under review

செல்வமலர் செல்வராஜூ

From Tamil Wiki
Selvamalar.jpg

செல்வமலர் செல்வராஜூ (பிறப்பு: மே 17, 1982) மலேசியாவின் சமூக தொழில்முனைவோர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர். பெண்கள், ஒற்றை தாய்மார்கள், மாணவர்கள், சிறுபான்மையினர்கள் போன்றவர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பங்காற்றி வருகிறார். சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுபவர்களை ஆற்றல் மிக்கவர்களாகவும் ஆளுமை மிக்கவர்களாகவும் மாற்றும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

செல்வமலர் மே 17, 1982-ல் கோலாலம்பூரில் செல்வராஜு, ராணி இணையருக்கு நான்கு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தார்.

செந்தூல் அடுக்குமாடி குடியிருப்பில் ஏழ்மையான சூழலில் செல்வமலர் வளர்ந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாகச் செல்வமலர் பாலர் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. தந்தை செல்வராஜூ செல்வமலருக்குப் பாலர் பள்ளிக்கான கல்வியை வீட்டில் கற்பித்தார்.

Selvamalar 2.jpg

செல்வமலர் செந்தூல் கான்வென்ட் தேசிய பள்ளியில் ஆரம்பக்கல்வியையும், செந்தூல் கான்வென்ட் இடைநிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியையும் பெற்றார். தமது ஒன்பதாவது வயதில் தமிழ் வகுப்புகளின் வழியும் திருமுறை வகுப்புகளின் வழியும் தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டார்.

செல்வமலர் 2002-ம் ஆண்டு புத்ரா பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு துறையில் பட்டயப் படிப்பை முடித்து, 2004-ம் ஆண்டு அறிவியல், உளவியல் மற்றும் மனிதவள மேம்பாட்டில் (Science, Psychology and Human Development) இளங்கலைப் பட்டமும் 2005-ல் மனித வளத்துறையில் (Human Resource) முதுகலைப் பட்டமும் பெற்றார். செல்வமலருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் மாமன்னர் விருது வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்து வேல்ஸில் அமைந்துள்ள அபெரிஸ்ட்வித் பல்கலைகழகத்தில் (Aberystwyth University )சட்டக்கல்வி பெற்றார். 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் கோடைக்காலப் பள்ளியில் (Summer School) கல்வி பெற்றார்.

தனி வாழ்க்கை

செல்வமலர் அக்டோபர் 18, 2015-ல் சுதாகரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சுதாகரன் - செல்வமலர் இணையருக்கு ஓர் ஆண் குழந்தை.

தொழில்

Selvamalar 3.jpg

2005-ம் ஆண்டு மூன்று மாதக் காலம் செல்வமலர் செந்தூல் கான்வென்ட் இடைநிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார். மார்ச், 2007 முதல் ஜூலை, 2008 வரை கெந்திங் மலைத் தங்குமிடத்தில் மனித வள நிர்வாகியாகப் பணிபுரிந்தார். ஆகஸ்ட் 2008 முதல் ஜனவரி 2011 வரை கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தில்(EWRF) தலைமை செயல்திட்ட அதிகாரியாகச் செயலாற்றினார்.

2011 முதல் 2014 வரை மலேசியப் பிரதமரின் கீழ் செயல்படும் மலேசிய இந்தியர்களின் சமூக மேம்பாட்டிற்கான சிறப்பு அமலாக்க பணிக்குழுவில் திட்ட மேலாளராகச் செல்வமலர் பணியாற்றினார். இந்திய மாணவர்களிடையே தொழில் திறன் கல்லூரிகளைப் பற்றிய அறிமுகத்தையும் அக்கல்லூரிகளில் இந்திய மாணவர்களைச் சேர்ப்பது போன்ற செயல்களையும் செல்வமலர் திட்ட மேலாளராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில் தீவிரமாகச் செய்தார். அதே சமயத்தில் 2020 முதல் பசுபதி சிதம்பரத்தின் தலைமையில் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் இணை நிறுவனராகவும் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்காகப் பல திட்டங்களை வகுத்து வருகிறார்.

ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை செல்வமலர் மலேசிய பிரதமரின் கீழ் இயங்கும் இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் (SEDIC) இயக்குனராகப் பணியாற்றினார். சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் பல திட்டங்களையும் புதிய யோசனைகளையும் அடையாளம் கண்டு அமல்படுத்தினார்.

Selvamalar 4.webp

ஜூலை 2019 முதல் ஜூலை 2020 வரை கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தில் தேசிய தொழிற்திறன் கல்விக்கான பிரச்சார இயக்குனராகச் செயல்பட்டுத் தொழிற்திறன் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே புகுத்தினார்.

ஊடகத் துறை

செல்வமலர் ஆரம்பக்காலக்கட்டத்தில் மின்னல் பண்பலையின் வழி ‘சவாலைச் சமாளி’, ‘நெஞ்சே எழு’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே சமூக முன்னேற்றத்திற்கான வழிகளைக் கொண்டு சேர்த்தார்.

அக்டோபர் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை 'விழுதுகள்' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகள்குறித்து கலந்துரையாடும் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

2015-ல் சிறுபான்மையினரின் துயரங்களையும் போராட்டங்களையும் உணர்த்தும் ‘ஜகாத்’ எனும் மலேசிய திரைப்படத்தின் துணை இயக்குனராகப் பணியாற்றினார். ‘ஜாகாத்’ படத்தில் ஒரு வேடத்தில் நடித்தார்.

சமூகத்தின் நலனுக்காக ஆற்றிய பங்களிப்புகள்

Selvamalar 5.jpg
பிரிமஸ் வெல்னஸ் (2018)

மை ஸ்கில் அறவாரியத்தின் சமூக நிறுவனமாகத் திகழும் பிரிமஸ் வெல்னஸின்(Primus Wellness) இயக்குநராகச் செல்வமலர் செயலாற்றுகிறார். பிரிமஸ் வெல்னஸ் இயற்கை மூலிகைப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம். மாணவர்கள் முருங்கை தூள், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை மூலிகை பொருட்களைத் தயாரித்து விற்கின்றனர். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தில் பயிரிடப்பட்ட முருங்கையிலிருந்து முருங்கை மூலிகை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. இதில் கிடைக்கப்பெறும் தொகை மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிதியில் சேர்க்கப்படுகின்றது.

FORWARD Project (2020)

வறிய, மற்றும் நடுத்தர பொருளாதரச் சூழலைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கான வருமானத்தை ஈட்டவும், அவர்களைச் சிறுதொழில் செய்பவர்களாக உருமாற்றவும் FORWARD திட்டம் செல்வமலரால் கொண்டு வரப்பட்டது. பிரமஸ் வெல்னஸில் தயாரிக்கப்படும் முருங்கை மூலிகை பொருட்களை விற்கும் சிறுதொழில் வியாபாரிகளாகப் பெண்கள் இத்திட்டத்தில் உருமாற்றப்பட்டனர்.

பசார் பிந்து திட்டம் (2022)
Selvamalar 6.webp

மை ஸ்கில் அறவாரியத்தின் பிரமஸ் வெல்னஸ் நிறுவனத்தோடு ‘பசார் பிந்து’ திட்டம் இணைக்கப்பட்டது. செல்வமலர் ‘பசார் பிந்து’ திட்டத்தின் வழி வறுமையில் உள்ள பெண்களை வணிகர்களாக உருமாற்றினார். மை ஸ்கில் அறவாரியத்தில் பயிரிடப்படும் காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களைச் சொந்த வசிப்பிடத்திலே பெண்கள் விற்று வணிகர்களாக உருமாறினர்.

டி’ டிவைன் கஃபே (2016)

மை ஸ்கில் அறவாரியத்தின் நிறுவனமாக விளங்கும்‘டிடிவைன் கஃபே’ (Divine Cafe) எனும் சமூக நிறுவனத்தைக் கருத்துருவாக்கம் செய்து துவக்கினார். இளம் பெண்கள் பேக்கிங், சமையல் மற்றும் உணவுச் சேவை ஆகியவற்றில் அனுபவம் பெற இந்நிறுவனம் துவங்கப்பட்டது.

வகுப்புகள், உரைகள்
  • செலாயாங்கில் மாணவர்களுக்காக இலவச தேவார வகுப்புகளை நடத்தியுள்ளார்.
  • பள்ளிகளிலும் கல்லூரிகளிளும் தன்முனைப்பு பேச்சாளர்-ஒரு லட்சத்திற்கு மேல் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தன்முனைப்பு குறித்த உரைகளை வழங்கியுள்ளார்.
  • 2023-ல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற TEDx நிகழ்வில் பேச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு "தடைகளை உடைத்தல்" என்ற தலைப்பை மையமாகக் கொண்டு உரையாற்றினார்.

விருதுகள்

  • குற்றவியல் மற்றும் நலச் சட்டத்திற்கான சைக்ரோட் பரிசு (2014)
  • டாக்டர். ராஜன் விருது, இந்திய கலாச்சார சங்கம், புத்ரா பல்கலைக்கழகம் மலேசியா (2003)
  • 2022-ல் ஆசியாவின் சிறந்த 12 ஊக்கமிக்க தலைவர்களில் ஒருவராகவும் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருபவராகவும் செல்வமலர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • The Asia Foundation Fellow 2022
  • Most Inspiring Woman - Ivy விருது (2023)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jul-2024, 09:06:28 IST