மின்னல் எப். எம். மலேசியத் தமிழ் வானொலி
மின்னல் எப். எம். (Minnal FM) என அழைக்கப்படும் தமிழ் வானொலி மலேசிய அரசாங்கத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை. உலகிலேயே 24 மணி நேர முதல் தமிழ் ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கிய நிறுவனம். சமூகம், கலை, இலக்கியம் என மலேசியத் தமிழ் சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிக்கு இத்தமிழ் வானொலி ஒலிபரப்பு பங்காற்றியுள்ளது. எழுத்து மற்றும் கலைத்துறையில் பல ஆளுமைகள் உருவாகக் காரணமாக இருந்துள்ளது.
தொடக்கம்
மார்ச் 1937--ம் ஆண்டு சர் ஷெண்டன் தாமஸ் என்ற ஆங்கிலேயர் British Broadcasting Corporation of Malaya என்ற வானொலிச் சேவையைத் தோற்றுவித்தார். அச்சேவை பின்னர் அரசாங்க மயமாக்கப்பட்டு ஏப்ரல் 1, 1946-ல் மலாயா ஒலிபரப்புக் கழகம் எனப் பதிவாக்கம் பெற்றது. மலாயா ஒலிபரப்புக் கழகம் வழி ஆங்கிலம், மலாய், தமிழ், மாண்டரின் ஆகிய நான்கு மொழிகளிலும் சேவை மேற்கொள்ளப்பட்டது. இசை, வட்டார ஒலிபரப்பு, நிகழ்ச்சிகள், உரையாடல்கள் போன்றவற்றை அதன் உள்ளடக்கங்களாக இருந்தன. தமிழ் ஒலிபரப்புக்குத் தஞ்சை எஸ். தாமஸ் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் மலாயா வானொலி
பிப்ரவரி 1942 முதல் ஆகஸ்டு 1945 வரை ஜப்பானியரின் மூன்றரை ஆண்டு கால ஆட்சியின்போது மலாயா வானொலிச் சேவை ஜே.எம்.பி.கே (JMPK) எனப் பெயர் மாற்றம் கண்டது. கோலாலம்பூர் துன் பேராக் சாலையில் இருந்த ஓரியண்டல் கட்டிடத்தில் இருந்து அப்போதைய ஒலிபரப்பு நடைபெற்றது. .
போர்க் காலத்தின்போது. இங்கிலாந்துடனான நட்பு நாடுகளின் நிலவரங்களை மலேசியர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கில் விழிப்பாக இருந்த ஜப்பானியர்கள் தொடக்கத்தில் வானொலிக்குத் தடை விதித்தனர். எனினும் உள்ளூர் பரப்புரை நடவடிக்கைகளுக்கு அது சிறந்த சாதனமாக விளங்கியதால், வானொலி சேவையை அவர்கள் தொடர்ந்து நடத்தினார்கள். ஆங்கிலேயருக்கு எதிரான ஜப்பானியரின் ஆட்சியை நிலைநிறுத்தும் பரப்புரையை முன்னிறுத்தியே பல நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.
மலாயாவில் அதிகாரப்பூர்வ வானொலி உதயம்
போருக்குப் பிந்திய புனர் வாழ்வுக்குச் சாதகமாக மக்களின் மனத்தைத் திசை திருப்ப வானொலி பெரிதும் பயன்பட்டது. ஏப்ரல் 1, 1946 அன்று சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மலாயா வானொலி நிலையத்தின் சேவை அதிகாரபூர்வமாகத் தொடக்கம் கண்டது.
மலாயாவில் அவசரகாலம்
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 1948-ல் தென்கிழக்காசியாவில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்தது. மக்களை அரசாங்கத்தின் பக்கம் ஈர்க்க, பல்வேறு பரப்புரை மக்களைச் சென்றடைய வானொலி சிறந்த தேர்வாக அமைந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆங்கிலத்தில் வழங்கும் அறிக்கையைத் தமிழில் மொழியாக்கம் செய்து வாசிக்கப்பட்டது. தொடக்கத்தில் இராமன் என்பவர் செய்த இந்தப் பணியை வீ.டி. வீரப்பத்திரப் பிள்ளை தொடர்ந்து செய்து வந்தார்.
மலாயா வானொலியின் பரிணாமம்
1950-களில் மலாயா வானொலிச் செய்திகள் சிங்கப்பூரிலிருந்து ஒலிபரப்பப்பட்டன. கோலாலம்பூருக்கு அடுத்து பினாங்கில்தான் முதல் வானொலி நிலையம் உதயமானது. பின்னர் நாடு முழுவதும் வானொலிச்சேவை விரிவாக்கம் கண்டது. தொடக்கத்தில் ஓரியண்டல் கட்டடத்தில் இருந்து ஒலியேறிய வானொலி ஒலிபரப்பு 1951--ம் ஆண்டு கோலாலம்பூர் தாங்லின் (TangLin) கட்டிடத்திலிருந்து சிறிது காலம் இயங்கியது.
1956--ம் ஆண்டு முதல் கூட்டரசு மாளிகையிலிருந்து (Federal House) வானொலிச் சேவைகள் தொடர்ந்தன. தமிழ்ப் பகுதி இந்தக் கூட்டரசு மாளிகையில் இருந்து செயல்படும்போதுதான் பல வழிகளில் நவீனமாகியது. பல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், மேடைக் கலைஞர்கள், பாடகர்கள் உருவாக இந்தக் கூட்டரசு மாளிகை காரணமாக இருந்தது. மலேசிய வானொலிப் புகழ் கலப்படம் நிகழ்ச்சி 1957--ம் ஆண்டில் தோற்றம் கண்டது.
1957--ம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்த பின்னர் மலாயா வானொலி எனவும், 1959--ம் ஆண்டு சிங்கப்பூர் வானொலி / மலாயா வானொலி எனவும் தனித்துச் செயல்படத் தொடங்கின.
1968--ம் ஆண்டு முதல் நாடு தழுவிய தமிழ் ஒலிபரப்புடன் வட்டாரத் தமிழ் ஒலிபரப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. பினாங்கு, மலாக்கா ஆகிய நகர்களில் இவை ஏற்கனவே இயங்கி வந்தன. கூடுதலாக ஈப்போவிலும் ஜோகூர் பாருவிலும் தமிழ் வானொலி தொடங்கப்பட்டு வட்டாரச் செய்திகள், பாரம்பரிய இசைகள், வானொலி நாடகங்கள் ஆகியவை ஒலிபரப்பப்பட்டன. சுவாமிநாதன், சுந்தரராஜு, யாசின், ஆரோக்கியசாமி, பாளையம், ஏ.பீட்டர், எம். சுப்ரமணியம் ஆகியோர் வட்டார ஒலிபரப்புகளைத் தலைமையேற்று நடத்தினர்.
பள்ளிக்கூட ஒலிபரப்பு
பள்ளிக்கூட ஒலிபரப்பு 1967--ம் ஆண்டு பிரிக்பீல்ட்சில் செயல்படத் தொடங்கியது. தமிழ்ப்பள்ளிச் சிறுவர்களுக்கான தமிழ் மொழிப் பாடங்கள், இசை நிகழ்ச்சிகள், பாடல்கள், அறிவியல் நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகள் வானொலி வழி ஒலிபரப்பப்பட்டன. அட்டவணையைப் பின்பற்றி குறித்த நேரத்தில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியை சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் வகுப்பிலேயே வைக்கப்பட்டிருக்கும் வானொலி வழி செவிமடுப்பார்கள். பள்ளிக்கூட அட்டவணையிலும் அது ஒரு பாடமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
அங்காசாபுரிக்கு மாற்றம்
மே 10, 1972-ல் மலேசிய வானொலி புதிதாகக் கட்டப்பட்ட அங்காசாபுரி ஒலிபரப்பு வளாகத்தில் விஸ்மா ரேடியோவுக்கு இடம் பெயர்ந்தது. விஸ்மா ரேடியோ கட்டடத்தை மார்ச் 10, 1973-ல் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
ஜூலை 7, 2000-ல் விஸ்மா ரேடியோவின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற வேளையில் கீழ்த்தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அச்சம்பவத்திற்குப் பிறகு விஸ்மா ரேடியோவை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாகத் தமிழ் ஒலிபரப்பும் அதன் பணிமனையும் தற்காலிகமாக 1998-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்ட அனைத்துலக ஒலிபரப்பு மையத்துக்கு (International Broadcasting Centre, IBC) மாற்றப்பட்டன.
இதற்கிடையே அனைத்து வானொலி ஒலிபரப்பு அறைகளும் டிஜிட்டல் எனப்படும் கணினியை அடிப்படையாகக் கொண்ட இலக்கவியல் முறைக்கு மாற்றப்பட்டன.
தமிழ் ஒலிபரப்பில் பெயர் மாற்றங்கள்
1946--ம் ஆண்டு அதன் தொடக்கத்தில் வானொலியில் நான்கு மொழிகளிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஆகவே பொதுவாக ரேடியோ மலாயா என்றும் மொழியைக் குறிக்கும் வண்ணம் 'இந்தியப் பகுதி' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
1963--ம் ஆண்டு மலேசியா உருவானது. அதற்கேற்ப 'ரேடியோ மலேசியா' என மருவியது.
மே 1969 கலவரத்துக்குப் பிறகு தேசிய மின்னல் பண்பலையின் அடையாள இசை ஒருமைப்பாட்டை வலியுறுத்திய அரசாங்கம் தேசிய மொழிப் பயன்பாட்டைப் பரவலாக்கும் நோக்கில் வானொலிச் சேவைகளின் பெயர்களை வண்ணங்கள் அடிப்படையில் மாற்றியது. எனவே 1970--ம் ஆண்டு தமிழ் வானொலி “ரங்காயான் மேரா” ஆனது.
செப்டம்பர் 16, 1988 அன்று மலேசிய தினத்தில் அந்தந்த மொழி வானொலிகளின் முக்கியத்துவத்திற்கு தகுந்தாற்போல மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்முறை இலக்கங்களின் அடிப்படையில் தமிழ் வானொலி, 'ஒலியலை ஆறு' எனக் குறிப்பிடப்பட்டு பிறகு 'வானொலி ஆறு' என மாற்றம் கண்டது.
ஏப்ரல் 1, 2005 அன்று அனைத்து வானொலிகளும் இலக்கவியல் முறைக்கு மாற்றப்பட்டதாலும் முழுமையாக எப்.எம். ஸ்டீரீயோவில் ஒலிப்பதாலும் அவற்றைப் பிரதிபலிக்கும் நவீனப் பெயர் மாற்றம் தேவைப்பட்டது. ஆகவே நமது ஒலிபரப்பு வானொலி ஆறிலிருந்து மின்னல் எப்.எம். ஆகப் பெயர் மாற்றம் கண்டது.
மின்னல் பண்பலையின் அடையாள இசை
மின்னல் பண்பலை என்ற பெயருக்கும் அதன் அடையாளக் குறிப்புக்கும் அன்றைய அமைச்சர் டத்தோஸ்ரீ காடிர் ஷேக் பாட்சிர் அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன் அதற்கான அறிமுக இசை இயற்றும் பணி வானொலி முன்னாள் பணியாளர் ஆர்.பி.எஸ் இராஜுவுக்கு வழங்கப்பட்டது.
அவர் இயற்றிய அறிமுக இசை மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால் அந்த இசைக்கு ஸ்ரீ அங்காசா விருதும் சன்மானமும் வழங்கப்பட்டன. அது மட்டுமின்றி அந்த இசையைப் பின்பற்றி இதர வானொலிகளும் அதே பாணியில் தங்கள் அறிமுக இசையை அமைத்துக் கொண்டன.
மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையத்தின் சின்னங்கள்
மலாயா வானொலி என அழைக்கப்பட்டதால் RM சின்னம் பயன்பட்டது அதுவே 1963 வரை அடையாளமாக இருந்தது. 1963--ம் ஆண்டு தொலைக்காட்சியும் இணைந்து, இரண்டு ஊடகங்களுக்கும் ஒரே சின்னம் பயன்படுத்தப்பட்டது. கால ஓட்டத்தில் அச்சின்னமும் பல முறை மாற்றம் கண்டது. 1957, 1963, 1969, 1978, 1987 இறுதியாக 2004--ம் ஆண்டு என ஆறு முறை காலத்துக்கேற்ப சின்னம் மாற்றம் கண்டது.
அரசாங்கக் கொள்கைகளின் தாக்கங்கள்
மலேசிய வானொலி ஓர் அரசாங்க ஊடகம். ஆகவே அதன் ஒலிபரப்பு அரசாங்கக் கொள்கைகளையும், அதன் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்தியம்பி, நடப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டுவதைத் தலைமை நோக்கமாகக் கொண்டிருந்தது. அரசாங்கத்தின் குரலாகவும் அது செயல்பட்டது.
ஆதலால் அதன் பணியாளர்கள் அனைவரும் அரசாங்க ஊழியருக்கான சட்டதிட்டங்களுக்கும் அவ்வப்போது அதன் கொள்கை மாற்றங்களுக்கும் உட்பட்டு செயல்பட வேண்டியது அவசியமாகிறது. மொழி, மதம், இனம் காக்கும் தேசிய நலனுக்கே முதலிடம் வழங்கப்படுவது அரசாங்கக் கோட்பாடு.
24 மணி நேர வானொலி
ஜூன் 30, 1997 வரை 19 மணி நேரம் மட்டுமே ஒலித்து வந்த வானொலி ஆறு, ஜூலை முதல் தேதி தொடங்கி 24 மணி நேரமும் ஒலிக்கத் தொடங்கியது.
இரண்டாவது முறை தகவல் அமைச்சராக இருந்த ஸ்ரீ டத்தோ முகம்மது ரஹமாட் (1987-1999) அதற்கு ஒப்புதல் அளித்தார். ஒலிபரப்பு நேரத்தை கூட்டுவதற்கு அப்போதைய தலைவர் டாக்டர் வீ. பூபாலன் பெரும் பங்காற்றினார். அதற்குத் தேவைப்பட்ட ஆள் பலத்திற்கும், கூடுதல் தமிழில் செலவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஒலிபரப்பு நேரம் கூடிய வேளையில் ஆள்பலத் தேவை கட்டங்கட்டமாக அதிகரிக்கப்பட்டது.
வானொலியில் செய்திகள்
1946--ம் ஆண்டு மலாயாவில் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. வானொலியுடன் ஒன்றித்து செயல்பட்டாலும் செய்திப் பிரிவு ஒரு தனிப் பிரிவாகவே செயல்பட்டு வருகிறது. அப்பிரிவில் முழு, பகுதி நேர செய்தி வாசிப்பாளர்களுடன் வானொலி பணியாளர்களே பெரும்பாலும் செய்தி வாசிப்பாளர்களாகப் பணியாற்றி வந்தனர். வானொலியில் செய்தி வாசிக்கும் வாய்ப்பு அதன் பணியாளர்களுக்கு திரை நட்சத்திரங்களைப் போன்றதொரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. ஏனெனில் அந்த வாய்ப்பு தெளிவான குரல் வளமும், அப்பழுக்கற்ற உச்சரிப்பும் கொண்டவருக்கே வழங்கப்பட்டு வந்தது.
வானொலி நிலையம் 1972-ம் ஆண்டு அங்காசாபுரிக்கு மாற்றப்பட்டது. முதல் ஒன்றிணைந்த அனைத்து மொழி செய்தி தயாரிப்பு அலுவலகம் வானொலி கட்டிடத்தில் அமைந்திருந்த ஒலிபரப்பு அறைகளுக்கு அருகிலேலே இயங்கி வந்தது.
வானொலி வளாகத்தில் 2000--ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு செய்திப் பிரிவும் அலுவலகமும் வானொலி கட்டடத்தின் முதல் மாடிக்கு மாற்றப்பட்டன. மேலும் செய்தி வாசிப்புக்கு வசதியாக அலுவலகத்திற்கு அருகிலேயே தனித்தனி செய்தி வாசிப்பு அறைகளும் உருவாக்கப்பட்டு ஆகஸ்டு மாதம் 2003-ம் ஆண்டு முதல் செய்திகள் அங்கிருந்து படைக்கப்பட்டு வருகின்றன.
2008--ம் ஆண்டு முதல் வானொலிப் பணியாளர்கள் செய்தி வாசிக்கும் விதிமுறை அகன்று அப்பிரிவில் அரசு முழு நேரப் பணியாளர்களுடன் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களும் செய்திகளைப் படைக்கின்றனர். 2001--ம் ஆண்டு முதல் வானொலிச் செய்திப் பிரிவு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழைப் பெற்ற முதல் பிரிவாகவும் திகழ்கிறது.
வானொலி நிர்வாகிகள்
- பி. எஸ். இராமன் - சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இரு நிலையங்களுக்கும் தலைவர்
- தஞ்சை எஸ். தாமஸ் - மலாயா வானொலி தலைவர்
- இராமச்சந்திர ஐயர்
- இரா. பாலகிருஷ்ணன்
- ஹாஜி கே. எம். ஹனிப்
- எம். எஸ். சுவாமிநாதன்
- கமலா தேசிகன்
- எஸ். கணபதி
- ஆர். அப்பாதுரை
- வீ. பூபாலன்
- ப. பார்த்தசாரதி
- எம். இராஜசேகரன்
- எஸ். குமரன்
- சுமதி
- கிருஷ்ணமூர்த்தி
பங்களிப்பு
மலேசியத் தமிழ் வானொலி கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டும் இயங்காமல், மலேசியத் தமிழ் கலை இலக்கியத்தை முன்னெடுத்த பல ஆளுமைகள் உருவாகவும் வளரவும் பங்களிக்கவும் காரணமாக இருந்தது. கா. பெருமாள், ரெ. கார்த்திகேசு, பைரோஜி நாராயணன், ந. பாலபாஸ்கரன், மைதீ. அசன்கனி, மைதீ. சுல்தான், பா. சந்திரகாந்தம், அரு. சு. ஜீவானந்தன், டி.என். மாரியப்பன் போன்றவர்களை வானொலியின் பணியாற்றிய முக்கிய ஆளுமைகளில் சிலர்.
இன்றைய நிலை
மின்னல் எப்.எம் ஒலிபரப்பு கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரி தலைமையகத்தில் இருந்து 92.3 / 96.3 அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
உசாத்துணை
- ஒலிச்சிற்பிகள் (2017), உமா பதிப்பகம்.
- மின்னல் எப்.எம்
- Latar Belakang RTM
- மின்னல் பண்பலை, செல்லியல்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:11 IST