under review

ஜெயராமன் ரகுநாதன்

From Tamil Wiki
ஜெயராமன் ரகுநாதன்
எழுத்தாளர் ஜெயராமன் நகுநாதன்
டாக்டர் வைகுண்டம் கதைகள்: ஜெயராமன் ரகுநாதன்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
ஜெயராமன் ரகுநாதனின் சிறுகதைத் தொகுப்பு
எழுத்தாளர் பாலகுமாரனுடன்

ஜெயராமன் ரகுநாதன் (ஜெ. ரகுநாதன்; ரகு) (1956) எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகள், நாவல்கள் இவற்றுடன் தொழில்நுட்பம், பொருளாதாரம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அடிப்படையில் பட்டயக் கணக்காளர் (Charted Accountant). உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார். மார்கெட்டிங், விற்பனை, மேலாண்மை, மென்பொருள் ஆலோசனை, மாணவர்களுக்கான பயிற்சிகள் என்று செயல்பட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

ஜெயராமன் ரகுநாதன், சென்னை அடையாறில், 1956-ல், பிறந்தார். ராணிமெய்யம்மை பள்ளியில் படித்தார். லயோலா கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். அகில இந்தியப் பட்டயக்கணக்காளர் தேர்வு (சி.ஏ.) எழுதி அகில இந்திய அளவில் உயர்ந்த மதிப்பெண்களின் தரவரிசையில் (All India rank) இடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜெயராமன் ரகுநாதன் ஹிந்துஸ்தான் லீவர், டி. வி. எஸ். நிறுவனங்களில் மேலாளர், பொது மேலாளர் மற்றும் துணைத்தலைவாரக முப்பது வருடங்கள் பணியாற்றினார். இரண்டு தொடக்கநிலை மென்பொருள் நிறுவனங்களைத் (Startup software company) தொடங்கி நடத்தினார். பின் அவற்றை வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டு, மூன்றாவதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதன் இயக்குநராக உள்ளார்.

மனைவி லதா பட்டயக் கணக்காளர். எழுத்தாளர். மகன்கள் ம்ருத்யுஞ்சய், திக்விஜய் பொறியியல் மற்றும் எம்.எஸ். படித்தவர்கள். வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

ஜெயராமன் ரகுநாதனுக்கு கண்ணன், அம்புலிமாமா, ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கல்கண்டு, கலைமகள், பொம்மை, பேசும்படம் போன்ற இதழ்களால் வாசிப்பார்வம் வளர்ந்தது. ஒன்பதாவது படிக்கும்போதே சுஜாதாவின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். அவருக்கு வாசகர் கடிதம் எழுதி, பதில் பெற்றார். தாயார் மூலம் எனிட் ப்ளைட்டன்(Enid Blyton), பெர்ரி மேசன்(Perry Mason), ஜான் க்ரீஸி, ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் (James hardly Chase), அலிஸ்டர் மெக்ளீன் (Alister Mclean) போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளும், வாண்டுமாமா, தமிழ்வாணன், கல்கி, தேவன், ரா.கி.ரங்கராஜன், எஸ்.ஏ.பி, நா. பா., அகிலன், ஜெகசிற்பியன், தி.சா. ராஜு, கமலா சடகோபன், எல்லார்வி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் என்று தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் அறிமுகமாகின.

கவிதை

ஜெயராமன் ரகுநாதன், எண்பதுகளில் சில புதுக்கவிதைகள் எழுதி கணையாழியில் கௌரவ ஆசிரியராக இருந்த சுஜாதாவின் ஊக்குவிப்பில் அவை வெளியாகின. ‘அத்தை’ என்ற இவரது புதுக்கவிதையை சுஜாதா மற்றும் கி. கஸ்துரிரங்கன் இருவருமே பாராட்டினர். தொடர்ந்து சில கவிதைகள், கட்டுரைகளை எழுதினார். பின் தொழிலில் கவனம் செலுத்தியவர், 2012-க்குப் பின்னர் முகநூல் நண்பர்கள் தந்த ஊக்குவிப்பால் மீண்டும் எழுதத் தொடங்கினார். சுஜாதாவும், பாலகுமாரனும் இவரது ஆதர்ச எழுத்தாளர்கள்.

சிறுகதை

‘அரங்கனும் ஆர்லோவ் வைரமும்’ என்னும் ரகுநாதனின் முதல் சிறுகதை, வட அமெரிக்க மாத இதழான ‘தென்றல்’ இதழில் வெளியானது. இன்று மாஸ்கோவின் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஆர்லோவ் வைரம், ஒருகாலத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கண்ணாக இருந்த பொக்கிஷம் என்னும் சரித்திரக் குறிப்பை மையமாக வைத்து அந்தக் கதையை எழுதினார். அதற்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் அது நாடகமாகவும் அரங்கேறியது.

‘டாக்டர் வைகுண்டம்' என்ற பாத்திரத்தை மையமாக வைத்து இவர் ஃபேஸ்புக்கில் எழுதிய கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அதே போல் கார்ப்பரேட் உலகின் அடிப்படைப் பாடங்களை ‘வசுந்தரா’ என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து இவர் எழுதிய சிறுகதைகளுக்கும் வரவேற்புக் கிடைத்தது. இவரது சிறுகதைகள், கட்டுரைகள் கல்கி, தென்றல், வலம், மங்கையர் மலர், சிறகு, நவீன விருட்சம் போன்ற இதழ்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

நாவல்

18-ம் நூற்றாண்டுத் தங்கத்தேடல் பற்றிய நாவல் ‘தங்கசாகசம்’. அந்தக் காலத்துச் சென்னை வாழ்க்கையை பின்னணியாகக் கொண்ட நாவல் ’தொட்டுக்கொள்ளவா...தொடர்ந்து செல்லவா...’. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஜெயராமன் ரகுநாதனது படைப்புகளை வானதி பதிப்பகம், ஜீரோ டிகிரி பப்ளிஷிங், ஸ்வாசம் பதிப்பகம் போன்றவை வெளியிட்டுள்ளன.

நாடக வாழ்க்கை

ஜெயராமன் ரகுநாதன், எழுத்தாளர் சுஜாதாவோடு நல்ல நட்பில் இருந்தார். சுஜாதாவின் மறைவிற்குப் பின் அவரது மனைவியின் அனுமதி பெற்று சுஜாதாவின் ‘அம்மோனியம் பாஸ்ஃபேட்’ மற்றும் ‘வாசல்’ என்னும் இரு சிறுகதைகளை நாடகமாக்கி அரங்கேற்றினார். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘அபயரங்கதிலகா’ என்னும் முழு நாடகத்தை எழுதி மேடையேற்றினார். தொடர்ந்து ‘திருஅரங்கண்’, (’அரங்கனும் ஆர்லோவ் வைரமும்’ சிறுகதையின் நாடக வடிவம்) ‘குறிஞ்சி’ போன்ற நாடகங்கள் அரங்கேறின.

‘திருஅரங்கண்’ நாடகம், தியேட்டர் மெரீனாவால் அரங்கேற்றம் செய்யப்பட்டு ஐம்பதுக்கு முறைக்கும் மேல் மேடையேறியது. சுஜாதாவின் கதைகளான ‘நேற்று இன்று+2’, ‘நாளை’ போன்றவையும் ரகுநாதனால் நாடகமாக்கப்பட்டு மேடையேறின.

‘மலையங்குளத்து நினைவுகள்’, ‘சித்தன் போக்கு’ என்ற இரண்டு நாடகங்களை எழுதியுள்ளார்.

சமூக வாழ்க்கை

ஜெயராமன் ரகுநாதன், Knowledge Capital Investment Group (KCIG) என்னும் சேவையை நோக்கமாகக் கொண்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தோ-ஜெர்மானிய வர்த்தகத் தொழிற் பயிற்சி மையம், ஆசான் கல்லூரிக் குழுமம் என சென்னையின் சில கல்லூரிகளில் தன்னம்பிக்கைச் சொற்பொழிவாற்றி வருகிறார். சில கல்லூரிகளின் பாடத்திட்டக்குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். சில ஆண்டுகள் ரோட்டரி கிளப்பிலும் இயக்குநராகப் பணி புரிந்தார். 2010-ல் ‘வளரும் தொழில்முனைவோரின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருதுகள்

  • மைலாப்பூர் அகாடமியின் ‘சிறந்த நாடக ஆசிரியர்’ விருது (‘திருஅரங்கண்’ நாடகத்திற்காக)
  • கோடை நாடக விழாவின் சிறந்த நாடகத்திற்கான இரண்டாம் பரிசு ('குறிஞ்சி’ நாடகத்திற்காக)

இலக்கிய இடம்

பொது வாசிப்புகுரிய படைப்புகளை சுவாரஸ்யமான மொழியில் எழுதுபவர் ஜெயராமன் ரகுநாதன். தனது வாழ்க்கை அனுபவங்களையும், விழுமியங்களையும், கார்ப்பரேட் உலக நிகழ்வுகளையும் தனது படைப்புகளில் முன் வைக்கிறார். ஆங்கில வார்த்தைகளும் சம்ஸ்கிருதச் சொற்களும் அதிகம் கொண்டதாக இவரது புனைவு மொழி உள்ளது. அதைத் தனது தனித்த எழுத்து முறையாக முன் வைக்கிறார், ஜெயராமன் ரகுநாதன்.

108 திருப்பதிகள் நூல்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • டாக்டர் வைகுண்டம் பாகம் - 1
  • டாக்டர் வைகுண்டம் - பாகம் 2
  • டாக்டர் வைகுண்டம் பாகம் 3 (அச்சில்)
  • நெடுமர நிழல் கதைகள்
  • திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்
  • வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
நாவல்
  • தொட்டுக்கொள்ளவா தொடர்ந்து செல்லவா
  • தங்க சாகசம்
  • அபயரங்கதிலகா
கட்டுரைத் தொகுப்புகள்
  • என் அடையாரின் விழுதுகள்
  • என்னைக் கடந்துபோனவர்கள்
  • செர்ரிபிளாசமும் இன்னும் சில பூக்களும்
  • அணுவைத்துளைதேழ்
  • 108 திவ்ய தேசங்கள் - சுவாரஸ்யமான சுற்றுலா

உசாத்துணை


✅Finalised Page