under review

சொக்கநாதக் கவிராயரின் பணவிடு தூது

From Tamil Wiki

தூது நூல்களுள் ஒன்று, பணவிடு தூது. வறுமையில் வாழும் புலவர்கள் தங்களை ஆதரிக்க வேண்டி வள்ளல்கள், புரவலர்கள், அரசர்களிடம் பணத்தைத் தூதாக அனுப்புவதே பணவிடு தூது. அந்த வகையில் மன்னர் விசய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாதக் கவிராயர் என்னும் பலபட்டடை சொக்கநாதப் புலவர் பாடியது இந்நூல். இதன் காலம் பொ.யு. 18 -ம் நூற்றாண்டு.

பதிப்பு, வெளியீடு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், 1981-ல், மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி 1980-ல், சொக்கநாதக் கவிராயரின் பணவிடு தூது நூல் பதிப்பிக்கப்பட்டது. ஓலைச்சுவடியிலிருந்து ஆய்வு செய்து நேரடியாக இந்த நூலைப் பதிப்பித்தவர் பேராசிரியர் இரா. நிர்மலாதேவி.

நூலாசிரியர் குறிப்பு

இந்நூலை இயற்றியவர், சொக்கநாதக் கவிராயர் என்னும் பலபட்டடை சொக்கநாதப் புலவர். இவர், மதுரையில் வாழ்ந்தவர். இவரது காலம் பொ.யு. 18-ம் நூற்றாண்டு. திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்தவராக அறியப்படுகிறார். சுப்ரதீபக் கவிராயர், உமறுப்புலவர், தாயுமானவர், திரிகூடராசப்பக் கவிராயர், வீரமாமுனிவர், கடிகைமுத்துப் புலவர் போன்றோர் இவரது சமகாலத்தவர்கள். இவர் இயற்றிய பிற நூல்கள்:

  • பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
  • சண்பகநல்லூர்ச் சிவபெருமான் வண்டுவிடு தூது
  • அழகர் கிள்ளை விடுதூது
  • தேவை உலா
  • விஞ்சைக் கோவை
  • மதுரை யமக அந்தாதி
  • நாரசிங்கன் வளமடல்
  • கரந்தைக் கோவை
  • கரந்தை வருக்கக்கோவை

தூது நூல்கள் மட்டுமே நான்கு இவர் இயற்றியுள்ளார். தனிப்பாடல்கள் 75 இயற்றியுள்ளார்.

நூல் அமைப்பு

இப்பணவிடு தூது நூல் கலிவெண்பாவால் இயற்றப்பட்டுள்ளது. கடவுள் வாழ்த்து நீங்கலாக 369 கண்ணிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள், 231 கண்ணிகள் பணத்தைப் பற்றியதாக அமைந்துள்ளன. 130 கண்ணிகளில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பும், 8 கண்ணிகளில் தூதுச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. அகப்பொருள், புறப்பொருள் என்ற இரு தூது வகைமையுள் இந்நூல் அகப்பொருள் சார்ந்த நூல். தூதுப் பொருள்களான உயர்திணை, அஃறிணை என்ற இரண்டினுள், அஃறிணையான பணம் இந்நூலில் தூதுப் பொருளாக அமைந்துள்ளது.

நூலின் சிறப்பு

பொதுவான தூது நூல்களுக்கு மாறாக, இந்த நூலில் மன்னனிடம் பணத்தைத் தூதாக அனுப்புபவர் ஒரு பெண். ஆனால், இந்நூல் ‘தலைவி விடு தூது’ என்ற வகைமையில் பொருந்தாது. காரணம், தன் தலைவியின் பொருட்டு, பணத்தை, மன்னர் விசய ரகுநாத சேதுபதியிடம் தூதாக அனுப்புபவர் தலைவியின் தோழி. இது பிற பண விடு தூதுகளிலும், வேறு தூது இலக்கியங்களிலும் காணப்படாதது. பிற தூது நூல்களில் பாட்டுடைத் தலைவனுக்கு மட்டுமே தசாங்கம் கூறியுள்ள நிலையில், இந்நூலில், தூது விடு பொருளான பணத்திற்கும் தசாங்கம் கூறப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

இந்நூல், பணத்தைப் பற்றிய செய்திகள், பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள், தூதுச் செய்திகள் என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. நூலில் ஆசிரியர் பலபட்டடை சொக்கநாதக் கவிராயர், பணத்தை மும்மூர்த்திகளுக்கும் முதல்வனாகச் சிறப்பித்துக் கூறியுள்ளார். நூலில் திருக்குறள், ஆழ்வார் பாடல்கள், பெரியபுராணம் போன்ற நூல்களின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு புராணக் கதைகள், இதிகாசச் செய்திகள், தொன்மம் போன்றவை இடம்பெற்றுள்ளன. பேச்சு வழக்குச் சொற்களும், வட சொற்களும், பிற மொழிச் சொற்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

போலி மருத்துவர்கள், தர்க்கவாதிகள், பொய்ப்புலவர்கள், நிலச் சொந்தக்காரர்கள், விலை மாதர்கள், கழைக் கூத்தாடிகள், ரசவாதம் செய்பவர்கள், பேயோட்டும் மந்திரவாதிகள் போன்றோர், பணம் சேகரிப்பது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு எப்படியெல்லாம் செயல்பட்டனர், எத்தகைய குறுக்கு வழிகளைக் கையாண்டு பொருளீட்டினர் என்பதை இந்நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார், சொக்கநாதக் கவிராயர்.

மன்னர் விசய ரகுநாத சேதுபதியின் பெருமை, குலச்சிறப்பு, அவரது வள்ளன்மை, வீரம், கொடை, ஆட்சித் திறன் போன்ற செய்திகள் நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

“கங்கைகுலத் தோனறிவுங் கர்த்தவிசு வாசமுமாந்
தங்கள் குல வித்தை தனை வளர்த்தோன்”

- என்ற பாடல் வரிகள் மூலம், விசய ரகுநாத சேதுபதி, கிறித்தவ மதத்தை ஆதரித்த செய்தியை அறிய முடிகிறது. அதே மன்னர் பிற்காலத்தில் கிறித்தவருக்கு நல்கிய கொடைகளை நிறுத்திய செய்தியும் நூலில் இடம்பெற்றுள்ளது.

பணத்திற்கு வழங்கப்பட்ட பிற பெயர்கள்

விசய ரகுநாத சேதுபதி ஆட்சிக் காலத்தில் பணத்திற்கு வழங்கப்பட்ட பிற பெயர்களாக 36 பெயர்களை இந்த நூல் குறிப்பிட்டுள்ளது.

அவை,

  1. பொன்
  2. தாது
  3. அத்தம்
  4. ஆடகம்
  5. வெறுக்கை
  6. ஈகை
  7. வேங்கை
  8. சாதரூபம்
  9. கல்யாணம்
  10. ஏமம்
  11. மா
  12. நிதானம்
  13. அரி
  14. மாடு
  15. மோகரம்
  16. சம்பங்கி
  17. சாணான் காசு
  18. ஈடு
  19. தங்கக்காசு
  20. சந்தமிக்காசு
  21. பெருங்காசு
  22. கருவெருமை நாக்கு
  23. பெருங்கீற்று
  24. சன்னகீற்று
  25. வராகன்
  26. மாடை
  27. வெட்டு
  28. நாணயம்
  29. கோழி விழுங்கல்
  30. நண்டுக்கால்
  31. ஊணையம்
  32. உள்ளான்
  33. கீழா நெல்லிக்கொட்டை
  34. சில்லறை
  35. மட்டம்
  36. கம்பட்டம்

மதிப்பீடு

தமிழகத்தின் பல்வேறு சிற்றரசர்கள், ஊர்கள் பற்றிய தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பணத்திற்கு அக்காலத்தில் வழங்கி வந்த பிற பெயர்களை, அந்தப் பணத்தை புழக்கத்தில் விட்டவர்கள் சிலரது பெயரை இந்த நூல் சுட்டுகிறது. ஏமாற்றுக்காரர்களின் வஞ்சகச் செயல்களை, பணத்திற்காக அவர்கள் மேற்கொள்ளும் தகாத முறைகளை இந்த நூல் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது. அந்தக் கால மக்களின் வாழ்வை, மன்னர் விசய ரகுநாத சேதுபதி கால ஆட்சிச் சிறப்பை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. பணவிடு தூது நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக, விசய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாதக் கவிராயர் பாடிய இந்நூல் அமைந்துள்ளது.

உசாத்துணை


✅Finalised Page