கடிகைமுத்துப் புலவர்
கடிகைமுத்துப் புலவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். எட்டயப்ப மன்னரின் அவைக்களப் புலவர். எட்டயப்ப மன்னர், சிவகிரி ஜமீன், ஊற்றுமலை ஜமீன் மீது பாடல்கள் பாடினார். சிலேடைப்பொருள்படப் பாடுவார். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது பாடல்கள் அறிஞர்களால் தொகுக்கப்பட்டன.
வாழ்க்கைக் குறிப்பு
கடிகைமுத்துப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள(தற்போது தூத்துக்குடி மாவட்டம்) எட்டயபுரத்தில் பிறந்தார். அவ்வூரின் அரசர் ஜகவீரராம வேங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கரின் சமஸ்தான வித்துவானாக இருந்தார். கடிகை என்பது குடிப்பெயர். கடிகை என்ற சொல்லுக்கு அரசர்க்கு மங்கலக் கவி பாடுவோர் என்று பொருள். இசைத்துறையிலும் வல்லவர். இவர் இறக்கும் தருவாயில் இவரின் பிள்ளைகள் அழுதபோது "எட்டப்பன் இருக்கும்போது ஓரப்பனுக்கு அழாதீர்" என்று சொன்னதாக செவிவழிச்செய்தி உள்ளது.
இலக்கிய வாழ்க்கை
கடிகைமுத்துப் புலவரின் பாடல்கள் உருவக அலங்கார வர்ணனைகள் கொண்டவை. உமறுப்புலவர் இவரின் மாணவர். 'திருவிடைமருதூரந்தாதி' பாடினார்.
சமுத்திரவிலாசம்
சமுத்திரவிலாசம் எட்டப்பபூபதி மேல் பாடப்பட்டது. 100 செய்யுட்களைக் கொண்டது. அகப்பொருள் பற்றியது. மடக்கு, சிலேடை வகைமைகள் கொண்டது. கரைப்புலம்பல் (கழிக்கரைப்புலம்பல் என்ற ) என்னும் அகப்பொருள் துறை ஒன்றிலேயே பாடப்பட்டது.
காமரசமஞ்சரி
எட்டப்பபூபதி மேல் பாடப்பட்டது.
மதன வித்தார மாலை
ஊற்றுமலை ஜமீன் (பெருநிலக்கிழார்) மருதப்பக்கிழார் மீது 'மதன வித்தார மாலை' எனும் பிரபந்தத்தைப் பாடினார்.
திக்குவிஜயம்
திக்குவிஜயம் பாடல்கள் சிவகிரி பெருநிலக்கிழார் ராஜா வரகுணராம வன்னியரைப் பாட்டுடைத்தலைவனாக்கி அவரது செல்வம், சிறப்பு, பராக்கிரமங்களை பாடியது. 620 செய்யுள்கள் (தமிழ் புளூட்டாக்கின் ஆசிரியர் 325 பாடல்கள் என்பார்) கொண்ட 'திக்குவிஜயம்' என்ற நூலை எழுதினார்.
சிந்து
'சிந்து' என்பது இசை தொடர்பாக ஏழு பருவப்பெண்களைக் குறித்தும் பாடப்பட்டது.
தனிப்பாடல்
தனிப்பாடல்கள் பல பாடினார். திருவாளங்காடு ஆறுமுகசுவாமிகளின் தனிப்பாடல் திரட்டு நூலில் நூற்றி முப்பது பாடல்கள் உள்ளன. இதிலுள்ள முதல் பாடலை சதாசிவம்பிள்ளை எடுத்தாண்டுள்ளார். கா.சுப்பிரமணியபிள்ளை தனிப்பாடல் திரட்டு நூலில் இவரின் நூற்றியேழு பாடல்கள் உள்ளன. தனிப்பாடல் திரட்டு நூலில் கடிகைமுத்து புலவரின் இருநூற்று நாற்பத்தியாறு பாடல்கள் உள்ளன. அவை மடக்கு, பின்முடுகு வெண்பா வெண்டுறை, முன்முடுகு வெண்பா, விருத்தம், கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கொச்சகம் முதலிய யாப்பமைதிகளைக் கொண்டவை. இவை வெங்கடேசு ரெட்டமனின் மீது தலைவி ஒருத்தி காதல் கொண்டு பாடுவதாக அமைந்துள்ளன.
பாடல் நடை
- தனிப்பாடல்
கருப்பஞ் சிலையு மோர்கரமே
கண்டே னானுஞ் சூகரமே
காமப் பயிலு மூர்க்கரமே
கணையைத் தொடுத்தான் சீக்கிரமே
வருத்தம் புரிவா ரநேகரமே
வல்லார் மடவார் நிசகரமே
மாமால் வெங்க டேசுரட்டன்
வருவான் வருவா னென்றிருந்தேன்
நூல்கள் பட்டியல்
- சமுத்திரவிலாசம்
- காமரசமஞ்சரி
- திக்குவிஜயம்
- திருப்புடைமருதூர் அந்தாதி
- மதன வித்தார மாலை
- சிந்து
- தனிப்பாடல்கள்
உசாத்துணை
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
- எட்டப்பன் இருக்க ஏன் கவலை: தினமணி
- தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jul-2023, 09:18:14 IST