ஓராண்டு காலம் இருந்தார் (President of the Fine Arts and Crafts Society and Culture, New Delhi, for a year)

இறுதிக் காலப் படைப்புகள்

தன் கடைசி காலத்தில் பெரிய படைப்புகளை உருவாக்கினார் ராய் சௌத்ரி. லக்னோ ராமகிருஷ்ண மடத்திற்காக 16 அடி உயரம் உள்ள விவேகானந்தர் சிலையை இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு முழுமை செய்தார். அக்காலகட்டத்தில் ராய் சௌத்ரி படைப்புகளை உருவாக்கும் பொருட்டு அரசு சென்னையில் அவருக்கு ஒரு கலை தொழிற்கூடத்தை உருவாக்கிக் கொடுத்திருந்தது. இன்று அந்த இடத்தில் சென்னை லலித் கலா அகாதமி அமைந்துள்ளது.

இளம் வயதில் தன் படைப்புகளைக் காட்சிப்படுத்துவதில் தீவிரமாக இருந்த ராய் சௌத்ரி தன் இறுதிக் காலத்தில் அதை விரும்பவில்லை. தன் படைப்புகளைப் பார்க்க விரும்புபவர்கள் தன் கலை தொழிற்கூடத்திற்கு நேரடியாக வருவதையே சௌத்ரி விரும்பினார். கலை விமர்சகர் அஞ்சலி சர்க்காருக்கு எழுதிய கடிதத்தில், தன் பழைய ஆர்வமான ஓவியம் தீட்டுவதை அப்போது தீவிரத்துடன் செய்வதாக தெரிவித்தார்.

மறைவு

கண்புரை அறுவை சிகிச்சை சௌத்ரியின் கண் பார்வையை பாதித்து, மனதளவிலும் அவரைப் பாதிப்புள்ளாக்கியது. ஓவியங்கள் வரைய சிரமப்பட்டார். சென்னையின் பல்லாவரத்தில் வசித்த ராய் சௌத்ரி அக்டோபர் 15, 1975-ல் தன் 76-வது வயதில் காலமானார்.

விருதுகள்

  • 1937-Most excellent order of the British Empire
  • டெல்லி தேசிய நவீன கலைக்கூடம்(NGMA) நிறுவப்பட்ட மார்ச் 29, 1954 அன்று 31 கலைஞர்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. இந்த கலைக்காட்சியை அப்போதைய இந்திய துணை ஜனாதிபதி டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அதில் ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலை முதல் பரிசை வென்றது. அதே கலைகாட்சியில் ராய் சௌத்ரியின் இதர படைப்புகளான தலை 'உருவம்' (Head study) நான்காவது பரிசையும், 'குளிர்காலம்' (When Winter Comes) ஐந்தாவது பரிசையும் பெற்றது.
  • 1958-பத்மபூஷண் விருது
  • 1962-லலித் கலா அகாதெமியின் ஆய்வு நல்கை (Fellowship)
  • 1968-ரபீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் கௌரவ டி.லிட் பட்டம்

மதிப்பீடு, அழகியல்

ஓவியம்
முசாபிர், நன்றி: Prabasi Press, Calcutta

ராய் சௌத்ரியின் ஆரம்பகால ஓவியங்கள் பல இன்று கிடைப்பதில்லை. கிடைக்கும் பிற்காலப் படைப்புகளும் காலவரிசைப்படி தொகுக்கப்படவில்லை. பத்திரிகைகளில் பிரசுரமான படைப்புகள், அருங்காட்சியகங்களில் உள்ள ஓவியங்கள் மட்டுமே இன்று பெரும்பாலும் காணக்கிடைக்கின்றன. ராய் சௌத்ரியின் முற்கால ஓவியங்களில் அவரது ஆசானான அபனீந்திரநாத் தாகூரின் தாக்கம் இருந்தது. ஐரோப்பியக் கலைக்கு மாற்றாக இந்திய கலை மரபை, சுதேசிய கலை சிந்தனையை முன்னிறுத்திய அபனீந்திரநாத் தாகூர் சார்ந்திருந்த பெங்கால் கலைப்பள்ளி (Bengal School) ஜப்பானிய கழுவும் முறையிலான நீர் வண்ண ஓவிய முறை, சீன ஓவிய நுட்பங்கள், மொகலாய, பஹாரி சிற்றோவிய மரபு போன்ற கிழக்கத்திய மரபுகளை படைப்புகளில் இணைத்தது. பெங்காள் பள்ளி (Bengal School) பாணியிலான ராய் சௌத்ரியின் படைப்புகளுக்கு ராச லீலா, முசாபிர், ஆன் இன்மேட் ஆப் ஹாரிம்(An inmate of Harem), நாட்டியக்காரி(Dancing woman), போன்ற படைப்புகள் உதாரணம்.

Obscure Corner, D.P. Roy Chowdhury

கண்ணில் பார்ப்பதை தத்ரூபமாக படைப்பாக்கும் ஐரோப்பிய யதார்த்த பாணியின் மீது ராய் சௌத்ரியின் ஆர்வம் திரும்பிய பிறகு யதார்த்த தன்மையும் அவரது படைப்புகளில் வெளிப்படத் துவங்கியது. ராய் சௌத்ரியின் யதார்த்த தன்மை ஓவியங்களுக்கு உதாரணமாக அப்ஸ்குயர் கார்னர் (Obscure corner), மலபார் கிராம காட்சி போன்ற படைப்புகள் உள்ளன.

Waterfall, Medium: Oil painting, Rabindra Bharathi Museum, Kolkatta
Sumatra birds, Medium: Tempera

ராய் சௌத்ரி நீர் வண்ணம் (water color), தைல வண்ணம் (oil), கவுச் (goauche), டெம்பரா (tempera), மை (ink) போன்ற ஊடகங்களால் ஓவியங்கள் வரைந்தார். மரபு சார்ந்த படிமங்கள், கிராமங்கள், இயற்கை காட்சிகள், பெண்கள், உழைக்கும் மக்கள் அவரது ஓவியங்களின் பெரும்பாலான பேசுபொருளாக இருந்தன. விலங்குகள், பறவைகள் போன்றவையும் அவரது ஓவியங்களில் இடம் பெற்றன.

சிற்பம்

ஐரோப்பிய யதார்த்தவாதத்தின் மீது ராய் சௌத்ரிக்கு இருக்கும் பற்று அவரது சிற்பங்களில் தான் முழுமையாக வெளிப்பட்டது. டெல்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் (National gallery of modern art) இருக்கும் 'குளியலுக்குப் பிறகு' (After Bath) போன்ற ராய் சௌத்ரியின் சில சிற்பங்கள் மட்டுமே இந்தியத் தன்மை கொண்டவை. ராய் சௌத்ரி உருவாக்கிய முக்கியமான சிற்பத் தொகுதிகள் உருவச்சிலைகள் அனைத்தும் ஐரோப்பிய யதார்த்தவாத பாணியில் அமைந்தவை. ராய் சௌத்ரி சிற்பத்துறையில் ஐரோப்பியச் சிற்பிகளை, குறிப்பாக பிரஞ்சு சிற்பி ஒகஸ்ட் ரொடானை (Auguste Rodin) தன் ஆதர்சமாக கொண்டவர். சௌத்ரியின் குறிப்பிடத்தக்க கலைப் பங்களிப்பும் சிற்பத்துறையில் தான் உள்ளது.

பொதுவெளி சிற்பங்களை யதார்த்த பாணி கலைநயத்துடன் குறியீட்டுத் தன்மையுடன் வடித்தவர் ராய் சௌத்ரி. இந்திய அளவில் ராய் சௌத்ரியின் சிறந்த சிற்பங்களான தண்டி யாத்திரை (க்யாரா மூர்த்தி) சிற்பம், பாட்னாவில் உள்ள தியாகிகள் நினைவுச் சின்னம் போன்றவை முக்கிய நினைவுச் சின்னங்களாக இருக்க மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை ஆகியவை தமிழ்நாட்டின், சென்னையின் அடையாளங்களாக உள்ளன. 1996-ல் காந்தியை மையமாகக் கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது 500 ரூபாய் நோட்டின் பின்புற வடிவமைப்பில் ராய் சௌத்ரி உருவாக்கிய தண்டி யாத்திரை சிற்பத்தின் படம் இடம்பெற்றது. தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்கான மாநாடுகள், போராட்டங்கள், இதழ்கள் தொடர்ந்து உழைப்பாளர் சிலையைத் தங்கள் அடையாளங்களில் ஒன்றாக கொண்டன.

ராய் சௌத்ரி ஒரு மல்யுத்த வீரராகவும் உடற்பயிற்சிகள் மூலம் தன் உடம்பைக் கட்டுக்கோப்புடன் பேணி பெரிய தோற்றம் கொண்டவராவும் இருந்தார். அவரது சிற்பங்களில் உள்ள மனிதர்களும் உறுதியான உடல் கொண்டவர்கள். 'உழைப்பாளர் சிலை' போன்ற படைப்புகளுக்கு கட்டுக்கோப்பான உடல்களைக் கொண்டவர்களையே தன் உருவ மாதிரியாகவும் தேர்ந்தெடுத்தார். சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி கூறுகையில்: "ராய் சௌத்ரி இயல்பில் ஒரு மல்யுத்த வீரராக இருந்ததனால், அவர் மனிதர்களின் உடல் அமைப்பை, தசையை, உடலின் இயக்க விசையை மிகவும் இரசனையுடன் சிற்பத்தில் கொண்டுவந்திருக்கிறார். அவரது சிற்பங்களில் உள்ள கால் தசை, நரம்புகள், முதுகுப் புடைப்பு ஆகியவற்றில் ஒரு விசை இருப்பதால் இயற்கையாகவே அவரது படைப்புகளில் எப்போதும் ஒரு வேகம் இருக்கும். மெரினா கடற்கரையில் இருக்கும் ராய் சௌத்ரியின் படைப்பான காந்தி சிற்பத்தை பார்த்தால் காந்தி இயல்பாக நடக்க அவரது ஆடை காற்றில் பறக்கும் விதத்தில் ஒரு விசையைக் காட்டியிருப்பார். டெல்லியில் உள்ள தண்டி பாதயாத்திரை சிற்பத்தில் உள்ள உருவங்கள் சராசரி மனிதர்களை விட உயரமாக இருக்கும். அச்சிற்பத்தில் காந்தியைத் தொடர்ந்து வருபவர்களில் ஒரு பெண் மயங்கிய நிலையில் நடந்து போவது போல் இருக்கும். மயக்க நிலையிலும் அப்பெண்மணி அப்போராட்டத்திற்காக எவ்வளவு வீரியத்துடன் நடந்து போகிறார் என்பதை உடல் அமைப்பில் நேர்த்தியாகக் காட்டியிருப்பார் ராய் சௌத்ரி. அதுவே ராய் சௌத்ரியின் சிறப்பம்சம்" என்றார்.

When winter comes, Bronze, Size: 31 X 36 cm, 1955, Government Museum, Chennai

வண்ண ஓவியங்களைத் தீட்டுவதற்கு முன்பும், சிற்பங்களை உருவாக்குவதற்கு முன்பும் வெவ்வேறு கோணங்களில் விரிவாக கோட்டோவியங்களை வரைந்து பார்ப்பது சௌத்ரியின் வழக்கம். ராய் சௌத்ரியின் சிற்பங்கள் பலவற்றில் 'இம்பிரஷனிசம்' (Impressionism) பாணியில் மேற்பரப்பில் பூசி மெழுகாமல் கையால் உருவாக்கிய அடையாளங்களுடன் அப்படியே விடப்பட்டிருக்கும். உழைப்பாளர் சிலை, சிவன், குளிர்காலம் போன்ற சிற்பங்கள் இதற்கு உதாரணம். ராய் சௌத்ரிக்கு பிடித்தமான ஐரோப்பிய படைப்பாளிகளான ரொடான் (Rodin), போவதயெல் (Bourdelle) போன்றவர்களின் படைப்புகளில் இத்தன்மை உண்டு.

மெட்ராஸ் கலைச்சூழலில் ராய் சௌத்ரியின் பங்களிப்பு

இந்தியக் கைவினைப் பொருட்களுக்கு பிரிட்டிஷாரிடம் இருந்த வரவேற்பை திருப்தி செய்வதற்கு துவங்கப்பட்ட மெட்ராஸ் கலைப்பள்ளியில் ஏற்றுமதிக்கும் விற்பனைக்குமான கைவினை பொருள்களைத் தயாரிப்பது மற்றும் அது சார்ந்த பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் இருந்தது. நவீன கலை வெளிப்பாடுகளை இங்குள்ள கலைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு, கலைஞனின் தனிப்பட்ட தேடலுக்கு ஊக்கம் அளிப்பதற்கு அப்பள்ளியின் பாடதிட்டங்களில் வாய்ப்பு ஏறத்தாழ இல்லாமல் இருந்தது. ராய் சௌத்ரி கலைப் பள்ளியின் முதல்வர் ஆனதும் மேற்கத்திய பாணியிலான கல்விசார் (academic) யதார்த்தவாத ஓவிய முறைகளை புதிய பாடத் திட்டங்களை கலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மனிதர்களை, காட்சிகளை நேரில் பார்த்து வரைவது உள்ளிட்ட பயிற்சிகளை கொண்ட இப்பாடத்திட்டமே தற்போதும் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படைப் பாடமாக இருக்கிறது.

ராய் சௌத்ரி மற்றும் அவரது மாணவர்கள் மூலம் மெட்ராஸ் மாகாணத்தின், தென்னிந்தியாவின் கலை ரசனையில் ஐரோப்பிய யதார்த்தவாதத்தின் பாதிப்பு உருவானது. ராய் சௌத்ரிக்கு அடுத்து மெட்ராஸ் கலை மற்றும் கைவினைப் பள்ளி முதல்வரான பணிக்கர், நவீனத்துவத்தை மெட்ராஸ் பள்ளியில் அறிமுகப்படுத்துவதற்கு ராய் சௌத்ரி அமைத்து கொடுத்த அடித்தளமே காரணம்.

மெட்ராஸ் கலைப்பள்ளியில் மாணவர்கள் வரைவதற்கு தாளில் வரையப்பட்ட படத்தையே கரும்பலகையில் குத்தி வைத்து பார்த்து வரையும் நிலை இருந்தது என்றும், ராய் சௌத்ரி அதிகாரிகளுக்கு கடிதமெழுதி மாணவர்கள் பார்த்து வரைவதற்கு மனிதர்களை வடிவ மாதிரியாக உட்கார ஏற்பாடு செய்து கொடுத்ததை ராய் சௌத்ரியின் மாணவரான சிற்பி தனபால் தன் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

ராய் சௌத்ரி மெட்ராஸ் பள்ளியில் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விசார் (academic) யதார்த்தவாத நுண்கலை பாடத்திட்ட முறை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்களை ஈர்த்தது. பரிதோஷ் சென், கே.சி.எஸ். பணிக்கர், சிற்பி தனபால், கோபால் கோஷ், பிரதோஷ் சென், கோதண்டராமன், நிரோத் மஜும்தார், சுல்தான் அலி, பிரதோஷ் தாஸ் குப்தா, எல். முனுசாமி, சந்தானராஜ், ராம் கோபால், எஸ் ராஜன், கலாசாகரம் ராஜகோபால், சீனிவாசலு என்று பிற்காலத்தில் உருவாகி வந்த பல முக்கிய கலைஞர்கள் மெட்ராஸ் கலைப்பள்ளியில் ராய் சௌத்ரியின் மாணவர்களாக இருந்தவர்கள்.

விவாதங்கள்

ராய் சௌத்ரி மீதான விமர்சனங்கள்

ராய் சௌத்ரி வெறும் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் இடம் என்ற நிலையிலிருந்து மெட்ராஸ் கலைப் பள்ளியை மீட்டாலும் அவர் அதற்கான வழிமுறைகளை மேற்கின் கல்விசார் பயிற்சி முறைகளில் (academic) இருந்து மட்டுமே பெற்றுக் கொண்டார். இந்திய ஓவிய, சிற்ப மரபுகளை, நவீனத்துவத்தின் புதிய போக்குகளைத் தெரிந்து கொள்ள அப்பயிற்சி முறைகளில் இடம் இருக்கவில்லை.

ராய் சௌத்ரிக்கு ஜேக்கப் எப்ஸ்டைன், ஹென்ரி மூர் போன்ற ஐரோப்பிய நவீன சிற்பிகள் ஏற்புக்கு உரியவர்களாக இருந்தாலும் புதிய பாணிகளை தன் படைப்புகளில் உட்படுத்தி வடிவச்சோதனை செய்து பார்ப்பதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை. மாணவர்களுக்கும் அதையே அறிவுறுத்தினார். கலையின் குறிக்கோள் அழகியல் அனுபவத்தை அளிப்பதே ஒழிய அதன் வடிவம் ஒரு பொருட்டே அல்ல என்று ராய் சௌத்ரி குறிப்பிட்டார்.

ராய் சௌத்ரி 19-ம் நூற்றாண்டு ஐரோப்பிய யதார்த்தவாத (realistic) கலைப் போக்குகளுடன் நின்று விட்டதாகவும், அவர் 20-ம் நூற்றாண்டின் நவீன கலைப் போக்குகளை கருத்தில் கொள்ளவோ உள்வாங்கவோ இல்லை என்றும் கே.சி.எஸ் பணிக்கர், எஸ். தனபால் போன்ற ராய் சௌத்ரியின் முதன்மை மாணவர்கள் அவர் மீது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் மற்ற கலைப்பள்ளிகளுடன் ஒப்பிடும் போது மெட்ராஸ் பள்ளி நவீனத்தை நோக்கி வர தாமதம் ஆனதற்கு ராய் சௌத்ரிக்கு புதிய நவீன பாணிகளின் மீதிருந்த நம்பிக்கையின்மையே காரணமாக இருந்தது என்று ஏ.எஸ். ராமன் கூறியுள்ளார்.

உழைப்பாளர் சிலை விவாதம்

செப்டம்பர் 1995-ல் வெளியான கணையாழி இதழில் எழுத்தாளர் சிவகாமி உழைப்பாளர் சிலை பற்றியும், ராய் சௌத்ரி பற்றியும் விமர்சித்திருந்தார். உழைப்பாளர் சிலையில், ஒரு பெரிய பாறாங்கல்லை உழைப்பாளர்கள் நகர்த்தும் பாங்கில் நெம்புகோல் தத்துவத்துக்குக் குந்தகம் விளைந்துவிட்டதாக சிவகாமி கூறியிருந்தார். அதற்கு மறுப்பாக கலை ஆர்வலரும் எழுத்தாளருமான சி. மோகன் அக்டோபர் 1995 கணையாழி இதழின் 'விவாத மேடை'யில் உழைப்பாளர் சிலையின் தனித்தன்மைகளை விளக்கியிருந்தார். 'ஓவியத் துறையைப் பற்றிய சிவகாமியின் புரிதலில், ஓவியக் கலைஞன் என்பவன் ஒரு டிராயிங் மாஸ்டர் அளவுக்குக் குறுகி இருக்கிறான். ராய் சௌத்ரி டிராயிங் மாஸ்டராக இல்லாமல் படைப்பாளியாக இருப்பதுதான் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. கீழை மரபு, சுழற்சிக் கருத்தாக்கத்தையே (circular concept) வாழ்வு- காலம்- அழகியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவமாகக் கொண்டிருக்கிறது. இது நேர்கோட்டுக் கருத்தாக்கத்தின் (linear concept) மொண்ணைத் தர்க்கத்துக்கு எதிரானது. ஒரு பாறாங்கல்லை நான்கு உழைப்பாளிகளை வைத்து உருட்டித் தள்ளி விடுவது என்ற நேர்கோட்டு மொண்ணைத் தீர்வல்ல விஷயம். கலை எப்போதுமே இத்தகைய மொண்ணையான தர்க்கத் தீர்வுகளில் உயிர் கொள்வதில்லை. யந்திரரீதியான துல்லியம் (mechanical accuracy) பற்றிய கவலையின்றி அடிப்டையான, ஆழமான, உள்ளுறைந்த உண்மையின் சுழற்சியாகவே கலை வெளிப்பாடும் விகாசமும் பெறுகிறது. அத்தகைய ஒரு படைப்புதான் உழைப்பாளர் சிலை' என்றார் சி. மோகன்.

'பாறை பெயர்ந்து உருளும் பட்சத்தில் கூடவே ஒரு உழைப்பாளியும் உருண்டுவிடுவான்' என்ற சிவகாமியின் கூற்றுக்கு 'உழைப்பாளர்களின் முயற்சிகள் பாறையின் சுழல் அசைவில் சிறு நகர்த்துதலை நிகழ்த்தும் முனைப்பிலேயே வடிவம் பெற்றிருக்கின்றன. அந்த அசைவுக்குப் பின் உருவாகும் மறு அசைவுக்கான யத்தனிப்பில் வேறொருவர் தன்னை அபாயகரமான நிலையில் முன்வைக்கக் கூடும். ஒரு இயக்கத்தில் தன்னை அபாயகரமாக இருத்திக் கொள்வதன் தார்மீகத்தைச் சிவகாமி உணர்ந்திருக்கமாட்டார்' என்று சி. மோகன் பதிலளித்தார்.

கண்காட்சிகள்

கலைக்காட்சியில் ராய் சௌத்ரியின் சிற்பமான குளிர்காலத்தை (When Winter Comes) பார்வையிடும் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் ஹுமாயுன் கபீர்
  • டெல்லி தேசிய நவீன கலைக்கூடம் நிறுவப்பட்ட மார்ச் 29, 1954 அன்று 31 கலைஞர்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. இந்த கலைக்காட்சியை அப்போதைய இந்திய துணை ஜனாதிபதி டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அதில் ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலை முதல் பரிசை வென்றது. அதே கலைகாட்சியில் ராய் சௌத்ரியின் இதர படைப்புகளான தலை உருவம்(Head study) நான்காவது பரிசையும், குளிர்காலம்(When Winter Comes) ஐந்தாவது பரிசையும் பெற்றது.
  • 1993, ராய் சௌத்ரி படைப்புகளுக்கு மட்டுமான தனிப்பட்ட கண்காட்சி, கல்கத்தா
  • 1989, பிர்லா கலைக்கூடம், கல்கத்தா
  • 2003, Manifestations, organised by Delhi Art Gallery, World Trade Center, Mumbai and Delhi Art Gallery, New Delhi
  • 2004, Manifestations II, organised by Delhi Art Gallery, Jehangir Art Gallery, Mumbai and Delhi Art Gallery, New Delhi
  • 2005, Manifestations III, organised by Delhi Art Gallery, Nehru Center, Mumbai and Lalit Kala Akademi, New Delhi
  • டெல்லி தேசிய நவீன கலைக்கூடத்தின் 63-வது நிறுவன ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 29, 2017 அன்று ஆரம்பித்து மே மாதம் இறுதி வரை 'இதிஹாஸ்' என்ற பெயரில் ஒரு கலைக்காட்சி நடந்தது. அதில் 1954-ல் தேசிய நவீன கலைக்கூடம் துவக்கப்பட்ட போது காட்சிபடுத்தப்பட்ட 31 கலைஞர்களின் படைப்புகளில் 22 கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றன. ராய் சௌத்ரியின் படைப்பும் இடம் பெற்றது.

ராய் சௌத்ரி பற்றி கருத்துக்கள் இடம்பெற்ற நூல்கள்

  • The Two Great Indian Artists (Art Book On Jamini Roy and D.P. Roy Chaudhary), Editor: Prasanta Daw, Firma KLM Private Limited, Calcutta, 1978
  • Debiprasad: An Artist of Many Colours, Prasata Daw, M.C.Sarkar & Sons Ppt. Ltd.,Kolkata, 2005
  • 'Art and Aesthetics of Deviprasad' by Prasanta Daw, Mahua Publishing Company, Calcutta, 1978
  • 'Glimpses of Indian Sculpture' by Sushil Mukherjee, Bivab, Calcutta, 1989
  • Roy Chowdhury, Deviprasad. Ironies and Sarcasms. General Printers and Publishers Limited, Calcutta, 1951
  • 'Choudhury and his art' by P R Ramachandra Rao with Foreword by Sir S. Radhakrishnan, New Book Co, Bombay, 1943

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Jul-2024, 11:54:36 IST