under review

சோமநாதசுவாமி கோயில்

From Tamil Wiki
சோமநாதசுவாமி கோயில் (நன்றி: தரிசனம்)
சோமநாதசுவாமி கோயில்

சோமநாதசுவாமி கோயில் திருநீடூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் பாதையில் மயிலாடுதுறைக்கு வடக்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் திருநீடூர் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நீடூரில் ரயில் நிலையம் உள்ளது.

பெயர்க்காரணம்

தமிழில் நீடூர் என்றால் நித்திய இடம் என்று பொருள். இந்து புராணங்களின்படி ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க வழிவகுக்கும் பிரளயத்தின்போது கூட இந்த இடம் அழிக்கப்படாது என்ற நம்பிக்கை உள்ளதால் இப்பெயர் பெற்றது.

வரலாறு

சோமநாதசுவாமி கோயிலின் வரலாற்றுப் பெயர்கள் மகிழவனம், வகுலாரண்யம், மகிழாரண்யம். பண்டைய சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் நீடூர் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர், சுந்தரர் இருவரும் தங்கள் பாடல்களில் இத்தலத்தின் செழிப்பு மற்றும் செல்வத்தைப் பற்றி பாடினர்.

கல்வெட்டு

சோழ மன்னர்களான குலோத்துங்கன்-I, ராஜாதிராஜன்-II மற்றும் இராஜராஜன்-III காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் உள்ளன.

தொன்மம்

  • சூரியன் இங்கு வந்து பார்வதி தேவியை வழிபட்டதால் இங்குள்ள அம்பாள் 'ஆதித்ய வரத அம்பிகை' என அழைக்கப்பட்டார்.
  • சந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் நோய் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் 'ஸ்ரீ சோம நாதர்' என அழைக்கப்பட்டார். சந்திரன் இங்கு ஒரு குளத்தை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இதற்கு சந்திர தீர்த்தம் என்று பெயர்.
இந்திரன்

இந்திரன் தனது வழிபாட்டிற்காக காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணலால் இங்கு சிவலிங்கம் அமைத்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தைக் காண ஆசைப்பட்டு பாடல் பாடினார். சிவபெருமான் அவரது பக்தியில் மகிழ்ந்து அவருக்கு தரிசனம் அளித்தார். எனவே இங்குள்ள இறைவன் 'ஸ்ரீ ஞான நர்த்தன சங்கரர்' என அழைக்கப்பட்டார். இது தமிழ் மாதமான மார்கழியில் ஒரு திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

தன்மசுதன்

தன்மசுதன் என்ற அரக்கன் தன் முற்பிறவியில் ஏற்பட்ட சாபத்தால் நண்டாகப் பிறந்தான். அவர் நாரத முனிவரின் ஆலோசனையைக் கேட்டு நீடூருக்கு வந்து காவிரியில் நீராடி சிவனை வணங்கினார். சிவன் நண்டுக்கு தரிசனம் அளித்து முக்தி அளித்தார். லிங்கத்தின் மீது நண்டின் தடம் மற்றும் ஓட்டை இன்னும் காணப்படுகின்றன. இந்த நிகழ்வின் நினைவாக ஆடியில் பௌர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. சிவன் 'கர்கடேஸ்வரர்' என அழைக்கப்பட்டார்.

பத்ரகாளி

பத்ரகாளிதேவி கேதார்நாத், காசியில் இறைவனை வழிபட்ட பிறகு இந்த இடத்திற்கு வருகை தந்தபோது இங்குள்ள கிராம மக்களைக் காக்கும் பணி அவளிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பத்ரகாளிக்கு ஆலாலசுந்தரி என்ற பெயரில் தனி சன்னதி உள்ளது.

சோமநாதசுவாமி கோயில் மகிழ மரம்

கோயில் பற்றி

  • மூலவர்: சோமநாத சுவாமி, ஞானநர்த்தன சங்கரர், பதிபடியதேவர்
  • அம்பாள்: வேயுருதோளியம்மை, வேதநாயகி, ஆதித்ய அபயபிரதாம்பிகை, ஆதிகந்திஅம்மை
  • தீர்த்தம்: செங்கழுநீர் ஓடை
  • ஸ்தல விருட்சம்: மகிழ மரம்
  • பதிகம்: திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி
  • இருநூற்றி எழுபத்தியாறாவது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
  • சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
  • கடைசியாக கும்பாபிஷேகம் ஏப்ரல் 5, 2007-ல் நடைபெற்றது
சோமநாதசுவாமி கோயில் சிற்பங்கள்

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இக்கோயிலுக்கு இரண்டு மாடவீதிகள் உள்ளன. பிரதான கோபுரம் இல்லை. நுழைவாயிலில் சிவனின் சிற்பங்கள், பார்வதி தேவியுடன், அவரது காளையின் மீது விநாயகர், முருகன் சிற்பங்களுடன் உள்ளது. நுழைவாயிலில் ஸ்ரீ சிவலோக கணபதி சன்னதி உள்ளது. பார்வதி தேவியின் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. அவள் சன்னதியின் மண்டபத்தின் முன், கிழக்கு திசையை நோக்கி சனீஸ்வரர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சிவன் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகள் உள்ளன. இங்கு நவக்கிரகம் இல்லை. வெளி மாடவீதியில் முனையடுவார் நாயனாருக்கு தனி சன்னதியும் உள்ளது. இங்குள்ள லிங்கம் 'ப்ருதிவி லிங்கம்' (மணலால் ஆனது) என்பதால் இதற்கு நேரடியாக அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இது எப்போதும் ஒரு உலோகத் தாளால் மூடப்பட்டிருக்கும். லிங்கத்தில் இந்திரனின் கைரேகைகள் தெரியும். சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், செங்கழுநீர் ஓடை, சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பத்ரகாளி தீர்த்தம், முனிவரர் தீர்த்தம், பருத்தி குண்டம், வருண தீர்த்தம் ஆகியவை இக்கோயிலுடன் தொடர்புடைய ஒன்பது தீர்த்தங்கள்.

சிற்பங்கள்

சித்திகணபதி, முருகன் துணைவிகளுடன், சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சப்தமதாஸ், சிவலோகநாதர், கைலாசநாதர், காசி விஸ்வநாதர், சின்மயானந்தகணபதி, சூரியன், சந்திரன், கால பைரவர், முனையாடுவார், சனீஸ்வரர் ஆகியோரை பிரதான மண்டபம், மாடவீதிகளில் காணலாம். மூன்று தனித்தனி விநாயகர் சிலைகள் உள்ளன. கோஷ்டத்தில் பால கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் சிலைகளைக் காணலாம். நடராஜர் சிலை இல்லை. அதன் இடத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலை உள்ளது. இக்கோயிலின் ஊர்வலச் சிலைகளில் இந்திரன், பத்ரகாளிதேவி, துறவி முனையடுவர் சிலைகள் உள்ளன. கருவறைச் சுவரில் பத்ரகாளியும் சூரியனும் இறைவனை வழிபடும் சிற்பம் உள்ளது.

சோமநாதசுவாமி கோயில் முனையடுவார்

சிறப்புகள்

  • நீடூர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான முனையடுவார் பிறந்த ஊர். மன்னரின் இராணுவத்திற்கு தலைமை தாங்கிய வீரர். அவர் சம்பாதித்த பணத்தை, இந்த கோவிலை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் செலவிட்டதால் 'முனையடுவார்' என அழைக்கப்பட்டார். பங்குனி பூசம் நட்சத்திர நாளில் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
  • இந்த கோவிலின் ஸ்தல விருட்சமான மகிழ மரம் மிகவும் பழமையானது, பெரியது.
  • இங்குள்ள சிவனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • செல்வம், செழிப்பு ஆகியவற்றைப் பெற பக்தர்கள் இங்கு சிவனை வழிபடலாம்.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 8-12
  • மாலை 4-8

வழிபாடு

  • விநாயகருக்கு இங்கு தனித்தனியே மூன்று சிலைகள் உள்ளன. எந்த ஒரு புதிய வேலையையும் மேற்கொள்ளும் முன் பக்தர்கள் இங்குள்ள விநாயகரை வழிபடுவது விசேஷமாகக் கருதப்படும்.
  • சூரியன் ஆவணி மாதத்தில் சில நாட்களுக்கு லிங்கத்தின் மீது தனது கதிர்களை செலுத்தி வழிபடுவதாக நம்பப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரியனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
  • அம்மனையும் சனீஸ்வரரையும் ஒரே நேரத்தில் வழிபடும் வகையில் சிலைகள் உள்ளன. இது சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது.

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டி மற்றும் அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை
  • தையில் மகர சங்கராந்தி
  • மாசியில் சிவராத்திரி
  • பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படும்

உசாத்துணை


✅Finalised Page